துளி தீ நீயாவாய் 8(4)

அடுத்த பத்தாம் நிமிடம் லாரியின் ஓட்டுனர் இருக்கைக்கு பின்னால் ஓட்டுனர் ஓய்வெடுக்க என இருக்கும் இருக்கை அமைப்பில் பவிப்பொண்ணு.

அந்த மாணிக்கம் லாரிக்கு வெளியே ப்ரவி அருகில் நின்று கொண்டிருந்தவர் “கதவ பூட்டிட்டாலும் உள்ள காத்து வர்றதுக்குல்லாம் வழி செய்துருக்குதான் சார், ஆனா கதவ வெளிப்பக்கமா மட்டும்தான் பூட்ட முடியும், நீங்க பூட்டிட்டு வந்து வண்டிய எடுங்க” என ப்ரவியிடம் சொன்னவர்,

அடுத்து “சார் நீங்க பெரிய சார்ட்ட பேசிட்டே வாங்க, அப்பதான் வண்டி ஓட்றப்ப அவருக்கு தூக்கம் வராம இருக்கும்” என இவளை வேறு பார்த்து சொல்லிவிட்டு போனார்.

ஆம் பவிக்கு ஆண் வேடமெல்லாம் போடவில்லை என்றாலும் “ஜெர்கின் கொண்டு வந்தல்ல அதை போட்டு தலை வரைக்கும் கவர் பண்ணு, கன்னா பின்னானு குளிருது” என ப்ரவி சொல்லியதில் அவள் சல்வாருக்கு மேல் இப்படி ஜெர்கின் போட்டு முகத்தில் முக்கால்வாசி மட்டும் தெரியும்படி hoodஐயும் இழுத்துவிட்டு, முயல்குட்டி போல அமர்ந்திருக்க, அதைத்தான் மாணிக்கம் ஆண் என அடையாளம் கண்டு சொல்லிவிட்டு போகிறார்.

“யார் அந்த ஆள்? அவர்தான் இந்த லாரி ட்ரைவரா? என்னப் பார்த்து சார்னு சொல்லிட்டு போறார். இவர் பார்க்கிற ரேஞ்சுக்கு, இவர் வண்டி ஓட்டி இவரும் ரோட்ல போறவங்களும் ஒழுங்கா வீடு போய் சேரவா?” என பவி இப்போது கிண்டலாய் அங்கலாய்க்க ப்ரவியோ பதிலேதும் சொல்லவில்லை.

லாரியை ஓட்டத் துவங்குவதில் மாத்திரம் கவனமாக இருந்தான். ஆம் தன் உறவுப் பெண்ணை தன்னோடு கூட்டி வருவதாக அந்த மாணிக்கத்துக்கோ அவன் சார்ந்த அந்த கூட்டத்திற்கோ காட்டிக் கொள்ளாமலும்,

இப்படி ஒரு கூட்டம் லாரியில் இருப்பதையோ அவர்களுக்கு உதவ தாங்கள் சென்று கொண்டிருப்பதையோ பவிக்கும் தெரியப்படுத்தாமல் காரியத்தை நகர்த்திக் கொண்டிருந்தான் ப்ரவி.

பவியின் புரிதலைப் பொறுத்தவரை அந்த மாணிக்கத்தின் லாரி இது, அவர் லாரியின் பின் பகுதியில் ஓய்வெடுக்கிறார் அவ்வளவே.

அந்த மாணிக்கமோ இன்னொரு போலீஸ்காரரை இந்த பெரிய ஆஃபீஸர் கூட்டி வந்திருக்கிறார் என்று நினைத்து கொண்டிருக்கிறார்.

முகத்தில் ஜில்லென வீசிய காற்றை அனுபவித்தபடி வாங்கி வந்திருந்த காஃபியை அருந்துவதிலும், கருணின் மெசேஜ்க்கு நொடித்துக் கொண்டு பதில் கொடுப்பதிலும், பன்னிரென்டு மணிக்கு லாரியை நிறுத்தி இறங்கி, லாரியின் முன்புறமாக நின்று கேக் கட் செய்வதிலுமாக பவி எஞ்சாய் செய்து கொண்டிருக்க,

அவள் கேட்டதெல்லாம் செய்து கொடுத்தபடி, அவள் ஆர்பாட்டத்தை ரசித்து அனுபவித்தபடி, அவளே சட்டை செய்யாத அளவுக்கு அவ்வப்போது அபிஜித்திடம் இருந்து வரும் மெசேஜ்களை மட்டும் பார்த்தபடியாய் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான் ப்ரவி.

“ஐயோ செம்மத்தியா இருக்கே, என்னமா லாரி ஓட்ற நீ! என்ன இருந்தாலும் IPS trainingனா மாஸ்தான் போ” வேற யார் பவிதான். சில மணி நேர லாரிப் பயணத்திற்குப் பின் ஆரவரித்தாள்.

