துளித் தீ நீயாவாய் 20 (3)

ஓ மை காஷ்! அங்க நின்னுகிட்டு இருக்கப்ப SP சார் வந்திருந்தா என்னாகியிருக்கும்? அவர் எங்க இருக்கார்னு கூட விசாரிச்சுக்காம இப்படி போய் நின்னுருக்கனே! ஆனாலும் எதோ எனக்கு நல்லது நடக்கணும்னு இருந்திருக்கு, அதான் SP சார் அந்நேரம் அந்த பக்கமா வரல.

இங்கு பால்கனி இப்படி ஆசுவாசப்பட்டுக் கொண்டிருக்க, இந்த மொத்த நிகழ்விலும் அந்த காவலர் ப்ளூடூத்தில் ப்ரவி என்ன என்ன சொன்னானோ அதை மட்டுமே  சொல்லிக் கொண்டும் செய்து கொண்டும் இருந்தார் எனத் தெரிந்தால் என்னவாகி இருப்பானோ?!

ஆம் பால்கனி பள்ளியிலிருந்து கிளம்பி இவர்கள் வீட்டுப் பக்கமாக வருகிறான் என தகவல் கிடைக்கவுமே ப்ரவி இங்குள்ள காவலரிடம் தேவையான கட்டளைகளை கொடுத்துவிட்டு அடுத்தும் பால்கனி வந்து சேரவும் காவலரோடு தொடர்பிலேயே இருந்தான். இவன் அந்தந்த நொடி சொன்னதை மட்டுமே அவர் செய்தார்.

ப்ரவியே நேரில் வந்திருக்கவும் செய்வான்தான். ஆனால் வேணி மட்டுமாக வீட்டிலிருக்கும் இந்த நேரத்தில் எதற்காகவும் வீட்டுக்குச் செல்லும் வழக்கம் இல்லாத இவன், இன்றுமட்டும் திடுதிப்பென போய் நின்றால், அது பால்கனிக்கு அவன் கண்காணிக்கப்படுகிறான் என உணர்த்தி எச்சரிக்கைப்படுத்திவிடக் கூடும் என்பதால் அந்த காவலரை வைத்தே நிகழ்ச்சியை முடித்துவிட்டான்.

அதோடு அன்று வீட்டுக்கு வரவும் வேணியிடம் இனி பால்கனியோடு அவள் பேசுவது ஆபத்து, ஆக அவனிடம் மதுவுக்காகக் கூட பேசக் கூடாது என்றுவிட்டான்.

என்னதான் ஏடா கூடமாக எடுத்ததும் பெண் கேட்டாலும், வேணியிடம் பால்கனி அவளின் மனதுக்கு உகந்தபடி அதுவும் சமூக நியதிக்கும் உட்பட்டே நடந்து கொள்ள முயல்கிறான், ஆக அவள் விஷயத்தில் விபரீதமாக எதையும் செய்துவிட மாட்டான் என்ற ஒரு எண்ணம் இதுவரைக்கும் ப்ரவிக்கு இருந்தது.

அதனால்தான் வேணியிடம் மது விஷயமாக பால்கனி பேசுகிறான் என்றதும் அவளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திவிட்டு பேச அனுமதி கொடுத்திருந்தான். மது விஷயம் தவிர்த்து காதல் அது இது என்றானால் பால்கனியை வேணியே வாயடைத்துவிடுவாள் என்பதும் இவனுக்கு உறுதி. ஆனால் இப்போது பால்கனி மீதிருந்த அந்த நம்பிக்கை போய் இருந்தது.

உணர்ச்சி வேகத்தில் இவன் வீட்டுக்குள் அத்து மீறி நுழையும் அளவு தைரியப்படுபவன், இது போல் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் வேணியிடம் விபரீதமாக நடந்து கொண்டால் என்னாவது?

ஆக வேணியிடம் இவன் தனது மறுப்பை தெரிவிக்க, சரி என முழு மனதாக ப்ரவியின் முடிவை ஒத்துக் கொண்டாள் வேணி. இது இவளுக்கான அக்கறை என்ற புரிதல் இருந்ததால் உண்மையில் இதில் மகிழ்ச்சித்தான் வேணிக்கு.

அதற்குள்ளாகவே பால்கனி கொடுத்த பென் ட்ரைவிலிருந்தவைகளை கேட்டும் வாசித்தும் இருந்தவள், இப்போது அந்த பென் ட்ரைவை அப்படியே ப்ரவியிடம் கொடுத்துவிட்டு,

“அதுல உள்ள மது விஷயம் உங்க ஆஃபீஸ்க்கு கூட போகாம பார்த்துப்பீங்கதானே! ப்ளீஸ் சார்” என கெஞ்சலாக ஒரு கோரிக்கையை மட்டும் வைத்தாள்.

