துளி தீ நீயாவாய் 17(4)

ஆனால் அடுத்த நொடியே அவனுக்கு வலித்து விட்டதோ என்று தோன்ற, அவசர அவசரமாக தன் கையால் அவன் கன்னங்களை தேய்த்துவிட்டவள், அடுத்து விளையாட்டாய் இதழாலும் அங்கு அவனுக்கு மருத்துவம் செய்ய,

அதே விளையாட்டாய் அவன் இப்போது அவளது இதழ்களை எடுத்துக் கொள்ள,

வீசி அடித்துக் கொண்டிருந்த பரும் பரும் தூறலில் வெகுவாக அவள் நனைந்துவிட்டதைக் கண்டவன், மொட்டை மாடியிலிருந்து முதல் தளத்திலிருந்த ஒரு அறைக்குள் அவளைக் கொண்டு போகும் போதெல்லாம் அக நிலை அன்பானது சங்கம நோக்கில் சாய்ந்தாடத் துவங்கி இருந்தது இருவருக்குள்ளும்.

மலரினும் மெல்லிய உணர்வுதான், அப்படியே அடித்து தூக்கிக் கொண்டு போய்விட்டது என்றெல்லாம் எதுவும் இல்லை, ஆனாலும் தடை போட தேவையற்ற உரிமை நிலையில் காலையில் போட்ட கட்டளை ஒரு விளையாட்டென்றால் இது இன்னொரு விளையாட்டு அவ்வளவே.

சங்கமத்தை சந்தித்த பின் “போடா நான் இன்னும் உன்னை சைட் அடிக்கவே இல்லை, இனி எல்லாம் அப்றமாத்தான்” என மீண்டுமாக அவனிடம் முறுக்கிக் கொண்டவளை என்ன சொல்ல?

எது எப்படியே திட்டமிடல் என எதுவுமற்ற இந்த சந்தன ராகம் இவர்களை என்ன செய்ய திட்டம் வைத்திருந்ததாம்?

நான்கு நாட்கள் கடந்திருந்தன. மாலை மூன்றரை மணிக்கெல்லாம் பால்கனி மதுவின் பள்ளியில் ஆஜர். இன்றிலிருந்துதான் பயிற்சி வகுப்புகள் துவங்குகின்றன. விழா அன்று பார்த்தது. அதன் பின் இப்போதுதான் வேணியை காணப் போகிறான்.

காரில் காத்துக் கிடந்தவனுக்குள் பரிமள வாசத்தை கிளறியபடி புரவிக் கூட்டங்கள் இரத்த நாளங்களில் துள்ளி ஓடிக் கொண்டிருந்தன. இவன் செய்து வைத்திருக்கும் வேலைக்கு இன்று அவள் இன்னுமாய் இவனை நெருங்கி வருவாள் நிச்சயமாய்!!

இந்த  நான்கு நாட்களில் பவித்ரா சொல்லியது போல் 10 முதல் 12 வகுப்பு வரையிலான மாணக்கருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்துவிட்டான் இவன். யோசித்துப் பார்த்ததில் அவனுக்குக் கிடைத்த திட்டம் இது.

அரசுத் தேர்வு எழுத இருப்போர் அந்த ஆண்டு முழுவதுமே, விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் தவிர்த்த மற்ற தினங்களில், முழு இரவும் பள்ளியிலேயே தங்கி காலையில ஒரு ஏழு மணிபோல் வீட்டிற்குச் சென்று, அந்த நாளுக்கென கிளம்பி தயாராகி, காலை ஒன்பதரை மணி போல் மீண்டும் பள்ளிக்கு வரும் வழக்கம் இங்கு சில பள்ளிகளில் உண்டு. அப்பொழுதே அவர்கள் இரவுக்கும் சேர்த்து உணவை எடுத்து வந்துவிடுவதுதான்.

தேவையான மின் விளக்கோ, அமைதியான அறையோ, அல்லது படிக்க விடாமல் வேலை செய்யச் சொல்லும் வீட்டுச் சூழலோ உள்ள மாணவ, மாணவிகளுக்காக சில பள்ளிகள் பலகாலமாக கடை பிடித்து வரும் முறை இது.

