துளி தீ நீயாவாய் 6(3)

உண்மையில் இதில் இன்னும் வெடித்துக் கொண்டு வந்தாள் வேணி. “என்ன மிஸ்டர் என்ன நினச்சுகிட்டு இருக்க உன்ன பத்தி? உன் வயசென்ன என் வயசென்ன?

நீ யாருன்னே எனக்கு தெரியாது, இல்ல உனக்குத்தான் என்னை தெரியுமா? நான் இந்த ஊருக்கு வந்து முழுசா ரெண்டு நாள் ஆகல, இதுல இது என்ன கிறுக்குத்தனம்? ஒழுங்கு மரியாதையா இடத்த காலி பண்ணு, இன்னொரு தடவ இது மாதிரி எதாவது பேசிகிட்டு வந்த என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது”  என கொதித்தாள்.

அவள் கொந்தளித்து முடிக்கும் வரைக்கும் அவளையே அமைதியாய் சலனமின்றி பார்த்திருந்தவன்,

அதே அமைதியோடு “வெறும் உருவத்தை வச்சு கல்யாண முடிவு எடுக்கிறது சரின்னு உனக்கு தோணுதா?” என்றான் வயது பற்றிய அவள் கேள்விக்கு பதிலாக.

“சம வயசு பசங்கதான் அவங்க வயசு பொண்ண நல்லா வச்சுப்பாங்கன்னு எதாவது இருக்கா என்ன?” இது அடுத்த கேள்வி.

“உன்ன பத்தி என்ன தெரியணும்ன்ற? உன் ஊர் திருப்பூர், முழு பேர் இளவேனில், கூப்டுறது வேணி, உனக்கு ஒரு அண்ணன், அவன் துபாய்ல இருக்கான்,

நீ 12த் பரீட்சை எழுதல, வீட்ல அடி பின்னிட்டாங்க, ஒரு ஃப்ரெண்ட நம்பி கிளம்பி வந்துட்ட, ஆனா வர்றேன்னு சொன்ன ஃப்ரெண்ட் வரல, இங்க எங்க அண்ணி அண்ணா உன்ன சொந்த தங்கை போல வீட்ல சேர்த்துகிட்டாங்க,

உன் அம்மா அப்பா பொண்ணு வீட்ட விட்டுப் போய்ட்டுன்னு அவமானத்தில் நேத்தே கிளம்பி உங்க அண்ணா வீட்டுக்கு துபாய் போயாச்சு. இல்லைனா அவங்கட்டயும் ஒரு வார்த்தை  நம்ம கல்யாணத்துக்கு பேசி இருப்பேன்” என்று முடித்தான்.

ஆ என திறந்த வாய் திறந்தபடிதான் அரண்டும் மிரண்டும் போய் நின்றிருந்தாள் வேணி. அதீத அதிர்ச்சி வேறு. அதோடு மட்டுமில்லாமல் அவள் கண்ணில் அதுவாக திரண்டும் வருகிறது சில நீர்துளிகள்.

சில நொடிகள் அப்படியே நின்றிருந்தவள் பின் சட்டென சிரித்தவளாக “என்ன சார் சினிமா ஹீரோன்னு நினைப்பா? எனக்கு பார்க்க கில்லி ப்ரகாஷ்ராஜ்தான் நியாபகம் வருது” என்றாளே பார்க்கலாம்.

வேணி பற்றிய அந்த பால்கனியின் வெளிப்படுத்தல்களில் இவனுக்கு எப்படி வேணிய தெரியும்? இவன் சொல்றது உண்மையா? வேணிக்கு நிஜத்துல என்ன ப்ரச்சனை? என பலவித அதிர்ச்சி அலைபாய்தல் குழப்ப யூகங்களில் சிதறிக் கொண்டிருந்தே பவிக்கே இதில் சிரிப்பு வருகிறது என்றால் அந்த பால்கனியும் சட்டென முதலில் சிரித்துவிட்டான்.

