துளி தீ நீயாவாய் 11 (6)

இப்ப சில மாசமாதான் டெய்லரிங் படிச்சுகிட்டு என் கால்ல நிக்க ஆரம்பிச்சுருக்கேன் சார். இதுக்கு மேல அந்த தொழில்ல இருந்தா என் பொண்ணையும் உள்ள இழுத்துடுவாங்கன்னு பயம் வந்துட்டு. அதான் வீட மாத்திட்டு இந்தப் பக்கமா வந்துட்டேன். ரெண்டு நாள்தான் சார் ஆகுது நான் இங்க வீடு மாறி வந்து.

இதுல போலீஸ் அது இதுன்னு என் வீட்டு வாசல்ல வந்து நின்னா இங்க பக்கத்து வீட்டுக்காரங்க எங்கள என்னதுன்னு நினைப்பாங்க? வீட்டு ஓனர் எப்படி இங்க இருக்க விடுவார்? தப்பு செய்தவதான் சார் நான், ஆனா திருந்தி வாழ நினைக்கிறேன், தயவு செய்து வாழவிடுங்க சார்” என பேசி இருந்தாள் அந்த சாருமதி.

“இதெல்லாம் கடைல வச்சு அத்தன பேர் பார்க்க எப்படி சொல்ல முடியும்? அதான் வீட்டுக்கு வாங்க, ஆனா போலீஸ் போல வராதீங்கன்னு கேட்டேன்” என விளக்கிய அவள்,

“ஏய் மது இங்க வா” என இப்போது அவள் உள்ளறை நோக்கி குரல் கொடுக்க, வரவேற்பறையிலிருந்த ப்ரவியிடம் வருகிறாள் அந்த மது.

“இதுதான் சார் என் பொண்ணு, நான் வாழ்றதே இவளுக்காகத்தான். இங்க எதாவது சீன் போட்டு பக்கத்து வீட்டு ஆட்கள்ட்ட அவமானமாக்கிடாதீங்க சார், இவளையும் சேர்த்து எதாவது சொல்லிடுவாங்க, ஒன்னும் தெரியாத பச்ச மண்ணு சார் அது” என அறிமுகம் செய்த சாருமதி,

“நீ உள்ள போ மது” என அனுப்பியும் வைக்க,

அடுத்து ப்ரவி “இந்த நகை திருட்டு போயே மூனு நாள்தான் ஆகுது” என்றபடி அந்த சாருமதி முகத்தைப் பார்க்க,

“ஓ மூனு நாளா சார்? நான் வந்து ரெண்டு நாள்தான் ஆகுதுன்னனே சார், அதுக்கு முந்தின நாள் அந்த பழைய வீட்டுக்கு ஒரு கும்பல் பெங்களூர்ல இருந்து குற்றாலத்துக்கு டூர் வந்தவங்கன்னு வந்தானுங்க சார். பத்து பன்னென்டு பேர் இருக்கும். முன்னால எவனோ என் வீட்டுக்கு வந்துருக்கானாம், அவனுங்கட்ட முடியாதுன்னு சொன்னா கேட்பானுங்கன்னு தோணல, அதான் சரின்னு சொல்றாப்ல ஆகிட்டு. அதுல ஒருத்தனும் ஏதோ நகை போல தந்தான்னு நினைக்கிறேன், அதுவா இருக்கும் போல சார் இது. அவனுங்க ஊர் பேரத் தவிர எனக்கு எதுவும் தெரியாது சார்” என்ற சாருமதி

“நேத்து உங்கள வரச் சொன்ன பிறகு எங்க சொந்தக்காரங்கள்ல ஒரு துட்டி வீடு சார். அதுக்கு போகாம இருக்க முடியாதே, அதான் போய்ட்டேன், உங்கள வேற சுத்தல்ல விட்டாப் போல ஆகிட்டு” என்றபடி அந்த சாருமதி குறிப்பிட்ட ப்ரேஸ்லெட் மற்றும் தன் பழைய வீட்டின் முகவரி இரண்டையும் ப்ரவிக்கு கொடுக்க, கிளம்பிப் போயிருந்தான் ப்ரவி.

வீடியோவைப் பார்க்கப் பார்க்க இவள் எதிர்பார்த்த SP சாருக்கான சாட்சி கிடைத்துவிட்டது என்பதெல்லாம் மறந்து, இந்த சாருமதி எப்படி ஏமாத்துகிறாள் என்பதே கொதிக்கிறது வேணிக்கு.

