துளி தீ நீயாவாய் 3 (3)

இவர்கள் திருமணத்தில் பெண் வீட்டிலிருந்து கொடுக்கப்படும் பலகாரப் பெட்டிகளுக்காக கொடுத்தனுப்பப்பட்டவை அவை.

லட்டு அதிரசம் முறுக்கு என ட்ரெடிஷனல் பலகாரம் முதல் காஜு கத்லி, சிரோட்டி, என என்னதெல்லாமோ வகைக்கு ஐநூறாவது இருக்கும், வாங்கி வந்து வைக்கப் பட்டிருந்தன.

“இதெல்லாம் பவி என்னைக்குடா சாப்ட?” என இவன் கருணிடம் முனங்கியதற்கு

“அவ ஒரு நாள்ல தெருல உள்ள எல்லோரையும் ஃப்ரென்ட் பிடிச்சுருவாளே!  அவங்களுக்கெல்லாம் கொடுப்பா” என பதில் கொடுத்தது இவனது அண்ணன். அடுத்து இவன் என்னதைச் சொல்ல என விட்டுவிட்டான்.

முன்பிருந்த பவியானால் அது உண்மைதான். இப்படி முடங்கிக் கிடப்பவள் இதையெல்லாம் எங்கு யோசிக்கப் போகிறாள்? பூஞ்சணம் பிடிச்சு தூரப் போடுறாப்ல ஆகிடுமே! என இவன் நினைத்தற்கு,

இப்போது வேணியிடம் “ஹேய் வேணி கேர்ள், இதுல எது பிடிக்குமோ அதை ஒரு கை பாரு, அதுக்குள்ள டின்னர் ரெடி செய்துடுவேன், என்னடா நம்மள வேலைக்கு எடுத்துட்டு இவ வேலை செய்றாளேன்னு யோசிக்காத, நாளைக்கு காலைல முதல் வேலை இந்த ஸ்னாக்சல்லாம் நாம இங்க பக்கத்துல உள்ளவங்களுக்கு டிஸ்ட்ரிப்யூட் செய்றோம், அதுல மெயின் ரோல் உனக்குதான்” என சொல்லிக் கொண்டிருந்தாள்.

அதற்கு “அக்கா ஸ்வீட் ஷாப்பா வச்சுருக்கீங்க? ஹோம் டெலிவரி செய்றதுதான் என் வேலையா? சூப்பர்கா, PAனதும் எங்க பெர்சனல் அசிஸ்டென்டோன்னு தப்பா புரிஞ்சுகிட்டேன்” என்றது அந்த வேணி அப்பாவியாய்.

அதற்கு பவி “அஹம் அஹம், ஆமா ஆமா ஹோம் டெலிவரிதான், ஆனா ஹோம் ஹோமா டெலிவரி, அடுத்து ஸ்வீட் ஷாப்… அது உழச்சு சம்பாதிச்சு இனிம தான் வைக்கணும்” என்றாள் சிரிப்புடன்.

அவள் கிண்டல் செய்கிறாள் என்பது வேணிக்கும் புரியும்தானே, அவள் இப்போது ஒரு வித அசடு வழிதல் பார்வை பார்த்தவள் “இது பலகாரப் பெட்டியாக்கா? சாரி நான்” என தன் புரிதலை வெளியிட்டாள். என்ன சொல்லவென்றும் அடுத்து வேணிக்கு தெரியவில்லை போலும்.

“புடவை கட்டி இருக்றத பார்க்கவும் என்னை ஆன்ட்டின்னு நினச்சுட்டியோ, உன்னைவிட ஜஸ்ட் ஐஞ்சு வருஷம்தான் பெரியவ நான், காலேஜ் முடிச்சு ஒன் மந்துக்குள்ள கல்யாணம் செய்து வச்சுட்டாங்க, கல்யாணம் ஆகி 5டேஸ்தான் ஆகுது” என எளிதாக தன் பக்கத்தைச் சொன்னாள் பவி.

