துளி தீ நீயாவாய் 8(6)

பொதுவாக பெண்களிடம் ப்ரவி வெகு அளவாக பேசிக் கொள்ளும் ரகம். அதிலும் இவள் வகுப்பு பெண்கள் என்றால் எப்பவுமே விலகிப் போய்விடுவது அவன் சுபாவம்..

‘இப்ப மட்டும் இவன் ஏன் பேசுறான்? சிந்திய லவ் பண்ணுனு நாம சொன்னதாலயா? அடப்பாவமே அதை சொல்லவும்தான் இப்படி நட்ட நடு ராத்ரில கூட்டிட்டு வந்துட்டானா? இதெல்லாம் எனக்காக இல்லையா சிந்திக்காகதானா? ஐயோ லவ் பண்ணுனு சொல்றப்ப நல்லாதான் இருந்துச்சு, நேர்ல பார்க்க சகிக்கலையே!

இவள் வயித்து பச்ச மிளகாய் மச மசன்னு நிக்காம கட கடன்னு வளந்து வருதே!

“ஓமைகாட்!!” என சிந்தி கூவியதில்தான் அடுத்து இவள் நடப்புக்கு வந்தாள். இருந்த டென்ஷனில் அதற்குள் சிந்தி எதோ சொல்ல பரவி அதற்கு சின்னதாய் சிரித்தது எல்லாம் அர்த்தமே புரியாமல் இவள் வகையில் கிண்ண்ண்ண் என்று மட்டுமாய் கடந்திருந்தது.

“லாரிலயா வந்தீங்க, நிஜமா சொல்றேன் பவி நீ படு லக்கி” என இப்போது கூவியபடி இவளை குலுக்கிக் கொண்டிருந்தாள் சிந்தியா.

“ப்ளீஸ் ப்ளீஸ் என்னையும் அதில் ஒரு ரவ்ண்ட் கூட்டிட்டு போக முடியுமா? ப்ளீஸ் ப்ரவி சார்” என அடுத்து அவள் கேட்டு வைக்க,

‘ஹி’ என சிரித்து வைத்தாள் இவள். உள்ளுக்குள் புடலங்காய் அளவுக்கு நீண்டு நீண்டு விளைந்தது பச்சை மிளகாய். ‘மம்மி நான் என்ன சொல்ல?’

அதற்குள் ப்ரவியோ “சார்னு எல்லாம் சொல்லாதீங்க சிந்தியா, லாரிலதான தாராளமா போகலாம்” என்க,

புடலங்காயாவது ஒன்னாவது. பாறாங்கல் சைஸுக்கு பச்சை பசேலென்ற பச்சை மிளகாயாகவே மாறி இருந்தாள் பவி. ‘என்னது??? சார்னு சொல்ல கூடாதா? லாரில இவள மாதிரி அவளுமா?’

உண்மையில் ப்ரவி அதுவரையுமே சாதாரணமாகத்தான் பேசிக் கொண்டிருந்தான், அதோடு அவன் திட்டத்துக்கு சந்தியாவையும் பவியையும் சற்று நேரம் மறைத்தும் வைக்க வேண்டி இருந்தது. ஆக இவனுக்கு இது ஜாக்பாட். அதனால் லாரி பயணத்துக்கு அவன் படு ஆவலாய் சம்மதம் சொல்ல பத்தி எரிகின்றது இங்கு ஒரு பச்சை மிளகாய் காடு.

கூட வளர்ந்தவனுக்கு இது கூடவா புரியாது, அப்போதுதான் பவியைப் பார்த்தவனுக்கு அள்ளிக் கொண்டு வருகிறது உள்ளுக்குள்ளே.

சிந்தியா இதற்குள் லாரியிடமாக போக, அவளுக்கு பின்னாக இவனும் இவனுக்கு இணையாக பவியுமாக இப்போது லாரியை நோக்கி நடக்கத் துவங்கினர்.

‘ப்ரவி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்? இதெல்லாம் இப்ப நீ யாருக்காக பண்ற? எனக்காகவா அவளுக்காகவா?” இறுகிப் போன முகத்தோடு புசுபுசுத்த மூச்சோடு கிசுகிசுத்தாள் பவி ப்ரவியிடம்.

