துளி தீ நீயாவாய் 17(7)

வெகுவாக அடிபட்டுப் போனது அவளுக்கு. உண்மைதானே! என்று பரிதவிக்கிறது உயிருக்குள்.

இவள் வதைபட்டது போதாது என்பதோடு இத்தனை குடும்பங்களில் இத்தனை காயங்களை உண்டு செய்திருக்கிறாளா இவள்? என குத்திக் குத்திக் கிளறுகிறது எதுவோ இவள் உயிர்புறங்களை.

ஆனால் பால்கனியிடன் எதையும் காட்டிக் கொள்ள இவளுக்கு மனம் வரவில்லை.

பால்கனியோ, இவள் புறமே திரும்பாமல் காரை செலுத்தியபடி “என்ன இந்த அம்மா அவங்க மகன் முன்னாலயே ஆம்பிளைனா அப்படித்தான் இருப்பான்னு பேசினா அது அவன தப்பு செய்றதுக்கு கொம்பு சீவிவிட்ட போல இருக்குமேன்னுதான் நான் கோபப்பட்டது,

அதோட இந்த விஷயத்தில் இந்த அம்மா என்ன அழுதாலும் அந்த ஆள் திருந்திடப் போறதில்ல, இவங்களை அந்தாள் இன்னும் இன்னும் அழவிடுவான்றதாலதான் விட்டுட்டு சென்னைக்கு கிளம்புங்கன்னும் சொன்னேன், இவங்கள மனுஷங்களா கூட மதிக்காத முழுசுயநலவாதியான அந்தாள்காக இவங்க தன் வாழ்க்கைய அழிச்சுக்கிறது நியாயம் இல்லைல?” என்றும் தொடர,

அதிலும் ‘பாசம் உள்ள யாரும் அவன் எக்கேடு கெட்டா என்ன, எனக்கு என் வேலை நடந்தா போதும்னு இருக்க மாட்டாங்க’ என அவன் சொன்ன தொனியிலேயே அது இவளது அம்மாவைப் பற்றிய குறிப்பு என்றுமே மதுவுக்குப் புரிய,

‘மனுஷங்களா கூட மதிக்காத முழுசுயநலவாதியான அந்தாள்காக இவங்க தன் வாழ்க்கைய அழிச்சுக்கிறது நியாயம் இல்லைல?’ என்பது முழுசுயநலவாதியான உன் அம்மாக்காக உன் வாழ்க்கைய நீ அழிச்சுக்கிறது நியாயம் இல்லைல? என இவளுக்கான நேரடிக் கேள்வி என்றுமே தெரிய,

எதுவும் பேசாமல் மௌனமாகிப் போனாள் மது.

15 வயதுக்கு இந்த ஆராய்தல் அலசல் எல்லாம் மிகப் பெரியதுதான். ஆனாலும் அவள் நிலையில் இதையெல்லாம் அவள் சிந்தித்தே ஆக வேண்டும்தானே!

சற்று நேரம் இதில் பயணம் அமைதியாய் கழிய “அம்மா என்ட்ட நடந்துகிட்டத சரின்னுசொல்ல முடியலதான், ஆனாலும் சாப்பாட்டுக்கே வழி இல்லைனா அம்மா என்ன செய்ய முடியும்?” என முனங்கினாள் அவள். “அம்மா படிக்காதவங்க, வேலை கிடைக்காதுல்ல” அவள் அம்மா சொல்லி வைத்திருக்கும் அடுத்த காரணமும் வந்தது.

அடுத்து இவன் அவளை அழைத்து சென்று இறக்கிவிட்டது ஒரு தையல்காரரின் வீட்டருகில்.

“அவரது கடை எங்க இருக்கு? எவ்வளவு நேரம் வரை திறந்திருக்கும்? என்பது போன்ற விஷயங்களையும், கூடவே ‘உன்ட்ட இதெல்லாம் சொல்ற அவரோட பொண்ணு எங்க படிக்கிறா? என்ன படிக்கிறான்றத சாதாரணமா கேட்கிற போல கேட்டுட்டு வா” என்று சொல்லி அந்த தையல்காரரின் வீட்டுக்கு அனுப்பினான்.

