துளித் தீ நீயாவாய் 20 (6)

இதில் அடுத்து வந்த வேணியின் பிறந்த நாளுக்கு அவனுடைய இறந்து போன தாத்தாவின் பூர்வீக வீடாம், அருகில் ஒரு கிராமத்தில் இருந்த வீட்டிற்கு இவளை அழைத்துச் சென்றான். ஸ்கூல்ல ட்ரிப் என வீட்டில் சொல்லி வந்திருந்தாள் இவள். துணைக்கு இவளை விட வயதில் மூத்த அவன் தங்கையையும் அழைத்து வந்திருந்தான் அவன். அறிமுகமாகும் போதே அண்ணி என இவர்கள் காதலை ஏற்றுதான் பேசினாள் அவள்.

செல்லும் போதே உணவை வாங்கிப் போய் அந்த வீட்டில் விருந்து போல் இவர்கள் மூவருமாக சாப்பிட்டுவிட்டு, கிளம்பும் வேளையில் “என் தாத்தா எனக்கு வரப் போறவளுக்குன்னு வாங்கி வச்சது” என ஒரு தங்கக்காசை இவளுக்கு பரிசளித்தான் ரோஹன்.

திரும்பிக் காரில் வரும்போதே “இப்பவே நீ என் வீட்டுக்கு வந்துட்ட போலதான் இருக்கு, நான் உன்ன என் வைஃபாதான் ஃபீல் பண்றேன், தாத்தாவே நின்னு நம்மள சேர்த்து வச்ச போல இருக்கு” என என்னவெல்லாமோ இவளிடம் சொல்லிக் கொண்டுதான் வந்தான்.

பின் வந்த தினங்களில் இதுவே அவனது தாரகமாகியது, அதோடு சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அவன் கரம் சிரம் எல்லாம் இவள் தேகம் புறம் நீட்டினான். அனிச்சையாய், இயல்பாய், அறிவாய், பயமாய்,  இவள் மறுப்பாய் விலகினால், “நான்தான் உன்ன என் வைஃபா நினைக்கேன், உனக்கு அப்படி நினைப்பு இல்ல என்ன? அதான் விலகி விலகிப் போற” என ஒரு வாதம்.

பின் அதுவே பிடிவாதமாகி “உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை என்ன?” என மாறியது.

‘நான்தான் உன் வைஃப்ன்றல்ல அத உன் அப்பாட்டயும் என் அப்பாட்டயுமாவது நம்மளால இப்ப சொல்ல முடியுமா? ஹஸ்பண்ட்னா நீதான் என்னோட சாப்பாடு, ட்ரெஸ், தங்குற இடம்னு அடிப்படை தேவையிலிருந்து இருந்து என் வாழ்க்கை எதிர்காலம்னு எல்லாத்துக்கும் பொறுப்பெடுக்கணும், அதுவும் அந்த பொறுப்ப இன்னைக்கு வரை செய்துகிட்டு இருக்க என் அப்பாட்ட இருந்து முறையா கேட்டு வாங்கணும், இல்லனா சட்டத்த சாட்சி வச்சாவாது அந்த பொறுப்ப ஏத்துக்கணும், இப்படி ஹஸ்பண்டுக்கான எந்த ஒரு கடமையையும் செய்யாம மனைவின்ற உரிமை மட்டும் எங்க இருந்து வரும்?’ என்றெல்லாம் இவளுக்கும் பேசவும் தெரியவில்லை.

அவன் கோரிக்கை ஏதோ தவறென உள்ளுணர்வில் உறைத்ததே தவிர ஏன் என்று அதை வார்த்தைப்படுத்த வயதோ, வார்த்தை ஞானமோ போதவில்லை அவளுக்கு.

அவனோ என்னை நீ நம்பலல்ல?விலிருந்து “ஓகோ இவன் கூட நம்ம கல்யாணம் நடக்காம போய்ட்டா நாம வர்றவனுக்கு ஒழுங்கா போய் சேரணும்னுதான் என்னை விலக்கி வைக்க” என்றெல்லாம் பெரிதாய் சண்டையிட்டு

“நான் உனக்கு ஒரு ஆப்ஷன், பின்னால என்னை கல்யாணம் செய்தாலும் செய்வ, செய்யாமவிட்டாலும் விடுவ? அப்படித்தான?” என ஆர்பாட்டம் செய்து ரணமாக்கினான்.

“என்னைக்குனாலும் நான்தான் உன் ஹஸ்பண்ட்னு நினச்சன்னா என் வைஃபா என்ட்ட பழகுவியே” என அடுத்தெல்லாம் கூடலை நிர்பந்திக்கும் வாக்குவாதம் மட்டும்தான் அவன் வகையில்.

இவன் என்ன நம்மள நம்ப மாட்டேன்றான் என ஒரு கோபம் இருந்தாலும், எதற்காக அவன் ஆசையை மறுக்கிறோம் என இவளுக்கே சரியாய் புரிபடா நிலை, இந்த வகை உறவு தவறென்றோ ஏன் தவறென்றோ யாரும் இவளிடம் வந்து காரண காரியத்தோடு விளக்கியா இருக்கிறார்கள்?! உள்ளுக்குள் ஏதோ ஒன்று இது கூடாதென இவளை இறுக்கிப் பிடிக்கின்றது. ஆனால் ஏன் அதை மீறக்கூடாதென யாருக்குத் தெரியும்?

