துளித் தீ நீயாவாய் 20 (7)

அடுத்தெல்லாம் அவர்கள் சந்திப்பெல்லாமே அவன் சம்பந்தப்பட்ட யார் வீட்டிலாவது தனிமையிலாக மட்டுமே இருந்தது.  உண்மையில் பயம் இவளை விட்டுப் போயிருந்ததுதான். திருமண வாழ்க்கையில் இது எல்லோருக்கும் உள்ளதுதானே என நம்பிக் கொண்டாள். மனசாட்சியின் மண்டையில் தட்டி வைக்க மார்டன் உலகில் சித்தாந்தங்களுக்கா பஞ்சம்? பெரிதாய் உறுத்தல் என்றெல்லாம் கூட எதுவுமில்லை. அவன் அருகாமையுறும் நேரங்களில் ஒரு அருவருப்போ, பிடித்தமற்ற வாதை உணர்வோ இருக்கும்தான். அவனுக்காக அதைத் தாங்கிக் கொண்டாள்.

ஆனால் எந்த விளக்கமும் சொல்லப்படாவிட்டாலும் இதற்கு ஏன் முறையற்ற உறவெனவும், தேகத்தை கனவீனப்படுத்துவதென்றும் முழு உலகமும் பெயர் வைத்திருக்கிறது என்பதை வரும் நாட்கள் காட்டியது.

அவளுக்குப் போனது பயம் மட்டுமல்ல, ஒரு வகையில் எதன் மீதும் இவளுக்கிருந்த எல்லா வகை உணர்ச்சிகளும்தான். சந்தோஷமாக இருக்க வேண்டும் எனதான் இவள் நினைத்தாள். ஆனால் ஏனோ அவளுக்குள் பிறண்டு பிறண்டு விழுந்ததெல்லாம் ஒரு மனச்சோர்வு மட்டுமே! டிப்ரெஷன்.

இந்த மனச்சோர்வுக்கும் இந்த உறவுக்கும் கூட தொடர்பிருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. ஏனோ ஒரு மனச்சோர்வு அவ்வளவுதான் அவளறிந்தது. அவனோடு சண்டை தீர வேண்டும் என எதையும் செய்ய தயாராய் இருந்தவள், இப்போது ஏனோ எல்லாவற்றிற்கும் சண்டையிட்டாள். அவனும்தான். இவளுக்கு வந்த மனச்சோர்வு அவனுக்கும் வராதாமா?

முன்பெல்லாம் அவனைக் கண்டால் என்ன நினைத்தாலே ஒரு மந்திர காந்தப் புலம் அவளை வருடலாய் அள்ளிக் கொள்ளும். இப்போதெல்லாம் அப்படி ஒன்று இருந்தது என்றே நினைவில் இல்லை. அவனது சோப்பு அல்லது பெர்ஃப்யூம் வாசத்தை வேறெங்காவது நுகர நேரிட்டால் கூட குமட்டியது. சின்னதும் பெரிதுமாய் எப்போதும் வாக்குவாதங்கள். எதிலும் பிடித்தமிழந்து கொண்டிருந்த மனம் இப்போது எல்லாவற்றிற்கும் எரிந்து விழுந்தது. ஏதோ ஒரு பிசுபிசுப்பான  இருளுணர்வு அவளின் உள்ளும் புறமும்.

ஆனால் ஒவ்வொரு சண்டையின் சமரசத்தின் போதும் ஊடல் முடிவில் கூடல் என பிரச்சனைக்கு மூலகாரணமாகிய புள்ளிக்கே இவளை இழுத்தான் அவன். இதுதான் பிரச்சனையாகிறது என அவனுக்கும் தெரியவில்லை. மறுத்தால் இன்னும் சண்டை வரும் என்ற அறிவுதான் இவளுக்கும் இருந்தது.

அதோடு கர்ப்பத்தடை மாத்திரை சாப்பிடுவது என்ன கடலை மிட்டாய் சாப்பிடும் வகையா? மாதவிடாய் இந்த வயதில் இயல்பிலேயே தாறுமாறுதான், இப்போதோ இன்னுமாய் கொன்றெடுத்தது. அதோடு ஒரு மாதம் இரத்தப் போக்கு எகிறியது என்றால் ஒரு மாதம் வந்துவிட்டதா இல்லையா எனப் புரியாத அளவில் புள்ளிகளாய் முடிந்து போனது.

கர்பமாகிட்டமோ என அப்போதெல்லாம் கடும் பயம் பிறட்டி எடுத்தது. டாக்ட்டர்ட்ட போய் என்னன்னு சொல்லி கேட்க? அவனிடம்தான் கத்தினாள். இவளுக்கு மேல் வெளிறிப் போனான் அவன். “மாத்ரல்லாம் ஒழுங்கா போடுறியா இல்லையா முட்டாள்?” என பதில் சண்டை போட்டான்.

