துளி தீ நீயாவாய் 1 (2)

இப்போதும் இன்னுமொரு காட்டன் புடவையில் இவள் ஒரு புறமும் புடவை இன்னொரு புறமுமாகத்தான் இருந்தாள் அவள்.

குடும்ப விழா தவிர எதற்காகவும் அவள் புடவை கட்டமாட்டாள், அதிலும் வெட வெட என நிற்கும் புடவை என்றால் அவளுக்கு சுத்தமாய் பிடிக்காது என்பது இவனுக்குத் தெரியும்.

ஒரு மூச்சை இழுத்து விட்டுக் கொண்ட அவனோ, “சரி பவி, இன்னைக்கு நான் ட்யூட்டில ஜாய்ன் பண்ணியாகணும், கிளம்புறேன், மதியம் வர்றப்ப லஞ்ச் வாங்கிட்டு வந்துடுவேன், இன்னும் ஒன் ஆர் டு டேஸ்குள்ள சர்வென்ட் மெய்ட்க்கு ஏற்பாடு செய்துடலாம்” என்றபடி கிளம்பியவன்,

“கதவை பூட்டிக்கோ” என்ற தனது அடுத்த வார்த்தைகளுக்கு அப்படி ஒரு பின் விளைவை எதிர்பார்க்கவே இல்லை.

அதுவரைக்கும் அவன் சொல்வது காதிலேயே விழவில்லை என்பது போல் சமயலறைக்குள் போய் குப்பை தொட்டியில் காகிதத்தை போடும் வேலையை செய்து கொண்டிருந்தவள், அந்த நொடியே விறு விறுவென தன் அறைக்குள் போய்,

இவன் என்ன என ஊகித்து முடிக்கும் முன், கன கச்சிதமாய் அத்தனை லயமாய் கட்டிய ஒரு பிங்க் நிற வாட்டர் ஷிஃபான் புடவையில் வெளியே வந்திருந்தாள்.

படு வேகமும் பாய்ண்ட் பெர்ஃபெக்க்ஷனும் எப்போதுமே பவியின் அடையாளம். இவன் வகையில் காணாமல் போயிருந்த அதை மீண்டுமாக இந்த நொடியில் உணர்ந்தவன், அத்தனை சூழலிலும் சின்னதாய் மனதுக்குள் அவளை ரம்யபட்டுக் கொள்ள,

அவளோ மேஜையிலிருந்த வீட்டு சாவியை எடுத்து கட கடவென கதவை நோக்கிச் சென்றாள்.

அதாவது இவன் சொன்ன கதவ பூட்டிக்கோவை, ‘பத்ரமா வீட்ல இரு’ என அர்த்தத்தில் எடுத்து அதற்கு நேர் எதிரா வீட்டை விட்டு வெளியே கிளம்பிக் கொண்டிருக்கிறாள் அவள் என அப்போதுதான் புரிகிறது அவனுக்கு.

கூடவே “வீட்ல இருக்கப்ப சேரி கட்டணும்னு எந்த அவசியமும் இல்ல பவிமா, இப்ப கொஞ்ச நாள் அப்ப அப்ப தெரிஞ்சவங்க யாரும் வந்து போகலாம், அதனால கொஞ்சம் நீட்டா சல்வார் மாதிரி எதாவது போட்டுக்கோ, அப்றம் உன் வசதிப்படி கேஷுவல் வேர் எதுனாலும் போட்டுக்கலாம்” என அவன் சொன்ன வார்த்தைகளின் பின் விளைவுதான் இதுவரை அவள் கட்டி இருந்த கட முடா முறுக்கு காட்டன் புடவைக்கு காரணம் என்றும் இந்த நொடி புரிகிறது.

எப்போதாவது இவனிடம் அவள் இதற்கு முன் கோபபட்டதுண்டா என ஞாபக அடுக்குகளில் தேடித் தேய்கிறது இவன் நெஞ்சில் நினைவு ஒன்று.

“பவி ப்ளீஸ் பவி”  சற்று அழுத்தமாக சொல்லியபடி அவளுக்கு குறுக்காக சென்று நின்றான்.

“சொல்றத கேளு பவி” இவன் சொல்ல வந்ததை அவள் கண்டு கொள்ளவே இல்லை.

