துளித் தீ நீயாவாய் 20 (12)

வேணியோ இன்னும் பேசிக்கொண்டிருந்தாள் “உனக்கு உங்க அம்மா ஏமாத்திட்டாங்கன்னு இருக்கா? எனக்கும் அப்படி நாம முழுசா நம்புனவங்க ஏமாத்றதுன்னா என்னதுன்னு தெரியும். ஐயோ எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டமேன்னு நினைக்கியா? அப்படி ஃபீல் பண்றது எவ்வளவு கொடுமையா இருக்கும்னு எனக்கும் தெரியும்.

ஆனா நான் இதெல்லாம் சொல்லி அழுதப்ப பவிக்கா ஒன்னு சொன்னாங்க,

“தப்புன்னு இப்ப நீ நினைக்கிறத முன்னால செய்துகிட்டு இருக்கப்ப கூட வாழ முடிஞ்ச உனக்கு, இதெல்லாம் தப்புன்னு நீ உணர்ந்து மாத்திக்கிட்ட பிறகு எப்படி வாழ முடியாம போகும்?னு கேட்டாங்க,

இதுக்கப்பறம் நாமல்லாம் வாழக் கூடாதுன்னா நம்ம பிறக்க வச்ச கடவுள் இப்ப நம்ம கொன்னு போட்டுருக்கலாமே! ஆனா இன்னும் நாட்களை நமக்குத் தர்றார்னா என்ன அர்த்தம்?  அவர் நம்மள மன்னிச்சிருக்கார், நாம வாழ இன்னும் வாய்ப்பு கொடுக்கிறார்னுதானே அர்த்தம்!னு சொன்னாங்க.

உனக்கும் நான் அதைத்தான் சொல்றேன், கடவுளே நாம வாழணும்னு சொல்றப்ப, அடுத்தவங்க நம்மளப் பத்தி என்ன நினைக்காங்கன்னு நாம ஏன் கவலைப்படணும்? இப்ப கிடச்சிருக்க இந்த வாழ்க்கைய, இந்த சான்ஸ நாம பெஸ்ட்டா யூஸ் செய்துப்போம், ஏமார்ற அளவு முட்டாளா இருந்துருக்கமா இதுவரைக்கும், இனி அடுத்தவங்களக் கூட காப்பாத்ற அளவு புத்திசாலியா இருந்துட்டுப் போவோம்,

முன்ன  செய்த எந்த தப்பையும் இனி செய்துடக் கூடாது, ஏன் தப்புன்னு இருக்கிற எதையுமே செய்துடக் கூடாதுன்னு வச்சுருக்கேன் நானெல்லாம்.

நிஜமா சொல்றேன், இப்பல்லாம் நான் டிப்ரெசிவா இல்ல, வாழலாம்னுதான் தோணுது. கடவுளுக்கு ஒரு பேர் உண்மைனா இன்னொரு பேர் ஜீவனாம், உண்மை இருக்க இடத்தில்  ஜீவன் கண்டிப்பா இருக்கும்னு இப்பல்லாம் அனுபவப் பூர்வமா எனக்குத் தெரியுது.

வந்து இதெல்லாம் உன்ட்ட ஏன் சொல்லிகிட்டு இருக்கேன் தெரியுமா? எனக்கு மாறின வாழ்க்கை உனக்கும் மாறும். எனக்கு பவியக்கா வந்தாங்கன்னா, உனக்கும் ஆட்கள் வருவாங்க, அப்படி யார் வந்தாலும் வராட்டாலும் உனக்கு நான் வருவேன்” இதற்கு மேல் வேணியை பேசவிடாமல் மது அவளை அழுதபடி இறுக்கி அணைத்திருந்தாள்.

வேணி புரிந்திருந்தது போல் மது தற்கொலை எண்ணத்திலெல்லாம் இல்லை என்றாலும், உள்ளுக்குள் நொருங்கிப் போய்தான் வளைய வந்து கொண்டிருந்தாள் அவள்.

எப்போதுமே ஒருவித தீவிர மன அழுத்தத்தில் இருப்பவள்தான் மது, வெளிக்காட்டவே தெரியாத ஒரு அருவருப்பு வேறு இவளை வதைத்தெடுக்கும். அதில் இப்போது தன் செயலின் நிஜ சொரூபத்தை புரிந்து கொண்டதிலிருந்து உள்ளுக்குள்  ஐயோ உன் அளவுக்கு ஒருத்தரும் மோசமில்ல என்ற ஒரு உணர்வு அவ்வப்போது அலை அலையாய் மூச்சு முட்ட முட்ட இவளை பிரட்டியும், புதைத்தும், கொல்லாமல் தின்று கொண்டிருந்தது. எதிர்காலத்தை நினைக்க வேறு இன்னுமாய் மருட்டியது.

முடிந்தவரை நயமாக இவளது அம்மாவிடம் எடுத்துச் சொல்லிப் பார்த்துவிட்டாள். இவளது அம்மா ஒரு துரும்பளவு வேலை செய்யக் கூட தயாராக இல்லை. அதோடு “இப்படி சீசன் டைம்ல வர்ற கஸ்டரமரல்லாம் விட்டுட்டா, ஹாலுக்கு நான் எப்ப ஏசி வாங்க? பேசாம ஸ்கூலுக்கு ஒரு மாசம் லீவப் போடு, இதென்ன கிறுக்குத்தனமா இருக்கு பள்ளி கூடத்துலயே படுத்துக்கணுமா?” என வேறு இவளை அறித்துக் கொண்டிருக்கிறாள். அதாவது இம்மியளவும் இவள் அம்மா மாறுவதாய் இல்லை. ஆக இவள் வீட்டைவிட்டு வெளியேறித்தான் ஆக வேண்டும்.

இதில் இப்படி ஒரு கடந்த காலத்தை வைத்துக் கொண்டு தனியே வெளியே போய் எப்படி ஒரு எதிர்காலத்தை உண்டு செய்து கொள்ளப் போகிறாள்? 15 வயதுக்கு நினைக்கவே பயமாயிருக்கிறது. அம்மா கூட இவளுக்கு இல்லைனா யாராவது இவட்ட ஒழுங்கா பழகுவாங்களா? இப்ப போலதான் என்னைக்கும் தனியாதான் இருந்தாகணும் இவ. அதுவும் அம்மாவும் இல்லாம இவ இருக்கணும் என என்னெல்லாமே கடுமையாய் மிரட்டியது.

அடுத்த பக்கம்