துளி தீ நீயாவாய் 17(5)

அதீத சந்தோஷமோ, அடங்க மறுக்கும் கோபமோ, அளவிட முடியா துக்கமோ மனம் யாரைத் தேடும்? தன்னில் வசித்துக் கொண்டிருப்பவரைத்தானே! ஆக வேணியைப் பார்த்துவிட இன்னுமாய் ஒரு தீவிரம் தீவிரித்திருக்கிறது இவனுக்குள்.

விஷயம் கேள்விப்படவும் அவள் முகமும் விழியும் விரியும் வகையைக் காணவும், அவளில் வந்து சரியும் நிம்மதியைப் பார்க்கவும் இப்போதிருந்தே தவமிருக்கிறான்.

இதில் இது தவிரவும் வேணிக்கென தனியாய் ஒரு சந்தோஷச் செய்தியும் இவனிடம் இருக்கிறது. அன்று தன்னை திட்டத்தில் இணைத்துக் கொண்டானே அதோடு அப்படியே கிளம்பிப் போய்விடவில்லை இவன்.

மது திருமணமான பெண்களைப் பற்றி வைத்திருக்கும் பொதுக்கருத்தை உண்மையில் இவன் பெரிதாய் கண்டு கொள்ளவில்லைதான். யார் யாரைப் பற்றி என்ன நினைத்தால் இவனுக்கென்ன? என்ற ஒரு மனப்பான்மைதான் பொதுவில் இவனுக்குண்டு. ஆனால் இங்கு மது இப்படி ஒரு நம்பிக்கையில் இருக்கும் போது அந்த சாருமதியைவிட்டுவிட்டு என்றைக்கு வெளியே வருவாள் என்ற கேள்வி பிறக்கிறதே!

தன் ஆசைகளுக்காக சொந்த மகளையே இப்படி சிதைக்கும் சாருமதியெல்லாம் எத்தனை பணத்தை கண்டால் இது போதும் என்று மதுவை நிம்மதியாய் வாழவிடுவாள்? ஆக மது சாருமதியைவிட்டு வந்தே ஆக வேண்டும், அதுவும் சரியான புரிதலுடன்.

அப்போதுதான் வேணி விரும்பிய வகை விடுதலையான வாழ்க்கை மதுவுக்குக் கிடைக்கும் என்று யோசித்தவன், இவனது கார் சாவியை இவனிடம் கொடுக்க வந்த மதுவிடம்,

“வீட்டுக்கு கிளம்புறேன், நீ எப்படி போகப் போற? வர்றியா நானே ட்ராப் பண்றேன்” என அழைத்தான் இவன்.

“நிஜமாவா?” என இதற்கும் சந்தோஷமாகவே விழிவிரித்த மது, இவளை அவன் ஒதுக்கி வைக்கவோ ஒழித்து வைக்கவோ முயலவில்லையே! “நல்லா யோசிச்சுக்கோங்கண்ணா” என்று அறிவுறுத்த,

இவர்கள் இருவருக்குமான உறவின் வினோதம் இப்போதுதான் முதல் முறையாக உறைத்தது இவனுக்கு. வழக்கமாக ஒரு பெண்தானே ஆணுடன் காரில் தனித்து பயணிக்க தயங்குவது நம் சமூக அமைப்பு. இப்போது இவனை தயங்கச் சொல்கிறாள் அவள். யாராவது பார்த்து இவனை தப்பாக நினைக்க கூடாதே என்ற அக்கறை அவளிடம்.

“ஹ ஹா யோசிக்கிறதா? என்ன யோசிக்க? தனியா மாட்டினா இந்த பொண்ணு கும்மிடும்னா?” என்றபடியே தன் காரின் பின் கதவை திறந்துவிட்டான் அவன். அவள் சொல்ல வரும் திக்கில் பேச்சு செல்வது இவனுக்கு துளியும் விருப்பம் இல்லை என்பதற்காக பேச்சை இப்படி திருப்பினான். கலாய்கிறதுதான்.

“ஆமா, உஷாரா இருந்துக்கிட்டா உங்க உடம்புக்குதான நல்லது?” என இவனைப் புரிந்து சிரித்தபடி, சற்று துள்ளலாக உள்ளே ஏறி ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டது மது.

