துளித் தீ நீயாவாய் 20 (2)

கண்ணில் கிடைத்த காட்சியில் முதல் கணம் அவள் அதிர்ந்து போனாலும், அடுத்த நொடி சிரிப்பாக வருகிறது அவளுக்கு. என்னமா பந்தா காட்டுவான் இந்த பால்கனி, அவன் இப்ப இப்படி பதறிப் போய் பவ்யமா நிக்றானே!

இந்த சீன்பாண்டிக்கு இது வேணும்தான்! என நினைத்துக் கொண்டவள், ஆனாலும் யாருக்குமே உயிர் பயம் என்பது எப்படி இருக்கும் என புரிந்தவளாய்,

வீட்ல பவிக்கா கூட இல்லாத நேரம் வரப் பார்த்திருக்கான், எவ்வளவு கொழுப்பு?! என சீறிக் கொண்டு வந்த கோபத்தை, ஆனாலும் முன் வாசல்வழியா போலீஸ் பார்க்க வந்துருக்கான், என்னதா இருக்கும்? மதுவுக்கு எதுவும் பெரிய பிரச்சனையோ? என்ற கேள்வி கொஞ்சமாய் கட்டுப்படுத்த,

“சார் அவர் வீட்டுக்கு தெரிஞ்சவர்தான் சார், ஆனா சம்பந்தமில்லாம இந்த டைம்ல ஏன் வந்து நிக்றார்னு கேளுங்க” என இங்கிருந்தபடியே சத்தமிட்டாள்.

இதில் பால்கனிதான் பாய்ந்து போய் இவளைத் திரும்பிப் பார்த்தான். காவலர் இன்னுமே பிஸ்டலிலேயே கவனமாக இருந்தார். ஆனாலும் “மேடம் கேட்காங்கல்ல சொல்லு” என கொஞ்சமாய் பால்கனிக்கு கருணை காட்டினார்.

பூட்டிய வீட்டுக்குள் நிற்கிறாள் வேணி, இவனோ அந்த வீட்டின் காம்பவண்ட் சுவர் கேட் அருகில் அதுவும் துப்பாக்கி முனையில் இருக்கிறான், இந்த சூழலில் என்ன பேசிவிட முடியும்? பொங்கிக் கொண்டு வந்தது பால்கனிக்கு. ஆனாலும் அவளைப் பார்த்துவிட்டதே பால்நதியாய் ஒரு பரவசத்தை பாதாதி கேசம் பாய்ந்து பாய்ந்து படர்விக்கிறது இவனுக்குள், அதையும் விட அவள் இவனின் உதவிக்கு வருகிறாள், தெரிந்தவன், நம்பலாம் என இவனைப் பற்றி கூறுகிறாள் என்பதெல்லாம் தேனருவியாய் பொழிந்து வைக்கிறது இவனது ஜீவனெங்கும்.

“இந்த பென் ட்ரைவ், இத இதப் பார் வேணி, மதுக்கு… மது சில கொஸ்டியன் ஆன்ஸர் கம்பைல் செய்துருக்கா, அவளுக்கு அந்த ஆன்ஸர்ஸ் புரியலையாம், அதனால சரியாதான் இருக்கான்னே தெரியலைனு சொல்றா, நீ பார்த்து ஓகே பண்ணிட்டன்னா நான் ப்ரிண்ட் அவ்ட் எடுத்து அவ க்ளாஸுக்கு கொடுக்கச் சொல்லி குடுத்துருவேன்” அவனே இதுதான் உண்மை என நம்பிவிடுவானாக இருக்கும், அந்த அளவு உண்மை போல் சொல்லி சமாளித்தான் பால்கனி. இன்ஸ்டென்டாய் ஒரு கதை.

உண்மையில் அந்தப் பென் ட்ரைவில் மது கொடுத்திருந்த கேள்விகள் இருந்தன. கணிதம் மற்றும் அறிவியலில் சில வினாக்கள் புரியவில்லை அதற்கு யாரிடமாவது விடை மற்றும் விளக்கம் கேட்டுத் தர முடியுமா என அவள் சொல்லி இருந்தாள். இவன் பத்தாம் வகுப்பு பாடம் எப்படி இருக்கும் என்றெல்லாம் பார்த்தவன் இல்லைதான், ஆனால் ஆங்கிலமும் கூகிளும் இவனிடம் இருக்கும் போது இவனே ட்ரைப் பண்ணா என்ன? தங்கச்சிப் பாசமா? மது எப்படியும் வேணிட்ட சொல்வால்ல, அப்ப வேணி இவன இன்டலிஜென்ட்னு நினைக்க முடியுமே, அதுக்காகவோ, இவன் அந்த வினாக்களுக்கு விடைகளை தேடி தொகுத்திருந்தான். ஆக இப்போ போலீஸ் கைக்கு பென் ட்ரைவ் போனா கூட இவன் சொன்னது உண்மைனு ஆகிடும்!