“SP சார்ட்ட இத காமிச்சு இவள ஒரு வழி செய்றேன், அந்த மதுவையும் சார் எப்படியும் வெளிய கொண்டு வந்துடுவார்” இவள் முனங்க,

“எப்படி சார் மதுவ வெளிய கொண்டுவருவார்ன்ற? அந்த மதுவ உன் SP சார் அவ அம்மாட்ட இருந்து கூட்டிட்டுப் போய்ட்டார்னு வை, அவ அம்மா என் பொண்ணு எனக்கு வேணும்னு ஹேபஸ்கார்பஸ் கேஸ் போடுவா, 24 மணி நேரத்துல மதுவ கோர்ட்ல அவ அம்மாட்ட கொடுக்கணும்னு சொல்லும் கோர்ட். நம்ம சட்டம் அப்படி. அதுவும் மது மைனர்ன்றப்ப யாரும் அவ மேல உரிமை எடுத்துக்கவே முடியாது. அவ அம்மாக்குத்தான் சட்டப்படி முழு உரிமையும். இதுல SP சார் மட்டும் என்ன செய்துட முடியும்?” பால்கனியிடமிருந்து இப்படி வருகிறது விவாதம்.

‘ஹேபஸ்கார்பஸ்’ என சட்ட வகையில் டெக்னிகலாய் அவன் பேசவும் அவனுக்குச் சட்டம் பற்றி நன்றாகத் தெரியும் எனப் புரிய, கூடவே இவள் கேள்விப்பட்டிருக்கும் சட்ட விஷயங்களும் இது போலத்தானே எனவும் தோன்ற, வேணிக்கு மது வகையில் கணத்த நம்பிக்கையின்மை வந்து விழ, முறுகிப்போனாள். ஒருவாறு அடைத்துக் கொண்டு வருகிறது அவளுக்கு.

“அதுக்காக அந்த மதுவ அப்படியே விட்டுடணும்னு சொல்லல நான். நாம வேற வழி கண்டு பிடிப்போம். அவட்ட நீ பேசுறதுக்கு நான் வழி செய்து கொடுக்கிறேன், அவள சம்மதிக்க வை, நாம அவள அவ அம்மாவுக்கு தெரியாம எதாவது வெளியூருக்கு, சென்னை, பெங்களூர், ஏன் டெல்லி வேணாலும் அனுப்பிடலாம். அங்க ஹாஸ்ட்டல்ல இருக்கட்டும், அவ விரும்புற படிப்பு படிக்கட்டும். அவளுக்கு நல்ல வேலை கிடைச்சு தன் கால்ல நிக்ற வரைக்கும், ஏன் அதுக்கு  பிறகும் அவளுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் அதை செய்து கொடுக்கிறது என் பொறுப்பு.  அவ சொந்த கால்ல பாதுகாப்பா, நிம்மதியா இருப்பா” என்றபடி இப்போது இவள் கண்களைப் பார்த்தான் பால்கனி.

இந்தத் திட்டம் கேட்கும் போது கொஞ்சம் நன்றாகத்தான் இருக்கிறது வேணிக்கு, ஆனால் நடைமுறையில் இது எவ்வளவு சாத்தியம் என்றும் இருக்கிறது. கூடவே இதையெல்லாம் செய்து கொடுக்கிற ஆளா இந்த பால்கனி? வெறும் வாயில் பந்தல் போடுகிறானா? என்றும் தோன்றும்தானே! இவள் அவனை ‘இதெல்லாம் நீ எதுக்கு செய்ற? என்பது போல் பார்க்க,

“அப்படியாவது நானும் மனுஷன்தான்னு உனக்கு புரியுதான்னு பார்க்கத்தான்” என பதில் வருகிறது அவனிடமிருந்து.

அடுத்து இவள் பார்வையை தவிர்த்தபடி “நீ அழுதா எனக்கு கஷ்டமா இருக்கு அவ்ளவுதான்” என முனங்கியவன், இவள் எதுவும் சொல்லும் முன்னும் தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து நீட்டினான் அதை.

ப்ரவியின் அந்த தவறான புகைப்படம் மற்றும் கடிதம்.

அவ்வளவுதான் வந்த அதிர்ச்சியில் அதற்கு முந்திய அவன் வார்த்தைகளுக்கு கோபப்பட்டாள் என்பதே இவளுக்கு மறந்து போய் இதற்காக கொதிக்கிறாள் இவள். பதற்றமாய் தன் பேக்கை வேறு இவள் திறக்க,

“உன்ட்ட இருந்து இப்படி என்னால ஈசியா எடுத்துட முடியும்னு காட்டத்தான் எடுத்தேன், ஆனா நீயா என்னை நம்பி கிழிச்சிப் போடுற வரை உன்ட்டயே இருக்கட்டும்” என வருகிறது அவனது காரணம்.

