துளி தீ நீயாவாய் 11

ஆயிரம் வகை பட பட சிந்தனைகளோடு ஓடி வந்து கொண்டிருந்த போது எதிர்பாரா வகையில் பிடிக்கப்பட்ட அதிர்ச்சி, அதோடு அந்த புகைப்படப் பெண்ணை தவறவிட்டுவிடுவோமோ என்ற பரபரப்பு, இதில் உடை அமைப்பே மாறி வந்து நிற்கும் இந்த பால்கனி, ஆக சில நொடிகள் ஆனது வேணிக்கு இது யார் எனவும், தான் நிற்கும் நிலை என்ன என்பதும் புரிந்து சேர,

அவன் பிடித்த நொடியே அன்னிச்சையாய் “விடு, விடு என்னை” என தன் கையை உதறிக் கொண்டிருந்தவள் இப்போது “ஆக இதெல்லாம் செய்றது நீதானா பொறுக்கி?” என உறுமினாள்.  “இன்னைக்கே இத SP சார்ட்ட நான் போட்டுகொடுக்கேன் நீ சட்னிதான்” உக்கிரப்பட்டாள்.

ஏற்கனவே இந்த புகைப்படம், கடிதம் இதெல்லாம் பால்கனியின் வேலையாய் இருக்குமோ என ஒரு சந்தேகம் அவளுக்கு இருந்ததுதானே? அதில் சரியாய் இந்த இடத்தில் அவனைக் காணவும் அவளுக்கு அதுதான் முழுக்கவும் சரி என்று பட்டுவிட்டதோடு, வெகு பதற்றம் அதோடு இவனைக் கண்டுவிட்ட கோபம், அவன் இவள் கையை பிடித்த சினம் என எல்லாம் சேர்ந்திருக்க, இவனிடம் இதைச் சொல்லலாமா இல்லையா? ஒருவேளை அது அவன் வேலையாக இல்லையெனில் ப்ரவியின் சொந்த விஷயம் இவனிடம் போய் கிடைத்துவிடுமே என எதையும் சிந்திக்காது கத்தினாள் அவள்.

“என்னது நான் உனக்கு பொறுக்கியா? அறஞ்சேன்னா…” என இதற்கு அடக்கமாட்டாத கோபத்துடன் பதில் துவங்கிய பால்கனி, ஆனால் அந்த நொடியே தன்னை அடக்கியவனாக, “சாரி, நீ வந்த வேகத்துல உன்ன நிறுத்த கையப் பிடிச்சுட்டேன், நிஜமா சாரி” என தன் கையை அவள் மீதிருந்து எடுத்துக் கொண்டான். ஏதோ அவன் கைகளை துடைத்துக் கொண்டதாலேயே அவளைத் தொட்டது இல்லையென்றாகிவிடும் என்பது போல் அவசரமாய் தன் இருகைகளையும் ஒன்றோடு ஒன்று துடைத்தும் கொண்டான்.

தொட்டது தவறென அவன் சந்தேகமற நம்புவது அவன் கை, முகம், விழி என எல்லாவற்றிலும் இருந்தது. திரும்பவும் ஒரு முறையாகத் தன் இருகைகளையும் ஒன்றோடு ஒன்றாக துடைத்தபடி “நிஜமா சாரி” என  மீண்டும் கேட்டபடி இப்போது அவன் இவளை ஏறிட,

அரை நொடி போலும் அவன் செயலை அசைவற்றுப் பார்த்துக் கொண்டிருந்த வேணி, “தப்புன்னா இது மட்டும்தான் தப்பா?” என மீண்டும் துவங்கும் போது கோபம் கொஞ்சம் குறைவாய் இருந்தது போல் தெரிந்தாலும்,

“ஒரு நல்ல குடும்பத்த நாசம் செய்யணும்னு பார்க்கிறியே அத என்ன சொல்ல? கேவலமா இல்ல இப்படி ஃபோட்டோ ரெடி பண்ண? முதுகெலும்பு இல்லாதவன்தான் மொட்ட லெட்டர் எழுதிப் போடுவான், அதுவும் உங்க குடும்பத்து பொண்ணுனு வேற பவி அக்காவ சொல்லிக்கிற, அப்படியே எனக்கு வர்ற ஆத்ரத்துக்கு, இருக்கு உனக்கு இருக்கு, SP சார் எலும்ப எண்ணுவார்ல அப்ப தெரியும்” எனும் போதெல்லாம் மீண்டும் முழு உச்ச கோபத்திற்கு சென்றிருந்தாள்.