பின் அதே சிரிப்போடு “முதல்ல அப்படித்தான் தோணும், போகப் போக புரியுறப்ப பிடிக்கும்” என அவன் பதில் கொடுக்க,

நன்கு விளைந்த ஒரு நக்கல் பாவத்துக்குப் போனது வேணியின் முகம், “இது  படிக்காதவன் தனுஷ் டயலாக்” என அதே இளக்கார பாவத்தில் சொல்லிக் காட்டியவள்,

“அது என்ன உங்களுக்கெல்லாம் எங்களப் பார்க்க அவ்ளவு கிள்ளுக்கீரையாவா தெரியுது? உங்களுக்கு மட்டும் பார்த்தவுடனே பிடிக்கிற பொண்ணு மேல லவ் வரும்,

அப்ப அவ நிலைம என்னனு பார்க்க மாட்டீங்க, அவ குடும்பத்த, அவளுக்கு முக்கியமானவங்கள இது எப்படி பாதிக்கும்னு கண்டுக்க மாட்டீங்க.

அவ  குணம் ஆசை ஆம்பிஷன் எதிர்பார்ப்புன்னு இதுல எதுலயும் பாதிக்கு நாம இருப்பமான்னு கூட யோசிக்கமாட்டீங்க,

ஆனா நாங்க மட்டும் உங்களுக்கு பிடிச்சுட்டுன்ற ஒரே காரணத்தை உங்க தகுதியா வச்சு, பிடிக்கவே பிடிக்காத ஒருத்தன் ப்ரொபோசல போக போக பிடிச்சுடும்னு நினச்சு அக்செப்ட் செய்யணும் என்ன?” என்றாள் படு குத்தலாக,

இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை போலும் அந்த பால்கனி. ஆக அறைபட்ட ஒரு திகைத்த பார்வையை பார்த்தபடி நின்றான் நொடி நேரம். பின் பவியிடம் திரும்பி,

“அவசரம் இல்லாம முடிவு சொன்னா போதும் அண்ணி” என மீண்டும் தன் முதல் புள்ளிக்கே போனானே பார்க்கலாம். இதில் வேணி இடையில் பேசிவிடக் கூடாது என நினைத்தானோ என்னவோ

பின்ன அவ ஜேம்ஸ் பாண்ட் ஆவி புகுந்த லாயர் போல சும்மா சுழட்டி சுழட்டி டெக்னிகலால்ல கேள்வி கேட்கா, ஆக அடுத்து இடைவெளியே கொடுக்காமல்,

“இன்னொரு விஷயம் அண்ணி,  நம்ம வயல் பக்கத்துல உங்க லேண்ட் இருக்கே, அதுக்கு மார்கெட் ரேட் ஏக்கருக்கு 27 லட்சம் வருது, அதிகபட்சம் 30 வரை தருவாங்க” என பேச்சை மாற்றினான்.

அடுத்தும் கூட அதுவரை பேசிய அமர்த்தல் இல்லாமல், சற்று கடகடப்பாகவே

“ஆனாலும் அஞ்சு ஏக்கர்ன்றப்ப ஒன்றர கோடி ரூபா ஆகுது, அத்தனை பெரிய தொகை  மொத்தமா போட்டு அங்க இடம் வாங்க அந்த பக்கம் வேற ஆள் இல்ல, சொன்னீங்கன்னா ஒரே நாள்ல மொத்த பணத்தையும் கொடுத்துட்டு கிரையம் பண்ணிக்க நான் ரெடி” என்றபின்தான் நிதான பேச்சுக்கு வந்தான்.

“ஓபனா சொல்றனே கூட ஒரு அம்பது லட்சம் கூட போட்டு தரேன், நம்ம குடும்பத்து பொண்ணுக்குத்தானே கொடுக்கேன்” என சீன் போட்டான்.

“மறுக்காம இடத்தை கொடுத்துடுங்க அண்ணி, சுத்தி உள்ள இடமெல்லாம் என் இடம், நடுவுல துண்டமா உங்க இடம் கிடக்கிறது எனக்கு செங்க சூளைக்கு லாரி கொண்டு வரது போறது கஷ்டமா இருக்கு” என்னமோ சாப்பாட்டுக்கு கஷ்டமா இருக்குதுன்ற போல பரிதாப பாவம்.

அடுத்த பக்கம்