துளித் தீ நீயாவாய் 20 (5)

ஆக அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு வெகு அருகில் இருந்த கட்டிட மறைவில் போய் நின்று கொண்டான் இவன். அப்போதுதான் வேணி பேசுவது காதில் விழுகிறது.

“நீ நினைக்கிற மாதிரி பவியக்கா என் சொந்த அக்கால்லாம் கிடையாது. சொல்லப் போனா கொஞ்சா நாள் முன்னால வரைக்கும் அவங்கள எனக்குத் தெரியக் கூட செய்யாது. அவங்களுக்கு நான் கம்ப்ளீட் stranger. அப்படி இருந்தும் அவங்க வீட்ல வந்து நான் ஏன் இருக்கேன் தெரியுமா? எங்க வீட்ல இருந்து நான் ஓடி வந்துட்டேன், அதுவும் என்னை கல்யாணம் செய்றேன்னு சொன்னவன் கூட” என சொல்லிக் கொண்டிருந்தாள் அவள்.

சர்வமுமாய் ஆடிப் போனான் பால்கனி. இவனது வேணி இதை வந்து மதுவிடம் சொல்லி வைப்பாள் என அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. சொல்வதற்கு வேணிக்கு எத்தனை வலிக்கும் என்றும் இவனுக்குத் தெரியும், அதோடு மது இதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்றும் தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இவனவளின் அந்தரங்கம் எதற்கு அடுத்தவரிடம் சொல்லப் பட வேண்டும்?

பாய்ந்து போய் வேணியிடம் “லூசு பக்கி உனக்கு அறிவில்லையா இதெல்லாம் எதுக்கு இப்ப பேசிகிட்டு இருக்க?” என் கத்த வேண்டும் போல் இருக்கிறதுதான் இவனுக்கு. ஆனால் இவன் சற்று அசையவும் இவன் முன்னால் விழுந்த ஒரு வெளிச்சப் பச்சைப் புள்ளியானது நகர்ந்து இவன் தோள் மீதே விழுந்தது. திகீரெனப் புரிகிறது இவன் துப்பாக்கியின் குறியிலிருக்கிறான். துள்ளிப் போய் பின் புறமாய் விலகியவன் அனிச்சையாய் திரும்பிப் பார்க்க,

அங்கே எதிர்புற மாடியில் நின்ற ஒருவன் கட்டை விரல் உயர்த்திக் காண்பித்தான். குட் ஜாபாம். விஷயத்தை புரிந்து கொண்டதற்காய் பாராட்டாம். அதாவது வேணியின் அருகில் இவன் போகக்கூடாதாம்.

தாறுமாறாய் தவித்துப் போனது இவனுக்கு. துப்பாக்கியால் பாதுகாப்புப் போடும் அளவுக்கு வேணிக்கு என்ன பிரச்சனை? நேற்றும் அங்கு வீட்டிலும் இப்படித்தானே செய்து வைத்திருக்கார் Sp சார்? இதுதான் இவனது முதல் தவிப்பு.

பின் மெல்லத்தான் உறைக்கிறது அந்த நரேன்ற பேர்ல ஃபோன் பேசுன நாய் அங்க என்னல்லாம் வம்பு வளக்குதோ? அவன் வயல்ல வந்து மிரட்டிட்டுப் போன வகைக்கு சார் தன் வீட்டாள்களுக்கு இப்படி பாதுகாப்பு போடுறது இயல்புதானே! நேத்து இவன் போய் இழுத்த வம்புல இப்ப இவனையும் வேணி பக்கத்தில் போகக் கூடாதுன்னுட்டாரோ? அல்லது அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாம கூட இருக்கலாம். ஆனால் எது எப்படியோ இனி இவன் வேணியிடம் பேசாமல் எப்படி இருக்கப் போகிறான்? எல்லாத்துக்கும் விடை அந்த புல்லட்காரன் சேப்ட்டர் சீக்கிரமா முடியுறதுலதான் இருக்கு.

கிண் என மனம் எங்கெல்லாமோ சுத்தி வந்து முடியும் போது வேணி இங்கு தன் கதையைத் தொடர்ந்து கொண்டிருப்பது காதில் விழுகிறது இவனுக்கு. துடிக்கத் துடிக்க வலித்தது உயிரெங்கும். ஆனால் அவள் சொல்வதை எப்படி நிறுத்த இவன்?

திருப்பூரைச் சார்ந்தவள் வேணி. பதினொன்றாம் வகுப்பு விடுமுறையில் வேணி சென்ற கோட்சிங் வகுப்பில்தான் வீணா அறிமுகம் வேணிக்கு.  ஓர் கடும் மழை நாளில் வீட்டுக்குத் திரும்ப இவளது ஆட்டோ வராமல் போக, வீணாவினை அழைத்துச் செல்ல தன் நண்பனின் காரில் வந்திருந்த வீணாவின் அண்ணன் ப்ரகாஷும் அவனது நண்பன் ரோஹனும் இவளையும் அழைத்து வந்து வீட்டு வாசலில் இறக்கிவிட, அதில்தான் 24 வயது ரோஹன் அறிமுகம் இவளுக்கு.

