துளி தீ நீயாவாய் 3 (4)

பெங்களூர்

இரவு மணி 8.

அந்த பார்மசி கம்பெனி குடோன் ராட்சஸ அளவில் நீள அகலமாய் இருக்கிறது. உள்ளே சின்னதும் பெரிதுமாய் பல பல பெட்டிகளிலும், பெரும் பெரும் குளிர்பதன சாதனங்களிலிலும் வகை வகையாய் கோடிக் கணக்கான பண மதிப்புடைய மருந்துகள்.

வேலை முடிந்து அனைவரும் கிளம்பிப் போயாகிவிட்டது இப்போது முழு குடோனும் இந்த செக்யூரிட்டி மஞ்சுநாதன் பொறுப்பில் இருக்கிறது..

கடைசியாக கிளம்பிச் சென்ற ஸ்டாக் மேனேஜர், குடோனின் ஷட்டர்களை இறக்கி பெரும் பெரும் பூட்டுக்களால் பூட்டி, அதன் சாவிக் கொத்தை தானே எடுத்துச் செல்வதை பார்த்துக் கொண்டிருந்த மஞ்சுநாதன்,

அடுத்து குடோன் அருகில் வெளியே வாசல் படியில் அமர்ந்து தன் மொபைலில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆள் நடமாட்டம் என்பது இத்தனை மணிக்கே இந்தப் பகுதியில் அரிதிலும் அரிது.

இதில் சம்பந்தமில்லாமல் வந்து ஆஜராகியது பவர்கட்.

கொஞ்சமாய் இவரை பதற்றம் தொற்றிக் கொண்டது. ப்ரச்சனை ஆவதற்கு இங்கு எதுவும் இல்லை என்றாலும் இந்த இருட்டே கொஞ்சம் சங்கடம்தானே!

இதில் இப்போது “ஹரே செக்யூரிட்டி சாப்” என்று வந்து நின்றான் ஒருவன். தூக்கி வாரிப் போட்டது இவருக்கு.

இருந்த குளிருக்கு hooded jacket அணிந்து தலை முதல் மறைத்திருந்தான். பத்தாத பாக்கிக்கு தலையை சுற்றி ஒரு மப்ளர் வேறு.

அதற்குள் அவனோ தன்னை EB லைன் மேன் என அறிமுகம் செய்து கொண்டே இவரை நோக்கி வந்தவன், “சின்னதா வேலை போய்ட்டு இருக்கு, இன்னும் அரை மணி நேரத்தில் கரென்ட் வந்துடும்” என கன்னடத்தில் சொல்லி ஆறுதலும் தந்தான்,

“தீப்பெட்டி கிடைக்குமா?” அந்த மஞ்சுநாதனிடம் விசாரிக்கவும் செய்தான். அருகில் வந்து நின்ற அவனை இருட்டில் பார்க்க முயன்றபடியே தன் தீப்பெட்டியை எடுத்து நீட்டினார் அவர்.

உல்லன் க்ளவ்ஸ் அணிந்திருந்த தன் கையால் அதை வாங்கிக் கொண்ட அவன் தன் பாக்கெட்டில் இருந்து இரெண்டு சிகரெட்களை எடுத்தவன் “வேணுமா?” எனக் கேட்டபடி ஒன்றை இவருக்குத் தர,

இவரும் வாங்கிக் கொண்டார்.

தன்னுடைய சிகரெட்டை பத்த வைத்து கை விரல்களுக்கு இடையில் வைத்துக் கொண்டே இவர் அருகில் அவன் நட்பாய் அமர்ந்து கொள்ள,

மஞ்சுநாதன் தனக்கு கிடைத்த சிகரெட்டை பற்ற வைத்து புகைக்க துவங்கினார்.

இருந்த குளிருக்கு முதல் இழுப்பிலேயே ஏதோ ஏகாந்தமாய் ஒரு நிலை.

ஒரு கணம் அதைப் பார்த்த அந்த மப்ளர் மனிதன், அப்போதுதான் நியாபகம் வந்தவன் போல

“உங்க மொபைல் தர முடியுமா ஒரு கால் செய்துட்டு தரேன், போஸ்ட்ல வேலை செய்துகிட்டு இருக்கப்ப என் ஃபோன் கை தவறி கீழ விழுந்துட்டு” என மொபைலை இரவல் கேட்டான்.

மஞ்சுநாதன் கொடுக்கவா வேண்டாமா என சற்று குழப்பமாய் யோசிக்கத் துவங்கிய நொடி ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான் அவன்.

“ரெண்டு நிமிஷம்தான் பேசுவேன், ஆஃபீஸுக்கு பேசினாதான் கரென்ட் வரும்” எனவும் சொல்ல,

மஞ்சுநாதனுக்கு ஃபோனில் அன்லிமிடட் கால்ஸ் ஃப்ரீ. அதுக்கு 50 ரூபா கிடைக்குதுன்றப்ப ஏன் விட என தோணும்தானே, பணத்தை வாங்கிக் கொண்டே தன் மொபைலை இரவல் கொடுத்தார்.

புகையும் சிகரெட்டை வைத்திருந்த கையாலயே மொபைலை வாங்கி எண்ணை அழுத்தத் தொடங்கியபடியே சற்று அகன்று சென்றான் அவன்.

பத்து பதினைந்து நிமிடம் கழித்து அவன் திரும்பி வரும் போது தரையில் படுத்தபடி தனக்கு மட்டுமே காணக் கிடைத்த ஏதோ மாய ரூபிகளிடம் மனதிற்கு பட்டதை பேசிக் கொண்டிருந்தார் மஞ்சுநாதன்.

