துளி தீ நீயாவாய் 1

ப்பொழுதுதான் தூக்கம் கலையத் துவங்க, மெல்ல கண்விழித்த பவித்ராவுக்கு அவள் வழக்கத்தின் படி பிறண்டு எழும்ப முடியாமல் கால் தட்டியது. அதன் விளைவாக அன்னிசையாய் அவள் கவனம் காலின் மேல் செல்லவும்தான், தான் புடவை கட்டி இருப்பதே அவளுக்கு கண்ணில் படுகிறது.

‘ஹான்! சேலை கட்டிட்டு தூங்கினேனா?’ என அவள் புரியாமல் யோசிக்க துவங்கிய நொடி.. அதற்கான காரணமும் கூடவே சாரை சாரையாய் அதை சார்ந்த நினைவுகள் அனைத்தும் வந்து நிற்க,

ஆழ்ந்த தூக்கத்தின் விளைவாய் அது வரைக்கும் மறந்திருந்த அத்தனையும் இம்மி குறையாமல் இவள் இதயத்தில் இப்போது ஏறி இடம் பிடிக்கிறது.

இவளையும் அவனையும் தனிக்குடித்தனம் வைக்கவென வந்திருந்த எல்லோரும் நேற்று இரவே திரும்பிச் சென்றுவிட்டனர் என்பதே இப்போதைக்கு இவளுக்கு நினைக்க இருக்கும் ஒரே நல்ல விஷயம்.

கட்டிலில் இருந்து இறங்கியவள் தன் சேலையின் ஃப்ளீட்ஸை விர் விர் என இரண்டு விரல்களால் விமான வேகத்தில் இரண்டு இழு. அந்தப் பகுதி மட்டும் இப்போது ஆர்மி ஆஃபீசர் போல அட்டென்ஷனுக்கு வந்துவிட்டாலும்,

கரும் பச்சையும் அதில் சின்ன அளவு பிங்க் நிறமுமாய் இருந்த அந்த புத்தம் புது காட்டான் சேலை நெய் ரோஸ்ட் தோசை ரேஞ்சில்  வெட வெட என அங்கும் இங்குமாய் எழுந்தும் மடங்கியும் அவளை சுற்றி அரையடி தூரத்துக்கு ஆக்ரமித்து நின்றது.

‘காட்டன் புடவைய இவ்ளவு தூரம் கட்ட தெரிஞ்சிருப்பதே பெரிய விஷயம்’ என அதை அப்படியேவிட்டவள், அவளிருந்த அறைக் கதவின் உட் தாழ்பாளை திறக்க முயன்ற நேரம் எதேச்சையாய் கண்ணில் படுகிறது அருகிலிருந்த சின்ன மேசையிலிருந்த இவளது கல்யாணப் பத்திரிக்கை.

பவித்ரா பரிசுத்தன் என பெரிய பெரிய எழுத்துக்களும் நான்கு நாளுக்கு முந்திய தேதியுமாயும் அது. பத்திரப் படுத்தி வைக்க இவள் ஆசைப்படுவாள் என கருண் கொண்டு வந்திருப்பானாக இருக்கும்.

‘இந்தப் ப்ரவியோட அஃபீஷியல் நேம் பரிசுத்தன்தானே’ அவன் மீது கொழுந்துவிட்டெரியும் கொடூர கோபம், இயலாமை, ஏமாற்றம் எல்லாம் தாண்டி, அடிப்படை காரணம் ஏதுமின்றி, அதுவாக மனம் அவளை மணந்திருப்பவனின் பெயர் ஆராய்ச்சியில் ஒரு கணம் ஓடுகிறது.

அவனை ப்ரவி என மட்டும்தான் வீட்டில் எல்லோரும் அழைப்பதால், என்ன பெயரை என்னதாக கூப்டுறாங்கன்னே மறந்து போய் இவளும் கூப்பிட்டுக் கொண்டிருந்த விஷயம் இப்போது,

‘அவனப் பத்தி என்னதான் தெரிஞ்சிருந்திருக்குது எனக்கு? எல்லாம் தெரியும்னு லூசு மாதிரி ஏமாந்துருக்கேன்’ என இன்னொரு வகையில் தாக்குகிறது.

அதற்கு மேல் அவனைப் பற்றி எதை நினைக்கவும் இதயத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்தவள் கதவை திறந்து கொண்டு விடு விடுவென வெளியே வந்தாள்.

என்னதான் சமையலறையை மட்டும் நோக்கியபடி பார்வையை வைத்துக் கொண்டாலும், இவள் கடந்து செல்ல வேண்டிய அந்த வரவேற்பறையின் இடப்புறம் அந்த ப்ரவி நின்று எதையோ செய்து கொண்டிருப்பது ஓரக் கண்ணில் விழத்தான் செய்கிறது.

இவளைப் பார்க்கவும் அவன் உடல் மொழியில் விலுக்கென வந்து விழுந்த ஆர்வமும் கூட இவள் கவனத்தில் படாமல் இல்லை.

இவளுக்காகத்தான் காத்திருந்திருக்கிறான் போலும்.

முழு யூனிஃபார்மில் இருக்கிறான் அவன். இன்றுதான் அவனை முதன் முதலாக யூனிஃபார்மில் பார்க்கிறாளோ?

இன்னுமே இவள் முகம் இறுகிக் கொண்டு போக, அரை டிகிரி கூட திரும்பாமல் அப்படியே சமயலறைக்குள் நுழைந்தாள். இவளைப் பின்பற்றி அவனும் இப்போது அங்கு வர, அவன் இவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை அவன் புறம் திரும்பாமலே உணர்ந்தாள் பவித்ரா.

கேஸ் அடுப்பின் மேல் ஏற்கனவே பால் காய்ச்சி வைக்கப் பட்டிருக்க, காஃபி போட அதை மீண்டும் சூடு செய்யும் வண்ணமாய் இவள் அடுப்பை ஏற்ற,

இப்போது “பவிமா, பால் காய்ச்சிதான் வச்சுருக்கேன்” என சொல்லத் துவங்கியவன்,

அடுத்து அவசரமாக “ஹேய் சாரிமா சே சாரி இத்தன வருஷம் கூப்ட்ட பழக்கத்துல வந்துட்டு பவி” என சொல்லி முடிக்கும் போது வெகு நிதானமாக அந்த பாலிருந்த பாத்திரத்தை தூக்கிப் போய் பின் வாசலிலிருந்த ஒரு தட்டில் ஊத்தி இருந்தாள் பவித்ரா. இவர்களது நாய் மிர்ச்சிக்கானது அது.

அறை வாங்கிய பாவத்தில் நின்றிருக்க வேண்டிய அவனோ, அத்தனை அளவுக்கு இல்லாமல் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.

எதுவுமே நடவாதது போல் இவளோ இப்போது வெகு சவாதானமாக தோசைக் கல்லை எடுத்து அடுப்பின் மீது வைத்தவள், அந்நேரம்தான் அங்கு அவன் வாங்கி வைத்திருந்த சாப்பாடு பார்சல்களை பார்த்ததும், அதில் ஒன்றை எடுத்துக் கொண்டு தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.

அவள் திரும்ப வெளி வரும் போது, குளித்து விட்டதன் அடையாளமாக அவள் முடியில் ஈரம் சொட்டிக் கொண்டிருக்க, சாப்பிட்டு முடித்ததன் அடையாளமாக அந்த சாப்பாட்டு பார்சல் காகிதம் கசக்கப்பட்டு அவள் கையில் இருந்தது.

அடுத்த பக்கம்