துளி தீ நீயாவாய் 8(2)

உடல் நிலை முடியவில்லை என்று வேலை செய்யாமல் இருந்தால் கூட அவர் காட்டியது போல சூடிழுத்து விடுவார்களாம்.

“இப்பவும் என் பையன பிடிச்சு வச்சுகிட்டுதான் இங்க என்னை கூட்டிட்டு வந்துருக்காங்க, இங்க எங்க முதலாளி பங்ளால எதோ கட்டுமான வேலை, இப்பதான் முடிச்சோம், அடுத்து என் பையன பார்க்க விடுவாங்கன்னு நினச்சேன், நான் கிளம்புறப்பவே அவனுக்கு உடம்புக்கு சொகமில்ல, ஆனா வேற எங்கயோ மரம் வெட்ட போறதா எங்கள கூட்டிட்டு வந்த கங்காணி சொல்றாருங்க,

ட்ரைவரும் கங்காணியும் டீ அடிக்கதுக்காக எங்க வண்டி இங்க நிக்குது. அப்பதான் வெளிய நடந்தது காதுல விழுந்துச்சி, நீங்க போலீஸ்னு தெரியுது, இரக்கம் உள்ளவரு, யாருக்கும் பாதகம் வராம நூதனமா யோசிச்சு நியாயம் செய்றவரு, அதுக்காக அடுத்த போலீஸாள கூட விடுறதுல்லன்னு புரிஞ்சுது,

உங்களால முடிஞ்சா எங்க குடும்பங்களுக்கு இதுல இருந்து விடுதல வாங்கிக் கொடுங்களேன், முடியாதுன்னாலும் பிரவாயில்ல, ஆனா நான் இப்படி உதவி கேட்டேன்னு எங்க கங்காணிட்ட போட்டு கொடுத்துறாதீங்க சார்”

தன் நிலையை சொல்லிய படி கையெடுத்து கும்பிட்டார் அவர்.

“இங்க உங்க முதலாளி வீட்டுக்கு வந்தோம்னீங்களே அது எங்க இருக்குது? அவர் பேர் என்ன?” எனத் தொடங்கி தேவையான கேள்விகளை கேட்டுக் கொண்ட ப்ரவி பின் மள மளவென வேலையில் இறங்கினான்.

நின்றிருந்த லாரியில் உள்ளே தூங்கியும் விழித்துமாய் கிடந்தவர்களுக்கு சொல்ல வேண்டியதை சொன்னவன், அடுத்து பவி இருந்த பேருந்தை நோக்கிச் சென்றான்.

பவி அது வரைக்கும் தன் மொபைலில் ‘ஊருக்கு வராத ஓட்ட கரண்டிட்ட எனக்கென்ன பேச்சு வேண்டி இருக்கு?’ என்ற வகையான மெசேஜ்களை கருணுக்கு தட்டிவிட்டு சண்டை வளர்த்துக் கொண்டிருந்தவள், அநேகர் பேருந்துக்குள் ஏறி அமர்ந்துவிட்டதையும், ப்ரவி இன்னும் வந்து சேராததையும் உணர்ந்தவளாக ஜன்னல் திரையை விலக்கி ப்ரவியை பார்வையால் தேடத் துவங்கினாள்.

ஒரு கையால் தன் மொபைலை காதுக்கு கொடுத்து பேசியபடி அடுத்த கையை ஃபேண்ட்ஸ் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு எதிர்பட்ட ஒரு சிறுகல்லை காலால் எத்தி எத்தி நகர்த்தியபடி அவன் வந்து கொண்டிருப்பது இவள் பார்வையில் கிடைக்க, ஒரு கணம் ரசிக்க வருகிறது இவளுக்கு.

‘ஸ்டைல் பார்டி’ என அவள் மனம் முனங்கிக் கொண்டாலும் அவளுக்குள் இதமாய் ஒரு ஆனந்தம். அவன் அவனாய் இருக்கும் தருணங்களில்தான் அவன் இப்படி இருப்பான். அந்த இலகு நிலை இவளுக்குப் பிடிக்கும்.

உண்மையில் ப்ரவி அவன் அவனாகத்தான் இருந்தான். இலகு நிலையும்தான். என்ன அவன் பேசிக் கொண்டிருந்த விஷயம்தான் வேட்டையாடு விரட்டி பிடிச்சு விளையாடு ரகம். அதிலும் அவன் அவனாக இருப்பான் என்பது இவளுக்கு எப்படித் தெரியும்?

