துளி தீ நீயாவாய் 6

பவித்ராவுக்கு ஏற்கனவே காலையிலிருந்து சாரலும் அது விழும் மண் தரையுமாய் இரு வித உணர்வில் நச நசத்துக் கொண்டிருக்கிறது மனது.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளை எழுப்பி அவள் சரியாக முழித்துக் கொள்ளக் கூட இல்லாத சமயத்தில் பேசிவிட்டு போயிருக்கிறான் ப்ரவி.

நேற்றுவரை அவன் மீதிருந்த அளவு கோபம் இப்போது இல்லை என இவளுக்கு நியாபகம் வரும் முன்பாக கூட அவன் கிளம்பிப் போயிருந்தான்.

தன் மனமாற்றத்தை அவனிடம் காட்டியிருந்தால் ‘அவனுக்கும் நல்லா இருக்கும்ல, அதுக்கு கூட வழி இல்லாம இப்படி ஓடிட்டான்’ என ஒன்றும்,

‘ஆமா அதை அவன்ட்ட போய் சொன்னாலே அவன் லவ் பண்றன்னு நினச்சு டூயட் பாடுவானே, அது உனக்கு ஓகேவா?’ என ஒரு திகில்தடையும்,

அப்படிலாம் இல்ல, எப்பவும் போல ப்ரவி என்ன புரிஞ்சுப்பான், இன்ஃபேக்ட் எனக்கு இந்த சிச்சுவேஷன ஹேண்டில் செய்ய எதாவது பெட்டரா  வழி சொல்லி தருவான்’ என ஒரு நம்பிக்கையும்,

அதற்கு நேர் எதிராக “ஏன் உன் ப்ரவிய விட்டு கொடுக்க மாட்டேன்ற?” என அவன் புல்லட்டில் ஏறும் முன் கேட்டானே, அந்த முகபாவமும் அதில் இருந்த காதலான சீண்டலும் படக் காட்சியாய் இவள் மனக் கண்ணில் விரிந்தும்,

சாரலும் அது விழும் தரையுமாய் நச நசத்துக் கொண்டிருந்தாள் பெண்.

இந்த மனோநிலையிலேயே போய் வீட்டு வேலைக்கு வந்திருக்கும் வசந்தியக்காவை சற்றாய் கவனித்துவிட்டு குளித்து தயாராகி வேணியோடு பலகார டிஸ்ட்ரிப்யூஷன் என்ற பெயரில் பக்கத்துவீட்டு மக்களுடன் அறிமுகமாக ஆயத்தமாகிக் கொண்டிருக்க,

அப்போதுதான் காதில் விழுகிறது டயர் தேய வீட்டு வாசலில் வந்து நிற்கும் காரின் சத்தம்.

‘அடிச்சு தூக்குற மாதிரி வந்து அவசரமா ப்ரேக் போடுற அறிவு ஜீவி யாரு?’ என இவள் வாசல்புறம் போய் எட்டிப் பார்த்தால் அங்கு போலேரோவில் இருந்து தன் ஜால்ரா சகிதமாக இறங்கிக் கொண்டிருந்தான் ஒருவன்.

இவர்கள் பாதுகாப்புக்கு என நின்றிருந்த போலீஸ் கான்ஸ்டபிளோ “வாங்க அண்ணாச்சி, என்ன இந்தப் பக்கம்? SPசார் கொஞ்சம் முன்னதான கிளம்பிப் போறாப்ல” என உறவு முறையோடு புளங்காகிதப் பட்டு பேசிக் கொண்டுருந்தார் அந்த அவனிடம்.

“இது கனி அண்ணாச்சியோட அண்ணி வீடுல்ல, SPசார் வீட்டம்மா நம்ம அண்ணாச்சி குடும்பத்துக்காரவியல்ல” என எந்தக் காரணமும் இன்றி கூட இங்கு வந்து போக உறவு இருக்கிறது என்பதை அறிவித்து தன் ஜால்ரா வேலையை சரியாய் செய்து கொண்டிருந்தது உடன் வந்திருந்த ஜால்ரா.

இதிலேயே முழு எரிச்சலுக்குமாய் இடம் மாறி இருந்தாள் பவித்ரா. அது என்ன ப்ரவி இல்லாத நேரம் இவள பார்க்க இங்க எதுக்கு வந்து நிக்கான் இவன்?

