துளி தீ நீயாவாய் 11 (3)

இப்போது அந்த சாருமதி மொபைலில் இன்னும் யாரிடமோ பேசினாள் போலும் “வீட்டுக்குள்ள சிக்னல் இல்லாம உயிர எடுக்கு, ஒவ்வொரு தடவையும் வெளிய வந்து பேச வேண்டி இருக்கு, அதான் கால் எடுக்க லேட் ஆகிடுது, மத்தபடி நீ இல்லாம நாங்களா? பின் வீடுதான? நான் போயே பார்த்துட்டேன், அங்க ஆள் இல்லைதான். நீ அது வழியாவே வா, இங்க என் வீட்டு முன்னால நின்னு பார்க்க உன் வீட்டு முகப்பு தெரியுது, உன் வீட்டுக்காரி கண்ணுல கிண்ணுல விழுந்துடப் போற, பின் பக்க கதவெல்லாம் திறந்துதான் வச்சுருக்கேன், ஆனா ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு வா” என அவள் குரல் காதில் விழுந்து கொண்டு கிடக்கிறது

அந்த சாருமதி தன் வீட்டுக்குள் போகும் வரை காத்திருந்த வேணி, இப்போது தான் எந்த வீட்டு முன் நின்றிருக்கிறாளோ அதன் கேட்டை ஏறித் தாண்டத் துவங்கினாள். அதுதானே ஆள் இன்றி கிடக்கிறது என அந்த சாருமதி சொன்ன வீடு, அது வழியாகவே அந்த பெண்ணின் வீட்டிற்குள் செல்லலாம் என இவள் திட்டம்.

இதைப் பார்த்த பால்கனி “இங்க பாரு வேணிமா, நான் இப்ப உன்ன தொடுறத தப்புன்னு நினைக்கிறேன்னு சொன்னேன்தான், ஆனா தப்ப செய்யவே மாட்டேன்னு இல்ல, இப்படில்லாம் பிடிவாதம் பிடிச்சன்ன நான் பாட்டுக்கு தோள்ல தூக்கிப் போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்” என ஒரு நிதான தொனியில் தாறுமாறாய் மிரட்டினான்.

“வயசுப் பொண்ண இந்த மாதிரி இடத்துக்குள்ள நான் எப்படி விட? நீயே சொல்லு, உன் பவி அக்கா அங்க உள்ள போனா, சரின்னு அனுப்பிடுவியா நீ? புரிஞ்சுக்கோ வேணி” என அதட்டாமல் புரியவைக்கவும் முயன்றான்.

வேணியோ வாதாடி வாதாடி எரிச்சலின் உச்சத்துக்குப் போயிருந்தவள், உரையாடலை முடிக்கவென “என்ன வேணாலும் செய்து தரேன்னு சொன்னல்ல, நீ இடத்த காலி பண்ணு அத செய் போதும். நான் உள்ள போயே ஆகணும், எனக்கு அங்க SP சார் வர்றப்ப நடக்கிறத வீடியோ எடுத்தே ஆகணும், அது வரைக்கும் இங்க இருந்து என்ன ஆனாலும் போக மாட்டேன்” என அழுத்தம் திருத்தமாக அழுந்தப்பட்ட பிடிவாதமாய் முடிக்க,

“அவ்வளவுதான நானே வீடியோ எடுத்து தாரேன், என் மொபைல்ல எடுத்து உனக்கு அனுப்பினா பிரவாயில்லையா? இல்ல உன் மொபைல்லதான் எடுக்கணும்னாலும் தா” என்றபடி இப்போது அவளுக்கும் முன்பாக அந்த வீட்டின் சுற்றுச் சுவரை தாண்டிக் குதித்திருந்தான் பால்கனி.

“நீ இங்கயே எங்கயாவது கொஞ்ச நேரம் மறஞ்சிரு” என தன் திட்டத்தையும் சொன்னான்.

வேணிக்கு ஒன்று புரிந்து போயிற்று இந்த அட்டைப் பூச்சி இவளை விட்டு போகப் போவதில்லை. ஆனால் அதற்காக அவள் இந்த வாய்ப்பை தவறவிடவும் விரும்பவில்லை.

‘போய் வீடியோ எடுத்துகிட்டான்னா, SP சார் இன்வெஸ்டிகேஷன்காகத்தான் அந்த சாருமதிய பார்க்க வர்றார்னு அசைக்க முடியாத ஆதாரம் கிடச்சுடுமே, அதுவும் அவருக்கே தெரியாம எடுத்ததுன்றப்ப, பவி அக்காவுக்கு SP சார நம்ப இதுக்கு மேல வேற என்ன தேவைப்படும்?’ என்பது இவளுக்கு.