வேணியை வீட்டில் வைத்திருக்கும் முடிவு கொஞ்சமே கொஞ்சம் ப்ரவிக்கு பிடிக்கத் தொடங்கியது இங்குதான்.

இறுகிப் போய் கிடக்கும் பவி இத்தனை கலகலப்பாவாள் எனில், வீட்டுக்கு போகச் சொன்னா செத்துடுவேன்ற வேணி இலகுவாக இந்த சூழல் உதவும் என்றால் சில நாட்கள் இந்த PAவுடைய விவசாயி கதை தொடர்ந்தால் என்ன என்று தோன்றியது அவனுக்கு.

வேணி ஆபத்தானவளா இல்லையா என்பதில் இருந்து, பிள்ளையை காணாமல் அவள் பெற்றோர் எப்படி தவித்துக் கொண்டிருப்பார்கள் என்பது வரை ஆயிரம் விஷயம் அவன் கவனத்தில் இருந்தாலும் இதை கையாண்டு பார்க்க எண்ணினான் அவன்.

வேணியின் வீட்டை பற்றி தெரிந்தே விட்டாலும் அவள் இருக்கும் மனநிலையில் கட்டாயப் படுத்தி அனுப்பி வைப்பதும் ஆபத்துதானே! பவியுடன் இருந்தால் அவளுக்கும் ஒரு டைவர்ஷன். உலகம் ஒன்னும் முடிஞ்சு போய்டலன்னு தெரிய வரும்தானே!

“வேணி” என அவன் இப்போது அழைத்த அழைப்பு பவி காண்பிக்கும் நட்பிலிருந்து 100% எதிரடையான உணர்வை தாங்கி இருந்தது.

“சா… சார்” என மிரண்டு போய் பதில் கொடுத்தாள் வேணி.

“நான் சார்னா என் வைஃப நீ எப்படி கூப்டணும்?” இவன் அதே அதிகார மிடுக்கில் கேட்க,

சிறு யோசனைக்குப் பின் “மே’ம்” என முனங்கலாய் வந்தது வேணியின் பதில்.

“ம் அப்படித்தான் அவளக் கூப்டணும்” என இப்போது கட்டளை கொடுத்த ப்ரவி, தன்னவள் புறம் திரும்பி

“அவ உன்ட்ட வேலைக்குத்தான் வந்திருக்கான்னு அவளுக்கு எப்பவுமே தெரியணும், அம்மா அப்பாவ விட்டு ஓடி வந்துட்டா எல்லாமே ஈசியா போய்டும்னு அவ மனசுல பதிஞ்சுடக் கூடாது” என தன் பக்க காரணத்தை  சொல்லிவிட்டு திரும்பவும் வேணியை முறுகிய ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுத்த அறைக்கு போனான்.

கடந்து செல்பவன் முதுகையே ஓரிரு நொடிகள் பார்த்து நின்ற பவித்ரா,

முகம் கூம்ப நெற்றி சுருக்கி சற்றாய் குனிந்த தலையோடு நின்றிருந்த வேணியிடம்,

“மேம்னு கூப்டுறதுல என்ன கஷ்டம் உனக்கு” என்றாள் சாதாரணக் குரலில்.

அதாவது மேம் என கூப்பிடு என்கிறாள்.

அடுத்த அறையில் இருந்த ப்ரவியின் காதில் இது விழ சின்னதாய் குமிழியிட்டது ஒரு குட்டிப் புன்னகை அவனிடம்.

அடுத்ததாய் அவனிருந்த இடத்திலிருந்து சற்றாய் சின்ன குரலில் பேசியபடி பெண்கள் இருவருமாயும் சமையலறையில் வேலை செய்வதை பார்த்தபடியே தன் அலுவலகத்துக்கு வேணி பற்றிய தகவல்களை அனுப்பி அவளைப் பற்றி விசாரிக்கச் சொன்னான்.

