துளி தீ நீயாவாய் 6 (2)

இதில்தான் வேணி இதுவரை நடந்ததை அடுத்த அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவள், விடு விடென வந்து விரைப்பாய் இவளுக்கு பாடிகார்ட் போல் நிற்க, அவளை சென்று மொய்க்கிறது அந்த கனியின் பார்வை.

அதை உணர்ந்த முதல் கணம் தீங்கனலாய் கொதித்துப் போனாள் பவித்ரா. ஆனால் அதில் அவள் பற்றி எரியும் முன்னும் கூட அந்த பால்கனியின் பார்வையின் நிறம் புரிபட ஒரு வினோத புதிருக்குள் வந்து மாட்டிய உணர்வுதான் வந்து வெள்ளமாய் வியாப்பித்தது அவளை.

அதில் அதுமட்டுமாய் அந்த அவன் மீது அவளுக்கு இருந்த அனைத்து வெறுப்புமே சின்னதே சின்னதாய் குறையவும் செய்தது.

ஆம் அந்த பால்கனியின் பார்வையில் வேணிக்காக ப்ரதானமாய் சிந்தி நின்றது தாய்மை. அதற்காக அது சகோதர வகைப் பார்வை என்றால் அதுவும் இல்லை.

மயில் பீலி வருடலுடன் மங்கள நாதங்களும் அமைந்துதான் கிடந்தன அவன் பார்வை சலனத்தின் தொடுப்புச் சங்கிலிகளில்.

ஆர்வம் ஆசை எதிர்பார்ப்பு என எல்லாமே ஏகமாய் கட்டுப்படுத்தப்பட்டும் மீறிக் கொண்டு அங்கும் இங்குமாய் தலை நீட்டிக் கொண்டிருந்த அக்மார்க் ஆண் வகைப் பார்வைதான்.

ஆனாலும் கூட பெண்மையை குறுகச் செய்யும் எதுவும் அங்கு இல்லை.

‘பயபுள்ள பார்க்கிறத பார்த்தா 12த் ல ஃபெயிலாகப் போய்தான் பண்ணயாராகிட்டான் போல, அதான் வேணிய பார்த்து ஃபீல் பண்றானோ’ என ஒரு கணமும் ‘வேணிக்கு சொந்தக்காரனா இருப்பானோ?’ என கூட ஒரு நினைவுமாய் எல்லாம் வந்து போகிறது பவிக்குள்.

அதற்காக வேணியின் புறம் அந்த பால்கனியின் மனம் சரிவதெல்லாம் இவளுக்கு புரியவில்லை என்றும் இல்லை.

இப்படி பவியின் மனம் எதையும் முழுதாய் அலசி முடியும் முன்னும்,

“வணக்கம்” என வேணிக்கும் ஒரு கைகுவிப்பை வைத்த அந்த பால்கனி தன் கண்களை அவள் மீது முழு நொடியாய் விட்டிருந்தவன்,

பின் பவியை நோக்கி “இந்த இளவேனில் பொண்ண உங்கட்ட முறையா பொண்ணு கேட்டு வந்துருக்கேன் அண்ணி” என்றானே பார்க்கலாம்.

மனதுக்குள் க்ரீச்சிட்ட விபரீதத்தை காதில் வாங்கிவிட்ட அதிர்ச்சியில் மூச்சுத் திணற ஸ்தம்பிக்கிறாள் பவி என்றால்,

வேணியோ காதில் விழுந்தது கொதி அமில அலுமினியம் என்பது போல் “ஐயோ அம்மா” என்று அலறியேவிட்டாள்.

இப்போது அவசர அவசரமாய் “அண்ணி நீங்களே உங்க தங்கச்சிட்ட சொல்லி வைங்க அண்ணி, ஒரு போலீஸ் ஆஃபீஸர் வீட்ல வந்து கல்யாணத்துக்கு பொண்ணு கேட்கிறவன் நோக்கம் எந்த வகையிலும் தப்பா இருக்காதுன்னு” என வருகிறது அந்த பால்கனியின் வார்த்தைகள்.

வேணி தவிப்பதை தடுக்க சொல்லப்பட்டவையா அல்லது பவிக்கே கொடுக்கப்பட்ட விளக்கமா இது என பவித்ராவுக்குப் புரியவில்லை. இருந்தாலும் அவன் வார்த்தையில் இருந்த சில உண்மைகள் அவள் கோபத்தில் வார்த்தை சிந்திவிடுவதை ஓரளவு தடுக்கவே செய்கின்றன.