ப்ரெக்னென்ஸி ஸ்ட்ரைப் டெஸ்ட் வாங்கி வந்து நீட்டினான். கர்ப்பம் இல்லை என முடிவு வந்த பின்னும் ஒரு வாரமளவும் அவன் இவளிடம் அவ்வளவாய் பேசக் கூட இல்லை. அத்தனையாய் அவனும் பயந்திருந்தான். எக்கச்சக்க மன உளைச்சல். ஆனால் அதற்கும் ஆறுதலை அவனது தோப்பு வீட்டிலேயே இவளிடம் தேடினான் என்பதை எதில் கொண்டு சேர்க்க?

இப்படியாய் இன்னும் ஓரிரு மாதங்கள் ஓட இந்த நேரம்தான் அவளது 12ம் வகுப்பு பரீட்சைக் காலம். ஏற்கனவே பல மாதகாலமாக படிப்பு என்ற ஒன்றை கையிலே எடுக்கவில்லை. 2 மணி வரைக்கும் அரட்டை அடிக்கப்பவே அதை மறந்தாச்சே! இப்போது இத்தனை மனச்சோர்வும் வேறு. அதோடு எந்த ஆணையும் நேருக்கு நேராகப் பார்க்க உள்ளுக்குள் அவலட்சணமாய் ஒரு பயம் வருகிறது இப்போதெல்லாம். ஆக பொதுவெளிக்குப் போவதே பிடிப்பதில்லை. இவையெல்லாவற்றின் காரணமாக பரீட்சை ஹாலில் போய் 10 நிமிடம் இருப்பதுவே நரகமாகப் பட்டது இவளுக்கு.

“என்னால பரீட்சை ஹால்ல போய் சும்மா கூட உட்கார முடியல, நான் பரீட்ச்சையெல்லாம் எழுதிக்கவே மாட்டேன்” இது இவள்.

“சரி விடு, உனக்கு 18 வயசு முடிஞ்சன்னைக்கு நம்ம கல்யாணம் முடிஞ்சிருக்கும், அதுக்கு இப்ப கஷ்டப்பட்டு மார்க் வாங்கி காலேஜ் சேர்ந்து என்னதுக்கு? அதுவரைக்கும் நீ வீட்டைவிட்டு வந்து போக ஒரு காரணம் வேணுமே, அதுக்காக காலேஜ் சேருவன்னு நினச்சேன், பிரவாயில்ல டூடோரியல்ல சேர்ந்து ஒரு வருஷம் சமாளிச்சுக்கலாம்” இது அவன்.

ஆக பரீட்சைக்கென இவள் வீட்டில் சொல்லிவிட்டு கிளம்பிப் போனது கூட அவனோடு தங்குவதற்கான நேரமாகிப் போனது.

இப்படி எப்போதும் இவர்கள் சேர்ந்து கொண்டு சுற்றினால் வீட்டுக்கு தெரிய வராமலா போகும்? ஒருநாள் இவளிடம் வந்து அசிங்க அசிங்கமாக திட்டிவிட்டுப் போனார் அவனது அப்பா.

அதற்கு ரோஹன் போய் அவனது அப்பாவிடம் குதித்தான் போலும், அவர் இப்போது இவளது வீட்டிற்கு வந்து இவளது அப்பா அம்மாவை காறி துப்பினார். பதிலுக்கு அவர்கள் என்ன சும்மாவா இருப்பார்கள்? வேணியின் அப்பா ரோஹனின் அப்பாவை அடித்தே விட்டார். கைகலப்பாகியது.

ஆக இவள் காதல் விஷயம் இப்படியாய் இவள் வீட்டுக்கும் வந்தது. பெற்றவர்கள் மறுக்க, இவள் எதிர்க்க, இவள் பரீட்சை கூட எழுதவில்லை என்றும் அவர்களுக்குத் தெரியவர, அந்நேரம் அவள் அவனோடு இருந்திருக்கிறாள் என யூகிக்கி முடியும்தானே, இவளை அடி பின்னி எடுத்துவிட்டார் இவளது அப்பா. படிப்பும் போய் இப்படி ஒரு உறவிலும் மாட்டி எதிர்காலத்தை அழித்துவிட்டாளே மகள் என அவருக்கு பதறும்தானே! பள்ளி வேறு முடிந்திருந்ததே மொபைல் எதுவுமின்றி வீட்டுக்குள் சிறை வைத்தார்.

அடுத்த பக்கம்