துளி தீ நீயாவாய் 11(5)

அரை நொடி அதை கவனித்த அந்த பால்கனி, அந்த ஷெட்டின் மீது தானும் ஏறிக் கொண்டே பட்டென அவள் கையிலிருந்த மொபைலை பிடுங்கியவன், மேலிருந்த ஜன்னலில் கதவு காற்றில் அடித்துக் கொள்ளாமல் இருக்கவென உள்ள கொக்கி உடைந்து விட்டது போலும், அதனால் கதவு அசையாதிருக்க ஒரு செங்கல் துண்டு அங்கு வைக்கப் பட்டிருந்தது, அதன் மறைவில், அதன் மீதே சாய்த்து மொபைலை வைத்தான்.

வீடியோ ரெக்கார்டரை இயங்கவிட்டு, கேமிரா பகுதி மட்டும் மறைக்கப்படாமல், அது அறையை பார்த்திருக்கும் படி அங்கு மொபைலை வைத்தவன், இன்னும் ஒரு செங்கலையும் எடுத்து மொபைலுக்கு முட்டு கொடுத்தான். இரண்டு செங்கலுக்கும் நடுவில் மொபைல் இருப்பது போல் அமைப்பு.

கவனியாமல் கடந்தால், செங்கல்தான் தெரியும் என்றபடி இருந்தது அது.

“இப்ப வா, வெளிய போய் மறஞ்சுக்கலாம், வரலைனு சொன்னியோ நிஜமா தூக்கிட்டுப் போய்டுவேன்” என அவன் வேணியை அழைக்க, எதுவும் சொல்லாமல் இறங்கி வீட்டின் பின்பகுதியைப் பார்த்துப் போனாள் வேணி.

அந்த வீட்டின் பின் சுற்றுச்சுவரை தாண்டி அடுத்த வீட்டில் வந்து, செடிகள் மறைவில் பதுங்கிக் கொண்டாள் இவள். இன்னும் பேயறைந்தது போல் ஒரு நிலையில்தான் இருந்தாள். இவளையே பரிதாபமும், அக்கறையும், கொஞ்சம் வினோதமுமாக பார்த்துக் கொண்டு இவளருகில் முட்டு ஊன்றி அமர்ந்திருந்தான் பால்கனி.

“அதான் அந்தப் பொண்ணுக்கு உதவி செய்யலாம்னு முடிச்சாச்சுல்ல, அப்றமும் இப்படி கவலைப்பட்டா என்ன செய்ய?” அவன் இவளை ஆறுதல் படுத்த முயல்கிறான்.

“ப்ச் தெரில, மனசெல்லாம் ஆசிட் கொட்டின மாதிரி எரியுது” இவள் தாக்கத்தில் இருந்து இன்னும் வெளி வராமல் உழல, அதே நேரம் அங்கு அந்த சாருமதி வீட்டின் முன் ஒரு கார் வந்து நிற்பது போல் ஒலி.

“இரு யார்னு பார்த்துட்டு வரேன்” என செடிகளில் மறைந்தபடி ஓடினான் பால்கனி.

வேணி எதையும் பெரிதாய் சட்டை செய்யவில்லை.

“அண்ணாதான் வந்திருக்கார், அதுவும் ஜீப்ல இல்லாம கார்ல, டார்க் ப்ளூ ஜீன்ஸ், ஃபுல் ஸ்லீவ்ஸ் வொயிட் ஷர்ட், கைய கொஞ்சமா மடக்கி வேற விட்டு, சன் க்ளாஸ்னு செம்ம அட்டகாசமா…” திரும்பி வந்த பால்கனி இப்படி சொல்லிக் கொண்டு போக, அவன் முடிக்கும் முன்பாகக் கூட,

எரிக்கும் பார்வை ஒன்று இவளிடமிருந்து “இங்க வரணும்னு இல்ல, சார் எப்ப ட்ரெஸப் செய்தாலும் அட்டகாசமாதான் இருப்பார். யூனிஃபார்ம்ல வராம மஃப்டில வரணும்னு ஒரு ஜீன் போட்டதுக்கு என்னமா கதை கட்டுற நீ?” என எரிந்து விழுந்தாள்.

“சிம்பன்ஸி போல இருந்தாலும் ஜீன் போட்டுருக்கதாலயே ஹீரோ போல இருக்கோம்னு நினைக்க, அவர் என்ன பட்டிக்காட்டு பால்கனியா?” இன்னுமே அடங்காத எரிச்சலில் குத்தினாள்.