“குள்ள தக்காளி போல இருந்துகிட்டு பேச்சப் பாரு” என்றபடி அவன் இப்போது ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை செலுத்த ஆரம்பிக்க,

“அடப்பாவமே கத்தரிக்கா தக்காளிய கூட தெரியாத ஒருத்தர் கார் ஓட்டிடுவார்னு நம்பியா கூட வரேன்?” என இப்போது அவள் அங்கலாய்க்க, (தக்காளி எப்படி இருக்கும்னே தெரியலன்றதாலதான் அவள குள்ளத்தக்காளின்னுட்டானாம்)

“நான் ஒரு முழு நேர காய்கறி வியாபாரி என்பதைக் கூறிக் கொண்டு” என இப்போது அவன் இடையிட,

“ஐய எந்த ஊர்லண்ணா காய் விக்றவங்க ஃபார்சுனர் கார் வச்சுருக்காங்க?” என அவள் யதார்த்தத்துக்கு வந்தவள், “என்ன வேலைணா செய்றீங்க? கேட்கணும்னு நினச்சேன்? உங்க பேரத் தவிர ஒன்னும் எனக்குத் தெரியாது” என்க,

“ஹேய் நிஜமாவே என் மெயின் பிஸினஸ் காய்கறிதான். ஒரு நாள் நீ நம்ம கடைப் பக்கம் வா புரியும், கிட்டதட்ட கேரளாக்கு முழு காய் சப்ளையும் நம்ம பக்கம் இருந்துதான் போகுது தெரியும்ல?” என அவன் கொடுத்த விளக்கத்தில் சன்னமாய் பதற்றம் இருந்ததோ? பின்ன ஆளாளுக்கு அவங்கவங்க ரேஞ்சில இவன சந்தேகப்பட்டா என்ன செய்யவாம்?!

“ஒரு வியாழக் கிழமை போகலாமா? இல்ல உனக்கு எப்ப சரியா வரும்னு சொல்லு, போகலாம், நீ, உன் குட்டி அக்கா, கூடவே  நம்மை மேய்க்கிறதுக்கு எங்க அண்ணி” இதற்குள் திட்டமிட்டும்விட்டான் இவன்.

“ஆஹா இந்த பக்கத்து இலை பாயாசம் கான்சப்ட் பக்காவா இருக்கே” என இதற்கு வந்த மதுவின் பதிலில் குறும்பும் கிண்டலும் கொட்டிக் கிடந்தது.

“ஏன்? ஏன்? அப்படி என்ன பக்கத்து இலை?” என கேட்டாலும் குதித்தேறும் குதுகலத்துடன் இவன் இதழுக்கடியில் சிக்கிக் கொண்ட சின்னப் புன்னகையில் சன்னமாய் வெட்க வண்ணமோ? விஷயம் முழுதுமாய் புரியவில்லை எனினும் இது வேணியைப் பற்றியோ என இவனுக்குப் தோன்றுவதாலா?

ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் பவித்ரா தன் தங்கை வேணியை முறைப்பையனான பால்கனி வீட்டிற்கு அனுப்ப மாட்டாள், அதற்காக இவன் தன்னை காரணம் சொல்லி வேணியையும் வர வைக்கிறான் என புரிந்து, அந்த அர்த்தத்தில்தான் மது இந்த கதை சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம். அண்ணியின் தங்கை என்றால் முறைப்பெண்தானே என்ற புரிதல் இவளுக்கு.

“ம் புரிஞ்சவங்களுக்கு சொல்ல தேவையில்ல, புரியாதவங்களுக்கு சொன்னாலும் புரியப் போறது இல்ல” என இப்போது இப்படி சமாளித்தது மது. கிண்டல் சிரிப்பு கன்னங்களில் பொங்கி நின்றது அவளுக்கு.

இப்படி ஒரு நிலையில்தான் பால்கனி எண்ணி வந்த இடம் வந்து சேர்ந்திருந்தது. ஆக காரை நிறுத்திய பால்கனி மது புறமாக திரும்பி “மொபைல் வச்சிருக்கியா குள்ளத் தக்காளி?” என அவளிடம் விசாரித்தான்.

அடுத்த பக்கம்