“லெட்டர வாசிச்சேன், அதுல டைப்பிங்ல இருக்கிற வார்த்தை பிரயோகம், பிழை எல்லாம் என் கூட ஒரு நாய் அன்னைக்கு பொண்ணு கேட்டு பவி அண்ணி வீட்டுக்கு வந்துச்சே அதுதான் செய்யும். அவனுக்குத்தான் நான் இப்படி உன்ன கல்யாணம் செய்ய விரும்புறதும் தெரியும், என் கூட ஈன்னு இளிச்சுகிட்டு பொண்ணு கேட்க வந்துட்டு, இந்தப் பக்கமா எதாச்சும் பயங்காட்டி உன்ன துரத்த நினச்சுருக்குது போல அந்த சொறிநாய், எதுக்கு செய்தான், என்ன ஏதுன்னு விசாரிச்சு அவன் சேப்ட்டரா ஒரேடியா முடிக்கிறேன், அதுக்கு ஒரு மூனு நாள் டைம் வேணும்” அவன் சொல்லிக் கொண்டே போக, இதற்கும் வேறு மிரள்கிறது இவள் விழிகள்.

‘சேப்ட்டர முடிக்கிறதா?’

வாய்விட்டுக் கேட்காத இந்த வினாவை அவள் விழியில் கண்டான் போலும், ஒருவாறு சுரத்தில்லாமல்தான் இதுவரை பேசிக் கொண்டிருந்த பால்கனிக்கு இப்போது சட்டென கண்ணில் மின்னல். “மூனு விஷயம் செய்ய மாட்டேன்னு சொன்னேன்ல, அதுல நாலாவதா இதையும் இனி சேர்த்துக்கலாம், கொலை செய்யக் கூடாதுன்னு இதுவரைக்கும் நினச்சது இல்ல, ஆனா செய்ய எதுவும் அமையல, இனி ஆனா செய்ய மாட்டேன், உன்னவிட்டுட்டு ஜெயில்ல போய் இருக்க எனக்கு ஆசை இல்லையே” குறும்போடு கசியும் துளிப் புன்னகையோடு அவன் பேச,

முகம் சுளித்து புருவங்கள் தூக்கி அவனைப் பார்த்தாள் வேணி.

“நானும் ரவுடிதான்னு வடிவேலு சார் சொல்றாப்லயே இருக்கு” என வருகிறது அவளது நக்கல்.

“நீ என்ன என் மூக்க உடைக்கிறதிலேயே இருக்க? இருந்தாலும் பிரவாயில்ல, வில்லன் ரோல்ல இருந்து காமடியனா என்னை ப்ரமோட் செய்துருக்கியே அது நல்லாத்தான் இருக்கு” என நல்லவகை புன்னகையுடனே முடிகிறது அவன் பதில்.

“அப்றம் முக்கியமான விஷயம், அந்த போட்டோவப் போய் உன் SP சார்ட்டல்லாம் காமிச்சு வச்சு அவர வேற கஷ்டப்படுத்தாத, இதுதான் பிரச்சனைனு பவி அண்ணிட்ட இத அவரால பகிர்ந்துக்க முடியுமா? அப்படி அண்ணிக்கு தெரியாம மறச்சு வைக்கிறதும் கஷ்டமா இருக்கும்தான? இல்ல அண்ணிட்ட காமிச்சார்னு வையேன், அண்ணிக்கு எப்படி இருக்கும்? அதுலயும் நீ வேற இந்த படத்தை பார்த்துருக்கன்னா உன் SP சாருக்கும் சரி, பவி அண்ணிக்கும் சரி எப்படி இருக்கும்? உன்ன உன் சார் அடுத்து எப்படி ஏறெடுத்து பார்ப்பார்? சங்கடமா இருக்கும்ல? ஆனா விஷயத்த அவங்கட்ட சொல்லவே இல்லைனா, இது அவங்களுக்கு தெரியாமலே போய்டும், நிம்மதியா இருப்பாங்கல்ல, இன்னொரு டைம் இது போல பிரச்சனை வராதுங்கிறதுக்கு நான் 100% கேரண்டி. அதைத் தாண்டி அடுத்து ஒரு சின்ன பிரச்சனை இந்த பக்கம் இருந்து வந்தாலும், அப்ப வேணா இதை காட்டிக்கோ” என்றபடி இப்போது அந்த புகைப்படம் மற்றும் கடிதத்தை இவளிடம் கொடுத்தான்.

“உன் ஆட்டோ ட்ரைவர் வர்ற போல தெரியுது, நீ கிளம்பு” என அனுப்பியும் வைத்தான்.

அடுத்த பக்கம்