இவள் அந்த வீட்டு படுக்கை அறையில் போய் நம்பிக்கையாய் வீடியோ பதிவுக்கு மொபைலை வைத்திருக்கிறாள் என்றான பின்னும் இந்த பால்கனி இப்படி ப்ரவியை சந்தேகப்படுவது பயங்கர எரிச்சலாய் வருகிறது இவளுக்கு. அதில் வந்த வார்த்தைகள்தான் இவை. ஆனால் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஏதோ ஒன்றை தவறாக பேசிவிட்டது போல் தன் மீதே குற்ற உணர்ச்சி வர, அதனால் கொஞ்சமாய் நிதானப்பட்டு

“சார் வீட்டு எக்ஸ்போஷர் லெவலுக்கு நீ சொல்ற இதெல்லாம் சாதாரணமா செய்றது, SP சார யூனிஃபார்ம்லயே பார்த்ததால உனக்கு இதெல்லாம் தெரியல, SPசாரோட தம்பி ஊர்ல இருந்து வந்துருக்கார் பார், அவர் எப்படி ட்ரெஸ் செய்துருக்கார்? பார்க்க செம்ம க்ஷ்டைலிஷா இருக்குதானே? அதுதான் அவங்களுக்கெல்லாம் நார்மல்” என பல்லை கடித்துக் கொண்டு விளக்கினாள்.

அத்தனை உற்சாகமாக பேசத் துவங்கி இருந்த பால்கனியின் முகம் இதில் கருத்து சுண்டிப் போய் இருந்தது. “அண்ணா பார்க்க அட்டகாசமா வந்துருக்கார்னு சாதாரணமாத்தான் சொல்ல வந்தேன், நீதான் கண்டபடி அர்த்தம் எடுத்துகிட்ட” என்றுவிட்டு சற்று தள்ளிப் போய் அமர்ந்து கொண்டான்.

‘ஓவரா பேசிட்டமோ’ என ஒரு நொடி தோன்றினாலும், ‘இவன் செய்துகிட்டு இருக்க வேலைக்கு இதெல்லாம் ரொம்ப கம்மி’ எனதான் அவள் மனது நம்பிக் கொள்கிறது.

சற்று நேரம் மௌனத்தில் கழிய கார் கிளம்பிச் செல்லும் சத்தம் காதில் விழுகிறது.

“இரு அண்ணா கிளம்பியாச்சான்னு பார்த்துட்டு வர்றேன்” என்றுவிட்டு போனவன், சில பல நிமிடம் கழித்தே திரும்பி வந்தான். “போய்ட்டார், இந்தா உன் மொபைல்” என அவளிடம் அவளது மொபைலை நீட்டியவன், தன் மொபைலில் இருந்த ப்ரவி வீடியோவையும் இவள் கண் முன்னேயே இவளுக்கு அனுப்பிவிட்டு தன் மொபைலிலிருந்து டெலிட் செய்துவிட்டான். வீடியோ காட்சிகள் எதையும் அவன் பார்க்கவே இல்லை.

கண்டிப்பாய் வீடியோவில் தவறாய் எதுவும் இருக்காது என்ற நம்பிக்கை வேணிக்கு, ஆக பார்த்தியா நான் சொன்னேன்ல?! என்ற வகையில் வீடியோவை அந்த பால்கனிக்கு காட்டிவைக்க இவளுக்கு உந்துதல். அதனால் நீயும் பார் என அழைத்துச் சொல்லாமல், ஆனால் அவன் பார்க்கும் அளவுக்கு அருகில் நிற்கும் போது, அதை ஓட்டிப் பார்த்தாள்.

அந்த வீடியோவில் எதுவோ ஒரு ப்ரேஸ்லெட் வாங்கிய கடை பற்றி அந்த சாருமதியிடம் விசாரித்தான் ப்ரவி.

“சார் அங்க கடைல வச்சு வெளிப்படையா பேச முடியலைனுதான் சார் இங்க வரச் சொன்னேன். என் வீட்டுகாரர் என் பொண்ணையும் என்னையும் விட்டுட்டு சில வருஷம் முன்னால ஓடிப்போய்ட்டார் சார். நான் பத்து வரைக்கும்தான் படிச்சுருக்கேன். எந்த வேலைக்கும் போனதும் இல்ல,  சாப்பாட்டுக்கே கஷ்டம், அதுல என் வீட்டுக்காரரோட சேர்ந்துகிட்டு சுத்துனவங்களே எனக்கு தப்பான தொழில அறிமுகம் செய்துவிட்டுட்டாங்க, வீட்டுக்கு உள்ளூர் வெளியூர்னு பல ஊர் ஆம்பிளைங்க வந்து போவாங்க, அதுல யாரப் பத்தியும் எனக்குத் தெரியாது. இது எவன் கொடுத்த நகைன்னும் ஞாபகம் இல்ல சார். இதுல நீங்க பில்ல கேட்டா என்ன சொல்வேன் நான்? ஆனா அது நான் திருடின நகை கிடையாது சார்.

அடுத்த பக்கம்