துளி தீ நீயாவாய் 17

பால்கனி வணக்கம் அண்ணி என வந்து நின்ற முதல் கணம் பவிக்கு அது யார் எனத் தெரியவில்லை, அவன் அந்த அளவுக்கு உடைக் கோலத்தை மாற்றி இருந்தானே!

பின் அறிந்தவளாக “வாங்க, வணக்கம், நல்லா இருக்கீங்களா? என்ன இந்த பக்கம்?” என அவள் இயல்பாய் பேச்சிற்குள் வர, கனி தான் இதில் பங்கு பெற விரும்புவதாக தெரிவிக்க, அதுவரைக்குமே பால்கனி அதற்குத்தான் பவியை பார்க்க வந்திருக்கிறான் என புரியாமல் விழித்துக் கொண்டிருந்த வேணி,

“ஐயோ, இல்ல வேண்டாம்” என எதிர்பாரா அதிர்ச்சியில் பதறத் துவங்க, பின்ன இத சாக்கா வச்சு இவ இங்க இருக்கப்பல்லாம் இவ கூடயேல்ல சுத்திகிட்டு இருப்பான்?!

சட்டென கை உயர்த்தி போதும் என்பது போல் சைகை காட்டினான் பால்கனி. உறைந்திருந்தது அவன் முகம்.

“எப்ப உனக்கு என்னைப் பார்க்க போலீஸ் தேடுற அளவு கிரிமினல்னு தோணிட்டோ, அப்பவே உன் மேல எனக்கிருந்த எல்லா எதிர்பார்ப்பும் செத்துப் போச்சு. இப்ப நான் இங்க என்ரோல் பண்றது நான் உதவி செய்வேன்னு மலையளவு நம்பிகிட்டு இருக்க ஒரு சின்ன ஜீவனுக்காக.

இதுக்கு மேல உன்ட்ட எந்த மாதிரி பழகுறதுக்கும் எனக்கு விருப்பம் இல்ல, எங்க அண்ணி அண்ணா மேல உள்ள மரியாதைக்காக உன்ன வெளிய வச்சு எங்கயும் பார்த்தா என்னன்னா என்னன்ற அளவுக்கு பேசிப்பனே தவிர, அதுக்கு மேல ஒரு புள்ளி கமா கூட என்ட்ட இருந்து வராது” என அதே அடி வாங்கிய முகத்தோற்றத்தோடு அறிவித்தவன்,

நடப்பதை சற்று புரியாத பாவத்தோடும், தீவிர முகத்தோடும் பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவின் கையிலிருந்த பதிவேடை கைநீட்டி இவன் வாங்கி தன்னார்வ ஊழியருக்கான பகுதியில் தன் பெயரை குனிந்து எழுதத் துவங்கினான். எழுதியபடியே,

“நான் பிறந்ததெல்லாம் டெல்லியில அண்ணி, 6 படிக்க வரைக்கும் அங்க உள்ள reputed ஸ்கூல்லதான் படிச்சேன், வீட்ல எனக்குன்னு தனியா அப்பவே டெஸ்டாப்லாம் உண்டு, அந்த அளவு வசதியாத்தான் இருந்தார் எங்கப்பா, அப்றம்தான் எல்லாத்தையும் தொலைச்சுட்டு தெருவுக்கு கொண்டு வந்துட்டார்.

நிஜமா ப்ளாட்ஃபார்ம்லதான் இருந்தோம் கொஞ்ச வருஷம். பிறகு கடைசி காலத்துல இங்க சொந்த ஊருக்கு வரணும்னு இங்க வந்து செத்தும் போனார் மனுஷன்.

அந்த வயசில் சின்ன அளவில இருந்த பூர்விக வயல் தவிர எனக்குன்னு யாரும் எதுவும் கிடையாது. தெரிஞ்ச விவசாயத்த செய்து, கூடவே இந்த காய்கறி கமிஷன் கடைனு வச்சுதான் நான் எழும்பினதே! இங்க நான் பேசி பழகினது, காய் வாங்கி விக்கிறதுன்னு அத்தனை பேரும் இங்லீஷுக்கு சம்பந்தமே இல்லாதவங்க, இவங்கட்ட நான் நம்ம ஊர் பாஷைதான பேச முடியும்?

