துளி தீ நீயாவாய் 11 (2)

இப்போது பால்கனி இவளை இங்கு எதிர்கொள்ளவுமே, இதில் ப்ரவி போன்ற ஒரு பக்குவம் மற்றும் அதிகாரம் உள்ள நபரின் தலையீடு அவசியம் என்று தோன்றிவிட்டது அவளுக்கு.

இங்கு பால்கனிக்கோ இவள் இப்படி தன் கைப்பையை பிடித்த பாங்கில், புரிந்துவிடுமே கடிதம் அவள் கையில்தான் இருக்கிறதென!

“ஆக லெட்டர் உன் கைலதான் இருக்கு, அதாவது என் அண்ணா அண்ணி பத்தி மொட்ட லெட்டர உன்ட்ட அனுப்பி இருக்கான் எவனோ, அதப் பார்த்து உனக்கு என் மேல வெறுப்பு, அப்படின்னா புரியலையா? என்னை உனக்குப் பிடிக்காம போகணும்னே எவனோ  விளையாடுறான்னு? இல்லனா உன்ட்ட எதுக்கு அனுப்பப் போறான்?” என வாதிட்டான் அவன்.

“எப்ப வந்துச்சு உனக்கு? அதெப்படி யாருக்கும் தெரியாம உன் கைல கொடுக்க முடிஞ்சுது? இப்ப காமிக்கப் போறியா இல்லையா? என் கல்யாணத்த நிறுத்த வந்த லெட்டர நான் பார்க்காம எப்படி?” அவனின் அதட்டல் பிடிவாதம் எல்லாம் எல்லை கடந்து கொண்டிருந்தது.

“ஆமா இல்லன்னா மட்டும் இங்க எல்லோருக்கும் உன்ன ரொம்ப பிடிக்குது பாரு, வழிய விடு” என வேணி பேச்சை முடித்து அவனை கடந்து போக முயன்றாள் இப்போது.

சரியாய் இந்நேரம் இவர்கள் ஒரு வீட்டின் முற்றத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்களே, அதற்கு நேர் பின்னால் இருக்கும் வீட்டிலிருந்து “இரு அந்த போலீஸ் ஆள் பரிசுத்தன வரச் சொல்லி கால் பண்ணிட்டு வந்துடுறேன், ரோட்ல இப்பதான் ஆள் நடமாட்டமே இல்லாம இருக்கு” என ஒரு குரல் காதில் விழுகிறது.

ப்ரவியின் பெயரைக் கேட்கவும் வேணியும் பால்கனியும் ஒரே நேரத்தில் அந்த குரல் வந்த திசையைப் பார்க்க, பின் வீட்டுச் சுற்றுச் சுவருக்குள் நின்று சுற்றுமுற்றும் பார்த்தபடி நிற்கும் அந்தப் புகைப்படப் பெண்ணின் உருவம் இந்த வீட்டுக்கும் அந்த வீட்டுக்கும் இடையில் அடர்ந்து கிடக்கும் வாழை மற்றும் கொய்யா மர இலைகளுக்கு ஊடாகத் தெரிகிறது.

அது அந்தப் பெண்ணின் வீடு போலும். சந்தில் நுழைந்தவள் அங்கு போய் சேர்ந்திருக்க வேண்டும்.

“இவ எதுக்கு அண்ணாவ…” என பால்கனி முகம் சுண்ட சொல்லத் துவங்கும் போதே,

தன் உதடில் விரல் வைத்து பேச்சை நிறுத்தச் சொன்ன வேணி,  அவசரமாய் இன்னும் கொஞ்சமாய் குனிந்து நின்று கொண்டு, அந்த பால்கனியையும் அப்படியே குனியச் சொல்லி சைகை காட்டினாள். அந்தப் புகைப்பட பெண் கண்ணில் இவர்கள் பட வாய்ப்பு வெகு குறைவுதான் என்றாலும், அவள் பார்த்துவிடக் கூடாதே என இந்த முன்னெச்சரிக்கை.

அதற்குள் அந்தப் பெண்ணோ “SP சார் நான் சாருமதி பேசுறேன், நீங்க இப்ப வரலாம், இங்க தெருவுல ஆளே இல்ல, உங்களுக்காகத்தான் காத்துட்டு இருக்கேன்” என மொபைலில் சொல்லிக் கொண்டிருந்தாள். இது இவர்களுக்கும் சின்னதாய் காதில் விழுகிறது.