‘ஒருவகையில் இதுக்காகத்தான் பால்கனி ரொம்ப எமோஷனாகி என்ன செய்றோம்னு யோசிக்காம இப்படி வீட்ல வந்து ப்ரச்சனை செய்துட்டான்’ என்ற உள்குறிப்பையும் அவள் கோரிக்கை தாங்கி நின்றதோ?!

சோஃபாவில் அமர்ந்திருந்த ப்ரவி எதிரில் நின்று கொண்டிருந்த வேணி முகத்தை பார்த்தபடி அவள் தந்த அந்த பென்ட்ரைவை கை நீட்டி வாங்கிக் கொண்டாலும் அப்போதைக்கு பதில் என  எதுவுமே சொல்லவில்லை.

அன்று இரவு உணவு வேளையில் எதேதோ பேச்சுக்கள் பவித்ராவுக்கும் ப்ரவிக்கும் இடையில் நடந்து கொண்டிருக்க, அமைதியாக தானுண்டு தன் தட்டுண்டு என குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த வேணியிடம்,

“பென் ட்ரைவ் ஃபைல்ச பார்த்தா நாம சொன்னா கூட அந்த பால்கனி மது விஷயத்தில் தலையிடாம இருப்பான்னு தோணல வேணி” என பேச்சை துவக்கிய ப்ரவி,

இவள் அவசரமாய் நிமிர்ந்து பார்க்கவும், “அவன் மதுட்ட பழகக் கூடாதுன்னு சொல்ல நமக்கும் எந்த ரைட்டும் கிடையாது, அதனால மது விஷயத்தில் அவன அவன் வழியிலேயே விட்டுடுவோம்” என்றவன், “இந்த மது விஷயமாவது அவன  சரி செய்தான்னு பார்ப்போம்” என்றான்.

பால்கனியிடம் மது சம்பந்தமாக பேசக் கூடாது என ப்ரவி சொல்லும்போதே, மதுவுக்கு தேவையானதை SP சார் பார்த்துக் கொள்வார் என புரிந்து வைத்திருந்த வேணிக்கு, இனி பால்கனியையும் மது விஷயத்தில் தலையிடவிட மாட்டார்  SP சார் என்ற எண்ணமும் தோன்றி இருந்தது.

ஆனால் இந்த முடிவு மதுவுக்கு என்னதாக இருக்குமோ என ஒரு தவிப்பு அவளை வதைத்துக் கொண்டிருந்தது. அதை ப்ரவியிடம் மனம் விட்டு பேசவும் இவளுக்கு தைரியம் இல்லை. அவன் மீதிருந்த அதீத மரியாதை காரணம்.

பென் ட்ரைவில் கேட்ட மது பால்கனி உரையாடலில் ஏற்கனவே வெகுவாக மனம் பிசைபட்டுப் போயிருந்தது இவளுக்கு. அதனாலேயே அவள் விழுந்து போன முகத்தோடு வெகு மௌனமாக எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்க, சாப்பிடவே மனமில்லைதான், ஆனால் சாப்பிட மாட்டேன் என எப்படிச் சொல்ல, அதற்காக கஷ்டப்பட்டு சாப்பிட்டுக் கொண்டிக்க, அப்போதுதான் SP சார் கூப்பிட்டு இப்படிச் சொல்கிறார்.

விஷயம் காதில் விழவும் சிறிதளவுதான் எனினும் ஒரு நிம்மதிதான் இவளுக்குள் பிறக்கிறதென்றாலும், ‘சார் நான் இதுக்காகத்தான் அப்செட்னு நினச்சுட்டாங்களோ?’ என்றும் ஒரு நினைவு பல்லி ரேஞ்சில் பதறியபடி துள்ளி ஓடுகிறது இவளுக்குள்.

இதில் பதறிப் போய் இவள் பவித்ராவைப் பார்த்தால், அங்கு பவித்ராவுமே ப்ரவியின் பேச்சில் ஒருவித அதிர்ச்சி முழிதான் முழித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அது இவள் பார்வை போல் அல்ல,  எதோ வெளியே சொல்லக் கூடாத ரகசியத்தை ப்ரவி சொல்லிவிட்டது போல் ஒரு வகைப் பார்வை அது. அதுவும் நொடிக்கும் குறைவான நேரம்தான். அதற்குள் இயல்புக்கும் வந்துவிட்டாள்.

அடுத்த பக்கம்