துளித் தீ நீயாவாய் 20 (10)

“எனக்கும் வேணிக்கும் வர்ற நாலாம் தேதி கல்யாணம். அதுவும் நீங்கதான் நடத்தி வைக்கிற மாதிரி திருப்பூர்லயேதான் ஏற்பாடு செய்துருக்கேன். கல்யாணத்தன்னைக்கு நீங்க மட்டுமா வந்து கலந்துகிட்டாலும் சரி, இல்ல இப்ப இருந்தே உங்க சொந்தக்காரங்களுக்கெல்லாம் பத்திரிக்கை கொடுத்து அழச்சு வந்தாலும் சரி, உங்க கௌரவத்த காப்பாத்திக்க நான் ஆப்ஷன் கொடுத்துட்டேன், அதுக்கு மேல உங்க பாடு,

பை த வே சொந்தக்காரங்க முன்ன சீன் போடன்னு, சீர் செனத்தின்னு எதாவது எடுத்துட்டு வந்துடாதீங்க, உங்க வீட்டு ஒரு துரும்புக்கு கூட என் வீட்ல இடம் கிடையாது” என துபாயில் இருக்கும் வேணியின் தந்தையை தேடிச் சென்று தாம்பளத்தில் பத்திரிக்கை வைத்து இவன் அழைப்பது போல் ஒரு காட்சி. கல்யாணத்துக்கு வா, ஆனா அதைத்தாண்டி சொந்தம் அது இதுன்னு வீட்டுக்கெல்லாம் வந்துடாத என்கிறான்.

அவர் என்ன இவளுக்கு என்ன ஆச்சுன்னு தேடக் கூட செய்யாம, கௌரவம் கடப்பாரைன்னு எதையோ காப்பாத்தன்னு இவள விட்டுட்டுப் போறது? அதனால அவருக்கு அவ்வளவுதான் மரியாதை. இவனின் நியாயக் கோணம் இது.

அடுத்த காட்சி.

இவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுதான் போலும். வெகு பிரமாண்டமாய் அமைக்கப்பட்டிருக்கும் மணக் கூடத்தில் தீவிரமாய் அலங்கார வேலை நடந்து கொண்டிருக்க, அதில் ஒரு இடத்தில் இவனும் கூட ஏதோ ஒரு உயர மேஜையின் மீது ஏறி நின்று கலையாத வண்ணம் ஒரு குறிப்பிட்ட அலங்காரப் பொருள் கூரையில் பொருத்தப்பட்டிருக்கிறதா என பரிசோதித்துக் கொண்டிருக்கிறான்.

சற்று தூரத்தில் மறு ஓரமாய் செய்வதற்கு எதுவுமின்றி பேந்த விழித்தபடி நின்றிருந்த வேணி, அவ்வப்போது இவனைப் பார்ப்பதும் பின் தவிர்ப்பதுமாக ஒரு சுந்தர நிலையில் இருப்பது இவன் கவனத்தில் படுகிறது.

இதில் இவன் மனதுக்குள் பரவிக் கிடக்கும் மந்தகாசம் முகத்துக்கும் விரவி ஏற, குடையற்ற வீணை நாதங்கள் சில இடமற்ற இவன் ரத்த நாளங்களில் மழை எனப் பெய்யும் மாருதத்தில் தடை என்பதறியாமல் சரிந்து பட,

அவள் பார்வை இவனை சந்திக்கும் நேரத்தில் நேருக்கு நேராக அவளைப் பார்த்து, அழகியதாய் ஒரு அளவான அதிர்ச்சியை அவளுக்கு பரிசளித்தவன், அவள் தடுமாறிப் போய் இவன் பார்வையை தவிர்க்கும் முன் சைகையால் குடிக்கத் தண்ணீர் வேண்டும் எனக் கேட்டான்.

சற்று நேரத்திற்கெல்லம் அவள் தண்ணீர் பாட்டிலோடு இவனருகில் வர, மேஜை மீதல்லவா நிற்கிறான், ஆக கை உயர்த்தி தூக்கி பாட்டிலை இவனிடம் அவள் நீட்ட, அவளை கண்ணோடு கண் பார்த்தாலும் கை நீட்டி பாட்டிலை இவன் வாங்காமல் காலம் தாழ்த்த,

பின்ன இந்தாங்கன்னு கூட சொல்லலைனா எப்படி?

