துளி தீ நீயாவாய் 11 (8)

அளக்கும் டேப்பின் ஆரம்ப முனையை அவளிடம் கொடுத்த கருண், “அதை தரைல வச்சு பிடிச்சுகோ போதும், நான் இங்க பார்த்துக்கிறேன்” என்றபடி குழியின் உயரத்தை மேல் பக்கமிருந்து அளக்க முனைய,

குனிந்து நின்ற கருணின் கண்களில் தட்டுப்படுகின்றன பக்கவாட்டில் வந்து கொண்டிருக்கும் இரு கால்கள். நிமிர்ந்து பார்த்தால் பால்கனி. அவனுக்கு அருகில் அவனுக்கு உதவியாளான விசயன். பால்கனி கையில் ஒரு இளநீர். விசயன் கையில் இரண்டு.

கருண் நிமிரவுமே அசைவு உணர்ந்து குழிக்குள் நின்ற வேணியும் நிமிர, ஒரே ஒரு நொடி பால்கனியின் கண்கள் அவளைத் தீண்டிச் சென்றது. அதில் இருந்தது கடும் கோபமோ?

இதற்குள் இவர்களுக்கு வெகு அருகாக வந்துவிட்ட பால்கனி “வாங்க தம்பி, சுகமா இருக்கீங்களா? பார்த்தவுடனே தெரியுது, பரிசுத்தன் அண்ணாவோட தம்பின்னு” என கருணிடம் குசலம் விசாரித்தான். அத்தனை சிரிப்பிருந்தது அதில்.

இவன் என்ன லூசா? நம்மளப் பார்த்து எதுக்கு முறைக்கிறான்? என்பது போல் பார்த்துக் கொண்டு நின்றாள் வேணி.

“என்ன அண்ணி? எப்படி இருக்கீங்க? தீவிர விவசாயத்துல இறங்கிட்டாப்ல தெரியுது?” என பவியிடமும் விசாரித்த பால்கனி,

“அண்ணிக்கும் தம்பிக்கும் குடு” என விசயனுக்கு கட்டளையிட்டு

“நம்ம தோப்பு காய், தண்ணி அம்சமா இருக்கும், வாங்கிக்கங்க தம்பி” என கருணிடம் சொல்லி,

“சாப்டுங்க அண்ணி” என பவியையும் உபசரித்து,

அதே ஃப்ளோவில் வெகு இயல்பாய் தன் கையிலிருந்த காயை வேணியிடம் நீட்டினான். இவள் பவியைப் பார்க்க, இத்தனை தூரம் வந்து நீட்டுபவனிடம் என்னதை சொல்லி முகம் முறிக்க என காயை வாங்கி இருந்த பவி, இவளுக்கும் சம்மதமாக சற்றாய் தலை அசைக்க, வேண்டா வெறுப்பாக கையில் வாங்கினாள்.

காய் வெகுவாகவே பெரிய சைஸ் என்பதால் இரு கரம் நீட்டி இவள் வாங்க, மெல்லப் புரிகிறது காயோடு சேர்த்து ஒரு மடிக்கப்பட்ட காகிதத்தையும் இவளிடம் தருகிறான் அவன் என.

அதாவது பவி கருணுக்குக் கூட தெரியாது இவளுக்குக் கடிதம் தருகிறான். ஒரு கணம் திக் என இருந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவன் தந்த வண்ணமே அதை வாங்கிக் கொண்டாள் வேணி.

நேற்றைய இரவு சிந்தித்ததில் பால்கனி கேட்டுக் கொண்டது போல் இன்னும் மூன்று நாட்கள் அந்த புகைப்படத்தை ப்ரவியிடம் காட்ட வேண்டாம் என முடிவு செய்து கொண்டிருந்தாள் இவள். ஏதோ ஒரு வகையில் தானே பவித்ரா மேம்க்கும் SP சாருக்கும் பாரம், அதில் தன் நிமித்தமாக இப்படி ஒரு மன சஞ்சலம் ஏன் இந்தக் குடும்பத்திற்கு வர வேண்டும் என்றிருக்கிறது அவளுக்கு.