சமூகமும் இதைத் தவறு எனதான் சொல்லும் என்ற அளவு இவளுக்குத் தெரியும். ஆனால் நாம் செய்வதையெல்லாம் சமூகத்திடம் போய் சொல்லிக் கொண்டிருக்கிறோமா, அல்லது அனுமதிதான் வாங்குகிறோமா? அடுத்தவங்களுக்கு என்ன ரைட் நம்ம லைஃப்ல?

இதில் அவனையே உலகமென, அவளது எதிர்காலமென சில மாதமாக மனதில் ஏற்றிவிட்டு, அவனது அதீத கவனத்தை, அவனால் கொண்டாடப்படலை அனுபவித்துவிட்டு, இப்படி இப்போது அவனது கோபம் மற்றும் குறை சொல்லுதலுக்கு மட்டுமே இவள் ஆளாகிறாள் என்பதையெல்லாம் தாங்காமல் இவள் மனம் தள்ளாடிக் கொண்டிருந்த ஒரு நிலையில் ஏன் தவறென புரியாத ஒன்றை எத்தனை தூரம் தவிர்க்கப் போராடும் இவள் உள்ளம்? சம்மதித்துவிட்டால் என்ன என்ற ஒரு கேள்வியை அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்த உதறல் மட்டுமே பிடித்து நிறுத்தி இருந்தது அப்போதைக்கு.

இதில் “அத்தையும் அவங்க பொண்ணும் வீட்டுக்கு வந்திருக்காங்க, அத்தப் பொண்ணதான் நான் கட்டணும்னு அப்பா வேற உயிர எடுக்கிறார். தினமும் அவர்ட்ட சண்டை, உனக்காக இப்படி நான் எனக்கான எல்லாரையும் பகச்சுக்கிறேன், நீ மட்டும் மனுஷன மதிச்சுடாத என்ன?” என அடுத்த குண்டை உருட்டினான் அவன். வேரறுந்த மரமாய் பரிதவித்தாள் வேணி. அவனது தங்கையின் சம்மதம் இருந்ததால் ஏதோ அவனது வீடே இவளை ஏற்றுக் கொண்ட உணர்வுதான் இதுநாள் வரைக்கும். அவனது அப்பாவின் இந்த முடிவே அவளை மருட்டியது எனில், இவளுக்காக போராடும்??!! இவனவளிடமிருந்து எதைக் காக்க போராடுகிறோம் என்ற ஒன்று இவளுள் குன்று போல் வளர்ந்து கொண்டு போனது. பெரும் தியாகியாகத் தென்பட்டான் அவன்.

இவள் வீட்டில் இப்போது வேறு கல்யாணம் பற்றி பேசி இருந்தால் அவன் செய்வதைத்தான் இவளும் செய்து கொண்டிருப்பாள். ஏன் ஒரு படி மேலே போய் ரோஹனைத்தான் திருமணம் செய்வேன் எனக் கூட சொல்லியுமிருப்பாள். அவன் செயலுக்கு இணையாக இதுதானே இவளிடம் எதிர்பார்க்கப்பட வேண்டும்? ஆனால் சம்பந்தமே இல்லாமல் கூடல் ஏன் இதோடு முடிச்சிடப் படுகிறது என்றெல்லாம் யோசிக்கும் பக்குவம் அப்போது அவளுக்கு இல்லை.

இதில் நாட்கள் நரகமென நகர்ந்த இரு வாரம் போலிருக்கும் அதில் “என்னடி உங்களுக்குள்ள? ரோஹன் அண்ணா உன்ன லவ் பண்ண ஆரம்பிக்கவும் என்ன நம்பி இனி ஒருத்தி இருக்காடான்னு சொல்லிட்டு சிகரெட் ட்ரிங்ஸ்னு எதையுமே தொடுறதுல்லன்னு அண்ணா சொல்வான், இப்ப ரொம்ப குடிக்காங்களாமே! என்ன சண்டைனாலும் அளவா போடுடி” என இவளது நட்பு வீணா வேறு சொல்ல,

அவ்வளவுதான் அடுத்து அந்த ரோஹன் கேட்டதெற்கெல்லாம் சம்மதித்திருந்தாள் இவள். ஒருவகையில் அவனிடம் உருகிப் போயிருந்தாள். இவளுக்காக குடிக்காம இருந்தானாமே! மறு வகையில் தன்னவனைப் பாதுகாக்கும் நடவடிக்கை, பாவம் நான் படுத்ற டார்ச்சர்ல ??!!! அவங்க உடம்ப கெடுத்துக்கிறாங்க

கூடல்!! அறுவைசிகிச்சை அறையில் மாட்டிக் கொண்ட பரிசோதனை எலிபோலத்தான் இருந்தது இவள் வரையில் அனுபவம். முடியவும் அழுகை கூட வரும் போலிருந்தது. அவனது ஒற்றை முறைப்பில், என்ன? என்ற சிடுசிடுப்பில் “பயமா இருக்கு” என்ற போதே அடங்கிப் போயிருந்தது அவள் குரல். செய்றதெல்லாம் செய்துட்டு அடுத்தும் அவன் கூட சண்டை போடும் நரகத்த வேற அனுபவிக்கணுமா? அழும் உரிமையையும் துறந்தாள்.

கர்ப்பத்தடை மாத்திரைகளை  கொடுத்து பயன் படுத்தும் முறையும் சொல்லிக் கொடுத்தான். “இனி பயப்படுறதுக்கு ஒன்னுமில்ல சரியா?” என தைரியம் கொடுத்தான். “இனிமே சந்தோஷமா இருப்பீங்கதானப்பா?” அதுதான் அவள் கேள்வியாய் இருந்தது.

அடுத்த பக்கம்