துளி தீ நீயாவாய் 8(7)

ஆக சிந்தி மொபைலை பயன்படுத்தி அவர்கள் அரவமின்றி நுழைந்தது போதையில் தூங்கிக் கொண்டிருந்த சிந்தியாவின் அப்பாவின் அறையில். அங்கு போய் என்ன செய்தார்களா? எதுவும் செய்யவில்லை. அந்த அறையில் இருந்த அவரது மொபைலையும் அவர் அருகில் இருந்த பிஸ்டலையும் மட்டும் எடுத்துக் கொண்டு அறைகளை முறையாய் பூட்டிவிட்டு திரும்பி வந்துவிட்டார்கள்.

இப்போதே அவரை தாக்கினால் மாணிக்கம் வகையறா மற்றும் அவர்களது குடும்பங்கள் மீட்கப்பட்டு விடும்தான், ஆனால் அடுத்து சின்னதாய் சிந்தியின் தந்தை டெக்னிகல் மக்களை துருவினாலும், சிந்தி மொபைல் வழியாகத்தான் இவர்கள் உள்ளே வந்தார்கள் என்பது வரை தெரிய வந்துவிடும்.

அடுத்து சிந்தியை விசாரித்தால், பவியோடு அவள் அந்நேரம் மொபைலில் பேசி இருப்பதை பார்த்தால் ப்ரவி பவி இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என சிந்தியின் அப்பா கண்டு பிடித்து விடுவார்தானே!

இதற்கு இடையில் அவர்களிடம் மொபைலை கொடுத்து அனுப்பிய ப்ரவி அங்கு லாரியை எடுத்துக் கொண்டு அந்த பகுதியில் ஒரு குட்டி ரவ்ண்ட்.

“எப்படி இப்படி ஐடியா வந்துச்சு உங்களுக்கு? லாரில்லலாம் வரலாம்னு?” அந்த நம்ப முடியா சூழலை அனுபவித்தபடி உற்சாகமும் யதார்த்தமுமாக கேட்டுக் கொண்டிருந்தாள் சிந்தியா.

“செம்மயா இருக்குல்ல, அதுவும் நான் ப்ரவி சார இப்படில்லாம் யோசிச்சதே இல்ல, ரொம்பவே ரிசர்வ் டைப்னு எனக்கு தோணும்” தனக்கு தோன்றியதையெல்லாம் அவள் சொல்லிக் கொண்டிருக்க,

“ஏன் இவனுக்கு என்ன? கருண் எருமை எப்பவுமே கழன்டு போய்தான் இருந்தாலும் கொஞ்சமாதான் லூசா இருக்கும், இவனுக்கு கழர்றது ரேர் ஆனா கழன்டா இப்படிதான் தாறுமாறா இருக்கும்” உர்ர் முகத்தோடு பவி இப்படி கவ்ண்டர் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

ப்ரவிக்கு இன்னுமே உள்ளுக்குள் சிரிப்புதான் என்றாலும் தன்னவளை பார்க்க கொஞ்சம் பரிதாபமாகவும் இருக்கிறது. பாவம் என் குத்துவிளக்கு ரொம்ப ஃபீல் பண்ணுது போலயே!

“பவி பொதுவா எதுவும் வேணும்னு கேட்க மாட்டா, அவளே ஆசை படுறப்ப அதை செய்யலாம்னு எனக்கு தோணிடும்” என சிந்திக்கு பதில் சொன்னான் இவன். அதாவது ‘உனக்காகத்தான் இதெல்லாம் செய்துட்டு இருக்கேன்’ என்ற வகை செய்தியை பவிக்கு தெரிவித்து இலகுவாக்க முனைந்தான்.

உண்மையும் அதுதான். மாணிக்கத்தின் முதலாளி சிந்தியாவின் அப்பாவாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இவனது நடவடிக்கையே வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் இப்போது பவியின் பாதுகாப்பின் நிமித்தம் இவன் வெகுவாகவே கவனம் எடுத்து செயல்பட வேண்டி இருக்கிறது. எந்த நாளிலும் சிந்தி அப்பாவுக்கு இவனது பெயர் இந்த மாணிக்கம் நிகழ்வோடு சம்பந்தப்பட்டு தெரிந்துவிடவேக் கூடாது. அடுத்து அந்த ஆள் பவியை துரத்தவா?

அதே போல சிந்தி கண் முன்னால் அவளது அப்பாவை துப்பாக்கி முனையில் நிறுத்தவும் இவனுக்கு மனம் இல்லை. அதற்கும் காரணம் சிந்தி பவியின் நட்பு மட்டுமே!

ஆனால் இதெல்லாம் பவிக்கு தெரியுமா என்ன? அவள் இப்போதுமே ப்ரவியை முறைத்துக் கொண்டுதான் இருந்தாள்.

