துளி தீ நீயாவாய் 6(5)

பார்த்தாலே முகவரி அற்ற மென் பனி மின்னல்கள் தறி நாடா போல் இவனை நெய்தெடுக்குமே! அதை முற்றாய் அனுமதித்தால் பெயரற்ற ஆண் வகை ஆசைகள் சின்னதாய் துவங்கி என்னதாய் வேண்டுமானாலும் மனதுக்குள் பாய்ந்து வைக்கும்.

அதை தவிர்க்க இவன் அவளையே தவிர்த்ததுண்டு. அவள் எதைக் கேட்டாலும் கருணை கைகாட்டிவிட்டு தப்பிக்க பார்ப்பான்.

என்ன நீ இப்பல்லாம் உனக்கு என் மேல பாசம் அக்கறைனு ஒன்னுமே இல்ல என அதற்கும் அழுது கொண்டு வந்து நின்றாள் அவள்.

எப்ப பார்த்தாலும் என்ன அவாய்ட் பண்ற, என்னைப் பார்க்கவே உனக்கு பிடிக்கல என்றெல்லாம் விபரீத கண்டு பிடிப்பு நிகழ்த்தினாள்.

அதில் ஒருவழியாய் இவனது காதலையும் அவளுடனான நட்பையும் ஒன்றை ஒன்று காயமோ களங்கமோ செய்யாதபடி கையாள இவன் பழகிக் கொண்டான்.

இனி இவனுக்கு அந்த திக்குமுக்காடல்கள் இல்லைதான். ஆனால் அவளுக்கு வந்து சேரும். இவன் முகம் காண தடை செய்யும் மெல்லிய வெட்கங்கள், ஆசையை அடையாளப் படுத்தும் தடுமாற்றங்கள் எல்லாம் கூட வரும்.

பின் அது தாண்டி முழு உரிமை நிலை என்ற ஒரு காலமும் வரும்.

இப்படி எதுவெல்லாமோ மனதில் ஓட இந்த நாள் இவர்கள் இருவருக்குமான வெகு முக்கிய நாளாகத் தோன்ற, இவங்க மேரேஜே முழு மனசா அவ ஏத்துக்கிறான்னு அர்த்தம் ஆகுதே,  அதன் அடையாளமாய் அவளுக்கு எதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் எனத் தோன்றிவிட்டது அவனுக்கு.

என்ன வாங்கலாம் என யோசிக்கும் போதே கண்ணில் படுகிறது இவனது வாகனம் கடக்கும் அந்த பிரபல நகைக்கடை. எப்போதாவது சின்ன சின்னதாய் கம்மல் ட்ராப்ஸ் ப்ரேஸ்லெட் என எதாவது இவன் வாங்கிக் கொடுப்பதுதான். பொதுவாக இவன் தேர்வுகள் அவளுக்கு பிடிக்கும்.

அந்த நம்பிக்கையில் கடையில் போய் இறங்கிவிட்டான்.

இரண்டு தளமாக இருந்த அந்த கடையில் யூனிஃபார்மில் அல்லவா சென்றிருக்கிறான் இவனுக்கு ராஜோப்பச்சாரம்.

தரை தளத்தில் இவன் பாரவையை சுழற்ற துவங்கும் போதே, கடை மனேஜர் “சார மாடிக்கு கூட்டிட்டுப் போங்க” என உதவியாளர்களுக்கு கட்டளை கொடுத்தபடியே தானே இவனை உற்சாக உபச்சாரத்துடன் முதல் தளத்துக்கு அழைத்துப் போனார்.

வைரம் முதலான உயர்வகை கற்களின் நகைப் பிரிவாம் அது.