அந்தனையாய் அவனோடு இன்னும் பேசி இருக்கவில்லை என்பதால் என்னவென பேச என்றும் தெரியாமலும், ஏன் இப்படி பார்த்துக் கொண்டு மட்டும் நிற்கிறான் என்றும் புரியாமலும், தயங்கிப் போய் இவனைப் பார்த்தவள், பின் தாங்காமல் விழியையும் கையையும் தாழ்த்திக் கொள்ள முனைய,

சரியாய் அந்நேரம், அவள் அவனை கவனிக்கா அந்நொடி, பாட்டிலோடு இறங்கிக் கொண்டிருந்த அவள் கையை சட்டென பற்றி, மொத்தமாக அவளையே மேஜைக்கு தூக்கிவிட்டான்.

நடப்பது என்னதென புரியா முதல் நொடி மொத்தமாய் மிரண்டு போன அவள், அடுத்துதான் தாங்கள் இருவரும் இப்படி உயரத்தில் நிற்க, இதில் சுற்றி இருக்கும் அனைவரும் தங்கள் வேலையை நிறுத்திவிட்டு இந்த பாடலில்லா டூயட்டை மொத்தமாய் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தாள்.

இப்போது இவனை வேகமாய் முறைத்துவிட்டு, விறைப்பாய் குனிந்து அவள் இறங்கப் போக, “ஹேய் ஹேய் அப்படி இறங்காத டேபிள் சரிஞ்சு ரெண்டு பேருமா விழுவோம், இரு ஒழுங்கா இறங்க வழி செய்றேன்” என பொய்யாய் இவன் மிரட்ட,

அதையும் நம்பி அவள் பயந்து போய் இவன் அருகிலேயே நின்று கொள்ள,

“எதுக்கு என்னையவே பார்த்துகிட்டு இருந்த? அதை மட்டும் சொல்லு இறக்கி விட்டுடுறேன்” என இவன் இப்போது சிறு குரலில் பேரம் பேசினான். இவனிடம் இருந்த குறும்போடு, எல்லோரும் இவர்களையே பார்ப்பதால் போலும் இவன் முகத்திலும் சன்னமாய் ஒரு வெட்கம் வேறு. ஆனாலும் அவளை விடுவதாய் இல்லை.

எதை என்று தெரியவில்லை, இவன் சிரிப்பையா அல்லது சீண்டலையா அவளை மீறி விழி விரியப் பார்த்தவள், அப்போதே முகத்தை இறுக்கியும் கொண்டாள். முறைக்கிறாளாம்.

முகமோடு முகமாக வெகு அருகில் அல்லவா நிற்கிறார்கள் இருவர் முகபாவமும் ஒருவருக்கொருவர் அத்தனையாய் புரிய, இப்போது இவனும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டவன்,

“சரி அதைவிடு எனக்கு ஒரு டவ்ட் அத மட்டும் க்ளாரிஃபை செய்துடு போதும், இப்பதான் இந்தாங்கன்னு கூட சொல்ல மாட்டேன்ற, மேரேஜுக்கு பிறகு என்ன கூப்ட்டுதான ஆகணும்? என்னன்னு கூப்ட போற?” என இப்படியாய் கேட்க,

கேள்வியை இவன் கேட்டு முடிக்கும் போதே, முறைத்தல் என்பதை முழு தீவிரமாய் பிடித்து வைத்திருந்த அவள் முகத்தில் மென்மையாய் மேக புஷ்பமாய் ஒரு மெல்லியம் பரவி பின் சட்டென பழைய பாவத்துக்கே திரும்பிக் கொள்கிறது.

இவனோடான எதிர்காலத்தை பற்றி இனிமையாகவே எதோ யோசித்துக் கொள்கிறாள் என்பது மட்டும் இதில் புரிய, ஏகமாய் இவன் நிறைந்து போக, இப்போதைக்கு இது போதும் என இவன் அவள் கீழே இறங்க உதவும் போதுதான் பார்க்கிறான், வந்த காலோடு வாசலில் நின்று விழா ஏற்பாட்டின் பிரமாண்டத்தையும், விழாத இவர்களையும் பிரமிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார் அவளது தந்தையென.

அட்ராசக்க கல்யாணம் நடக்கிற ரேஞ்சப் பார்த்தே பொண்ணப் பத்தி அவர் புலம்புறத நிறுத்திடணும்னு பார்த்தா, இது வேறயா! பொண்ணே இனி உனக்கும் எனக்கும் உங்கப்பா தீவிர ஃபேன்!

அடுத்த பக்கம்