துளி தீ நீயாவாய் 17 (6)

“என்னது குள்ளத் தக்காளியா? அப்றம் நான் உங்களுக்கு பக்கத்து இலை பாயாசம்னே பேர் வச்சுடுவேன் ஆமா” என மிரட்டிய மது, பின் வரம்பு மீறி பேசுகிறோமோ என்ற நினைவில் “ம் ஆமாண்ணா அம்மா ஒன்னு கொடுத்துருக்காங்கதான்” என்றபடி இவன் முகம் பார்த்தது.

“நம்பர் சொல்லு” என கேட்டு அவள் எண்ணை தன் மொபைலில் பதிவு செய்து கொண்டே “பாயாசம்னுதான பேர் வைப்பேன்ற, வச்சுக்கலாம் தப்பில்ல” என அவள் முகம் பாராமலே சொன்னான் பால்கனி. உள்ளுக்குள் வேணி முகம் உறுத்தலாய் வந்து நின்று முறைத்தது.

உண்மையில் மதுவிடம் பேசுவது இவனுக்கு இலகுவான உணர்வைத் தந்தாலும், இந்த தக்காளி, பாயாசம் என்ற அன்னியோன்யமெல்லாம் சர்வ நிச்சயமாய் இவனிடம் இல்லை.

கருணுக்கும் பவித்ராவுக்குமிடையேயான இந்தப் பேச்சுக்களை அவன் கண்டதுண்டு. அந்த வகை அன்யோன்யத்தை மதுவிடம் உண்டாக்கிக் கொண்டால் நாளைக்கு இவனை நம்பி அவள் தன் வீட்டை விட்டு எளிதாய் வெளியே வருவாள் என்ற கணக்கு இவனுக்கு. அதற்காகத்தான் இவன் இறங்கி வருவது. அதை புரிந்து கொள்ளும் போது வேணி  இவனை என்ன சொல்வாளோ என்று உறுத்துகிறது இப்போது.

மதுவோடு காரில் ஏறிய நொடியிலிருந்து இவர்களுக்கு இடையேயான உரையாடலை தன் மொபைலில் இவன் பதிவு செய்து கொண்டிருக்கிறான். வேணிக்காகத்தான். மது விஷயத்தில் இவன் எதைச் செய்வதையும் வேணியிடம் மறைப்பதாய் இல்லை. ஆக அவள் கேட்கும் போது  கொந்தளிப்பாள் என்று நினைத்தவன்,

கையிலிருந்த மது மொபைலிலும் ரெக்கார்டரை இயக்கிவிட்டபடி,

“அங்க தெரியுதுல்ல, அந்த வீட்ல ஒரு சின்ன வேலை இருக்கு. ஒரு ஃப்யூ மினிட்ஸ்ல வந்துடலாம். நான் முன்னால போறேன், அடுத்து நான் கால் செய்றப்ப நீ வா” என்றபடி வெகு அருகில் தெரிந்த ஒரு வீட்டை காண்பித்துவிட்டு காரிலிருந்து இறங்கிக் கொண்டான். அவன் நினைப்பதைவிடவும் வெகு ஃபார்மலான பேச்சுக்கு வந்திருந்தது இவனது தொனி.

முதலில் அந்த வீட்டில் போய் இவன் நின்று கொண்டு, ஏதோ ஒரு கதை சொல்லி மதுவை அங்கு வரச் சொல்ல வேண்டும், அப்போதுதான் மதுவுக்கு நடப்பது இயல்பு போல் தோன்றும் என முந்திய நொடி வரை நினைத்திருந்தவன், வேணி நினைவில் திட்டத்தையும் இப்படி மாற்றி இருந்தான்.

மதுவுக்கோ நடக்கும் எதற்கும் தலை வால் புரியவில்லை. அவனது இந்த அழைப்பும் வினோதமாக இருக்கிறது.

இவளும் அவனுமாய் வீதியில் சேர்ந்து போவது சரி வராது என இந்த ஏற்பாடு போலும் என்று இயல்பாய் இவளால் எடுத்துக் கொள்ள முடிந்தாலும், அப்படி எங்கே போகிறார்கள் என புரியாமலே தலையாட்டலாய் தன் சம்மதத்தை சொன்னது மது.

இதில் அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே திறந்து கிடந்த அந்த வீட்டின் காம்பவ்ண்ட் கேட்டின் வழியாக உள்ளே போன அவன் அடுத்த நிமிடத்திலெல்லாம் அவளை மொபைலில் அழைத்தான்.

மது இப்போது பெரிதாக எதையும் யோசிக்கவில்லை. பால்கனியை பார்த்து பயப்படவும் அவளிடம் எதுவும் இல்லையே. அதோடு இன்னும் மாலை மணி ஐந்து கூட ஆகவில்லை. முழு வெளிச்சமும் ஆள் நடமாட்டமும் உள்ள நேரம்தான்.