“தயாப்பா எப்படி எடுத்துப்பாங்க? கோபப்படுவாங்கதானே?” சிந்தி இப்போது இப்படி விசாரித்தாள்.

“பின்ன சும்மா விடுவாங்களா? இவனுக்கு நல்லா நாலு கிடைக்கும்” பவி தனக்கு தெரிந்ததைச் சொல்ல, ப்ரவி மீதிருந்த எரிச்சலை இப்படி வெளியிட,

“ஐயோ பாவம் ப்ரவி சார், நம்ம ஆசைக்கு அவர் பலியாடா?” என சிந்தி கரிசனைப்பட்டாள்.

“இந்த விஷயத்தை நானும் எங்க வீட்ல சொல்லல, நீயும் சொல்லாமவிட்டுடேன் பவி, நாமளா சொல்லாம எப்படி தெரியும்? நாம ஒன்னும் தப்பா எதுவும் செய்யலையே, நமக்காக ப்ரவி சார் ஏன் திட்டு வாங்கணும்? தயாப்பாக்கும் நாம வேண்டாம்னு சொல்லியும் போயிருக்காங்களேன்னு மனசு கஷ்டமாகும்ல” என ஐடியாவும் கொடுத்தாள்.

உண்மையில் இந்த மாணிக்கம் மீட்பு சம்பவத்தை விளக்கமாய் சொன்னால் இவனது அண்ணன் தயாளன் இந்த சம்பவத்துக்காக நிச்சயமாய் கோப்படவோ வருத்தப்படவோ மாட்டார். பவியை சிந்தி வீட்டு விஷயங்களில் இன்னும் கவனமாக பார்த்துக் கொள்ளவும் செய்வார், ஆக அவரிடம் மறைக்கும் எண்ணமெல்லாம் ப்ரவிக்கு கிடையாது.

இவனது பவிப் பொண்ணுதான் இளகிய மனம் உடையவள் என்பதால் வெகுவாக மனம் உளைவாள் ஆக அவளுக்கு மட்டும் இந்த மாணிக்கம் மீட்பு விஷயங்கள் தேவை இல்லை என்பது இவனது முடிவு.

ஆனாலும் இவர்கள் வந்து சென்ற விஷயம் சிந்தி அப்பாவுக்கு தெரியாமல் இருப்பது இவன் மீதோ பவி மீதோ சிந்தி அப்பாவுக்கு துளியும் சந்தேகம் விழ வாய்ப்பே இன்றி செய்துவிடுமே ஆக சிந்தி இப்படி சொல்லவும் மறுப்பு எதுவும் சொல்லாமல் மௌனம் காத்தான்.

‘அதெல்லாம் தயாப்பாட்டல்லாம் நாங்க எதையுமே மறைக்கமாட்டோம்’ என வேகமாய் சொல்ல வந்த பவி ப்ரவியின் மௌனத்தை காணவும் எதுவும் சொல்லாமல்விட்டாள்.

ஆனால் உள்ளுக்குள் பச்சை மிளகாய் ரயிலாகி தடக் தடக் என பயம் கொடுத்தபடி பாவைக்குள் பாய்ந்து பாய்ந்து பயணம் செய்தது.

‘சிந்தி சொன்னா இவன் தயாப்பாட்ட கூட விஷயத்தை சொல்லாம இருப்பானா? ஒரே ஒரு நாள்ல ஒருத்தனுக்கு சிந்தி இவ்வளவு முக்கியமா ஆகிட முடியுமா?’ இப்படி ஒரு சிந்தனையில் ஒருவாறு வெகுவாக அமைதியாகிவிட்டாள் பவி.

அடுத்து ப்ரவி சிந்தியுடனான பயணத்தை முடித்து, சிந்தியும் பவியும் பேசிக் கொள்ள தனிமை கொடுப்பது போல் அவர்களைவிட்டு விலகிச் சென்றான்.

மறைந்திருந்த மாணிக்கத்திடமிருந்து சிந்தி மொபைலை வாங்கிக் கொண்டு வந்து, லாரியிலிருந்து பேசிக் கொண்டிருந்த சிந்தி கவனிக்காத போது, மொபைலை அவள் அருகில் வைத்துவிட்டான். அவள் தான்தான் மொபைலை அங்கே வைத்திருந்தேன் போலும் என்ற நினைப்போடு அதை எடுத்துக் கொண்டு விடை பெற்று வீட்டுக்குள் சென்றாள்.

இதற்குள் பவியோ சிந்தியோ அறியாமல் மீண்டும் லாரியில் மாணிக்கமும் அவரோடு சென்ற தாஸும் ஏறி இருந்தனர். மீண்டும் லாரி பயணத்தை துவங்கினான் ப்ரவி..

அடுத்த பக்கம்