“நான் கூட ஓட்டி பழகலாம்னு இருக்கேன், லாரி ஓட்ட எவ்வளவு நாள் ட்ரெய்னிங் எடுத்த ப்ரவி நீ?” ஆர்வமாய் அவள் விசாரித்தாள்.

“ஒரு ரெண்டு நாள் ஹெவி வெகிள் பழகுங்கன்னு கைல தந்தாங்க” என நடந்ததைச் சொன்னான் இவன்.

“என்னதூஊஊஊஉ!!! ரெண்டு நாளா? ஐயையோ!!! உனைய நம்பி வண்டில ஏறி உட்காந்துருக்கனே, ஐயோ இப்ப என்ன செய்வேன்?!!” துள்ளி எழுந்து இவனது இருக்கையின் பின் புறத்தில் வந்து அவள் அப்ப,

“பாரு இனி உனக்கு தினமும் சொடக்குதான்!!” என அடுத்து அவள் தண்டனை அறிவிக்க, அதே நேரம் ஒரு மரங்களடர்ந்த பகுதியில் சென்று நின்றது இவர்களது வாகனம்.

“சர்ப்ரைஸ்” என இப்போது இவளைப் பார்த்து கண் சிமிட்டினான் அவன்.

இதில் புளி தின்னும் முகபாவத்தோடு ‘இதுல என்னடாப்பா உள்குத்து வச்சுருக்க?’ என மார்க்கமாய் இவள் சுற்றிலும் பார்த்து முழிக்க,

“யாரப் பார்க்க வந்துருக்கோம்னு சொல்லு?” என அவன் கேட்ட வகையிலேயே அவளுக்கு கொஞ்சமாய் புரிந்துவிட்டது என்றால்

“ஒரு சின்ன க்ளூ நீ கேட்டுப் பார்த்தும் நம்ம பெரிய தல பெர்மிஷன் தரல” எனும் போது

“நெ… நெஜமாவா? சி… சிந்தி வீடா? அவ வீட்டுக்கா வந்துருக்கோம்? எ… எப்படி? ஹய்ய்யோ!! மாஸ் காட்றியே மகாராஜா” என நம்ப முடியாமையிலிருந்து உச்ச உற்சாகத்துக்கு இவள் நொடியில் இடம் மாறினாள்.

“ஷ் சத்தம் இல்லாம அமைதியா வெயிட் பண்ணு பவி, நான் போய் அங்க செக்யூரிட்டிய எழுப்பிவிடுறேன், மணி ஒன்னாகப் போகுது, யாரா இருந்தாலும் இத்தன மணிக்கெல்லாம் தூங்கிட்டுதான் இருப்பான், அடுத்து உன் ஃப்ரென்ட்ட ஃபோன் செய்து கேட்டுக்கு வரச் சொல்லு, சும்மா அங்கயே வச்சி பேசிட்டு கிளம்பிடலாம், இத்தன மணிக்கு வீட்டுக்குள்ளலாம் போக முடியாது” என தன் திட்டத்தை சொன்னான் அவன்.

“லூசு முதல்லயே சொல்லி இருந்தன்னா அவளுக்கும் எதாச்சும் வாங்கிட்டு வந்திருப்பேன்ல” என இவன் தோளில் அடி ஒன்று வைத்தாலும், அவள் முகத்தில் ஆசை ஆசையைத் தவிர வேறு எதுவும் இல்லை.

சிந்தியா வீட்டு கிரஹப் ப்ரவேசம் இன்று காலை. அதுவும் இது எதோ பண்ணை வீடாம். நன்றாக இருக்கும் வா என ஒத்தைக் காலில் நின்றாள் சிந்தியா, அதோடு இவளது தயாப்பாவிடம் வேறு அத்தனை முறை கேட்டுவிட்டாள் அவள். ஆனால் அவர் “அவ்வளவு தூரத்துக்கு எப்படிமா தனியா அனுப்ப?” என மறுத்துவிட்டார். இதில் இப்படி கூட்டி வந்து நிறுத்தி இருக்கிறான் இவன்.

“ஹையோ ஜில்லுப்பையா உனக்குத்தான் பிறந்த நாள் ஆனா எனக்குல்ல சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் தர” என இவள் அவனை மனதுக்குள் செல்லம் கொஞ்சிக் கொண்டு குதுகலிப்போடு அமர்ந்திருக்க,

“எப்பவும் அலர்ட்டா இரு, மொபைல கைலயே வச்சுரு, லாரில பின் கதவு வெளிப்பக்கமா பூட்டிதான் இருக்கு, இருந்தாலும் கவனமா இரு, உன் கண்ணுல எந்த மனுஷ உருவம் தட்டுப்பட்டாலும் அடுத்த செகண்ட் எனக்கு கால் பண்ணிடு” என பலத்த எச்சரிக்கையோடு ப்ரவி லாரியிலிருந்து இறங்கி அதன் பின் திசை நோக்கிப் போனான்.

அடுத்த பக்கம்