கண் இடுங்க சற்று நேரம் அவளையே வெறித்தபடி நின்றான் பால்கனி.

“மூளைன்னு ஒன்னு இருக்கே அதெல்லாம் யூஸ் செய்யவே மாட்டியா? என்னமோ போட்டோ, மொட்ட லெட்டர்னு சொல்றியே, இப்படி குட்டி பாப்பா கூட கண்டு பிடிக்கிற மாதிரி ஒரு மொட்ட லெட்டர போலீஸ் SP வீட்டுக்கு எவனாவது அனுப்புவானா? அதுவும் கல்யாணத்துக்கு உன்ன பொண்ணு கேட்டுருக்கேன், இப்படின்னா எப்படி நீ கல்யாணத்துக்கு சம்மதிப்பன்னு கூடவா யோசிக்க மாட்டேன்?” என்றான் அதே வெறித்த பார்வையுடன்.

இந்த வகையில் வேணி யோசித்திருக்கவில்லைதானே, அவளுக்கு என்ன சொல்லவெனத் தெரியவில்லை. குழப்பமும் சஞ்சலமும் நிரம்பிய முழு கண்ணிலுமாக அவனைப் பார்த்து விழித்தாள் ஒரு கணம். ஆனாலும் அதற்காக இதை அனுப்பியது பால்கனி இல்லை என்றும் எண்ண முடியவில்லை அவளுக்கு. அதற்குள் அவனோ

“சரி சொல்லு, அது என்ன லெட்டர்?  குடும்பம் நாசமா போறது, அது இதுன்னு பெரிய பேச்செல்லாம் பேசுற? எங்க காமி, என்ன செய்யலாம்னு பார்ப்போம்” என்க,

“ஆமா உன்ட்ட காமிச்சுட்டுதான் மறுவேலை” என அனிச்சை செயலாய் தன் தோளில் தொங்கிய கைப்பையைப் பிடித்த வண்ணம் பின் வாங்கினாள் வேணி. அதில்தானே அந்த கடிதத்தை அவள் வைத்திருந்தாள் ஆக அவளையும் அறியாமல் இப்படிச் செய்தபடி,

“அதான் நீ செய்யலன்னு சொல்லிட்டல்ல உன் வேலைய பார்த்துட்டுப் போ, நான் எங்க SP சார்ட்டயே காமிச்சுக்கிறேன், அவருக்குத் தெரியும் என்ன செய்யணும்னு” என வெட்டலாகவே தொடர்ந்தாள் அவள். உண்மையில் ப்ரவியிடம் இக் கடிதத்தை காட்டிவிடலாம் என அவள் முடிவுக்கு வந்திருந்தாள்.

நேற்றைய சூழலில் பிரச்சனை இதற்கு மேல் பெரிதானால் பார்த்துக் கொள்ளலாம் என அவள் நினைத்ததே, இந்த கடிதக்காரன் அடுத்தும் தொடர்ந்தால், அப்போது ப்ரவியிடம் சொல்லிவிட வேண்டும் என்பதுதான். வெறும் இந்த ஒரு கடிதத்தோடு இந்த விஷயம் முடிந்து போய்விட்டால் அப்போது ப்ரவிக்குமே எதுக்கு தேவையில்லாமல் இந்த மனச்சஞ்சலம் என்பது இவளுக்கு. கூடவே அந்த புகைப்படத்திலிருந்த காட்சி, அதை ப்ரவியிடம் முகம் பார்த்து இவளால் கொடுக்க முடியும் என்று கூட எண்ணவிடாமல் செய்திருந்தது.  ஆனால் பிரச்சனை தொடர்ந்தால் இதில் இப்படி தயங்கிக் கொண்டு இருப்பது சரி கிடையாது, ‘முதல்லயே SP சார்ட்ட சொல்லிடணும்’ என்பது வரை தெளிவிருந்தது அவளுக்கு.

அடுத்த பக்கம்