துளி தீ நீயாவாய் 8(3)

அவன் அதை வார்த்தையால் சொல்லாவிட்டாலும் கூட அருகிலிருக்கும் அவளுக்கு அவன் முகத்தை பார்த்தே புரியுமே!

“அஹம் அஹம், ஒரு பையன் பாப்பாக்கு இங்கு கோவம் கோவமா வருதே, எனக்கு ஒன்னுமே புரியமாட்டேங்குதே” என சொல்லி இப்போது இன்னுமாய் அவனை சீண்டி, அது மூலமே இது விளையாட்டுதான் என அவனுக்கு நியாபகப்படுத்தி,

“ஆனாலும் நீ ஏன் இந்த பேச்செடுக்கவும் இவ்வளவு டென்ஷனாகுற?” என சீரியஸாகவே விசாரித்தாள் பவி.

அதே நேரம் அவனுமே அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தான். சட்டென புரிந்தும் போயிற்று. பவி இவனை வேறு யாரோ ஒருத்தியின் காதலாக, வாழ்க்கை துணையாக யோசிப்பதே இவனுக்கு எரிச்சலாகிறது, அவள் இவனை யாருக்கோ தர தயாராக இருக்கிறாளே என்ற புரிதல் சீறச் செய்கிறது.

‘நேத்து வரைக்கும் நீ கூட அப்படித்தான் இருந்த’ என இப்போது அறிவு இவனுக்கு ஆரம்ப பாடம் நடத்தவும், தன் நிலையை நினைத்து சிரிப்பு கூட வருகிறது இவனுக்கு. ஒரே நாளில் ஒரு விஷயம் இவனை இத்தனையாய் கூட மாற்றிப் போடுமா? பந்தாடுமா? பாடாய் படுத்துமா?

அதே நேரம் “என்னதிது நீ பாட்டுக்கு சிரிச்சுட்ட?” என்று வருகிறது அவளது கேள்வி. அதில் விளையாட்டெல்லாம் இல்லை, ‘ஞே’ வகை முழியோடு குழப்பம் போல் பார்த்தாலும் பவியிடம் இருந்தது கலக்கமே!

“ஹேய் என்னாச்சு?” என ஆறுதலாய் விசாரிக்க வேண்டியது இவன் முறையானது.

“இல்ல நிஜமாவே உன் கல்யாணத்த பத்தி நியாபகம் வருது!” என இவன் காதலில் மாட்டி இருக்கிறானோ என தான் சந்தேகிப்பதை தெரியப்படுத்தினாள் அவள். யார் போன் செய்தான்னு கேட்டதுக்கு இப்படி சும்மா சும்மா கோபப்பட்டுட்டு சம்பந்தமில்லாம சிரிச்சும் வச்சா அவ வேற என்ன நினைக்க?

“நினச்சா திகிலா இருக்கு ப்ரவி, உனக்குன்னு வர்ற பொண்ண உனக்கு என்னையவிட அதிகமாதான் பிடிக்கணும், அதுதான் நியாயம், ஆனாலும் யோசிச்சுப் பாரு உனக்கு கல்யாணம்னா எப்படியும் எனக்கும் இந்த பெரியதல கல்யாணம் எல்லாம் செய்து அனுப்பி வச்சுருக்கும், அதுக்கு பிறகு நம்ம வீட்ல எதாவது விழா விஷேஷம்னா உன்ன பார்க்கலாமேன்னு நான் ஆசை ஆசையா வருவேன், ஆனா ‘ஒரு நிமிஷம் பவி, இந்தா இப்ப வந்துடுறேன், அவளுக்கு நம்ம வீட அவ்ளவா தெரியாதுல்லன்னு சொல்லிட்டு நீ உன் வைஃபோட போய்டுவ’ அப்ப எனக்கு எப்படி இருக்கும்னே புரியலையே? கஷ்டமா இருக்கே ப்ரவி யோசிக்க” மனதுள் வந்த காட்சியை அப்படியே சொல்லவும் செய்தாள்.

“பொறாம படுறனோ?” வாய்விட்டு தன்னைத்தானே கேட்டும் கொண்டாள்.

உண்மையில் ப்ரவிக்கு இப்போது உள்ளுக்குள் வந்தது ஒரு ஈர சுகமே! இவனை யாரிடமும் விட்டுக் கொடுக்க முடியாதென அவளுக்கு இப்போதாவது பல்ப் எரியுதே!

