துளித் தீ நீயாவாய் 20

இன்னும் இரு தினங்கள் கடந்திருந்தன. வேணி இன்னுமே பள்ளிக்குச் செல்லவில்லை. இதில் கொடுமையாய் வாதித்துப் போய் கிடந்தான் பால்கனி. வேணி வராததற்கு காரணம் வயிற்று வலியோடு வந்திருந்த மாதவிடாய் அவளை படுத்தி எடுத்துக் கொண்டிருந்தது மட்டுமே! ஆனால் இது பால்கனிக்கு தெரியாதே!

பவி இதைத்தான் வேணிக்கு உடல்நிலை சரி இல்லை என்றிருக்க, பால்கனியோ வேணிக்கு என்னமோ ஏதோ என பரிதவித்துக் கொண்டிருந்தான். பவித்ராவின் வீட்டை விட்டு வேணி வெளியே தலைகாட்டுகிறாளா என கண்காணிக்க வகை செய்து வைத்திருக்கிறான். மருத்துவமனைக்காக அவள் வெளியே வரும் போது அங்கு போய் அவளைப் பார்த்துவிட திட்டம். ஆனால் அதற்குக் கூட அவள் வெளியே வரவில்லையே!

அவளுக்கு என்ன பிரச்சனை? பவித்ரா எப்படி வேணியை மருத்துவமனை கூட கூட்டிச் செல்லாமல், இத்தனையாய் கவனிக்காமல் விடுகிறாள் என பலத்த ஆதங்கம் இவனுக்கு.

அவனது ஆள் மூலம் இயல்பு பேச்சுப்போல் அந்த வீட்டுப் பொண்ணுக்கு என்ன என பவியின் வீட்டில் வேலை செய்யும் வேலையாளிடமெல்லாம் விசாரித்துவிட்டான். ஆனால் அப்போதும் விஷயம் அவனுக்கு கிடைக்கவே இல்லை. “அந்தப் பொண்ணுக்கு என்னவோ? அதுபாட்டுக்கு ரூமுகுள்ளயே அடஞ்சு கிடக்குது, கண்லயே படல” எனதானே சமையல்காரம்மா பதில் கொடுத்திருந்தார்.

கூடவே அந்தப் புல்லட்காரனோ அல்லது அவளது பழைய வாழ்வின் எச்ச மிச்சமோ அவளை குறி வைக்கவோ, குறைந்தபட்சம் ஃபோன் செய்து அவளை அழவைக்க முடியும் என்ற அறிவு இவனை இயலாமை மற்றும் உச்ச பரிதவிப்பிலேயே வைத்திருந்தது.

இது எல்லாவற்றிற்கும் மேல் எதுவோ, எல்லாமுமோ இல்லாமல் போனது போல் ஒரு வறள் நிலை அவனுக்குள். எப்போது அவன் வேணியை திருமணம் செய்ய வேண்டும் என முடிவு செய்தானோ, அன்றிலிருந்து அவளைப் பார்க்காமல் ஒருநாளைக் கூட அவன் கழித்தது இல்லை. அவளறியாமல் அவளைச் சுற்றி வருவதுதான் அவனது முக்கிய வேலையே! இதில் இப்போது மூன்று தினங்கள் அவள் கண்ணில் படவில்லை என்பதை அவனால் கையாள முடியவில்லை.

இதில் நான்காம் நாளும் இவன் பள்ளியில் காத்துக் கிடக்க பவித்ரா மட்டும் தனியாக வந்து சேர்ந்தாள். அவ்வளவுதான் இவனது பொறுமை பிணமாகியிருந்தது. இன்றும் வேணி வரவில்லை எனவும் எது என்ன ஆனாலும் அவளை நேரில் சென்று பார்த்துவிடும் நிலைக்கு வந்துவிட்டவன், அடுத்து எதையும் யோசிக்கவில்லை.

காரில் ஏறி ஒரு அழுத்து, அது பவித்ராவின் வீட்டு கேட் முன்தான் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கும் போதுதான் காவலுக்கு இருக்கும் காவலர் விஷயமே இவனுக்கு நியாபகத்தில் வருகிறது.

“வணக்கம் சார், வீட்ல SP சார், மேடம் ரெண்டு பேரும் இல்ல, எப்ப பார்க்கலாம்னு சார்க்கு கால் செய்து பேசிக்கோங்க” என இதற்குள் தன் கடமையைச் செய்தார் அந்த அறிமுகமற்ற புதுகாவலர். ப்ரவி வீட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி இருப்பான்தானே!