பொதுவாக எய்டட் பள்ளிகள் எனப்படும் தனியார் நிர்வாகத்தில் ஆனால் அரசின் ஆசிரியர் சம்பளத்தில் இயங்கும் பள்ளிகளில் இது செயலில் இருக்கும். அப்படி மாணக்கர் பள்ளியிலேயே தங்கும் போது அவர்களை வழி நடத்த மற்றும் பாதுகாக்க தினமும் இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்களை முறை வைத்து மாறி மாறி மாணக்கர்களுடன் தங்க பணித்திருக்கும் நிர்வாகம்.

அதை மதுவின் பள்ளி உட்பட இந்த வழக்கம் இல்லாத அரசுப் பள்ளிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தான் இவன். இங்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களை நீங்கள் இப்படி இரவிலும் தங்க வேண்டும் என பணிக்க முடியாது,

ஆனால் விரும்பி சம்மதித்தவர்கள் சிலரும் அமையப் பெற, இன்னும் தேவை இருந்ததால் அதற்கென கல்வித் தகுதியுடைய சில ஆண் பெண்களை வேலைக்கே அமர்த்தி இருந்தான் அவன்.

பொதுவாகவே அரசுப் பள்ளிகள் என்றாலே ஒரு பாலருக்கான பள்ளிகளாகவே இருப்பதால் இதில் பெற்றோருக்கு பெரிதாக மறுப்பு இருக்காது என்பதும் இவனுக்கு நிச்சயம். அதோடு சில பள்ளிகளில் இது நடை முறையில் இருக்கும் ஒன்றுதான் என்பதால் சமூக அளவிலும் இது வினோத ஒன்றாக பட்டு கவனம் ஈர்க்காது. எல்லாமே சுமூகமாகவே இருக்கும்.

இந்த திட்டம் மனதில் வரவும் இவனது இதயச் சுவர்களில் அடித்து எழும்பிய முதல் சுனாமியின் முக்கிய வண்ணம் நிம்மதியாகும். காரணம் வெகு இலகுவாக, எந்த திரை மறை செயலும் இல்லாமலே, மதுவை இப்போதிருந்தே சாருமதியின் செயலிலிருந்து காப்பாற்றிவிட முடியுமே இதனால்.

காலையில் ஓரிரு மணி நேரம் அதுவும் கிளம்பி தயாராக மட்டுமே மது வீட்டுக்குச் சென்று வருவாள் என்றால் மதுவுக்கு இதைவிட வேறு எந்த திட்டம் பாதுகாப்பு கொடுத்துவிட முடியும்?

பள்ளியிலிருந்தே இப்படி ஒரு ஏற்பாடு எனவும் சாருமதிக்கும் சந்தேகம் எதுவும் வர முடியாது. அப்படியானால்தான் சாருமதியை மது முழுதாய் புரிந்து கொள்ளும் போது, இங்கிருந்து எளிதாய் மதுவை வெளியூர் எங்காவது அனுப்பிவிட முடியும் இவனால்.

நினைக்க நினைக்க ஜெயம் கண்ட உணர்வு ஒன்று அடி மனதில் பெரும் சமுத்திரமாய் திரள்கிறது  என்றால் அதன் மேலேயே  நிறைவில் நிரம்பிப் பொழிகிறது இவன் எனும் வானம்.

இந்த ஏற்பாட்டுக்காக இவன் அலைந்த போது, இதற்காக முன்வந்த ஆசிரியர்கள் சிலர், தன்னார்வ ஊழியர் சிலர் என பலரும் பகிர்ந்து கொண்ட அவர்களது சொந்த அனுபவங்கள் இது உண்மையில் எத்தனை மாணக்கருக்கு பயன் அளிக்கப் போகிறது என்ற புரிவைத் தர, முழு திருப்தி என்றால் என்ன உணர்வென்பது நிலைத்த வகையில் அறிமுகப்படுகிறது இவனது அடி மனதில்.

தொழில் வகையில் எத்தனையோ முறை ஜெயித்திருக்கிறான்தான், காய் நகர்த்தி களமிறங்கி காரியம் சாதிப்பது இவனது வாடிக்கையும்தான், ஆனால் இப்படி ஒரு நிறைவும் நிலையும் இவனுக்கு முற்றிலும் புதிது.

அடுத்த பக்கம்