துளி தீ நீயாவாய் 17(2)

இதில் மனதின் ரகசிய ஸ்தலங்களில் சிந்திக் கொண்ட புன்னகையை சற்றும் வெளிக்காட்டாமல், வேணியின் புறமும் பாராமல், ஒரு இறுகிய முகத்துடன்,

“நான் பெருசா எதுவும் படிக்கல அண்ணி, ஆனா ஓரளவு நல்லாவே செஸ் விளையாடுவேன், அதனால பெரிய பிள்ளைங்களுக்கான செஸ் கோச்சிங்ல என் பெயர சேர்த்துக்கோங்க” என்றபடி பதிவேடை பவித்ராவின் முகத்தை மட்டும் பார்த்தபடி நீட்டினான்.

‘வேணிக்கு இவன் மீது இப்போதுதானே ஒரு அக்கறை கவனமே வந்திருக்கிறது. அவளது காயம்பட்டிருக்கும் மனதில் இவன் மீது அவளுக்கு காதலே வந்தாலும் அதைப் புரிந்து கொள்ள நேரமெடுக்குமாயிருக்கும்.

ஆக அது வரைக்கும் இவன் பொறுத்து மட்டுமல்ல அவளை தவிர்த்தும் இருக்க வேண்டும். பிரிவுதானே காதலை பெரிதுபடுத்துமாம். கொஞ்ச நாள் இவன் பாரா முகமாய் நடந்து கொண்டாலே போதும், எப்படியும் இவனோடு சேர்ந்துவிடுவாள்’  இதுதான் அவனது அப்போதைய அணுகுமுறை.

இப்படி இவன் நினைத்ததை வேணி இவனுடன் இணைந்த பின்னாளில் அவளை கைக்குள் வைத்துக் கொண்டு தெரிவிக்கும் போது “அலை பாயுதே, சர்வம் படமெல்லாம் வச்சுதான அப்படி யோசிச்ச? சரியான சினிமா பைத்யம்” என மூக்கு சுருக்கி இவனை சீண்டுவதாக, இப்போது ஒரு கற்பனை காட்சி விரிய, எழும்பிய புன்னகையை இதழுக்குள் சிறை செய்ய இப்போது இவன் திணற வேண்டியிருந்தது. இனிக்கிறதே!

நேர்ப்பார்வையோடு இவன் கையிலிருந்த பதிவேடை வாங்கிய பவியோ “பொதுவா 10த் பிள்ளைங்களோ, அதுக்கு மேல பெரிய வகுப்பு பிள்ளைங்களோ யாரும் இந்தப் போட்டிகள்ல பெரிதா ஆர்வம் காட்டவும் இல்ல, பெயர் கொடுக்கவும் இல்லை” என்றாள்.

அதாவது  பால்கனி இங்கு செய்வதற்கு ஒன்றும் இல்லை என்றுதானே அர்த்தம்! உள்ளே வராதே என்கிறாள். ஒரே ஒரு கணம் இவனது கற்பனை மாளிகையின் அஸ்திவாரம் ஆடுவது போல் இருந்தது இவனுக்கு. எத்தனையை யோசித்து இவன் இத்தனை தூரம் களமிறங்கினால் ஒரே ஒரு புல்லைக் கொண்டு இவனை கவிழ்த்துப் போட்டுவிடுவாளோ இவனது அண்ணி?!

ஆனால் இந்த திகில் எதையும் வெளிக்காட்டாமல் “ஏன் அண்ணி?” என இயல்பு போல் விசாரித்தான். அதாவது யோசிக்க நேரம் வாங்கினான் அவன்.

“அதுவா? விசாரிச்சுப் பார்த்ததுல பப்ளிக் எக்சாம், ஆனா வீட்டுக்குப் போனா பீடி சுத்றது, விற்க பூக்கட்டி கொடுக்றதுன்னு கூலி சம்பந்தப்பட்ட வேலையோ, குறஞ்ச பட்சம்,  தண்ணி எடுக்றது, மாட பராமரிக்கிறது, சமைச்சு, துணி துவச்சி, வீடை சுத்தம் செய்ற வேலைன்னு வீட்டு வேலையோ பிள்ளைகளுக்கு வீட்லயே அவ்வளவு வேலை இருக்கு,

பெரும்பாலான வீட்ல அம்மாவும் கூலி வேலைக்கு போறவங்க இல்லையா, வீட்டு வேலை எல்லாம் இவங்க தலையில விழுந்துடுது,

இதுல குடிச்சிட்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்ற அப்பா, குட்டியான ஒத்த அறை வீடு, அதுல மத்தவங்க தூங்கப் போறப்ப லைட்ட ஆஃப் ஃபண்ண வேண்டிய கட்டாயம்னு ஒரு பெரிய லிஸ்ட்டே சொல்றாங்க. இதுல பாடம் படிக்கவே நேரமில்ல, அதில் இந்த போட்டி வேறயான்னு ஒரு எண்ணம் இருக்கு அவங்களுக்கு” என அதற்கு படு விளக்கமாக நிலமையைச் சொல்லி இவனுக்கான கதவை அடைத்த பவி,