ப்ரவி தன் நண்பன் அபிஜித்திடம் பேசிக் கொண்டு வந்து கொண்டிருந்தான் என்றாலும் ஒரு கவனம் இவர்கள் பேருந்து மேலும், ஒரு கண்காணிப்பு தூரத்திலிருந்த அந்த லாரியின் மீதும் வைத்திருந்தான்.

அடுத்தெல்லாம் அந்த கங்காணி என அழைக்கப்படும் மேலாளரும் லாரி ட்ரைவரும் லாரியைப் பார்த்துப் போக, திறந்திருந்த பின் கதவு வழியாக அவர்கள் உள்ளே தூக்கிக் கொள்ளப்படுவது தெரிந்தது.

இவன் சொன்னது போல் சத்தமிடாதவாறு அவர்களின் வாய்களும் கை கால்களும் கட்டப்பட்டு உருட்டப் பட்டுவிட்டனர் என்பதன் அடையாளமாய் அந்த மாணிக்கம் இப்போது லாரிக்கு வெளியே வந்து நிற்கும் போது, ப்ரவி இங்கு அபிஜித்திடம் பேசி முடித்திருந்தான்.

பவி தன் மொபைலை ஹேன்ட் பேக்கில் வைத்து மூடிக் கொண்டிருந்த போது அவளுக்கு அடுத்த இருக்கையில் வந்து சரிந்து சவகாசமாக அமர்ந்தான் ப்ரவி. ஏனோ கூடுதலாய் ஒரு இத நிலையும் கொஞ்சமாய் ஒரு குறும்புப் புன்னகையும் வந்து ஒட்டி கொள்கிறது இவனோடு.

“என்ன போலீஸ்கார் டீ வாங்க போறேன்னு சொல்லிட்டு எதோ ‘டி’க்கு வழி செய்றாப்ல இருக்கு?” என அவன் வகை அதே புன்னகையோடு இப்படித்தான் விசாரித்தாள் பவி.

பொண்டாட்டிக்கு வழி செய்றியா என்பதுதான் இந்த கேள்வியின் அர்த்தம் என்று புரிந்த மாத்திரத்தில், அவள் கிண்டல்தான் செய்கிறாள் என தெரிந்தாலும் கூட ப்ரவிக்கு அவன் அவளிடம் பேச வந்த எல்லாம் மறந்து சன்னதாய் எரிச்சல் வந்தது.

“ஏய் என்ன பேச்சு இது? என்னது டி டூன்னு?” கண்டனம் வந்திருந்தது அவன் குரலில்.

“ம் அதுவா? எங்க ஊர்ல wifeனு எல்லாம் வெள்ளக்காரன் கணக்கா சொல்ல மாட்டாங்க போலீஸ்கார், போண்டா டீன்னு எதோதான் சொல்வாங்க, சரியா தெரில, வேணும்னா நம்ம கருண்ட்ட கேட்பமா? இத்தன மணிக்கு நீ ஒரு பொண்ணுட்ட சிரிச்சு சிரிச்சு பேசினன்னு சொன்னா அவன் சரியா சொல்லிடுவான்” இவளுக்கோ அவன் கோபம் இன்னுமே சுவாரஸ்யத்தை தர இன்னுமாய் சீண்டினாள்.

பின்ன இத கூட செய்யலைனா நம்ம ஃப்ரென்ட் கோப்படுறதுல நமக்கு என்ன பிரயோஜனம்?

“கரண்டிக்கும் தெரியலைனா நம்ம ராஜமாதாட்டயாவது கேட்டு சொல்லிடுவான்” என வம்பு வளர்த்தாள்.  அவள் படு சந்தோஷமாகவே பேசுகிறாள், இது விளையாட்டுதான் எனத் தெரிந்தாலுமே ப்ரவிக்கு இன்னுமே எரிச்சல் மண்டிக் கொண்டு போனது.

“யார் ப்ரவி அந்தப் பொண்ணு? இத்தன மணிக்கு கூப்ட்டு பேசணும்னா என்ன அர்த்தம்? விஷ்தானே செய்தா? அப்படின்னா இது கொஞ்சம் சம்திங் சம்திங்தானே” என்று அடுத்து அவள் கேட்டு வைக்க, அவ்வளவுதான் கொதித்து விட்டான் இவன்.

அடுத்த பக்கம்