“அதெல்லாம் பெருசா எதுவுமில்ல, மேடம்தான் இங்க சின்னதா ஒரு ஜாமான விட்டுட்டு வந்துட்டாங்க, ஸ்கூல்க்கு இப்ப உடனே எடுத்துட்டுப் போகணும், அதான் வந்தேன், உங்க பவித்ரா மேம் எனக்கு அண்ணிதான்,  நாங்க ரிலடிவ்ஸ். இங்க வேணி மேடம் இருப்பாங்களே, அவங்களே எங்க பவித்ராண்ணி கேட்டத எடுத்து கொடுத்துடுவாங்க” என சட்டென சமாளித்தான் இவன். அதுவும் படபடவென்றெல்லாம் இல்லாமல் வெகு வெகு சாதாரணம் போல் சொல்லிக் கொண்டே, கேட்டை தானே திறந்து உரிமையாய் உள்ளே முற்றத்துக்கு நுழைந்திருந்தான்.

இவன் வந்திருக்கும் கார் ரகத்துக்கும், உறவு என சொல்லி இருக்கும் முறைக்கும், உரிமை நடத்தைக்கும் இவனை அறியாப் போலீஸ் இவனுக்கு அடங்காவிட்டாலும் இவனை நிறுத்த தயங்கித்தானே ஆவான். அதற்குள் வீட்டுக்குள் நுழைந்துவிட இவனால் முடியும். இப்படித்தான் இருந்தது இந்த நொடி பால்கனியின் எண்ணம்.

பொதுவாக இப்படி யாரையும் உள்ள விடாதீங்கன்னு ஒரு SP சொல்லி வச்சிருந்தா, அப்ப காவலுக்கு இருந்த போலீஸ் வேற யாரையும் உள்ள விடுற போல ஆச்சுதுன்னா, அதைப் போய் SPட்ட சொல்லிகிட்டு இருக்க மாட்டாங்க, ஏன் எதுக்குன்னு SP திட்டுவார்ல, அதுக்காகவே கண்டிப்பா சொல்லமாட்டாங்க, அதையும் மீறி ஆயிரத்தில் ஒரு வாய்ப்பா இந்த போலீஸ் சொல்லிட்டார்னா இப்படி பவித்ரா பேர இழுத்ததுக்கு எதையாச்சும் ஏத்த விதமா காரணம் அப்போ சொல்லிக்கலாம் என அடிமனதில் அடுத்த விஷயத்தையும் குறித்து வைத்தான்.

ஆனால் அந்த காவலரோ “சார் அப்படின்னா முதல்ல மேடத்த இங்க கால் பண்ண சொல்லுங்க” என்றபடி குறுக்காக வந்து நின்று கொண்டவர், “மேடம் பேசின பிறகு உள்ள வாங்க, அதுதான் சரியா இருக்கும்” என்றும் சொன்னார். வெளிய போன்றார். அவர் பார்வையில் முழு தீவிரம் வேறு இருந்தது.

“ப்ச்” என வெகு அலட்சியம் போல் இப்போது சலித்துக் கொண்ட பால்கனி, சூழலை எப்படிக் கையாள என நேனோ நொடி யோசித்தான். கதை செய்ய வாகாக அவனிடம் என்ன இருக்கிறதென்ற சிந்தனையில் அவன் கை அனிச்சையாய் ஃபேண்ட்ஸ் பாக்கெட்டின் மேல் போக, அடுத்து என்ன என புரியும் முன் இவன் முன் நெற்றியில் உட்கார்ந்திருந்தது எதிரில் நின்ற காவலரின் பிஸ்டல்.

“அசைஞ்சன்னா அடுத்து என்னன்னு யோசிக்காம ஷூட் பண்ணுவேன்” என அலட்டலே இன்றி ஒரு விளக்கமும் வந்தது அவரிடமிருந்து.

ஆனால் அதையெல்லாம் கவனித்துக் கொண்டிருப்பது யாராம்?

“ஐ..ஐயோ சா..சார் சு..சுட்றாதீங்க சார், கைய தலைக்கு மேலதான் தூக்குறேன்” என கூவியபடி பால்கனி இப்போது இரண்டு கைகளையும் தலைக்கு மேலாக தூக்கியபடி நின்றிருந்தான்.

பேய்த்தனமாக மிரண்டிருந்தான் அவன். இதையெல்லாம் அவன் கற்பனையிலாவது எதிர்பார்த்தானா என்ன? தப்பித் தவறி ஓர் அதிர்ச்சியில அந்த ஆள் ட்ரிக்கர அழுத்திட்டாலும் இவன் மூளைல பிச்சு பிச்சு சிதறிடும். குப்பென முழுதும் வியர்த்துப் போய் இவன். கான்ஸ்டபிளுக்கு பிஸ்டல்லாம் யார்பா அது கொடுத்து வைக்கிறது?!!

“பாக்கெட்ல என்ன?” காவலர் கேட்க,

“அந்தப் பாக்கெட்ல ஒரு பென் ட்ரைவ் தவிர எதுவுமில்ல சார், அடுத்த பாக்கெட்ல பர்சும் கார் கீயும்தான் இருக்கு” இவன் பவ்யபயமாய் சொல்லிக் கொண்டிருந்த நேரம், வாசலில் பேச்சுக் குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறதே என கதவருகில் இருந்த ஜன்னல் வழியாய் எட்டிப் பார்த்தாள் வேணி.

அடுத்த பக்கம்