துளித் தீ நீயாவாய் 20 (4)

இதில் மற்ற எல்லாம் பின்னுக்குச் செல்ல, பவிக்கா ஏன் ஷாக்காகுறாங்க?? என ஒரு முக்கிய ஆன்டெனா இப்போது வேணிக்குள் அவசரமாய் எழுந்து கொள்ள,  அதற்குள் “பால்கனி ட்ரஸ்ட்வொர்த்தி கிடையாதுன்னு நான்தான் ஏற்கனவே வேணிட்ட சொல்லி இருக்கேனே” என பவிக்கு விளக்கம் சொல்லிய ப்ரவி,

“அவனோட சைல்ட் ஹூட் ரொம்ப கஷ்டமானதாமே, இந்த தங்கச்சி பாசமாவது அவன் மனச ஹீல் பண்ணட்டும், அப்பயாவது அவன் எல்லோர்ட்டயும் ஒழுங்கா நடந்துப்பானான்னு பார்ப்போம்” என்றான் இவளுக்கும் பவிக்குமாக.

அதாவது பால்கனி நம்பிக்கைக்கு ஏற்றவன் இல்ல, அதனாலதான் உன்ன அவன விட்டு விலகி இருக்கச் சொல்றேன், ஆனா மது மேல அவனுக்கு இருப்பது பாசம், அதை நம்பி அவன் மதுட்ட பழகுறத நான் தடுக்கலன்னு SP சார் இவளுக்குச் சொல்றார்.

இவளோட நிறை குறைகள் தெரிந்த பின்னும் இவ நல்லா இருக்கணும்னு இவ்வளவு பார்த்துக்கிற Sp சார், இந்த லூசு பால்கனிக்கும் எது நல்லதுன்னு யோசிக்கிறார். இதுதான் வேணியின் புரிதல்.

ஆனால் இதுக்கு பவிக்கா ஏன் ஷாக் ஆகணும்? இதுல எனக்குத் தெரியக் கூடாத விஷயம் என்ன இருக்குது? அப்படின்னா நான் புரிஞ்சுக்கிறத தாண்டியும் எதோ இருக்குது போல! என சில நொடிகள் இதில் மனம் சுற்றி வந்தாலும் மது பற்றி மிகவும் மனம் நெருக்குண்டு போய் கிடந்ததால் அதற்கு மேல் இதைப் பற்றி எதுவும் யோசிக்கவரவில்லை வேணிக்கு.

பால்கனி கொடுத்திருந்த இந்த வாய்ஸ் ஃபைல்  அவன் மொபைலிலிருந்த மதுவுக்கும் அவனுக்குமான முழு உரையாடல் தொகுப்பு கிடையாதே! அவன் மொபைல்தான் திருட்டுப் போயிருந்ததே! எதற்கும் மதுவிடமும் ஒரு பதிவு இருக்கட்டும் என மது மொபைலில் பதிந்த உரையாடல் மட்டுமே இப்போது இவனிடமிருக்கிறது. அதைத்தான் கொடுத்திருந்தான்.

அதில்  மது அந்த பாதிக்கப்பட்ட மனைவியின் வீட்டுக்குள் செல்வதிலிருந்துதான் மதுவுக்கும் அவனுக்குமான உரையாடல் பதியப் பெற்றிருந்தது. அதிலிருந்தே மது ஒரு மாதிரி இறுகிப் போய் யோசித்து யோசித்துதானே பேசி இருந்தாள். பால்கனியுமே இறுக்க விறைப்பாகத்தான் பதில் கொடுத்திருந்தான்.

பால்கனியின் காரிலிருந்து தன் வீட்டுக்குச் செல்லவென இறங்கும் போது மதுவின் மொபைலில் பதிவதை நிறுத்தி இருந்தானே பால்கனி. அதனால் அடுத்து அவர்கள் பாசம் சொட்ட சொட்டப் பேசிக் கொண்டதும் இந்த பதிவில் இல்லை.

ஆக இதைக் கேட்கும் போது மது தன் காரியத்தின் ஆழ அகலம் தெரியவும் குற்ற உணர்வில் வெகுவாக மனம் ஒடிந்திருக்கிறாள் போலும் என்ற புரிதல் மட்டுமே வேணிக்கு உண்டாகியது.

அதோடு எந்த சூழ்நிலையிலும் வெகு கவனமெடுத்து யார் கண்ணிலும் படாமல் இவளிடம் வந்து நிற்கும் பால்கனி தன் தலையில் பிஸ்டல் வைக்கப்படும் அளவுக்கு ரிஸ்க் எடுத்து இவளிடம் வந்து அந்த பென் ட்ரைவை கொடுத்துவிட்டுப் போகிறான். அதுவும் மதுவுக்காகத்தான் வந்தேன் என குறிப்பும் கொடுத்துவிட்டு போகிறான் என்ற விஷயமும் சேர,

மது குற்ற உணர்வில் மனமுடைந்து போய் தற்கொலை அது இதென விபரீதமாக எதுவும் யோசிக்கிறாள் போலும், அதனால்தான் பால்கனி எப்படியாவது இவளை மதுவை சந்திக்கக் கூட்டிப் போய்விட வேண்டுமென இத்தனையாய் உணர்ச்சிவசப்பட்டுவிட்டான் போலும் என்ற எண்ணம் வேணிக்கு வலுவாக வந்துவிட்டது.

