துளித் தீ நீயாவாய் 20 (9)

ரோஹனின் தங்கைதான் இணைப்பை ஏற்றவள், அழைப்பது இவள் எனவும் ஒரு வார்த்தை பேசாமல் தன் அண்ணனிடம் ஃபோனைக் கொடுத்துவிட்டுச் செல்ல, இத்தனைக்கும் பிறகும் “ப்ளீஸ் ரோஹன், உனக்கு கல்யாணம் ஆகிட்டுன்னு நீ சும்மாதான சொல்ற, எப்படியாவது வந்து என்ன கூட்டிட்டுப் போய்டு, நிஜமா இனி உன் கூட சண்டையே போட மாட்டேன்” என இவள் கதறியதால் போலும்,

இந்த முறை அவன் தராதரமின்றி இவளைத் திட்டினான்.

“நேத்துதான் கல்யாணம் செய்துருக்கேன்னு சொல்றேன், இன்னைக்கு நைட் போய் கால் பண்றியே, மனுஷன் என்ன செய்துகிட்டு இருக்கேன்னு நினைக்க?” என்பது தொடங்கி, “நேத்துதான் எங்க ஃப்ர்ஸ்ட் நைட், இன்னைக்கு காலைல அவ முகம் பார்க்க எப்படி பூரிச்சுப் போய் இருந்துது தெரியுமா? நீயும் இருந்தியே என்னமோ நான் அட்டப் பூச்சி போல உன் ரத்தத்த உறிஞ்சிட்டு விட்ட போல, உனக்கெல்லாம் கல்யாணம்ன்றதே வேஸ்ட், மரக்கட்ட” என்றெல்லாம் போய்,

“அதுதான் கூப்ட்ட இடத்துக்கெல்லாம் வந்தியே, அதுவே நல்ல தொழில்தான், செய்து பிழச்சுக்கோ, ஆள விடு” என்றெல்லாம் போனது அவன் வார்த்தைகள்.

இதன் பின் அவள் அவனைத் தொடர்பு கொள்ளக் கூடாது என்பதற்காகவோ அல்லது அவன் மனதில் இப்படித்தான் இவளைப் பற்றி பிம்பமே வளர்ந்து போயிருக்கிறதோ இவளை வார்த்தைகளால் கொன்று போட்டான்.

இதில்தான் ரோஹன் என்பவன் இவள் வாழ்க்கையில் முடிந்து போன அத்தியாயம் என இவளுக்கு முழுதாய் புரிந்தது.

இவைகளைத்தான் நாகரீக வார்த்தைகளில் மதுவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் வேணி. அதைக் கேட்டுக் கொண்டு நிற்கும் நிலை பால்கனிக்கு. அவனுக்கு இந்தக் கதை இப்படித்தான் என ஏற்கனவே தெரியும்.

இதை அறிந்தபோதுதான் அவன் வேணியை திருமணம் செய்ய முடிவு செய்ததே! உடனடியாக வேணியை பெண் கேட்டு வந்தவன், அதே கையோடு ரோஹனைத் தேடிச் சென்று அவனை நொறுக்கி அள்ளிவிட்டான் என்பது வேணிக்குத்தான் தெரியாத விஷயம்.

ஆனாலும் இப்போது வேணி வாயால் விளக்கமாய் கேட்கும் போது கொலை செய்யப்படுவது போல் இன்னுமாய் கூராய் கிழிக்கிறதே இவனுக்கு. மற்றவர்களுக்கு எப்படியோ இவனுக்கு வேணி மீது வருவது இரக்கம்தான். அவளை அள்ளி ஆறுதல் செய்யத்தான் ஓடுகிறது உள்ளம்.

பால்கனிக்கு தன் தந்தை எப்படிப்பட்டவர் என நன்றாகவேத் தெரியும், அதனால்தான் அவன் அம்மா அவரைப் பிரிந்து போனதை இவனால் தப்பாக எண்ண முடிவதில்லை. அதோடு அந்த காசில்லா ப்ளாட்ஃபார்ம் வாழ்வில் தன்னந்தனியாய் இவன் அப்பாவாலேயே இவனையும் பூனத்தையும் பார்த்துக் கொள்ள முடியவில்லையே, இதில் இவன் அம்மா எப்படி தனியாய் பிள்ளைகள் இருவரையும் பார்த்துக் கொள்ள முடியும்? அதற்கு பயந்துதான் இவன் அம்மா இவர்களை அப்பாவிடமே விட்டுப் போய்விட்டாரோ? என்று கூட இவன் அம்மாவைத்தான் தாங்கும் தாய்க்காக ஏங்கும் இவன் மனம். ஆனால் அப்படியென்றால் இவன் அம்மா இவனுக்காக, பூனத்திற்காக ஐந்தோ ஆறோ வருடங்கள் மட்டும் பல்லைக் கடித்துக் கொண்டு இவன் அப்பாவோடு சமாளித்திருந்தால், அதற்குள்தான் இவனுக்கு பதினாறு பதினேழு வயதாகியிருக்குமே, தலையெடுத்திருப்பானே, அடுத்து இவன் தன் அம்மாவையும் பூனத்தையும் கண்ணுக்குள் வைத்துப் பார்த்திருக்க மாட்டானா? எனவும் தாக தாகமாய் அவ்வப்போது கேட்டுக் கொள்ளும் இவன் உள்ளம். அப்படி அவன் அம்மா இருந்துவிட்டது போலவும் இவன் பட்ட பாடுகள் எதையும் படவே இல்லாது போலவும், இப்போது பூனமும் அம்மாவும் இவனோடு இருப்பது போலவும் இவனே யோசிக்காதபோதும் சில நேரம் அரைத் தூக்கத்தில் அதாக கற்பனை வழியும். அதில் ஏதோ ஒரு சுகம்.