ஆக இவள் வேக வேகமாக அங்கு போக கேட்டை தாண்டி அந்த வீட்டின் முகப்பில் நின்றிருந்த பால்கனி கண்ணில் பட்டான் என்றால், உள்ளே இருந்து வந்த அழுகை சத்தமும் புலம்பலும் காதில் விழுகிறது.

கேள்வி எதுவுமின்றியே புரிகிறது இவளுக்கு. சற்று முன் இவளிடம் வந்து சண்டையிட்டுவிட்டு வந்தார்களே அந்த அம்மா மகனின் வீடு போலும் இது. இப்போதுதானே அவர்களும் வீடு திரும்பி இருக்கிறார்கள், அந்த பெண்மணி பெரிதாய் அழுது கொண்டிருந்தது.

இங்கு போய் இவளை அழைத்து வந்துவிட்டானே என வேதனையாய் ஒரு பார்வை பால்கனியின் புறம் செலுத்திக் கொண்டாலும், மது அங்கிருந்து திரும்பி வந்துவிடவில்லை. நின்று கவனித்தாள்.

அழுது கொண்டிருந்த அந்த பெண்மணியின் வாயிலிருந்து வந்த அரற்றலும் புலம்பலும் அத்தனையும் அவரது கணவரை பற்றிதான். சில பலது அவரைப் பற்றிய வசை என்றால் பல இந்த அம்மாவின் தியாகம், வலி, இழப்பு, ஏக்கம் என எல்லாம்.

ஆனால் எங்கும் எங்கேயும் ஆம்பிளைனா அப்படி இப்படித்தான் இருப்பான் என்ற வகை பேச்சு இல்லை. இயற்கைதானே! இவளிடத்தில் ஆம்பிளைனா அப்படித்தான் என முட்டுக் கொடுத்து பேசினாலும், அதற்காக மனதில் அது சரி என்றா நினைக்கும் அந்த அம்மா?

சற்று நேரத்திற்கெல்லாம் கையால் சைகை காட்டி இவளை காருக்கு திருப்பி அனுப்பிவிட்டான் பால்கனி. பின் தனியாக இவனும் வந்து காரில் ஏறிக் கொண்டவன் காரை செலுத்த ஆரம்பித்தான்.

திரும்பி வரும் போதே மதுவின் முகம் வெகுவாகவே விழுந்து போய் இருந்ததுதான். ஆனால் அது பால்கனி இவளைப் போய் அங்கு நிறுத்திவிட்டானே என்பதற்காக இல்லை. இவள் வீட்டுக்கு வந்து கத்திவிட்டும் போகும் பெண்களின் இந்த பக்கத்தை இவள் கண்டதில்லையே! அதில் வலித்து வலுவிழந்து போய் குமைந்து கொண்டு இருந்தாள் அவள்.

இதில் பால்கனியும் “அவங்க வீட்டுக்காரர் செய்றத சரின்னு அவங்க நினைக்கலைன்னு இப்ப புரியுதா? மனசுல அவர் மேல இத்தனை கோபம் வலின்னு எல்லாம் இருந்தும், இன்னும் அவர அவங்களோடவங்களா, அவங்க குடும்பம்னு நினைக்கிறதாலதான் அவர வெளியவிட்டுக் கொடுக்க மாட்டேன்றாங்க,

அடுத்தாள்கள்ட்ட பேச்சுக்கு கூட அவர விட்டுக் கொடுக்காதவங்களா அவர நல்லா நடத்தி இருக்க மாட்டாங்க? எப்படியாவது அவர இந்த புதைகுழில இருந்து மீட்டுடணுமேன்ற ஆதங்கத்துல, ஒரு இயலாமைலதான் தனக்கு அவமானம்னு தெரிஞ்சும் அவங்க உன்ட்ட வந்து நிக்றதுமே தவிர, அவங்க என்னமோ ரவுடி கேடின்னு யோசிச்சுகிடாத!

உண்மையில் இதைத்தான் குடும்பம்னு சொல்றதும். ஒருத்தங்க தெரிஞ்சே போய் தன்னை நாசம் செய்துகிட்டா கூட அடுத்தவங்க தேடி ஓடி அவங்கள  காப்பாத்த தன் சக்திக்கு மீறியும் போராடுவாங்க. பாசம் உள்ள யாரும் அவன் எக்கேடு கெட்டா என்ன, எனக்கு என் வாழ்க்கை நடந்தா போதும்னு இருக்க மாட்டாங்க” என்க, அதிலும் முன்பிருந்த இலகுக் குரல் இல்லாமல் ஒருவிதமாய் கட்டு தெறித்தார் போல பேச, (வேணி ஞாபகத்துல பையனுக்கு அவ்வளவுதானே வருது)

அடுத்த பக்கம்