அடுத்து சிலமுறை, அந்த செராக்ஸ் சென்டர் போய்ட்டு வந்து உன் ஆட்டோவ பிடிச்சுக்கலாம், இந்த ராகவி வீட்டுக்குப் போய் நோட்ஸ் வாங்கிட்டு சென்டர்கே வந்துடலாம் என்பது போன்ற காரணங்களால் இந்த காரில் போகும் முறை தொடர, ரோஹன் வேணிக்கு நன்றாக பேசிக் கொள்ளும் அளவுக்கு அறிமுகமாகி இருந்தான்.

இதில் ஒருநாள் நான் ஏன் இங்கயே வந்து சுத்திகிட்டு இருக்கேன் தெரியுமா, நீ எனக்கு ரொம்ப முக்கியம், உன்னை பார்க்காம என்னால முடியவே முடியாது ஐ லவ் யூ என அந்த ரோஹன் ப்ரபோஸ் செய்ய, ஒரு பக்கம் வீட்டை நினைத்து திகீர் என்றாலும், ஒரு பக்கம் வாவ் என ஒரு துள்ளல்தான் வேணிக்கு. ஹை  யாருக்கோ இவளப் பிடிச்சுருக்காமே!

ஆனால் அதற்காகவெல்லாம் இவள் சரியென்றுவிடவில்லை. இந்த மாதிரி நினப்ப வச்சுகிட்டு இனி  என்னப் பார்க்க வேண்டாம், வீட்ல தெரிஞ்சா வெட்டிப் போட்டுடுவாங்க என இவள் விலகித்தான் போனாள்.

‘வீட்ல உள்ளவங்களுக்குத்தானே பிடிக்காது, உனக்கு என்னைப் பிடிச்சுருக்குதானே, அத மட்டும் சொல்லு, வீட்ட நான் பார்த்துக்கிறேன்’ என்ற ரீதியில் இவள் பின்னால் சுத்தோ சுத்தென சுத்தினான் அந்த ரோஹன். ஐயோ இவனுக்கு என்னை ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கே!

அவளது 16 வயதுக்கு ஒருவன் மழை வெயில் பாராமல்  இவளை சுற்றி சுற்றி வருவது ஒரு கட்டத்தில் பெரும் அன்பாகத்தான் தோன்றியது வேணிக்கு.

அவர்களது சக்திக்குட்பட்ட அனைத்தையும் நமக்காக செய்து போட்டாலும், நமது பெற்றவர்களோ உடன் பிறந்தோரோ நம் மீது அன்பாய்த்தான் இருக்கிறார்கள் என ஒத்துக் கொள்ள எத்தனை எதிர்பார்க்கிறது இந்தமனது, ஆனால் எவனோ ஒருவன் நாம் போகிற இடத்திலெல்லாம் வந்து நின்றாலே அதை அன்பு என்கிறதே அது எப்படி? என்றெல்லாம் அப்போதைய வேணிக்கு கேள்வி கேட்டுக் கொள்ளத் தெரியவில்லை. இது ஹார்மோனல் யுத்தம் என்றும் புரியவில்லை.

இதில் வீணா வேறு ரோஹன் அண்ணா பாவம்டி, அவங்க வீடு எவ்வளவு வசதி தெரியுமா? அண்ணா இப்பவே அவங்கப்பா ஆஃபீசில் எவ்வளவு பெரிய போஸ்ட்ல இருக்காங்க தெரியுமா? அவங்களுக்கு கீழ எத்தன பேர் வேலை செய்றாங்க தெரியுமா? அப்படிப்பட்டவங்க கொஞ்சம் கூட ஈகோ பார்க்காம உன்ட்ட வந்துவந்து நிக்காங்க, நீ என்னன்னா எவ்வளவு ஈசியா அவங்கள  இன்சல்ட் செய்ற! என இன்னும் ஏத்திவிட்டாள். அச்சோ அவன் ரொம்ப நல்லவன்பா!

வேணி வீடும் ஓரளவு வசதிதான், இவனது பண புலம் அவளுக்கு விஷயமாகப் படவில்லை. ஆனால் இந்த ஈகோ பாய்ண்ட் இன்னுமாய் ஈர்க்க, அடுத்து ஒருகட்டத்தில் அவன் பிறந்த நாளன்று மீண்டும் அரங்கேறிய அவன் ப்ரப்போசலில் இவளது தலை சம்மதமாய் ஆடி இருந்தது.

அடுத்தென்ன அடுத்த மூன்று மாதங்களுக்குள் அவனை ஆயிரம் ஆயிரம் காலமாய் தெரியும் போல் ஒரு அன்யோன்யம்.

தினமும் கோச்சிங் வகுப்பு முடியவும் அவனோடு காரில் ஒரு ரவ்ண்ட், இரவு வீட்டில் இரண்டு மணி வரை மொபைலில் இன்னதென இல்லாமல் இவர்கள் பற்றிய அரட்டை. இதெல்லாம் இருந்தால் பின்ன அவன அடுத்தவனாவா தோணும்?! அம்மாப்பட்ட என்ன நம்ம அடுத்த ஃப்ரென்ட்ஸ்ட்டயே அவ்வளவா பேசுறோம்?!

கூடவே சின்ன சின்ன சண்டை, அதற்கு பெரிய பெரிய கால் விழல்கள். வாவ் இவனப் பார்க்காம இவ்வளவு காலம் எப்படி வாழ்ந்தேன் நான்!

அடுத்த பக்கம்