மூன்றுநாள் ஒன்றும் மகா பெரிய விஷயம் இல்லையே! அதற்குள் பால்கனி விஷயத்தை தீர்க்கட்டும். அப்படி அவன் தீர்த்துவிட்டதாக சொன்னால் கூட பின்னாளில் என்று இந்த வகைப் பிரச்சனை ஆரம்பித்தாலும் இதை அப்போது இரண்டாம் சிந்தனையே இல்லாமல் SP சாரிடம் தெரிவித்துவிட வேண்டும் என்றெல்லாம் இவள் நினைத்து வைத்திருந்தாள்.

மது விஷயத்துக்குதான் என்ன செய்யவென தெரியவில்லை. தன் பதவியை வைத்து SP சாரால் சட்டப்படி இதில் செய்ய எதுவும் இல்லை என்றால்,  ‘எனக்கு உதவி செய்து உங்க வீட்ல வச்சுகிட்டது போல அந்த மதுவுக்கும் உதவி செய்து வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க’ன்னா இவ கேட்க முடியும்?

இப்படி ஒரு முடிவில் இருந்ததால்தான், வேணி இந்த நொடிவரை பால்கனியை காட்டிக் கொடுக்காமல் இருக்கிறாள்.

இதில் காயை இவளிடம் கொடுத்த பால்கனியோ “குழிக்குள்ள என்ன வேலை?” என்றபடி இப்போது அடுத்திருந்த இன்னொரு குழிக்குள் தான் இறங்கிப் பார்த்தான்.

“இவர் பக்கத்து வயல்காரர், பேர் பால்கனின்னு பேர், எங்க அம்மா ஊர்தான், அந்த வகையில் உறவு போல” பவி இப்படியாய் அறிமுகம் செய்து வைப்பதை கேட்டுக் கொண்டு நின்றிருந்த கருண்,

“குழி ஆழத்த அளந்தோம்” என பால்கனிக்கு பதில் கொடுத்தான்.

“கண் அளக்காததையா கை அளந்துடப் போகுது?” என பதில் கொடுத்த பால்கனியோ, அடுத்த நிமிடம் இந்த குழி  ரெண்டரை அடி  ஆழம் இருக்கும்” என்றபடி கருண் கையிலிருந்த டேப்பை வாங்கி வைத்துக் காண்பித்தான். அது இரண்டரை அடிதான் இருந்தது.

அடுத்து தன் இடுப்புக் கீழாக காலில் ஒரு இடத்தில் கை வைத்து “இதுதான் மூனடி” என காட்டிய பால்கனி, கடகடவென ஒவ்வொரு குழியாக இறங்கி ஏறி இது ரெண்டரை, இது மூனு, இது ரெண்டே முக்கால் என்றபடி சில இதில் சிவப்பு நிற கூழாங்கல், சில குழியில் கருப்பு நிற கல் என அடையாளத்துக்குப் போட்டுக் கொண்டே வந்தான், சிவப்பு கல் போட்ட எல்லாம் இன்னும் கொஞ்சம் தோண்டணும், பார்த்து செய்ங்க” என்றபடி விடை பெற்று போய்விட்டான்.

மூச்சை இழுத்து பிடித்த வண்ணம் அதுவரைக்கும்  நடப்பதை பார்த்தபடி நின்றிருந்த கருண், வாய் விட்டு சிரிக்கத் துவங்கினான்.

“எவ்ளவு சிம்ப்ளா செய்றத, நாம எப்படி காத சுத்தி மூக்க தொட்டுருக்கோம்? ஐ. ஐ. டி யாவது IIM எம். பி. ஏவாவது. நம்ம உள்ளூர் விவசாயிட்ட பிச்சதான் எடுக்கணும் போலயே!” என சிலாகித்துக் கொண்டவன்,

“ஏன் பவி, உன் ஊர்காரங்கல்லாம் இப்படி அநியாயத்துக்கு புத்திசாலியா இருக்காங்களே, நீ மட்டும் ஏன் இப்படி பிறந்துட்ட?” என இவளை வாரினான்.

அதற்கு ரெண்டு அடி வைக்காமல் இருந்தால் அது பவி இல்லையே!

அடுத்த பக்கம்