துளி தீ நீயாவாய் 8(1)

ஆபத்தற்ற அந்த தொடுகையில் இருப்பது நட்புணர்வுதான் என்ற புரிதலோடும், தொடும் கையில் சற்றாக இருக்கும் நடுக்கம் அது உதவி கோரும் செயலாகக் கூட இருக்கும் என்ற எதிர்பார்ப்போடும், ஆனாலும் காவல்துறைக்கே உரிய எச்சரிக்கை உணர்வோடும் திரும்பிப் பார்த்த ப்ரவி,

தன் முன்னால் நிற்கும் அந்த நபரைக் காணவும் ஆபத்தின் வாசனையை அரைப்பதமாய் உணர்ந்தான்.

ஆம் எதிரில் இருந்த உருவம் இவன் மீது பாயவெல்லாம் தயாராக இல்லையெனினும் தன் கீழ் பாதி முகத்தை துண்டால் சுற்றி மறைத்திருந்த வகையில் காரியம் எதுவோ கறுப்பு வகையை சார்ந்தது என இவனுக்குத் தெரிகின்றது.

இவன் பார்ப்பதை உணரவும் அந்த உருவமோ அவசரமாய் வாய் மீது கை வைத்து மௌனம் காக்கும் சைகை காட்ட, சட்டென புரிந்தவனாய் லாரியின் கன்டெய்னர் வகை பகுதியில் சாய்ந்து காது வைத்துப் பார்த்தான் ப்ரவி.

உள்ளே அமைதியாய் அசைவின் சலனங்கள்.

அதற்குள் இவன் முன் முழு இருளில் நின்றிருந்த அந்த உருவம் சற்றாய் நகர்ந்து சின்னதாய் வெளிச்சம் கசிந்து கொண்டிருக்கும் பகுதியில் திரும்பி நின்று கொண்டு சட்டென தன் சட்டையின் பின் பக்கத்தை தூக்கிக் காட்ட, அங்கு அந்த நபரின் முதுகில் காணக் கிடைக்கிறது முதுகு நீளத்திற்குமான ரோஜா நிற தழும்பு.

சூடிழுக்கப்பட்டு காயம் ஓரளவு ஆறியதும் விழும் தழும்பு அது ப்ரவிக்கு புரியாமல் இல்லை. அடுத்து அவர் எதுவும் சொல்லும் முன்னும் சற்று தொலைவில் கண்ணில் பட்ட கிளைச்சலையை நோக்கி நடக்கத் துவங்கிவிட்டான் அவன்.

லாரியின் சரக்கு ஏற்றும் பகுதிக்குள் ஆட்கள் இருக்கிறார்கள், அதனால் பேச மறுக்கிறார் அந்த நபர், ஆக மறைவான இடத்தில் பேசுவாராக இருக்கும் என அவன் அங்கு செல்ல, அதே போல் இவனை பின் தொடர்ந்து வந்த அவர் அங்கு செல்லவும் கடகடவென விஷயத்தை கொட்டி வைத்தார்.

அவர் பெயர் மாணிக்கமாம். திருப்பூரில் சின்னதாய் கடை வைத்திருந்தாராம். ஒரு மகன் மற்றும் மனைவிதான் அவரது குடும்பமாம். சில வருடங்களுக்கு முன்பு நோயில் அவரது மனைவி இறந்து போனாராம். வைத்திய செலவுக்காக கடன் எல்லாம் வாங்கி முயன்றிருப்பார் போலும்.

இறுதியில் மனைவியின் இறுதிச் சடங்கு செய்யவே கையில் பணம் இல்லா நிலை. கடன் கொடுத்தவர்கள் கடையிலிருந்த சாமான் வரை அதற்கு முன்பே எடுத்துப்போய்விட்டார்கள் போலும். ஆக இந்த சூழ்நிலையில் ஒருவர் ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்து, இந்த கடனை எங்கள் வயலில் வந்து வேலை பார்த்து அடைத்துவிடு என்று உதவி செய்தாராம்.

கடனும் கூடவே வேலையும் கிடைக்கிறதென இவர் வேலைக்கு சென்றிருக்கிறார். திருப்பூரிலிருந்தவரை திருக்கழுகுன்றம் கூட்டிப் போயிருக்கிறார்கள். அங்கு சென்றதும் ஆறாம் வகுப்பு அப்போதுதான் முடித்திருந்த இவரது மகனையும் கட்டாயமாக அங்கு வேலை செய்ய வேண்டும் என்றுவிட்டார்களாம்.

இவர் மறுத்ததற்கு கடன் அடையும் வரை நாங்கள் சொல்வதைத்தான் நீ செய்தாக வேண்டும் அதுவரை உன் மகன் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருப்பான் என மிரட்டி இருக்கிறார்கள்.

அவர்களை எதிர்க்க வழியற்ற இவர் ஆயிரம் ரூபாய்தானே, அடையவும் மகனை கூட்டிக் கொண்டு வேறு வேலைக்கு போய்விடலாம், அவனை படிக்க அனுப்பிவிடலாம் என ஒருவாறு தன்னைத் தேற்றிக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

ஏறத்தாழ ஆறு வருடமாக அவரும் அவர் மகனும் அங்கு வேலை செய்கிறார்களாம், இன்னும் ஆயிரம் ரூபாய்க்கு வட்டி கூட கட்டியாகவில்லை என்கிறார்களாம் இவர்களை பிடித்து வைத்திருப்பவர்கள்.

இவர் மட்டுமல்ல இப்படி இருபது குடும்பத்துக்கும் மேல் அங்கு மாட்டி இருக்கிறார்களாம். இவர்களை உள்ளூரில் உள்ள செங்கல் சூளைக்கோ அல்லது வெளியூருக்கு கரும்பு வெட்ட, மரம் வெட்ட என வேலைக்கு கூட்டிப் போவார்களாம். ஆனால் இவர்கள் எங்கு போனாலும் குழந்தைகள் உள்ளூரில் உள்ள செங்கல் சூளையில்தான் வேலை செய்தாக வேண்டுமாம்.

இப்படி குழந்தைகளை பிணயக் கைதியாக வைத்து இவர்களை கூலி இன்றி கொத்தடிமையாக வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார்களாம்.

அடுத்த பக்கம்