ஆக பால்கனியை அப்படியே அசட்டை செய்து இவளும் கேட் ஏறிக் குதிக்க,

ஒரு கணம் மீண்டும் ஒரு வெறித்த பார்வை பார்த்த பால்கனி “சரி முடிவோடதான் இருக்கன்னு தெரியுது, எங்க அண்ணி வீட்டுக்காகன்னு வேற சொல்ற, வா” என்றபடி இப்போது அந்த சாருமதியின் வீட்டின் பின்புறச் சுற்று சுவருக்குப் போனவன், அங்கும் சில நொடிகள் நோட்டமிட்டுவிட்டுச் சுற்றுச் சுவரை தாண்டி குதித்தவன்,

அங்கு கிடந்த ஒரு உடைந்த நாற்காலியை இவள் பின் சுவரைத் தாண்டி இறங்க வாகாக வைத்துக் கொடுத்தான்.

அவனை கடுப்பாகி முறைத்தாலும் வேணி அதில் மிதித்தே இறங்கினாள்.

அடுத்தும் இவள் சுற்று முற்றும் பார்க்க, அதற்குள் இவளை சைகை காட்டி அழைத்த பால்கனி, அந்த வீட்டின் பக்கவாட்டு புறம் இருந்த ஒரு ஜன்னல் புறம் போனான்.  “இதுதான் பெட் ரூமா இருக்கும், இந்த ஜன்னல் வழியா உன் மொபைல்ல ரெக்கார்ட் செய்வோம், சின்ன சைஸ் வீடுதான? இந்த பெட் ரூம்னு மட்டும் இல்லாம ஹால்ல பேசுறது வரைக்கும் கேட்கும்தான், இருந்தாலும் இப்ப நான் வீட்டுக்குள்ள அந்த பொம்பளைட்ட எதாச்சும் பேசி உள்ள போய், ஹால்ல என்ன பேசினாலும் ரெக்கார்ட் ஆகுற போல என் மொபைல அங்க மறைச்சு வச்சுட்டு வந்துடுறேன்” என இவளிடம் கிசுகிசுத்தவன்,

“பெட் ரூம்ல எதாச்சும் தப்பா நடந்தா அந்த வீடியோ உன் மொபைல்ல மட்டுமா இருக்கும், நீ எனக்கு தர வேண்டாம், ஆனா வெறும் என்கொயரின்னா முன்வாசல் பக்கம் இல்லனா ஹால்ல வச்சுதானே இருக்கும், அது உன் மொபைல் ஓரளவு க்ளாரிட்டிலயும் என் மொபைல்ல தெளிவாயும்  ரெக்கார்ட் ஆகும்” என்றும் சேர்த்து சொல்லிவிட்டுப் போனான்.

வேணி இதற்கும் அவனை முறைத்தாலும், அவனிடம் மறுப்பாக எதையும் சொல்லவில்லை, ப்ரவி வரும் வரை இவள் மறைந்து கொள்ள எதாவது வழி இருக்கிறதா என மட்டும் தேடினாள்.

இவளைத் தொடக் கூட தயங்கும் பால்கனி, அதோடு இன்னும் ஓரிரு நிமிடங்களில் வரப் போவது SP சார், இவளுக்கு ஆபத்து என எதுவும் இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை.

பக்கத்தில் இவள் உள்ளே உட்கார்ந்து கொள்ளும் அளவிற்கான இரும்பு ட்ரம் ஒன்று கிடக்க, அதை எடுத்து அந்த ஜன்னல் புறமாக உருட்டி வந்தாள் இவள். இந்த பால்கனிதான் முன்னால அந்த லேடிட்ட பேசப் போயிருக்கானே, ஆக அந்த சாருமதி வந்துடும்ன்ற பயம் கூட இவளுக்கு இல்லை.

இவள் வீடியோ எடுக்க வேண்டிய அந்த ஜன்னலுக்கு கீழ் தண்ணீர் மோட்டர்கென ஒரு இடுப்புயர காங்க்ரீட் ஷெட் போன்ற அமைப்பு இருந்தது. முயன்று அதன் மீது இந்த ட்ரமை தூக்கி வைத்தாள். அதற்குள் ஏறி இருந்து கொண்டால், SP சார் வரும் போது கொஞ்சமாவது சுற்றுப் புறத்தை கவனிப்பார்தானே, அப்போது அவர் பார்வையில் படாமல் மறைந்து கொள்ள இது வழி வகுக்கும் என்பது இவள் நம்பிக்கை.

ஆக இவள் முயன்று அந்த ஷெட்டின் மீது இப்போது ஏற,

“அம்மா இன்னும் எத்தன பேரமா வரச் சொல்லுவ? இப்பவே ரொம்ப வலிக்குது, நாள கழிச்சு  பரீட்சை வேற ஆரம்பிக்குமா, கொஞ்சமாவது இன்னைக்கு படிக்கணும்” என பல்லை கடித்தபடி கோபமும் கெஞ்சலுமாக பேசும் ஒரு பெண்ணின் சிறுகுரல் இவளருகில் இருக்கும் படுக்கையறையிலிருந்து காதில் விழுகிறது.

அடுத்த பக்கம்