இதற்குள் பவி பார்ப்பதை கவனித்துவிட்ட அந்த கனி தலைக்கு மேலாக இரு கைகளையும் கூப்பி படு உற்சாகமாக வணங்கியவன்,

“அண்ணி நல்லா இருக்கீங்களா? பார்த்தே ரொம்ப காலமாச்சு, சின்ன வயசுல ஊர் பக்கம் வந்தப்ப பார்த்தது” என குசலம் விசாரித்தான்.

அதே நேரம் “பால்கனி சார் வந்துருக்காங்க மேடம்” என இவளிடம் அனுமதி கேட்பது போல் சொல்லிவிட்டு இவள் முகத்தைப் பார்த்தார் கான்ஸ்டபிள்.

பவிக்கு அப்போதுதான் அவன் பெயர் பல்கனி என்றே கூட தெரியும். இதில் அவன் உறவுக்காரனாம்.

இவளுக்கு இந்த பால்கனியையும் பிடிக்கவில்லை அவன் இங்கு வந்து நிற்பதையும் சகிக்கவில்லை. ஆனால் உறவுக்காரன் என வந்து வாசலில் நிற்பவனிடம் முகத்தை முறித்து எப்படி அனுப்ப?

ஆக வேண்டா வெறுப்பாக அந்த பால்கனியை உள்ளே விடும் வண்ணம் தலையை அசைத்து வைத்தாள்.

மனதுக்குள் கடுகடுத்தபடியே, “வாங்க என்ன விஷயம்?” என்றபடி வரவேற்கவும் செய்தாள். காரணமில்லாம இங்க வந்து நிக்காத என்ற செய்தியும் அதில் கலந்தே இருந்தது.

ஆனால் அவன் அதையெல்லாம் சட்டை செய்துகொள்ளவே இல்லை. அவன் கண்களில் ஒரு ஆர்வமும் இழையோடிய மெல்லிய பிரமிப்பும்தான் இருந்தது.

முழு உற்சாகமாக மெத்த அரசியல் களையோடு உள்ளே வந்தான் வீட்டை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே. “வீட நல்லா வச்சுருக்கீங்க அண்ணி” என ஒரு பாராட்டு வேறு.

“அண்ணா வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு கேட்ருக்கதா சொன்னாங்க, நாந்தான் நம்ம வசந்தியக்கா பேர காதுல போட சொன்னேன்” என்று அடுத்து ஒரு தகவல் சொன்னான்.

‘அப்பன்னா இப்பவே அந்த வசந்தி டிஸ்மிஸ்’ என இவள் மனதுக்குள் தீர்ப்பிட்டாள். ‘பின்ன அவன் ஆள வச்சு இந்த வீட்ட உளவு பார்க்கவா?’

அதற்குள் அவனுக்கு பின்னால் வீட்டுக்குள் நுழைந்திருந்த ஜால்ரா இப்போது குடு குடுவென ஓடிப் போய் சற்று தள்ளி இருந்த சென்டர் டேபிளை இழுத்து வந்து சோஃபாவுக்கு அருகில் போட்டு,

அதன் மீதிருந்த செய்திதாளை எடுத்து முறையாய் டேபிளுக்கு அடியில் வைத்துவிட்டு அந்த மேசையின் மீது தன் கையில் இருந்த தாம்பளத்தை வைத்தது.

பத்தாத பாக்கிக்கு ஓடிப் போய் மின்விசிறியையும் போட்டு வைத்தது.

‘அடுத்த வீட்டுக்குள்ள வந்து என்ன ஒரு ஆர்பாட்டம்’ என்றெல்லாம் ஏறிக் கொண்டு போன காந்தலையெல்லாம்விட பவிக்கு மனதுக்குள் எதோ ஒன்று க்ரீச்சிடத் தொடங்கியது.

விபரீதம் ஒன்று வெளி வரப் போகிறது என ஓதுகிறது உள்ளே ஒன்று.

அந்த தாம்பாளம் ஒன்றும் நல்ல விஷயமே இல்லையே!

இவள் முகபாவத்தை கவனித்தானோ இல்லையோ ஆனால் அதை சற்றும் காட்டிக் கொள்ளாமல் ராஜமுறையாய் போய் சோஃபாவில் அமர்ந்து கொண்டான் அந்த பால்கனி. அதோடு

“உட்காருங்க அண்ணி” என இவளை உபசரிக்கவும் செய்தான்.

அடுத்த பக்கம்