கூடவே அந்த பென்ட்ரைவில் மதுவுக்கும் இவனுக்குமான உரையாடலை பதிவு செய்தானே முன்பு, அந்த வாய்ஸ் ஃபைலும் இருந்தது. வேணியிடம் கொடுக்கவென எடுத்து வைத்ததுதான்.

துப்பாக்கி முனையில் சும்மா நிற்க முடியாதே! ஏற்பது போல் எதையாவது சொல்லியாக வேண்டுமே என வேறு வழி இல்லாமல்தான் இந்த மது விஷயம் பென் ட்ரைவில் இருப்பது தெரிந்தும் இவன் பென் ட்ரைவைப் பற்றிப் பேசியது.

மது பற்றிய விஷயங்களை எப்படியும் வேணி இந்த காவலர் கையில் விட்டுவிட மாட்டாள் என்ற நம்பிக்கையில், “நீயே பாரு வேணி” என அவளை அழைத்தான்.

மது என்ற பெயருக்கும், இத்தனை முயன்று அவன் வந்து நிற்கும் கோலத்திற்கும், இப்போது இவள் கண்களைப் பார்க்கும் எந்த செய்தியையும் வெளிக்காட்டாத அவன் விழிகளுக்கும், மது பற்றி வெளி வந்துவிடக் கூடாத ஏதோ பெரிய விஷயம் போலும் என்ற புரிதல் மொத்தமாய் வேணிக்கு வந்திருக்க, சட்டென அவள் கதவைத் திறக்கப் போனாள்.

“இல்ல மேம், அங்கயே இருங்க, நான் வாங்கித் தரேன்” என இப்போது அந்த காவலர் இவனிடமிருந்து பென்ட்ரைவை வாங்கிக் கொண்டவர்,

“நீங்க கிளம்புங்க, பென் ட்ரைவ SP சார்ட்ட அப்றமா வாங்கிக்கோங்க” என இவனை வெளியே அனுப்ப முயன்றார்.

நான் பார்த்துக்கிறேன், நீ கவலைப்படாதே என்ற வகையில் “நான் நைட் கரெக்க்ஷன் பார்த்துடுறேன், நாளைக்கு ஸ்டூடண்ட்சுக்கு கிடைக்கிறாப்ல செய்துடலாம்” என வேணியால் இப்போது விடைதான் கொடுக்க முடிந்தது. பவி ப்ரவி இவள் பாதுகாப்புக்கென நியமித்துப் போயிருக்கும் காவலரை கடுகளவும் மறுக்கவும் இவளுக்கு முடியாது.

“நாளைக்கு ஸ்கூல்ல மதுட்ட கொடுத்துடு அவ பார்த்துக்குவா” என்றுவிட்டு கிளம்பியாக வேண்டிய நிலை பால்கனிக்கு.

ஆனாலும் இவன் காரில் ஏறும் போதே பென் ட்ரைவை வேணியிடம் ஜன்னல் வழியாக அந்த காவலர் கொடுப்பது கண்ணில் பட அப்போதுதான் நிம்மதி வந்தது இவனுக்கு. அடுத்தெல்லாம் ஒருமாதிரி உற்சாக நிலைதான் அவனுக்கு.

வேணியை பார்த்துவிட்டான், அவள் நடமாடும் அளவு நன்றாகவே இருக்கிறாள். நாளைக்கு பள்ளிக்கு வரப் போகிறாள். எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது இவனுக்காக என்னவெல்லாமோ செய்திருக்கிறாள். இதெல்லாம் அவனை சின்னதாய் சீட்டி அடித்தபடி  காரை செலுத்த வைத்தது.

ஆனால் காரைச் செலுத்தச் செலுத்ததான் வேணியை பார்த்தாக வேண்டும் என உணர்ச்சி வேகத்தில் தான் செய்து வைத்திருக்கும் காரியத்தின் வீரியம் மற்றும் விபரீதம் கொஞ்சம் கொஞ்சமாகவே புரிய வருகிறது அவனுக்கு.

வீட்டுக் காவலுக்கு பிஸ்டலோடு ஆள் வைக்கும் சூழ்நிலையில் இருக்கும் ப்ரவி, இவன் அந்த வீட்டுக்குள் அனுமதியின்றி நுழைய முயன்றான் என்பதை எந்த வகையில் எடுப்பான் இனி? அந்த புல்லட்காரன் ஓட்டுற ட்ராக் வேற ஒன்னு இருக்கு!

கசப்பருவி காய்ச்சிப் பாய்ந்தது அவனுள்.

அடுத்த பக்கம்