துளி தீ நீயாவாய் 11 (7)

பவித்ராவிடம் வந்து சேரும் போது வேணி அடிமுடியாய் குழம்பிப் போய் இருந்தாள் எனில் அன்று இரவு படுக்கையில் விழுந்தவளுக்கு கண்ணீர் ஓயவே இல்லை. இந்த பால்கனி எப்படி பட்டவன்? இந்த ஃபோட்டோ விஷயத்தில் இவள் என்ன செய்யணும்? மது நிலமை என்ன? இதுதான் அவள் மனதின் கேள்விகள் என்றாலும் அது அக்கினியாய் எரிந்து கொண்டிருந்தது கிழிந்து போய் கிடக்கும் இவள் மனதை எரிபொருளாகக் கொண்டல்லவா?

டுத்த தினம் பவித்ராவின் வயலில் மும்முரமாக குழி வெட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. நேற்று வாங்கிய மரக் கன்றுகளை நடுவதற்கான குழிகள் அவை. ஒவ்வொரு குழியும் மூன்றடி நீளம், மூன்றடி அகலம், மூன்றடி உயரம் என இருக்க வேண்டுமாம். நீள அகலத்தை அளவெடுத்து குறித்துக் கொடுக்க, அதில் ஆட்கள் குழிவெட்டிக் கொண்டிருந்தார்கள். பொதுவாக இந்த பகுதிகளில் வயலில் கூலி வேலைக்கு வருபவர்கள் மதியம் ஒரு மணியோடு  கிளம்பிவிடுவது வழக்கம்.

ஆக ஏறத்தாழ 12 மணியான இப்போது, இதுவரைக்கும் வெட்டி முடிக்கப்பட்ட குழிகளின் ஆழத்தை அளவிட நினைத்தான் கருண். எதாவது குழியில் ஆழம் குறைவாக இருந்தால் ஆழப்படுத்தச் சொல்லலாம், கையோடு வேலை முழுமை பெற்றுவிடும் என்பது அவனுக்கு.

அதோடு இன்று இவன் இதைச் செய்யவில்லை எனில் நாளை இந்த வேலையை பவித்ராவும் வேணியுமாக செய்ய வேண்டி இருக்கும். கேட்ட அளவிற்கு குழி வெட்டப் பட்டிருக்கிறதா என நிலத்து உரிமையாளர்தானே உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்?

ஆக இவன் அளக்கும் டேப்பை எடுத்துக் கொண்டு ஒரு குழியில் இறங்க,

சற்று தொலைவில் அடிக்கும் மொட்டை வெயிலுக்கு குடையை பிடித்தபடி நின்று வேலையை கவனித்துக் கொண்டு நின்ற பவித்ரா இப்போது இவனிடம் வேக வேகமாக வந்தாள்.

“ஏய் கரண்டி நீ என்னடா பண்ற?” என்றபடி.

“பணிப்பெண் குடை பிடிக்க பாண்டிய மகராஜா விவசாயம் செய்கிறார்“ என வருகிறது அவனது பதில்.

ஒரு கணம் புரியவில்லை எனினும், இவளது குடை நிழலுக்குள் அவன் நிற்பதைத்தான் அப்படி சொல்கிறான் என்பது அடுத்துப் புரிய,

“என்னது, நீ மகராஜா உனக்கு நான் பணிப்பெண்ணா?” என்றபடி குடையால் இப்போது அவனுக்கு ரெண்டு போட்டாள் பவி.

“நான் பணிப்பெண்றத கூட ஏத்துப்பேன்டா, ஆனா உன்ன மகராஜான்னுட்டியே! அதத்தான்டா தாங்க முடியல, லைட்டா நெஞ்ச வலிகிறதே!” என இவள் நெஞ்சை பிடிப்பது போல் ஆக்க்ஷன் செய்து கொண்டே குழிக்குள் எட்டிப் பார்க்க,

குனிந்து நின்றபடி குழியின் தரை மட்டத்தில் அளக்கும் டேப்பின் ஒரு முனையை வைத்திருந்த கருண், அப்படியே நின்று கொண்டு சட்டென ஒரு கையை மட்டும் இவளை நோக்கி உயர்த்தி “இந்தா இதப் பிடிச்சு அள” என டேப்பின் மறு முனையை நீட்ட,

பேச்சு சுவாரஸ்யத்தில் இதை எதிர்பாரா பவி, முகத்துக்கு நேராக எதுவோ வரவும் சட்டென அனிச்சையாய் பின்னால் நகர்ந்தவள் சற்றாய் சறுக்கி, விழுவதை தவிர்க்க அவசரமாய் உட்கார்ந்துவிட்டாள்.