ஆனா டெல்லில படிச்சவன், அங்க உள்ள வாழ்க்கைய அனுபவிச்சவன்ற வகையில அங்க உள்ள பழக்க வழக்கம் இங்லீஷ்னு கொஞ்சமாவது எனக்கு தெரியாமலா அண்ணி இருக்கும்? இப்ப வரைக்கும் இன்டெர்நெட்ட குடையுறதுதான் என் முக்கிய பொழுது போக்கே!

இதுல உங்க தங்கச்சி உன் தகுதிக்கு நான் வேணுமான்றாப்ல உங்க முன்னாலதான கேட்டா? அதுக்கப்புறம் அவட்ட எனக்கும் கொஞ்சமாவது எல்லாம் தெரியும்னு காமிச்சுக்கத் தோணும்தானே! அது சராசரி மனுஷ உணர்வுதானே!

அதான் அவட்ட இங்லீஷ், இந்த போல ட்ரெஸ்னு என் இயல்ப காமிச்சா, அதுக்கு அவ  நான் என்னமோ பெரிய லெவல் கிரிமினல், அவ முன்ன ஒரு வேஷம், ஊர்காரங்க முன்ன ஒரு வேஷம் போட்டு எதோ பெருசா ஃப்ராடு செய்ய ப்ளான் போடுறேன்னுல்லாம் சொல்லிட்டு அலையுறா, இதுக்கப்புறம் அவ கூட எனக்கென்ன பேச்சு?” என தன்னிலை விளக்கத்தை கூட பவியிடமே சொன்னான்.

“ஓ ஐம் சாரி” என்ற இரட்டை வார்த்தைகள்தான் பவியிடம் இருந்து வந்தாலும், அதில் அதிக கணமும், மன பாரமும் இருந்தது. அது வேணி பால்கனியை இப்படி சந்தேகித்தற்காக இல்லை, அது அவனது கடந்த காலத்திற்கானது.

வேணிக்கோ வழக்கமாக அவன் எதைச் சொன்னாலும் சந்தேகிக்கவே வரும் மனப்பான்மை இதில் அவளுக்குத் தோன்றவில்லை, மாறாக ஒருவாறு உருகிப் போனது அவளுக்கு. சின்ன வயதில் ஃப்ளாட்ஃபார்மில் இருந்தானாமே! எத்தனை பேரால் எப்படியெல்லாம் வன்முறையாய் வஞ்சனையாய் துன்புறுத்தப்பட்டானோ?

அதனால்தான் இப்படி மனிதர்களை கையாளப் பழகிவிட்டானோ என்றிருக்கிறது அவளுக்கு. அப்படி ஒரு கோணத்தில் யோசித்தால் அவன் அப்படி யாரையும் பெரிதாக துன்புறுத்திவிட்டதாகக் கூட எதுவுமில்லையே! நைச்சியமாய் பேசி காரியம் சாதித்துக் கொள்கிறான் அவ்வளவுதானே!

மற்றபடி எல்லாம் வெறும் வாய்ப் பேச்சுதான்! அதுவும் தற்காப்புக்காக இருக்கும்.

அதேநேரம் மதுவையும் இவளையும் அவன் நடத்தும் விதம்தான் அவனது இயற்கையான சுபாவம் போலும். அல்லது அது கூட சிதைபடும் ஒரு மனதின் ஓலம் எப்படி இருக்கும் என அவனுமே அனுபவித்ததால் கூட இருக்குமாயிருக்கும்.

வெகுவாகவே நெகிழ்ந்து போனாள் பெண். இப்படி ஒரு நினைவில் அவன் மீது பார்வையைச் செலுத்தினால் உள்ளுக்குள் பிசைந்து கொண்டும், பிழிந்து கொண்டும் வருகிறது.

அதில் தாங்க மாட்டாதவளாய் “சாரி ரொம்பவும் சாரி” என அவள் சொன்ன விதத்தில், அதைச் சொல்வதற்குள் அவள் தவித்துவிட்ட வகையில் சரேலேன துள்ளிப் பிறக்கிறது ஒரு தீம்புள்ளி நட்சத்திரம் பால்கனியின் அடிமனதில். சில் சிலீரென சில அதிகாலை விடியல்கள் அவன் வசம்.

அதில்தான், அங்குதான் இரும்பு இதழ்களை உராய உராயத் திறந்து மொட்டவிழ்கிறது அவனது நம்பிக்கை. இந்த SP பரிசுத்தனையும் தாண்டி இவனால் வேணியை இவனவளாய் அடைய முடியும்தான். அதற்கான திட்டத்தைதான் அவன் துவங்கிவிட்டானே!

அடுத்த பக்கம்