துளி தீ நீயாவாய் 17(8)

இதில் அவளது வீட்டுக்கு சற்று தொலைவில் அவள் இறங்கிக் கொள்ளும் போது “குடும்பம்னா தன்வீட்ல ஒருத்தங்க தெரிஞ்சே போய் தன்னை நாசம் செய்துகிட்டா கூட அடுத்தவங்க தேடி ஓடி அவங்கள காப்பாத்த தன் சக்திக்கு மீறியும் போராடுவாங்க. பாசம் உள்ள யாரும் அவங்க எக்கேடு கெட்டா என்ன, எனக்கு என் வாழ்க்கை நடந்தா போதும்னு இருக்க மாட்டாங்கன்னு சொன்னீங்கள்லண்ணா,

அப்படின்னா நானும் அம்மா எக்கேடு கெட்டாலும் பிரவாயில்லன்னு விட்டுட்டு வரகூடாதுல்ல? கொஞ்சம் டைம் கொடுங்க அம்மாவுக்கு புரிய வைக்கப் பார்க்கிறேன், இல்லன்னா அடுத்து என்னனு பார்ப்போம், ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்கண்ணா, எனக்கு அம்மா வேணும்” என அத்தனை வலிகளையும் மறைக்க முயன்றபடி அவள் சொல்ல,

சரியாய் சொல்வதானால் பால்கனிக்கு மதுவை மதுவுக்காய் பிடிக்கத் துவங்கியது இந்த நொடிதான். இதுவரைக்கும் வேணிக்காக மட்டுமே மதுவை காப்பாற்ற ஓடிக் கொண்டிருந்தவன் சட்டென சர்வமும் அடிபட தலைகுப்புற விழுந்ததும் இங்கேதான்!

“நாம அழுவோம்னு அம்மாக்கு தெரிஞ்சிருக்காதுண்ணா, அதான் விட்டுட்டுப் போய்ட்டாங்க, நாம சொன்னா வந்துடுவாங்க, எனக்கு அம்மா வேணும்” ஒரு பிஞ்சு மழலைக் குரல் இவனுக்குள்ளிருந்தே இவன் காதில் விழ,

என்ன செய்துகொண்டிருக்கிறோம் என உணரும் முன்னும், கார் கதவை திறந்து கொண்டு இறங்கியவன் கரங்களுக்குள் இருந்தாள் மது. ஆம் இடம் பொருள் ஏவல் என எதையும் எண்ணாமல் அணைத்திருந்தான். “பூனம்” என்ற ஒற்றை வார்த்தைதான் துடித்த அவன் அதரங்களில். உயிரின் குரலாய் அது. ஆண் வகை அழுகையை அழுத்த மௌனமாய் தாங்கி நின்ற அவன் கண்களிலிலும் கைகளிலும் ஆதூரம் அத்தனையும் ஆதூரம் மதுவுக்காய்.

மதுவுக்கு இந்த தொடுகை முழுக்கவும் புதிது என்றாலும் புரியாமல் போக வழி இல்லையே! அப்பா அன்பாய் அணைத்தால் இப்படித்தான் இருக்குமோ!

இதுவரைக்கும் அடக்கி வைத்த அணைத்தும் அடித்து வெடித்துக் கொண்டு ஒரு ஓலமாய் ஒரு நொடி வெடிக்கிறதுதான் அவளுக்கும். ஆனாலும் அதன் வகையில் போகாமல் தான், தன்னடி என அணைத்தையும் அடக்கிக் கொண்டு “பூனம் உங்க தங்கையாண்ணா?” என இவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.

சிரிப்பும் சிந்தும் கண்ணீருமாய் நின்ற அவள் விழிகளைப் பார்க்கவும்தான், தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதையே உணர்ந்த பால்கனி சட்டென விலகிக் கொண்டான்தான். ஆனால் அந்த விலக்கம் வெறும் உடலளவானது. பார்த்திருந்த அவன் விழிகளில் இன்னும் பாய்ந்தே கிடந்தது பாச ஓதங்கள்.