அதில் இவள் கால்பட்டு சிதறிய சில மண் துகள், என்னவோ ஏதோ என அப்போதுதான் நிமிர்ந்து பார்த்த கருணின் கண்ணில் போய் விழுந்து கொண்டது.

“ஹேய் கொத்துப்பரோட்டோ என்னாச்சு?” என இவளுக்காக அக்கறைப்பட்டாலும் “அடப்பாவமே எனக்கு இன்னும் எங்கேஜ்மென்ட் கூட ஆகல, அதுக்குள்ள கண்ணுக்கு ஆப்படிச்சிட்டியே” என தன் கண்ணை பொத்திக் கொண்டான் அவன்.

“அச்சோ” என அவன் கண்ணைப் பற்றித்தான் முதல் அக்கறை எழுந்தாலும், அவனது எங்கேஜ்மென்ட் ஸ்டேட்மென்டில் “எரும கண்ணுல மண்ணு விழுந்தா கூடவா மற கழறும்? எங்கேஜ்மென்டுக்கும் கண்ணுக்கும் என்னடா லிங்க்? என விசாரித்தாள்.

“ஓரளவுக்காவது என் ஆள சைட் அடிச்சிருப்பேன்ல?” என அவன் அதற்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்க,

இவர்களை சற்று தொலைவில் இருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வேணி, இதற்குள் குடி நீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு வேக வேகமாக அவர்களிடம் ஓடினாள்.

“மேம் என்னாச்சு மேம்? அடி எதுவும் படலையே?” என பவியிடம் விசாரித்துக் கொண்டே தண்ணீர் பாட்டிலை கருணிடம் நீட்டினாள்.

“கைல தண்ணி எடுத்து கண்ண கழுவுங்க சார், சரியாகிடும்” இது அவள் கருணுக்குச் சொன்ன தீர்வு.

“தேங்க்ஸ் கொடுக்கு, அப்படியே இன்னொரு ஹெல்ப், கை மண்ணா இருக்கு, தண்ணிய கைல ஊத்து, ஹேண்ட் வாஷ் செய்து, அடுத்து கண்ண கழுவிக்கிறேன்” என கருண் இப்போது வேணியிடம் கோர,

அவன் சொன்னபடி அவன் கைகளில் நீர் வார்த்தாள் இவள்.

கை கழுவி, அதன் பின் கண்ணையும் கழுவி, அதை இரண்டு மூனு முறை தட்டி தட்டி விழித்துப் பார்த்து, “ஹப்பாடா என் ஃப்யூசர் ப்ரகாசமா தெரியுது” என்றபடி கருண் முடிக்கவும்,

இவள் பாட்டிலை எடுத்துக்கொண்டு  நகர முனைய,

“கொடுக்கு, அப்படியே இந்த குழிய அளக்கவும் ஹெல்ப் பண்ணு, உங்க மேம் விழுந்து விழுந்து வார்றா, எங்க போலீஸ்காரன் பார்த்தான்னா என்ன பொளந்து கட்டிடப் போறான்” என இவளை அடுத்த வேலைக்கு அழைத்தான் கருண்.

வேணி அவனிடம் ஒதுக்கம் காட்டுகிறாள் என கருணுக்குத் தெரியும். அதனால் வலியப் போய் அவளிடம் பேசுவதோ விளையாடுவதோ இல்லை என அவன் முடித்திருந்தான். அதே நேரம் கிழித்து வைத்த கோடு போல் அவளை விலக்கியும் அவன் பழகவில்லை.

இந்த சூழ்நிலையில் வேலை நடக்க இதுதான் சரி எனப் பட அவளை அழைத்தான்.

வேணிக்கும் இது எதுவுமே புரியாமல் இல்லை. அதோடு இவள் வேடிக்கைப் பார்க்க நின்று கொண்டு பவியை வேலை செய் என்றெல்லாம் சொல்வது முறையுமே ஆகாதே! ஆக

“என்ன செய்யணும் சார்?” என்றபடி கருண் வெளி வந்திருந்த குழிக்குள் இப்போது இவள் இறங்கிக் கொண்டாள்.

அடுத்த பக்கம்