துளித் தீ நீயாவாய் 4

பாளையம் கோட்டை

இரவு மணி 1

தங்கள் வீட்டு வரவேற்பறையில் மேஜையில் தன் கையை அணையாய் வைத்து தூங்கிக் கொண்டிருந்தாள் பவித்ரா.

வேணி மாடிக்குச் செல்லவும் இவளும் தன் அறைக்குள் வந்து படுத்துவிட்டாள்தான். ஆனால் சற்று நேரத்தில் இவள் அறைக் கதவைத் தட்டினான் ப்ரவி.

எரிச்சலும் அதை ஏகமாய் ஏற்றிக் காண்பித்த முகமுமாய்

“என்ன அந்த வேணியப் பத்திதான? ரிசல்ட்க்கு பயந்து ஓடி வந்துட்டா அதான?” என சிடுசிடுத்தபடி இவள் கதவைத் திறக்க,

மொபைலை காதோடும் தோளோடுமாய் அழுத்தி கீழே விழுந்து விடாதவாறு பிடித்தபடி, முழு யூனிஃபார்மில் தன் கையிலிருந்த வாட்சை மாட்டுவதில் கவனமாக நின்றிருந்த ப்ரவி கண்ணில் படுகிறான்.

‘அவன் வெளிய போறானா?’

‘இத்தன மணிக்கா?’

சற்றும் இதை எதிர்பாராத இவள் இருபுறம் இழுபட்ட கயிறாய் விறைக்க, முகமோ விலுக்கென்று ஏறி தொண்டைக்குள் அமர்ந்து கொண்ட உருவமற்ற உருண்டையை காட்டிக் கொடுக்க,

“சாரி, கேஸ் விஷயமா அவசரமா ஆஃபீஸ் போக வேண்டி இருக்கு பவி, செக்யூரிட்டிக்கு ஒரு கான்ஸ்டபிள் வெளிய இருக்கார், அதனால பயம் இல்லாம தூங்கு,

ஆனா வேணிய பத்தி இன்னும் எதுவும் தெரியலைன்றதால கொஞ்சம் கவனமா இருந்துக்கோ, உன் ரூம் கதவ திறக்காத” என சொல்லிக் கொண்டே நிமிர்ந்த ப்ரவியின் முகம் இப்போதுதான் அவளது நிலையை உணர்ந்து மென்மைப் படுகிறது.

“பயந்துகிட ஒன்னுமில்ல பவி” அவன் முகம் படர்ந்த ஆறுதல் தன்மையோடு ஆரம்பிக்க,

அவளது கண்ணோ அதுவாக எதிரிலிருந்த சுவர்கடிகாரத்தை தவிப்பாய் தொட்டு வருகிறது. ‘இந்த நேரத்துல கிளம்பிகிட்டு பயப்பட ஒன்னுமில்லையாமா?’ என அதை ஒலி பெயர்த்தான் அவன்.

“சிச்சுவேஷன் எமெர்ஜென்ஸிதான் அதான் கிளம்புறேன், ஆனா அந்த கல்ப்ரிட் ஒரு மாதிரி இன்ட்ரெஸ்டிங்க் டைப்… என்னை அவனுக்கு பிடிக்கும், என்னை எதுவும் செய்ய மாட்டான், நீ பயந்துகாத” என இவன் புன்னகை பிடிபட பேச,

இன்னும் கூட இவன் குத்துவிளக்கின் விறைப்பு குறையவில்லை. அதே லேகியம் சாப்ட்ட முகபாவம் இப்போதும்.

“நம்ம மேரேஜ்க்கு மூனு ஆர்ஃபனேஜ்ல சாப்பாடு போட்டானாம், நாம நல்லா இருக்கணும்னு” சிறு சிரிப்போடே இவன் சொல்ல,

‘இப்படில்லாம் பேசி நீதான் அவனுக்கு பாஸ்ன்றாப்ல உன்ன மாட்டி விட்டுட்டான்னா என்ன செய்வ ப்ரவி?’ என மனதுக்குள் தவித்த கேள்வியை தொண்டைக்குள் இறக்கி அடைத்துக் கொண்டிருந்தாள் அவள்.

‘என்ன செய்துகிட்டு இருக்கேன் நான்? இவன்ட்ட போய் இவனுக்காக நான் உருகி வடியுற போல காமிச்சுகிட்டு இருக்கேன், அதெல்லாம் இனி இவனுக்கு என்ன கண்றாவியாத் தோணும்?’ என இதற்குள் அவளது ஆறாவது அறிவு அவசரமாய் அடர்த்தியாய் விழித்துக் கொண்டிருந்ததே காரணம்!

அது அவள் முகபாவத்தில் தெரியும்தானே,  அதை புரிந்தவனாக, முகத்தில் இருந்த புன்னகை மறைய “விழிச்சுட்டு இருக்காத, தூங்கு” என்றுவிட்டு கிளம்பிவிட்டான் ப்ரவி.

அவன் செல்லும் வரையுமே அது அவளுக்கு ஒன்றுமே இல்லை என்பது போல் சவகாசமாய் போய் கதவை பூட்டி வந்தாள் எனினும், அடுத்து தன் அறைக்குள் செல்லக் கூட மனம் மறுக்கிறது இவளுக்கு.

‘இவன் என்ன போலீஸ், போயும் போயும் கல்ப்ரிட் சொல்றதெல்லாம் நம்பிகிட்டு இருக்கான்? அதனால இவன் கேர்லெஸா இருந்தா என்ன ஆகும்?’ எனத் தொடங்கி

‘எங்காயவது ப்ரவிய வர வச்சு அந்த கல்ப்ரிட் எதுவும் செய்துட்டான்னா?’ என்ற சிந்தனை வரை போய் வயிற்றை பிரட்டி பிரட்டி எடுத்தது இவளுக்கு.

‘சின்ன பொண்ணு வேணியவே நம்பலையாம் அவன், இந்த கல்ப்ரிட்டயா நம்ப போறான், நீ பயந்துடக் கூடாதுன்னு சும்மா இப்படி சொல்லிட்டு போறானா இருக்கும்’ என இவள் அறிவு  ஒன்றிரண்டு முறை ஒழுங்காய் வேலை செய்தாலும், மனமோ இவள் மீது இரக்கம் காட்டவே இல்லை.

ஒருவாறு வியர்த்து வியர்த்து ஊத்த, விண் விண்னென தெறிக்கும் தலைவலியோடு அங்கிருந்த மேஜைக்கு தலையை கொடுத்து நாற்காலியில் முடங்கி விட்டாள்.

நேரம் போகப் போக ப்ரவிக்கு அழைத்து அவன் எப்படி இருக்கிறான் என கேட்டுவிட துடியாய் துடிக்கிறது இவளுக்கு. ஆனால் அது அவன் வகையில் என்னதாய் இருக்கும் என்ற கேள்வியையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை இவளால்.

காதல் கத்தரிக்காய் என அருவருப்பாய் நினைத்து தொலைப்பானே!

அடுத்த பக்கம்