இதில்தான் வேணி ரோஹனிடம் அழுது கொண்டிருந்ததை இவன் பார்க்க நேரிட்டது. அவள் நிலை அறியவும் இவனுக்கு வந்தது அவள் மீது பரிதாபம் மட்டுமே!

இதில் வேணியின் பேச்சு தொடர, அவளை இப்படி தெருவில் நிறுத்திய பின்னும் “உன் அப்பாக்கு பயந்துதான இப்படி செய்துட்ட, நான் இங்க எப்படியாவது கொஞ்ச நாள் சமாளிச்சுகிடுறேன், நேரம் பார்த்து வந்து கூட்டிட்டுப் போய்டு” என அந்த ரோஹனை நம்பி, அவனிடம் அவள் கெஞ்ச,

இப்படியெல்லாம் யாருக்காவது தோன்றுமா என்று சொல்வதற்கில்லை, ஆனால் இவன் இருந்த நிலைக்கு இவன் வேணியிடம் தலை குப்புற விழுந்த இடம் இதுதான், இவன் அம்மாவிடம் இருந்திருக்கலாமே என இவன் கற்பனை செய்யும் ஒரு குணம், இவன் அப்பா சரியில்லை எனத் தெரிந்தும், அதைத் தாண்டி இவன் அம்மா வாழ்வைப் பார்த்திருக்கலாம், அந்த உறவை காப்பாற்ற போராடி இருக்கலாம் அது இவனுக்கும் பூனத்துக்கும் பொன்னாய் மாற்றி கொடுத்திருக்குமே வாழ்க்கையை என இவன் புழுங்கித் தவித்துக் கொண்டிருக்கும் ஒன்றை வேணியில் கண்டு திக்பிரமித்தது இவன் உள்ளம்.

அதுவரைக்கும் காதல் அது தரும் கம்பனியன்ஷிப் என்பதில் இளமைக்கேற்ற ஈர்ப்பு இருந்தாலும், இவனுக்கென திருமணம் குடும்பம் என அந்த சிந்தனையிலேயே அது அப்படியே அடிபட்டுப் போகும். அதான் இவங்க அப்பா அம்மாவோட கல்யாண வாழ்க்கைய பார்த்துட்டானே, இதுக்கப்புறமும் இவனுக்கு அது மேலெல்லாம் எங்க வர ஆசை? ஆனால் இப்போதோ புதுப் புனலாய் அது பொங்கிக் கொண்டு வந்தது.

இவளையெல்லாம் இவன் மணந்து கொண்டால் இவனது அப்பாவைப் போலெல்லாம் இருக்க மாட்டான், உயிராகத்தான் பார்த்துக் கொள்வான், அவளுமே அத்தனை எளிதாய்  எப்போதுமே இவனை விட்டுவிடமாட்டாள்.

இப்படித்தான் முதலில் துள்ளி வந்தது ஒரு நினைவு.

அதை அவன் தன் தலையை உதறி அசட்டை செய்துவிட்டு போய்விடலாம் எனதான் அப்போது நினைத்தான். ஜஸ்ட் சும்மா தாறுமாறா ஓடுமே மனசு. அப்படி வந்த நினைவு போல எனதான் எடுத்துக் கொண்டான்.

ஆனால் சின்னதாய் ஒரு கீற்றுப் புன்னகையை உண்டு செய்து கொண்டு அடமாய் இவனிடம் இடம் கொண்ட அந்த எண்ணம் அடுத்த சில நிமிடங்களுக்கெல்லாம் வளர்ந்து கொண்டு போன ஆழ உயரத்துக்கு, சுனாமியாய் இவனை தன்னுள் சுருட்டி இருந்தது.

யோசிக்காமலே இவனுக்குள் வழியுமே கற்பனை அப்படியாய் ஏதேதோ காட்சிகள்.

அடுத்த பக்கம்