“லூசு, நான் பேசினது அபிஜித்ட்ட” என அவன் இப்போது அவளுக்கு ஆறுதல் சொல்லி வைக்க,

அவளோ அதையெல்லாம் சட்டை செய்தது போலவே இல்லை “சே இது அப்படில்லாம் இல்ல, இது பொசசிவ்னெஸ், இதுக்கு என்ன சொல்யூஷன்னும் எனக்கு தெரியும், உன் வைஃப் என் கூடயும் நல்லா பேசி சிரிச்சு இருந்தா இப்படில்லாம் தோணாது.” என தன் நினைவிலேயே தொடர்ந்தவள்

“ஹேய் நினச்சு பாரு அவ என் ஃப்ரெண்ட் உனக்கு வைஃப்… வாவ் ஜாலியா இருக்கும் ப்ரவி… நாங்க ரெண்டு பேருமா உனக்கு செம்மயா ஆப்பு வைப்போம்ல உனக்கும் லைஃப் அம்சமா இருக்கும், ப்ரவி ப்ரவி ப்ளீஸ் ப்ரவி நீ என் ஃப்ரெண்ட் யாரையாவதே கல்யாணம் செய்யேன் ப்ரவி, நல்லா இருக்கும், வாவ் சிந்தி… என் ஃப்ரென்ட் சிந்தியா தெரியும்ல அவளுக்கு போலீஸ்னாலே ஒரு இதுதான், உன்னப் பத்தி எதாவது சொன்னா ஆன்னு தான்டா கேட்பா, நீ மட்டும் லைட்டா அவள லவ் பண்ணு, உங்க கல்யாணத்துக்கு நான் கேரண்டி, ஐயோ நினைக்கவே டக்கரா இருக்குதே! சொல்லிருக்கேன்ல அவ செம்ம டைப்டா” அடுத்தோ இப்படி அவள் ஆரவாரப்பட,

ப்ரவிக்கோ இப்போது தலையில் அடித்துக் கொள்ள வேண்டிய நிலை. மானசீகமாகத்தான். வெளியேயோ அவளை முறைத்தான்.

“சரி சரி படிக்கிற பொண்ண லவ் பண்ணு அது இதுன்னு பேசக் கூடாதுதான், அதுவும் என் ஃப்ரெண்ட நானே சொல்றது ரொம்பவும் தப்புதான், ஆனா நான் யார்ட்ட சொல்றேன்? உன்ட்டதான! உன்ன மாதிரி ஒருத்தன் கிடைக்க அவ கொடுத்து வச்சுருக்கணும் ப்ரவி, அதுவும் உனக்கு தெரியுமா அவ வீட்ல…” என அதே திசையில் விமான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த பவி அவனது முகம் இன்னுமாய் சினத்தைக் காட்டவும்,

“சரி சிந்தி படிப்பு முடியவும் இதைப் பத்தி பேசுறேன்” என முனங்கலாய் பேச்சை முடித்தாள். அதோடு இவனுக்கு பழிப்பம் வேறு காட்டிவிட்டு ஜன்னல் பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.

ஒரு பக்கம் ப்ரவிக்கு அப்பாடா என்று இருக்கிறது என்றால் மறுபக்கம் ‘இந்த ரெட்ட வால கல்யாணம் வரைக்கும் எப்படி சமாளிக்கப் போறேன்?’ என்றும் இருக்கிறது. அனுபவிக்க வேண்டிய அவஸ்தை!

“க்கும் யாரோ லாரில போகணும்னு சொன்னாங்க, கூட்டிட்டு போகலாம்னு லாரிகாரன்ட்டல்லாம் பேசி வச்சுட்டு வந்தேன், இங்க என்னடான்னா பஞ்சாயத்து முடியறதுக்குள்ள பஸ்ஸே கிளம்பிடும் போல…” என அவள் புறம் திரும்பாமலே இப்போது இவன் சொல்ல, வாக்கியத்தை முடிக்க கூட இல்லை இவன் அதற்குள்

“ஏய்ய்ய் என்ன ப்ரவி சொல்ற? நிஜமாவா? ஐயோஓஓ நம்பவே முடியல” என தட புடவென எழுந்த பவியோ

“அதெப்படி ப்ரவி லாரி?” என சந்தோஷ திக்குமுக்காடலுக்கு சென்று,

“சே எத முதல்ல சொல்லணும் எத பின்னால பேசணும்னே தெரியாத உனக்கெல்லாம் என் சிந்தியா? நோ நெவர், அவளுக்கு நல்ல புத்திசாலி போலீஸ்காரன பார்த்து நானே கல்யாணம் செய்து வைக்கேன்” என சிலுப்பியபடி தன் லக்கேஜை எடுத்து சேர்த்துக் கொண்டு இறங்கத் தயாராகிவிட்டாள்.

அதற்கும் இவனுக்கு இதழுக்குள் சிரிப்புதான் வந்து தட்டி நின்றது.

அடுத்த பக்கம்