துளித் தீ நீயாவாய் 20 (8)

ஒரு மாதத்திற்கும் மேல் இது தொடர, எப்படியோ முயன்று இவள் ரோஹனை தொடர்பு கொள்ள, அவனுக்கும் வீட்டில் அவன் அத்தைப் பொண்ணோடு  திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது என்றான்.

“என்னை கூட்டிட்டுப் போய்டு, இப்படியே போச்சுன்னா உன் பேரை எழுதி வச்சுட்டு நான் சூசைட் செய்துப்பேன்” என இவள் இருந்த மன உளைச்சலில் அழ,

“இனி நாம இங்க இருந்து சமாளிக்க முடியாது, பேசாம கிளம்பி சௌத் சைட் போய்டுவோம், நம்ம வீட்ல தேடினாலும் சென்னைப் பக்கமாதான் தேடுவாங்க, இங்க செய்ற பிஸினஸ அங்க சின்னதா செய்துட்டு போறேன், எல்லாத்துக்கும் ஓரளவு ஏற்பாடு செய்துட்டேன், ரெண்டு நாள்ல இங்க இருந்து கிளம்புறோம்” என திட்டம் சொன்னான்.

அதே போல் இரண்டாம் நாள் நடு இரவில் இவள் வீட்டைவிட்டு வெளிவர உதவி செய்தவன், அவளிடம் “நமக்கு ஒரு வீட வாடகைக்கு எடுத்துருக்கேன்” என ஒரு வீட்டுச் சாவியும் நெல்லையின் ஒரு முகவரியும் கொடுத்து, ட்ரெயினில் பெங்களூர் சென்று அங்கிருந்து கொச்சி போய், நெல்லை வருவதற்கான டிக்கெட்டையும் கொடுத்து ட்ரெய்ன் ஏற்றிவிட்டான்.

“அப்பத்தான் யாரும் ஈசியா ட்ராக் செய்ய முடியாது” என்றான். “நீ மைனர் பொண்ணு நான் மாட்டினா 7 வருஷம்டி, நாம ரெண்டு பேருமா போனா மாட்டிப்போம். நீ போ, நான் பஸ்ல வந்து ஜாய்ன் செய்துக்கிறேன்” என விளக்கினான்.

அவன் வாங்கித் தந்த புது மொபைல் தவிர கொஞ்சம் பணம் மட்டும் கைல வச்சுக்கோ என கொடுத்திருந்தவன், லக்கேஜ தூக்கிட்டு நீ சுத்தாத, எல்லாம் நான் கொண்டு வரேன் என அக்கறைப்பட்டான். மூன்று நாள் பயணத்துக்குப் பின் இங்கு வந்தபின்புதான் வேணிக்குத் தெரிந்தது, அந்த முகவரியில் இருக்கும் வீடு பவித்ரா ப்ரவியுனுடையது என.

முதலில் முகவரி எதுவும் தவறுதலாக ரோஹன் மாற்றிச் சொல்லிவிட்டானோ என காத்துக் கிடந்தாள்தான். மொபைலில் இவளிடம் இருந்தது ரோஹனின் புது எண் என அவன் கொடுத்த எண் மட்டும்தான். அதை இவள் தொடர்பு கொள்ள முயன்று கொண்டே இருந்தால் ஸ்விட்ச் ஆஃப்.

இதில் இவள் வெகுவாக யோசித்து நியாபகத்தில் கொண்டு வந்து ஒரு வழியாய் வீணாவின் எண்ணை அழைக்க, அதை ஏற்ற ப்ரகாஷ், “இங்க பாரு இனி என் தங்கச்சி நம்பரெல்லாம் கூப்ட்டன்னா கைய கால உடச்சுடப் போறேன், அந்த ரோஹன்க்கும் எனக்கும் இப்ப எந்த பேச்சு வார்த்தையும் இல்ல, இதோட விட்று” என உறுமிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.

அடுத்து என்ன நடந்ததோ இதில் இவள் பவி வீட்டின் பக்கம் மயங்கிக் கிடந்தாலே அதற்கு சற்று முன்தான் இவளிடம் பேசிய ரோஹன் ”அதான் தெரிஞ்சிட்டுல்ல, உன்ன இங்க இருந்து கழட்டி விட்டுருக்கேன்னு, அப்றமும் என்ன புரியாத மாதிரி கூப்டுட்ட இருக்க முட்டாள்? எனக்கு இங்க கல்யாணம், இங்க நீ இருந்தா சூசைட் அட்டெம்ட் அது இதுன்னு சீன் பண்ணிடுவன்னுதான் கிளப்பிவிட்டேன். கல்யாணத்தப்ப சீனாச்சுன்னாதான் அசிங்கம், இனிம வேணா அவளச் சாகச் சொல்லு, கேஸ பார்த்துக்கலாம்னு சொல்றார் எங்கப்பா, உன் லெட்டரப் பார்த்துட்டு நீ என் கூடதான் ஓடிப் போய்ட்டன்னு நினச்சுகிட்டு இருந்த உன் அம்மா அப்பாட்டப் போய் என் அப்பா போட்ட போடுல அவங்க அவமானம் தாங்காம துபாய்க்கு உன் அண்ணன் வீட்டுக்கு கிளம்பிட்டாங்களாம். ஒரு இடஞ்சலும் இல்லாம என் கல்யாணம் நேத்தே முடிஞ்சிருச்சு” என்றான்.