எது எப்படியாயினும் அவன் ப்ரவியின் அதிகார பலம் தெரிந்தும் பெண் கேட்டு வந்திருக்கிறான், அதோடு ப்ரவியின் நேர்மையுமே ப்ரசித்தம்.

ஆக இந்த பால்கனியின் நோக்கம் நேர்மையானதாக கூட இருக்கலாம். ஆனாலும் அவன் வயதென்ன? வேணி வயசென்ன? அதோடு வேணிய இவனுக்கு எப்படி தெரியும்? இவள் மனம் இதை சிந்தித்து முடிக்கும் முன்னும்,

“எனக்குன்னு யாரும் கிடையாது அண்ணி,  எனக்கு எல்லாமே நான் மட்டும்தான், அதான் நானே நேர்ல வந்தேன்,

அதுக்காக ஆளே இல்லைனு நினச்சுடாதீங்க, உங்க பக்கம் சம்மதம்னு சொல்லிட்டீங்கன்னா அடுத்து நம்ம ஊரேயே கூட்டி வந்து ஜமாய்ச்சுடலாம்,

ஆனா இப்ப கூட்டமும் கும்பலுமா வர்றது உங்க தங்கச்சிக்கு கஷ்டமா இருக்கும்னு பட்டுது” என முதல் விளக்கத்தைச் சொன்னான்.

அதோடு “என்னப் பத்தி சொல்லணும்னா கமிஷன் கடைதான் என் முதல் தொழில், சுத்து பக்கம் எல்லாம் காய் வாங்கி தமிழ் நாடு கேரள மார்கெட் எல்லாத்துக்கும் அனுப்புற வேல, அதுல நல்ல காசுன்னு வச்சுகோங்களேன்,

அது தவிர சொல்லிக்கிற அளவுக்கு தோட்டம் வயல்னு இடம் கிடக்கு, செங்கமால், கோழி தீவனம், கயிறுன்னு சின்ன சின்னதா தொழிலும் ஓடுது, விசாரிக்கத்தான் ப்ரவி அண்ணாவுக்கு நிறையவே வழி இருக்குமே,

நான் சொல்றது உண்மையான்னு விசாரிச்சுகோங்க, யோசிச்சு நிதானமா முடிவு சொல்லுங்க, இப்பவே எதுவும் சொல்ல வேண்டாம்” என்று அடுத்த விஷயங்களையும் தெரிவித்தான்.

“அதோட இப்பவே சொல்லிடுறேன், அவ அம்மாப்பாட்ட பெண் கேட்டுருந்தாலுமே இதையும் சொல்லித்தான் கேட்டிருப்பேன், எனக்கு பெண் வீட்ல இருந்துன்னு ஒரு பைசா வர வேண்டாம், எல்லாம் நானேதான் செய்து கொடுத்து கல்யாணம் செய்துப்பேன், கல்யாண விஷயமா அவ வீட்ல பேசினீங்கன்னா இத சொல்லிடுங்க” என்றபடி இப்போது பவித்ராவின் முகம் பார்த்தான்.

பவிக்கு இப்போது உண்மையில் வார்த்தைகளை தேட வேண்டியதாய் போயிற்று. அவன் எப்படிப்பட்டவனோ தெரியாது. ஆனால் அவன் பெண் கேட்டு வந்திருக்கும் முறையில் தவறு இருப்பதாக இல்லையே!

ஆக அதற்கான மறுப்பையும் தன்மையாக சொல்வதுதானே சரியாக இருக்கும்? அதனால் ஏற்ற வார்த்தைகளை இவள் தேட,

அதற்குள் வேணியோ “இங்க பாருங்க” என வெட்டலாய் எதோ சொல்லத் துவங்க,

அந்த பால்கனியோ தன் ஒரு கண்ணசைவில் தன் ஜால்ராவை வெளியே அனுப்பிவிட்டான்.

இதில் ஒரு கணம் பேச்சு திக்க நின்ற வேணியிடம்

“சொல்லுமா? என்ட்ட என்ன கேட்கணும்?” என எடுத்தும் கொடுத்தான் அவன். அத்தனை தன்மையும் அதற்குள் மறைந்து நின்ற நேசமும் அவன் குரலில்.

அடுத்த பக்கம்