“இப்ப இல்லையா அவங்க?” இப்போதுதான் தனக்கு புரிந்ததை சற்று முகம் சுணங்க மது கேட்க,

“இல்லையே இதோ வந்துட்டாளே” என்றபடி இவளது நாடியை இருபக்கமாக பிடித்துக் கொண்டு சிந்தாத சின்ன சிரிப்போடு சின்னதாய் அவன் ஆட்டிய வகையில்,

ஈரம் தோய்ந்த விழிகளில் ஒருவித சிரிப்போடு “பூனம் என் குட்டி தங்கச்சி, நான் 5த் படிக்கிறப்பதான் பிறந்தா, அவளுக்கும் உன்ன போலதான், கண்ல தண்ணி நிக்றப்ப கூட கண்ணு சிரிக்கும்” என அவன் சொன்ன செயலில்,

“அவளுக்கு ரெண்டு வயசா இருக்கப்ப ஒரு நாள் திடீர்னு அப்பா பிஸினஸ் லாஸ்னு…அவர் ஃப்ரென்ட்ஸ் எதோ ஏமாத்திட்டாங்கன்னாங்க, இவர் தண்ணிய போட்டுட்டு என்னத வேணாலும் எழுதி கொடுக்கிறவர்தான்… அன்னைக்கு நைட்டே நாங்க ப்ளாட்ஃபார்முக்கே வந்துட்டோம்,

அவ்வளவு வசதியா இருந்துட்டு திடீர்னு இப்படி தெருவிலனதும் அம்மாவுக்கு தாங்க முடியல போல, அதோட எங்கப்பா வாழ்க்கைல அம்மா மட்டும்தான் பொண்ணுனு கிடையாது, அதுல வெறுத்துப் போயா இருக்கலாம், அம்மா அப்பாவ விட்டு எங்கயோ போய்ட்டாங்க, அதாவது என்னையும் பூனத்தையும் கூட விட்டுட்டுதான் போய்ட்டாங்க,

எங்க போனாங்கன்னு இப்ப வரைக்கும் தெரியாது, அப்பல்லாம் பூனம் இப்ப சொன்னியே அப்படிதான் சொல்லும், நம்ம அழுவோம்னு தெரியாது அம்மாவுக்கு, தெரிஞ்சா வந்துடுவாங்கன்னு… ப்ச்.. அடுத்து கொஞ்ச நாள் கூட அவ உயிரோட இல்ல, பிஞ்சு குழந்தைல திடீர்னு அந்த ஹார்ஷ் லைஃப்ன்றது செட் ஆகல போல” என அவன் விளக்கிய தொகையில்,

இவை எதுவுமே அவனை பாதிக்கவில்லை என பிடிவாதமாய் காட்டிக் கொண்ட அவன் தன்மான நிலையில்,

கை நீட்டி அவனது இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டிருந்தது மது. அவளுக்கு அவன் ஆண் பெண் என்ற அத்தனையும் கடந்து அண்ணன் என்ற ரத்த உறவாகவே மாறி இருந்தான்.

வைகளையும் அதாவது மதுவின் தன் தாய் பற்றிய மனப்பான்மை மாற்றத்தையும் இவனுக்கு வேணியிடம் சொல்லியாக வேண்டும். வேணி மகிழ்ந்து போவாள்தானே! அதற்காகவும் ஆவலே வடிவாக காத்திருந்தான் பால்கனி.

இவன் வேணியிடம் பேசப் போவதெல்லாம் இல்லை. அப்பதான இவனது பாரமுக ட்ராமா ஒர்க் அவ்ட் ஆகும்?

மதுவின் மொபைலில் பதிவானவைகளை வேணியிடம் ஓட விடப் போகிறான் அவ்வளவே! விஷயத்தை தெரிவிச்ச போலயும் இருக்கும், பேசாம இருந்துகிட்ட போலயும் இருக்கும். இப்படித்தான் இருந்தன இவன் விருப்பங்கள். ஆனால் அவன் வேணியிடம் சொல்ல விரும்பாத விஷயமும் ஒன்று உண்டு.

மதுவை பல இடங்களுக்குமாய் தன் காரில் கூட்டிக் கொண்டு அலைந்த போது சமூகத்தின் நிமித்தம்  வெகு கவனமாகவே இவன் நடந்து கொண்டான்தான். அதனால்தான் மதுவை அவள் வீட்டருகில் இறக்கிவிடும் போதும், வெகு மறைவான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்குதான் இறக்கியும் விட்டான். அந்த இடத்தில்தான்  உணர்ச்சி வசப்பட்டு இவன் காரைவிட்டு இறங்கி அணைக்கவும் செய்தது.

அடுத்த பக்கம்