“இந்தப் போட்டியவிட, பொதுவா அவங்க சப்ஜெக்ட்ஸில் ஸ்பெஷல் கோச்சிங் போல எதாவது வச்சா, பரீட்சைய எப்படி கையாளணும்னு சொல்லிக் கொடுத்தா அவங்களுக்கு யூஸ் ஆகும் போல,

பெரும்பாலானோர் பொருளாதார வகையில் பின் தங்கினவங்க இல்லையா? வேற வெளிய ட்யூஷன் போகவோ, கவனம் சிதறாத அமைதியான சூழல்ல இருந்து படிக்கிற வாய்ப்போ வீட்ல இல்லை அவங்களுக்கு, அதை நாம ஸ்கூல்ல உண்டு செய்து கொடுத்தா பெட்டரா ஃபீல் செய்வங்களா இருக்கும்” என ஏனோ ஒரு வாய்ப்பையும் கொடுத்தாள்.

அதாவது நீ இங்க தினமும் வராத, ஆனா எப்பவாவது வந்துட்டு போற மாதிரி இருந்தா பிரவாயில்லைன்றாங்களா அண்ணி?

இந்த வேணி போய் இவனப் பார்க்க எனக்கு திருடன் போல இருக்குன்னு சொன்ன பிறகு வேற என்ன வரவேற்பு இவனுக்கு இங்க கிடச்சிட முடியும்?

அதனால் இதை வைத்துதான் இவன் நினைத்ததை செய்து முடிக்க வேண்டும். அது இவனால் முடியும்தான் என்று ஓடியது பால்கனியின் மனது.

ஆக, “ஓ” என யோசனையுடன் விஷயத்தைக் கேட்டுக் கொண்டவன்,

“எனக்கு இதெல்லாம் சரி வராதுதான், ஆனா இதுக்கு ஏற்பாடு செய்து தந்து அது ஒழுங்கா நடக்கிறாப்ல பார்த்துக்க பொறுப்ப நான் எடுத்துக்கிறேன்” என ஒரு விதமாக தன்னை திட்டத்தில் இணைத்துக் கொண்டான்.

இதற்குத்தான் ப்ரவியின் புலிப் புன்னகையும்.

அந்தப் புலிக்காரனின் விழுந்து புரண்ட சிரிப்பும். “Welcome abode Mr.Aattukkutty!!”  என்ற அவன்,  “நான் மாட்டுவேன்னு நினச்சு வந்து நீ மாட்டிக்கிறியே, ஆனாலும் உன்னை எனக்குப் பிடிக்குதே!” என்றும் முனங்கிக் கொண்டான்.

அன்று ப்ரவி வீட்டுக்கு வரும் பொழுதே படு உற்சாகத்தில் இருந்தான். பால்கனியின் செயலே வெகு சந்தோஷத்தை தருகிறதென்றால் அதில் இவனது பவி செய்து வைத்திருக்கும் காரியம் அவளைத் தூக்கி தட்டாமாலை சுற்றச் சொல்கிறது.

துள்ளலாக வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு வரண்டாவில் முதல் எட்டு வைக்கும்போதே கண்ணில் படுவது அடுத்திருந்த வரவேற்பறையின் தரையில் அமர்ந்து புத்தகமும் நோட்டுமாய் எதையோ எழுதிக் கொண்டிருக்கும் வேணிதான்.

இவன் வருகையை உணர்ந்து தட புடவென எழுந்தவள் “மேம் மொட்ட மாடியில இருக்காங்க” என இவனுக்குத் தேவையான தகவலைச் சொன்னவள்,

இவன் அதற்கு “குட்” என சின்னப் புன்னகையுடன் பதில் கொடுக்க, “நா… நான் 10த் ஸ்டூடண்ஸுக்கு முக்கியமான கொஸ்டியன்லாம் எதுன்னு ரெடி பண்றேன்” என அடுத்த தகவலையும் சொன்னாள்.

“நீ இங்க என்ன செய்துகிட்டு இருக்க?” என சார் கேட்கும் அளவுக்கெல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாதே என்பது அவளுக்கு. பால்கனியிடம் பேசுகிறேன் என ப்ரவியிடமே வந்து சொல்லிவிட்ட பிறகு வேணிக்கு அவளது எல்லா செயலுக்கும் கணக்கு கொடுத்துவிடுவது மிக பாதுகாப்பான ஒரு உணர்வைத் தருவதும் இதன் பின் காரணமாயிருக்கலாம்.

அடுத்த பக்கம்