எந்தவித மறுப்போ சம்மத வார்த்தைகளோ இல்லாமல் மௌனமாகவே இதை ஏற்றுக் கொண்டு போனது மது.

“எதாவது இஷ்யூனா எனக்கு கால் பண்ணு” என இவன் அக்கறைப் பட்டதுக்கும் கூட எந்த பதிலும் அவளிடம் இல்லை.

சற்று முன் வரை குள்ளத் தக்காளி கும்மிடும் என சிரிக்க சிரிக்க பேசிவிட்டு இப்போது இப்படி நடந்து கொள்கிறான் என்றால் இவளது இந்த பக்கங்களை பால்கனி வெகுவாக வெறுக்கிறான் என்ற ஒரு புரிதல்தான் அவளது இந்த மௌனத்திற்கு காரணம்.

ஆனால் இதை மட்டும்தான் வெறுக்கிறானே தவிர அவள் மீது அவனுக்கு பூரண அக்கறை இருக்கிறது என்ற நம்பிக்கை அவளுக்கு இருப்பதால், அவன் சொல்வதை அப்படியே செய்து கொண்டிருந்தாள் அவள்.

திறந்து கிடந்த அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள்.

மது ஒன்றும் அடி முட்டாள் கிடையாது. முதல் பார்வையிலேயே அந்த வீட்டில் அப்படி ஒன்றும் வறுமை இல்லை என்பது புரிந்தது அவளுக்கு. அதோடு அந்த தையல்காரரின் இரண்டு பிள்ளைகளும் தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் அவளால் அறிந்து கொள்ள முடிந்தது.

அடுத்து பால்கனி அவளை அந்த தையல்காரரின் கடையிலேயே சென்று இறக்கிவிட்டான். “ஒரு சல்வார் தைக்க எவ்வளவு ரூபா ஆகும், எத்தன நாள்ல தருவாங்கன்னு கேட்டுட்டு வா” என விசாரிக்கச் சொன்னான்.

அதற்கு அந்த தையல்காரர் விலையைச் சொல்லி “யூனிஃபார்ம் தைக்கிற டைம்மா இருக்கிறதால இப்ப தைக்க கொடுத்தா, தச்சு தர இன்னும் ஏழு நாள் ஆகும்” என்பது போல் பதில் கொடுத்தார்.

மது வந்து காரில் ஏறிக் கொள்ளவும் மீண்டுமாக காரை செலுத்த துவங்கிய பால்கனி,

“அப்ப ஒரு நாளைக்கு அவர் எத்தன ட்ரெஸ் தைக்கிறார்னு யோசி, என்ன சம்பாதிக்கிறார்னு புரியும், அதை வச்சு ஒரு குடும்பம் நடத்த முடியுமா முடியாதான்னு நீயே யோசிச்சிப்பார், இதெல்லாம் உன் அம்மா செய்ய முடிஞ்சிருக்குமா இல்லையா?” என விளக்கம் கொடுத்தபடியே வர,

மதுவுக்கு அவளது அம்மா தான் எந்த வேலையும் செய்யாமல் இருந்து கொண்டு, அதே நேரம் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள இவளை சிதைக்கிறாளே தவிர, அம்மாவிடம் எந்த உண்மையும் இல்லை என்று புரிந்தேவிட்டது.

அதை உணர உணர அதீத ஏமாற்ற உணர்வு அழுத்த அழுத்தமாய் நெஞ்சடைத்துக் கொண்டு  வருகிறதுதான். வாய்விட்டு வெடிக்கவும் தோன்றுகிறதுதான். ஆனாலும் வெகு அமைதியாகவே இருந்தாள் அவள். எல்லாவற்றையும் வாயடைத்து தாங்கிக் கொள்வது இவளுக்கு பழக்கம்தானே!

அடுத்த பக்கம்