இங்கு பால்கனியின் முகத்தில் சிடுசிடுப்பு, பெரும் முகவாட்டம். “எங்க குடும்பத்துப் பொண்ண கட்டிட்டு இந்த ஆள்…” என எதையோ பல்லை கடித்தபடி, முயன்று குரலை அடக்கிக் கொண்டு சொல்ல முனைய,

அதற்கு மேல் அவன் எதுவும் சொல்ல முடியாதபடி “வாய மூடு, SP சார் எதாச்சும் கேஸ விசாரிக்க வருவாங்களா இருக்கும்” என சிறுகுரலில்தான் என்றாலும் கடுமையாக எரிந்து விழுந்தாள் வேணி.

அதோடு “நீ இடத்த காலி பண்ணு, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்றபடி அவள் அந்த பெண் வீட்டை நோட்டமிடவும் துவங்கினாள்.

“என்ன விளையாடுறியா? அந்த வீட்ல என்ன வேலை உனக்கு?” இது பால்கனி.

“அதை நான் உன்ட்ட சொல்லணும்னு அவசியமே இல்ல” இது வேணி.

“எதுத்தெதுத்துப் பேசிட்டா எல்லாம் சரின்னு நினைப்போ? அவ யாரு எப்படிபட்டவன்னு தெரியுமா உனக்கு?” பால்கனி சீறினான்.

கடுகடு என ஒரு முகத்தோடு இப்போது முறைத்தாள் வேணி “ஆமா அப்படிப் பட்ட பொண்ண பத்தியெல்லாம் உனக்குத்தான் தெரிஞ்சிருக்கும், எனக்கு ஏன் தெரியப் போகுது?” அலட்சியமும் குத்தலுமாய் இவள்.

இதில் சுளீரென தெரியும் வண்ணம் துள்ளி ஏறுகிறது பால்கனியின் முகத்தில் ஊரளவு சினம். ஆனால் அடுத்த நொடியே அதைத்தாண்டி கசிந்த புன்னகையுடன் குளிர்ந்தும்விட்டான். “இந்த ஊர்க்காரன், அதோட ஒன்னுக்கு நாலு தொழிலும் நடத்துறவன்ற வகையில் இங்க சுத்துவட்டாரத்துல உள்ள நல்லது கெட்டது தெரிஞ்சி வச்சிருப்பேன்னு யோசிக்க மாட்டியா வேணி?” என அதே புன்னகையுடன் விளக்கம் சொன்னான்.

பின் இன்னும் தணிந்துவிட்ட ஒரு குரலில் “பொண்ணு, தண்ணி, சூதாட்டம் இந்த மூனும் எப்பவுமே என் வாழ்க்கைல வராது வேணி, ஏன்னா என் அப்பா அதாலதான் என்னை நடுத்தெருல நிறுத்தினார்” என்க, அவன் வார்த்தைகளிலிருந்த உண்மையும், அதோடு அவன் கண்ணிலிருந்த கடந்த காலத்தை அசட்டை செய்யும் உணர்வும் தாக்கிய விதத்தில் வேணிக்கு என்ன சொல்ல, செய்ய எனத் தெரியாத நிலை.

இவள் சற்று இளகி நின்றதால் போலும் “பொண்ணே பூவேன்னு உன்ன பொத்தி பொத்தி பார்த்துக்கணும்றதுதான் என் ஆசை, ஆனா என்னவோ நாம பார்த்துக்க நேரமெல்லாம் நமக்குள்ள அவ்வளவு சண்டையாகுது. இனி உன்ட்ட எந்த சூழ்நிலைலயும் கோபப்பட மாட்டேன் சரியா, நீயும் என்ன பொறுக்கின்னு சொல்றத மட்டும் விட்டுடு ப்ளீஸ், வேற என்ன வேணாலும் சொல்லி திட்டு” என தொடர்ந்து கொண்டு போனான் அவன்.

இதற்கும் வேணி எகிறப் போவது போல் “நீயெல்லாம்” என எரிச்சலாய் எதையோத் துவங்க,

அதற்குள் “சரி இப்ப இதெல்லாம் விடு, இங்க உனக்கு என்ன நடக்கணும்னு மட்டும் சொல்லு, நான் அதை மட்டும் செய்து கொடுத்துட்டு போய்டுறேன்” என இறங்கி வந்தான்.

அடுத்த பக்கம்