இவள் கடந்த முறை மதுவை சந்தித்தபோது கடைசியில் அவளிடம் முகம் தூக்கிக் கொண்டல்லவா வந்தாள். அப்படி இருந்தும் அடுத்து இவள் பள்ளிக்கு செல்லாத போது இவள் ஏன் வரவில்லை என மது வந்து விசாரித்ததாக பவியக்கா சொன்னார்களே! ஆக  தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முன் இவளிடம் இறுதியாக பேசிவிட வேண்டும் என எண்ணுகிறாளா என்ன அவள்?

இதில்தான் இவள் துடித்துப் போய்விட்டாள். மதுவின் இந்த நேரத்தில் தாங்கிப் பிடிக்க, தைரியமூட்ட, குற்ற உணர்ச்சி தாண்டி வாழ்வைப் பார்க்க வைக்க சர்வ நிச்சயமாய் ஒரு தாய் மனம் வேண்டும், அதற்கு யாரும் இல்லையென்றால் இவள் போயாக வேண்டும் என பரிதவிக்கிறது, பிசைகிறது நெஞ்சம்.

ஐயோ நாலுநாளா இந்த மதுவ தனியா விட்டுட்டாளே, இப்பவே எதுவும் செய்து வச்சிருந்தான்னா என்ன செய்ய? ஆனா நாளைக்கு மதுட்ட கொடுத்துருன்னானே இந்த பால்கனி, அப்ப நாளைக்கு மதுவ எப்படியும் ஸ்கூல்க்கு வர வச்சிருப்பான், அதுவரைக்கும் எப்படியும் அவள பத்ரமா பார்த்துக்குவானாவும் இருக்கும், அவன்லாம் ஒன்னு செய்யணும்னு நினச்சுட்டா என்ன ஆனாலும் செய்து முடிச்சிடுற டைப் தான், அப்படின்னா மதுவ அவன் பார்வையவிட்டு எங்கயும் அசையாம வச்சுருப்பான்தான், ஆனாலும் மதுவா மனச மாத்திக்காம எத்தன நாள் இப்படி பார்த்துக்க முடியும்? நாளைக்கு எப்படியும் போய் இவள் பேசிடணும்!

இவள் போய் பேசிட்டா மட்டும் மது சரியாகிடுவாளாமா? இவள் என்ன மந்திரவாதியா? யோசிக்க யோசிக்க மதுவிடம் என்ன பேச வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்ட பின்புதான் ஓரளவு அமர்ந்தது இவள் உள்ளம்.

அந்த பென் ட்ரைவ் உரையாடல் இப்படி ஒரு தாக்கத்தை இவளுக்குள் ஏற்படுத்தும் எனச் சற்றும் எதிர்பார்த்திராத பால்கனி மறுநாள் பவித்ராவுடன் பள்ளியில் வந்திறங்கிய வேணியைப் பார்க்கவும் பரிபூரண பரவசத்திற்குள் விழுந்தான்.  தன் கவனத்தை அவள் மீதே வைத்துக் கொண்டான். ஆனால் அவள் பார்வைக்குள் மட்டும் போகவில்லை. தூரத்திலிருந்தே அவளை தொடர்ந்து கொண்டிருந்தான்.

ப்ரவி இனி வேணி இவனிடம் பேசக் கூடாது எனச் சொல்லி இருப்பது இவனுக்குத் தெரியாது. ஆனால் இவனே சொல்லி இருந்தானே இனி உன்ட்ட பேசமட்டேன் என. விலகி இருப்பதாக காண்பித்துதான் அவளை தன் வசம் திருப்ப வேண்டும் என இவன் நினைத்திருந்தானே அதனால்தான் இப்படி விலகி நின்றான் இவன்.

ஏதோ மதுக்காக மட்டும்தான் அவளப் பார்க்க போய் நின்னோம்னு அவ நினச்சுக்கட்டும் என்பது இவனுக்கு. தட் கீழ விழுந்தாலும் மண் ஒட்டலையாங்கும் மொமன்ட்.

இதில் வேணி மாணவிகள் அவரவருக்கான இடத்தில் அமர்ந்து தங்கள் படிப்பைத் தொடங்கும் வரை வழக்கமாய் செய்யும் காரியங்களை செய்தவள் பின் மதுவிடம் போய் எதோ சொல்லி அவளை அழைத்துக் கொண்டு ஒரு வகுப்பறை கட்டிடத்துக்கு பின் புறமாக சென்றாள்.

எதாவது வகுப்பில் இவர்கள் இருவருமாய் அமர்ந்து பேசினால் மற்ற மாணவிகள் என்ன ஏன் என மதுவிடம் எதுவும் தர்மசங்கடப்படும் கேள்விகளை எழுப்பக் கூடுமென இப்படி யாரும் பொதுவில் வராத இடத்தில், மற்றவர் பார்வைக்கு படாத இடத்துக்கு இவர்கள் போக,

பால்கனிக்கு அவர்கள் இருவரையும் அப்படி ஒதுக்குப் புறமாக தனியாக விட சற்று சஞ்சலமாய் இருந்தது. இவன் மொபைலை வரை வந்து திருடினவன், மது வேணியையும் கண் வைக்க கூடுமல்லவா?

அடுத்த பக்கம்