“ஏன்டா? ஏன்டா என்னை இப்படி ஏமாத்தின? நான் சும்மாதானே போனேன், நீதானடா சுத்தி சுத்தி வந்த” கதறுவாள்தானே இவள்?

“அப்பல்லாம் உன்னை ஒன்னும் ஏமாத்தல, உன்னைத்தான் கல்யாணம் செய்யணும்னு நானும் ஒத்தக்கால்லதான் நின்னேன், ஆனா நீ பேசாம இருந்தியே இப்ப கடைசி ஒரு மாசமா அப்பதான் எனக்கு ஒன்னு புரிஞ்சுது, உன்ட்ட பேசாம இருக்கது எவ்வளவு நிம்மதியா இருக்குன்னு, அதுவரைக்கும் என்னைக்காவது மனுஷன் நிம்மதியா இருந்திருக்கனா? ஒரே மண்டைக் குடச்சல், எப்பவும் சண்டைதான் நமக்குள்ள, இப்படி கடைசிவரைக்கும் சண்டை போட்டுகிட்டே இருக்க எதுக்கு நான் என் அப்பாவ பகைச்சுகிட்டு என் தொழிலை போட்டுட்டு உன் பின்னால வரணும்னு யோசிச்சேன்! அப்பதான் அப்பாட்ட அவர் சொல்ற கல்யாணத்துக்கு சரின்னு சொன்னேன். அடுத்து பார்த்தா கால் பண்ணி சூசைட் செய்துப்பேன்னு நீ அழுதுகிட்டு இருக்க, என்ன செய்வான் மனுஷன்? அப்பாட்ட சொல்லவும் அப்பாதான் இப்படி உன்ன அனுப்பிடச் சொன்னார். கல்யாணத்த பிரச்சனை இல்லாம முடிச்சுட்டோம்னா அப்றம் எதையும் பார்த்துக்கலாம்னார்” என்ற விளக்கம் வந்தது அவனிடமிருந்து.

கற்போ, கற்பு நெறியோ அதெல்லாம் அடுத்த விஷயம், ஒற்றை மனிதனிலிருந்து சந்ததி என்றும் தலைமுறை என்றும் லட்சோப லட்சம் மனித உயிர்களை உண்டு செய்யும் வீரிய வல்லமையல்லவா உயிருக்குள் இருக்கும் கூடல் உணர்வென்பது?!  கண்ணாடிக் குடுவையில் இருக்கும் கந்தக அமிலத்தையே முறையற்ற வகையில் கையாண்டால் தொட்ட கை, பட்ட இடம் என எல்லாத்தையும் பொசுக்கிப் போடுமே, அப்படியென்றால் லட்சோப லட்ச உயிர்களை உருவாக்க வல்லமையான இந்த வீரியத்தை வகையற்ற வகையில் கையாண்டால், அந்த வீரியத்தின் அமில வீச்சை நம் மனம், தேகம் மற்றும் வாழ்க்கை எல்லாவற்றிலும் வாங்கியாக வேண்டி இருக்கும்தானே!

பொசுக்கி இருந்தது அது ரோஹன் மற்றும் வேணியின் காதலையும் வாழ்வையும்.

வீட்டைவிட்டு தனியாக கிளம்பி இருக்கிறோம் என்ற திகிலிலேயே கடந்த நாட்களில் சாப்பிடாமல் கிடந்த வேணி மயங்கி விழுந்திருந்தாள். அடுத்துதான் அவள் பவியின் கையில் சேர்ந்தது. எந்த சூழ்நிலையிலும் இனி வீட்டுக்குச் செல்ல முடியாது என்பதைத் தவிர அப்போது அவளுக்கு வேறு எதையும் என்னவென்று சொல்லவெனக் கூடத் தெரியவில்லை. சிந்திக்கவும் வரவில்லை. அடுத்த வேளை சாப்பாட்டுக்கோ தங்குமிடத்துக்கோ கூட என்ன செய்வாள் இவள்?

அப்போதுதான் பவி வேலை தருகிறேன் என்க, எந்த திட்டமும் இன்றி இப்போதைக்கு தங்க ஒரு தாய் மடி என்றுதான் பவியிடம் இவள் ஒட்டிக் கொண்டது.

இத்தனைக்கும் பிறகும் மனம் ரோஹனை எதிர்பார்த்தது. அவன் அப்பாதான் எதாவது சதி செய்திருக்க வேண்டும் என்றே பட்டது. அவனும் அப்படித்தானே சொன்னான். அவரிடம் சிக்கி, அவருக்குப் பயந்து போய் இவன் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறானோ? எங்கெங்கோ இணையத்தில் தேடி ரோஹனின் அலுவலக  தொலைபேசி எண்ணை கண்டு பிடித்தவள், அதிலிருந்து ஒரே ஒரு எண் மட்டும்தான் ரோஹனின் வீட்டு எண் மாறி இருக்கும் என்பதால் அதைக் கண்டுபிடித்து அன்று இரவு அழைத்தாள். ரோஹனின் தங்கையோ அல்லது யார் மூலமோ எதாவது தகவல் தெரிய வருமா?

அடுத்த பக்கம்