“உண்மையிலேயே உண்மைய சொல்லணுமா?” இது இவனது பதில் கிசுகிசுப்பு. வம்பிழுத்தான் இவன்.

“அப்படின்னா இது எனக்காக இல்லையா?” அழுதே விடுவாள் போலும் இவள்.

“உண்மை என்னன்னா?” இவன் தொடங்க,

“இல்ல வேண்டாம் நீ சொல்லவும் வேண்டாம் நான் கேட்கவும் வேண்டாம்” பவிக்கு இப்போது ப்ரவியின் பதிலை கேட்க பயமே வந்துவிட்டது. உனக்கும் அவளுக்குமாத்தான் செய்தேன்னு அவன் சொன்னா கூட இவளால தாங்க முடியாது.

அதற்குள் இவர்கள் லாரியை அடைந்திருக்க, ப்ரவி இரு பெண்களும் உள்ளே ஏற உதவி செய்தவன், அப்படி ஏறும் தருவாயில் சிந்தியா கையிலிருந்த மொபைலை “என்ட்ட தந்துட்டு ஏறுங்க, ஈசியா இருக்கும்” என வாங்கிக் கொள்ள,

பவிக்கு பொத்துக் கொண்டு வருகிறது. அவ்வளவு அக்கறையாமா? பச்சை மிளகாய் ஜிங்கு சா.

இவள் ஏறும் போது இவள் மொபைலை அவன் கேட்க, “ப்ச் போ” என இவள் முகம் திருப்பிக் கொள்ளும் அளவுக்கு வந்திருந்தாள்.

அதை ரசித்ததால் அவனுள் வந்த புன்னகையை மறையாமல் வெளிக்காட்டியபடி “ஒரு நிமிஷம், லாரில பின்னால உள்ள கதவ பார்த்துட்டு வந்துடுறேன்” என்ற ஒரு காரணத்தை சொல்லியபடி மீண்டுமாய் லாரியின் பின் புறம் நோக்கி வந்தான்.

‘கதவு ஒழுங்கா மூடி இருக்கான்னு பார்க்கப் போறான் போல’ என ஒரு இயல்பான கவனச் செயலாக இதை பவி எடுத்துக் கொள்ள, சிந்தியோ அந்த அளவு கூட யோசிக்கவில்லை. அவளுக்கு லாரியில் ஏறி அமர்ந்திருப்பதே ஏதோ தேரில் ஏறி உட்கார்ந்த ஒரு உணர்வு. இதில் தன் மொபைல் ப்ரவி கையில் இருக்கிறது என்பது ஒரு விஷயமாக படுமா என்ன?

ப்ரவியோ நேராக லாரியின் பின் பகுதிக்கு சென்று கதவை ஒரு தட்டு தட்டிவிட்டு சற்றாய் திறக்க, இப்போது வெளியே வந்தது மாணிக்கம்.

அவர் கையில் சிந்தியின் மொபைலை வைத்தான் இவன். அடுத்து சற்று நேரத்தில் மாணிக்கமும் தாஸ் என இன்னுமொருவரும் தலை, பாதி முகம் எல்லாம்  மறைத்து துண்டால் கட்டப்பட்டிருக்க, சிந்தியின் மொபைலோடு சிந்தியின் வீட்டுக்குள் போய் கொண்டிருந்தனர்.

சிந்தியின் வீட்டில் கட்டுமான வேலை செய்தவர்கள்தானே மாணிக்கம் வகையறா. அதுவும் விழாவில் எல்லாம் வேலை செய்து கொடுத்துவிட்டு சில மணி நேரம் முன்புதானே இங்கிருந்து கிளம்பி இருந்தனர். ஆக வீட்டில் எது இருக்கிறது இல்லை என எல்லாம் அவர்களுக்கு தெரியுமே.

சிந்தி வீட்டின் சில பல முக்கிய அறை கதவுகள் NFC தொழில்நுட்பத்தால் இயங்கும் பூட்டுகளை கொண்டவை. அதாவது குடும்ப உறுப்பினர்களின் மொபைலை அந்த பூட்டுகளின் முன்பு காண்பித்தால் அவைகள் தானாக திறந்து கொள்ளும். மற்றபடி எந்த வகையிலும் அந்த கதவுகளை திறக்க முடியாது.

அடுத்த பக்கம்