திருமண நேரத்தில் எதையுமே பவி மனதால் வாங்கிக் கொள்ளவே இல்லை. அதோடு இவர்கள் திருமணத்திற்கு பின் இவன் வாங்கும் முதல் பரிசு. நெடுங்காலம் வைத்துக் கொள்ளும்படியான பொருளாய் இருக்கட்டுமே என இவனுக்கும் தோன்றிவிட

சற்று நேரம் செலவழித்து அலசி ஆராய்ந்து மரகத கற்கள் மற்றும் வயலட் வைரங்கள் பதித்த பதக்கம் அதை கோர்க்க மெல்லிய சங்கிலி என்பவற்றை தேர்ந்தெடுத்துக் கொண்டு இவன் படியிறங்கத் துவங்க,

அந்த படியின் அமைப்பிலேயே கீழ்தளத்தில் நிற்கும் பெண்ணும் அவள் முன் காண்பிக்கப்படும் நகையும் அரையும் குறையுமாய் பார்க்க கிடைக்கின்றது இவனுக்கு.

அவள் இடக்கையை ஆட்டி ஆட்டி பேசிய விதத்தில் அவன் கவனம் அங்கு போயிருக்கலாம். பொதுவாக எதையும் விவரித்து பேசும் போது மனிதர்கள் வலக்கையைத்தான் அதிகமாய் ஆட்டிப் பேசுவது இயல்பு.

இவள் இடக்கை பழக்கமுள்ளவள் போலும்.

அவள் கையிலிருக்கும் ப்ரேஸ்லெட் போல பவியிடமும் ஒன்று உண்டு. பொதுவாக எப்போதுமே அவள் அதை அணிந்திருப்பாள் என சொல்லலாம்.

அதையே யோசித்துக் கொண்டு இவன் பில் போடும் இடத்திற்குப் போக, அது அந்தப் பெண் நின்றதற்கு அடுத்த மேஜைதான் பில்லிங் கவ்ண்டர் என்பதால், இப்போது இவன் கண்ணில் தெளிவாக கிடைக்கிறது அந்த ப்ரேஸ்லெட்டில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு அலங்கார சங்கிலியில் அருந்து மீண்டும் பற்ற வைத்த தடம்.

ஏழு சின்ன சங்கிலியில் பூக்கள் தொங்குவது போன்றது பவியின் ப்ரேஸ்லெட். அதில் கருணும் அவளும் போட்ட குத்து சண்டையில், இவ குத்துவா அவன் கத்துவான் அதுக்கு பேர்தான் குத்து சண்டைனா அது குத்து சண்டை, அந்த சண்டையில் எப்படியோ இவள் ப்ரேஸ்லெட்டின் ஒரு சிறு சங்கிலி அறுந்துவிட,

“வெளி நாட்டு மாடல்மா, மெஷின் கட், பத்த வைக்கலாம் முடியாது” என இவர்கள் வீட்டு நகை ஆசாரி மறுத்துவிட,

அடுத்து அவள் மூஞ்ச தூக்கி வச்சுகிட்டு அலைஞ்சது தாங்காம கருணும் இவனுமாதான் போய்  தேடி அலைந்து என்ன வருதோ வரட்டும் ஒட்டிட்டு இருந்தா போதும்னு பத்த வச்சு வாங்கிட்டு வந்தாங்க.

இயல்பா இல்லாம அந்த பத்த வச்ச தடம் தனியா தெரியும். அதைத்தான் இந்தப் பெண் அணிந்திருக்கிறாள். ஆனால் எப்படி?

திருமணத்திற்கு பிறகும் இவன் மனைவி அதைத்தான் அணிந்து கொண்டு  இருந்தாள். அப்படியானால்?

தான் வாங்கி இருந்த நகைக்கு பில் போட சொல்லி விட்டு அந்தப் பெண்ணிடம் போய் நின்றான்.

இவன் போலீஸ் யூனிஃபார்முக்குத்தான் கேட்கலாமே,

“மேடம் கைல போட்டுருக்க ப்ரெஸ்லெட் எங்க வாங்கினது?”

சின்னதாய் ஒரு விசாரணை.

அடுத்த பக்கம்