துளி தீ நீயாவாய் 17(3)

இப்போது ஒரு ஆச்சரியம் கலந்த பார்வை இவனிடம். அதைக் காணவும்

“நான் டென்த்ல ஸ்கூல் ஃப…ஃபர்ஸ்ட், நல்லா..தான் படிச்சேன், அதான் பவி அ… மேம் இப்படி செய்யச் சொன்னாங்க” என விளக்கம் கொடுக்க முனைந்தவளுக்கு, சொல்ல வரும் எல்லாமும் திக்குவது போல் இருக்கிறது. 12த் பரீட்சைக்கே போகாமல் மட்டம் போட்டவளாயிற்றே!

ப்ரவிக்கோ ஏற்கனவே தன்னவள் மேல் பொங்கிப் பாய்ந்து கொண்டிருந்த மனது இன்னுமாய் அள்ளுகிறது. பரீட்சை ஸ்கூல் என்றாலே அலறிக் கொண்டிருந்த வேணியை டீச்சராக்கி இருக்கிறாளே இவனவள்.

இனி கொஞ்சம் கொஞ்சமாக படிப்பின் மீது இருக்கும் பயம் போய் இந்த வேணி கல்வியின் புறம் திரும்பிவிடுவாளாக இருக்கும்.

குத்துவிளக்குக்கு எல்லோரையும் சரியா ஹேண்டில் செய்யத் தெரியுது. இவனக்கு மட்டும்தான் குத்து போல.

உற்சாகம் பீறிடும் இதே நினைப்போடே மாடிப் படியை நாலைந்து படியாக கடந்தவன், மொட்டை மாடிக்குள் நுழையும் போது, கைப்பிடிச் சுவர் அருகில் ஒரு நாற்காலியில் முட்டு கூட்டி அமர்ந்திருந்தபடி, கையில் ஏதோ ஒரு நோட்டை வைத்து பார்த்துக் கொண்டு இருந்தாள் இவனது பவி.

இருந்த உற்சவ மனநிலையில் தாவி அவளிடம் சென்றவன் சென்ற வேகத்தில் அவளை இரண்டு கைகளிலுமாக அள்ளினான். காலையில் கொடுத்திருந்த காத்திருக்கும் காதல் வாக்குறுதியெல்லாம் எங்கே ஞாபகத்தில் இருக்கிறதாம்?

எதிர்பாரா இந்நிகழ்வில் எதிர்க்கக் கூட வாய்ப்பின்றி இவன் கைகளுக்குள் வந்தவள் மறுப்பாய் உதறிய உதறலில் அவளிடம் இருந்த நோட்டு போய் எங்கோ விழுந்ததுதான். ஆனால் அவளிடமிருந்து மறுப்பாக சின்னதாகக் கூட சத்தம் வரவில்லை.

‘ஹேய் என்ன?’ என கேட்க நினைத்து இவன் வாயைத் திறக்க அதற்குள் இவன் வாயையும் வேறு வேகமாக மூடினாள் தன் கையால். தம்பதி வகைப் பேச்சு எதையும் பேசிவிடாதே என்கிறாள்.

இவனுக்கு சட்டென புரிந்து போனது. அதை உறுதி செய்யும் வண்ணம் அருகில் பார்த்தான். இவன் நினைத்தது போலவே அங்கு சுவரில் பவியின் மொபைலும் இருந்தது. அதை ஸ்பீக்கரில் போட்டு கருணுடன் இவள் இந்த பள்ளிப் பிள்ளைகள் கோச்சிங் பற்றி எதாவது ஆலோசித்துக் கொண்டிருந்திருப்பாளாக இருக்கும். இப்போதும் கருண் ஆன் லைன்.

இவன் செய்து கொண்டிருக்கும் சேட்டை கருணின் காதுக்குப் போய்விடக் கூடாதென தவிக்கிறாள்.

இதைவிட இவளிடம் விளையாட இவனுக்கு வேறு வாய்ப்பு கிடைத்துவிடுமா என்ன?  என்ன செய்தால் அவள் வாய்விட்டு சத்தமிடுவாளோ, எதை அவளால் யாரிடமும் சொல்லவும் முடியாதோ அதை சரியாகச் செய்து வைத்தான் இவன். இரண்டு கையாலும் அவளை காலோடு வளைத்து தூக்கி பிடித்திருந்தவன், புடவை நெகிழ்ந்திருந்த அவளது இடையை இதழ்களால் தீண்டினான்.

“ஐயோ அம்மா” என அவளை மீறி  வருகிறது வார்த்தைகள் அவளிடமிருந்து.

அங்கு கருணோ “ஹேய் கொத்துபரட்டோ என்னாச்சு?” என அக்கறையாய் அலர்ட் ஆனான். அண்ணன் இல்லாத வீட்டுக்குள், அதுவும் இந்த வள்ளல் திருடன் வேறு இவர்களிடம் வாலாட்டிக் கொண்டிருக்கும் போது என்னதோ ஏதோ என்று பதறும்தானே அவனுக்கு.

இங்கு நடப்பது அவனுக்கு எப்படித் தெரியும்?

“அது” என இவள் ஆரம்பிக்கும் போது மீண்டும் அடுத்த தீண்டல் அவளவனிடமிருந்து.

“ஹூக்ம்” எனத் துள்ளி “மழை.. மழை வருதுடா கரண்டி, நான் அப்றம் பேசுறேன், பை” என அப்போது தூர ஆரம்பித்திருந்த மழையை காரணம் காட்டி துரத்தினாள் இப்போது கருணை.

“என்னது மழைக்கா இப்படி கத்துற? எதுக்கும் முதல்ல நீ கீழ போ, அடுத்து நான் கால கட் பண்றேன்” இது இவளது பாசக்கார கொழுந்தனின் பதில்.

“டேய் கரண்டி!!!” அவளால் யாரை அதட்ட முடியுமோ அவனை அதட்டினாள். நேரம் காலம் தெரியாம, இவன் வேற பாசத்தை பொழியுறானேபா!

இதற்குள் கருண் சிரித்துவிட்டான்.

“சரி சரி அந்த மாக்கான் வந்துட்டான்னு தெரியுது, அதான?” என விஷயத்தைப் புரிந்தவனாக ஒரு மழுங்கல் சிரிப்புடன் “பை” என அவன் இப்போது விடைபெற,

“டேய் நிஜமாவே மழை பெய்துடா, அதை ஒத்துக்கோ, இல்ல அதுக்கு வேற இவ என்ன கும்முவா” என இப்போது குரல் கொடுத்தது ப்ரவி.

“அப்படியா? அப்ப நான் மழை பெய்துன்னு ஒத்துக்கல, ஒத்துக்கல, ஒத்துக்கல! மொத்றதே மொத்துற உருட்டுகட்ட, பூரிகட்டன்னு எதையாவது வச்சு மொத்துமா, கையால சாத்துறதோட நிறுத்திடாத” என பவியை மூட்டிவிட்டே விடை பெற்றான் அவன்.

கருண் இணைப்பை துண்டித்துவிட்டான் எனத் தெரியவும், இவள் கைகளில் சிக்கிய  இவளவனின் கன்னங்கள் இரண்டையும் “போ நீ, போயும் போயும் உனக்காகன்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன் பாரு, மானத்த வாங்கிட்ட” என்றபடி வலிக்க வலிக்க கிள்ளி எடுத்தாள் அவள்.

அடுத்த பக்கம்