ஆம் முழு போதையில் இருந்தார் அவர். அந்த சிகெரெட்டில் இருந்தது போதை வஸ்தாயிற்றே

பாளையம் கோட்டை

இரவு 9 மணி.

பவி அடுத்த அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொள்வதை பார்த்துவிட்டு தன் அறைக்குள் வந்து படுக்கையில் விழுந்த பரிசுத்தனின் மொபைல் சிணுங்கியது.

முன்ன பின்ன தெரியாத நம்பர். இவன் இணைப்பை ஏற்க

“வணக்கம் தல” சொன்னவன் தன் தலைக்கு மேல் கை கூப்பிக் கொண்டிருக்கிறான் என்பது போல் அத்தனை உற்சாகம் பவ்யம் மரியாதை ஆசை என எல்லாமாக வருகிறது அந்த வணக்கம்.

கூடவே காதில் விழுகிறது யவரிஹா என எதோ பின்னணி இசை. அம்சமான பீட் .

அவசரமாய் அந்த அழைப்பை ரிக்கார்ட் செய்ய வைத்துக் கொண்டே, தன் அறையிலிருந்த லேண்ட் லைனில் காவல்துறையின் கன்ட்ரோல் ரூமை அழைக்க,

இங்கு அழைத்தவன் மொபைலில் “இருபது வருஷம் பறவையைப் போல சுற்றித் சுற்றித் திரிந்தேனே…” பாட்டு வரி பின்னணியில் ஒலிக்க,

“தல எனக்கு இன்னைக்கு பெர்த்டே, நல்ல மனுஷன்ட்ட இருந்து விஷ் வாங்கணும்னு தோணிச்சு, அதான் அதுக்காக மட்டும்தான் இந்த டைம் இந்த ப்ராஜெக்டுக்கு ஒத்துக்கவே செய்தேன், விஷ் மீ தல” என்கிறது அழைத்தவன் குரல்.

“பை த வே உனக்கு கல்யாணமாமே, ரொம்ப ரொம்ப சந்தோஷம், இதுக்கு நான் கிஃப்ட் கொடுக்கலைனா எப்படி? என்ன நான் கொடுத்தா நீ வாங்க மாட்ட, வாங்கினா உன் டிபார்ட்மென்ட் வேற உன்ன போட்டு தொலச்சுடும்.

அதான் உனக்கு கிஃப்ட் செய்யணும்னு நினச்ச ஈரோப் ட்ரிப் டிக்கெட் ரெண்ட, இங்க பக்கத்துல அடுத்த ஊருக்கு கூட போகாத ஒரு வசதியில்லாத கப்பிள் இருந்தாங்களா அவங்களுக்கு கொடுத்து ஜோரா எஞ்சாய் பண்ணிட்டு வாங்கன்னு அனுப்பி வச்சுருக்கேன்,

இத கேட்கவும் கண்டிப்பா நீ சந்தோஷப்படுவன்னு ஒரு நம்பிக்கைதான்

கூடவே மூனு ஆர்ஃபனேஜ்ல சாப்பாடு போட்டுருக்கேன் உன் மேரேஜ்காக, எப்பவும் நீ நல்லாதான் இருப்ப தல, ஆனா என் விஷயத்துல மட்டும் தோத்துப் போய்டு என்ன?

நீயும் நல்லா இருக்கணும், நானும் நல்லா இருக்கணும் எனக்கு அதுதான் வேணும்,

Miss you bro, catch you later”

அதோடு அழைப்பு முடிய,

அடுத்து வந்த நேரங்களில் அழைப்பு வந்த எண் மற்றும் மற்ற தகவல்களை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை ஆராய்ந்து பெங்களூர் காவல்துறைக்கு அந்த பார்மஸி குடோனுக்குச் செல்ல தகவல் கொடுக்க,

இரவு பத்து மணிக்கு அந்த குறிப்பிட்ட குடோனுக்கு காவல்துறையினர் சென்று சேரும் போது, அபின் பிடியில் இருந்த மஞ்சுநாதன் கை கால் கட்டப்பட்டு தரையில் உருட்டப்பட்டிருந்தார். இன்னும் தெய்வமற்ற ஒரு சொர்க்கத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்.

அவர் மொபைலைக் காணவில்லை. ஆனால் ஒரு பெரிய ஹெட் செட் அவர் காதுகளில் அமர்ந்திருந்தது.

குடோனின் பூட்டுகள் சின்ன உராய்வு கூட இன்றி அப்படியே இருக்க, குடோனின் கதவை திறந்து பார்த்தால் உள்ளே ஒன்றும் ஆம் ஒன்றுமே இல்லை. உள்ளிருந்த மருந்துகளும், குளிர் பதன சாதனங்களும் அப்படியே மாயமாய் மறைந்திருந்தன.

குடோனுக்குள் எப்படி அந்த திருடன் நுழைந்தான் என்றும் தெரியவில்லை,

குடோனைச் சுற்றிலும் எங்கிருந்தும் எந்த வாகனமும் வந்து போனதற்கான அடையாளம் துளியும் இல்லை என்பதால் டன் கணக்கில் எடையுள்ள மருந்துப் பெட்டிகளை எப்படி எடுத்துச் சென்றிருப்பான் என்றும் புரியவில்லை.

முழுப் புதிர்.

தொடரும்…

துளித் தீ நீயாவாய் 4

 

16 comments

  1. yen ippadi? konjam kooda guess panna mudiyaama kadhai poyitu irukku.pavi, pravi than hero va? illai andha caller herova? enna nadakkudhu inge.. mandaiya piching .. sweet update sweety sis

Leave a Reply