“நீங்க எனக்கு வாங்கி வந்து வைக்கீங்களே சாப்பாடு, அதுக்கு பணம் கொடுக்கவாவது நான் சம்பாதிக்கணும். அதுக்கு வேலைக்கு போறேன்” என வந்து விழுகின்றன அவளது வார்த்தைகள்.

இவனையும் மீறி ஏறுகிறது இவன் முகத்தில் கண்டனம்.

ஆனாலும் அவள் இருக்கும் நிலையில் அவள் மீது கோபப்பட அவனுக்கு துளியுமே சம்மதம் இல்லை. ஆக “நாம கல்யாணம் செய்துருக்கோம் பவி” என ஒருவித சாந்த அழுத்தத்தில் சொன்னவன்

“உனக்குன்னு…” என அடுத்தும் எதையோ இதமான குரலில் சொல்லவே முயன்றான்.

அவளோ அவனை பேசவிட்டால்தானே?! “ஓ! மேரேஜ்னா பொண்ண அடச்சு வச்சு சாப்பாடு போடுறதுன்னுதான் அர்த்தமா?” என அப்பாவி போல் ஒரு ஆக்க்ஷனோடு நாடியில் ஒற்றைவிரல் தட்டி யோசித்தாள் அவள்.

“நான்தான் வேற என்னமோன்னு நினச்சுட்டனா?”

முன்பு எப்போது அவள் இப்படி நாடி தட்டினாலும் இவனுக்கு அதைப் பார்க்கப் பிடிக்கும். எதோ பாற்சிலை பதத்தில் பால் மழலை பாந்தத்தில் பார்க்கவே சுகசுகந்தமாய் இருப்பாள் அந்நேரங்களில்.

இப்போதோ கழுவி வைத்த அக்னி கொழுந்து போல் இருக்கிறாள்.

இவளிடம் வாதாடுவதால் இவள் இன்னும் வாடிப் போவாளே தவிர நடக்கப் போகும் நல்லது என எதுவும் இருக்காது என்பது இவனுக்கு நன்றாகவே தெரிகிறதுதானே! ஆக,

“நீ வேலைக்கு போகாதன்னு எல்லாம் நான் சொல்லல பவி, ஆனா நீ சொல்ற காரணம்தான் சரியா இல்லன்றேன்” என்றவன்,

அடுத்து அவள் எதுவும் சொல்ல இடமே கொடாமல் “இன்னைக்கு ஒரு நாள் டைம் கொடு, இங்க பக்கத்தில் உன் க்வாலிஃபிகேஷன்க்கு செட் ஆகுற மாதிரி என்ன ஓப்பனிங்ஸ் இருக்குதுன்னு பார்ப்போம், அதில் உனக்கு பிடிச்சத ட்ரைப் பண்ணு” என விஷயத்தை முடித்தான்.

இதுவும் அவளுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கும் என அவனுக்கு எப்படித் தெரியும்? தெரிய வைத்தாள் அவன் மனைவி.

“இல்ல…” முழு மொட்டையாய் வந்தது அவள் மறுப்பு.

“இங்க பக்கத்தில என் அம்மாவோட லேண்ட் இருக்குதுல்ல, அதுல வேலை செய்யப் போறேன்” என வந்து விழுகிறது அவள் வார்த்தைகள்.

“வாட்??!!” அவளுக்கு இப்படி எல்லாம் ஏட்டிக்குப் போட்டியாய் யோசிக்க வரும் என்று கூட இவ்வளவு நாளும் இவனுக்குத் தெரியாதே!

“ஏன் பவி?” இதை கேட்கும் போதே என்ன பதில் அவளிடமிருந்து வரப் போகிறது என தெரியவில்லை என்றாலும், ஏதோ ஒன்று இவனுக்கு வலிக்க வலிக்க வரப் போகிறது என்று மட்டும் ஏனோ புரிந்துவிட்டது.

இந்த விஷயத்தில் மட்டும் துளியும் ஏமாற்றம் தராமல் பதில் தந்தாள் அவனது பாரியாள்.

“என் படிப்பு என்னது இல்ல” ஆணித்தரமாய் வந்தது அவள் அறிவிப்பு.

அடுத்த பக்கம்