அதோடு நாலைந்து நாளைக்குத்தான் எனினும் வேணியோடு பவியை எந்த  நம்பிக்கையில் தனியாய் விட, ஆக வீட்டு வேலைக்கு என காலையும் மாலையும் நாளை முதலே வீட்டுக்குள் வேலை செய்ய என ஒரு பெண்ணையும்,

வயல் வேலைக்கு என வயலில் தங்கி இருந்து வேலை செய்ய என ஒரு குடும்பத்தையும் ஏற்பாடு செய்தான் இவனுக்கு தெரிந்த தலைகள் மூலமாக.

அடுத்து சற்று நேரத்திற்கெல்லாம் இரவு உணவு மேஜைக்கு வந்தது இவனுக்கும் சேர்த்து. இதை இவன் முழுவதுமாகவே எதிர்பார்த்தான். பவிதான் இவர்களுக்குள் இருக்கும் சடுகுடு ஆட்டத்தை வேணியிடம் காட்டிக் கொள்ள விரும்பவில்லையே!

இவன் இருக்கும் இடத்துக்கு வர மறுத்து ஒதுங்கிப் போய் நின்ற வேணியை “ஒழுங்கா வந்து சாப்டுட்டுப் போ” என்ற இவனது ஆஃபீஸர் குரல் கொண்டு வந்து அமர வைக்க, குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டு முடித்தாள் அவள்.

“இப்ப மாடில இருக்க ரூம்ல தங்கிக்கட்டும் வேணி, அடுத்து தேவைனா பக்கத்தில் எதாவது ஹாஸ்டல் போல பார்ப்போம்” என்றான் இவன்.

வேணி தன் பெற்றோரிடம் திரும்பிப் போக முடியாதது போல் நியாயமாகவே எதாவது காரணம் இருந்தால், அப்போது வேணிக்கு போக்கிடம் இல்லை என்ற உணர்வு வந்துவிடக் கூடாது என்பதற்காக சொன்னது இது.

பவி இவனை ஒரு விதமாய் நிமிர்ந்து பார்த்துக் கொண்டாள் எனில், வேணியோ பவ்யமாய் தலையாட்டியபடி சின்னதாய் “தேங்க்ஸ் சார்” என்றாள்.

பழைய பாணி வீட்டை புதுப்பித்துக் கட்டியது இவர்கள் இருக்கும் வீடு.

சின்ன சின்னதாய் இரண்டு படுக்கை அறைகளும் பெரிய வரவேற்பறையுமாய் கீழ் தளம். மாடியில் இருக்கும் இரு அறைகள் புதிது. வேணியை அங்குதான் தங்கச் சொன்னான் பரிசுத்தன்.

தரை தளத்தில் வெவ்வேறு அறைகளில் இவனும் பவியும் தங்குவது  யாருக்குமே தெரிய வேண்டாம் எனதானே பவியே நினைப்பாள். இவனும்தான்.

முதல் ஆளாய் சாப்பிட்டு முடித்துவிட்ட வேணி, அப்போதே விடை பெற்றுக் கொண்டு மாடிக்குச் சென்றுவிட,

“PA வச்சுருக்க ஒரே விவசாயி நீதான் பவிமா” என பவித்ராவை கிண்டலடித்தபடி எழுந்தான் ப்ரவி.

“பைக்குக்கு ட்ரைவர் வச்சுருக்க ஒரே ஆள் கூட நானாதான் இருப்பேன், அது போல இதுவும் இருந்துட்டு போட்டும்” என்றபடி எழுந்து போனாள் இவன் மனைவி.

இவன் கூட புல்லட்டில் வந்ததைத்தான் அப்படி சொல்கிறாள். அதாவது இவன் அவளுக்கு வெறும் ட்ரைவர்தானாம்.

அதையும்தான் பார்ப்போமே!

அடுத்த பக்கம்