துளி தீ நீயாவாய் 3 (2)

வேணி பசி மயக்கம் என்றதிலேயே பாதிக்கும் மேலாய் நொருங்கி இருந்த பவித்ராவோ இந்த தற்கொலை வார்த்தைகளில் என்ன ஆவாளாம்? அதோடு திக்கற்றவளாய் உணரும் தருணம் எப்படி இருக்கும் என பவியை விட இந்த நொடி யாருக்கேனும் அதிகம் தெரியுமா என்ன?

“ப்ச் என்ன நீ? இப்படியெல்லாம் பேசிகிட்டு? அவங்க சாதாரணமா கேட்டாங்க அவ்ளவுதான். அரெஸ்ட்னு எங்க சொன்னாங்க? உனக்கு வீட்டுக்குப் போக பிடிக்கல அவ்வளவுதானே! அப்படின்னா வேலை தேடப் போறியா? நான் வேலை தந்தா செய்வியா? நான் வேலைக்கு ஆள் தேடிட்டு இருக்கேன்” எனச் சொல்லி மொத்த பேச்சின் திசையை திருப்பினாள் அவள்.

பவியின் வார்த்தையில் முழு மொத்தமாய் குழம்பிப் போய் அவளைப் பார்த்தான் அவள் கணவன்.

இவன் வீட்டு குத்துவிளக்கு வேதாளமாகி முருங்க மரம் ஏறுதா? இல்ல விக்ரமாதித்தனா மாறி  மரத்தில இருக்க வேதாளத்தை கீழ இறக்குதா?

வேலைக்கு போவேன்னு அவ செய்ற அடாவடிக்கு துணை சேர்க்காளா? இல்ல இப்போதைக்கு இந்த பொண்ணோட தற்கொலை எண்ணத்தை டைவர்ட் செய்றாளா?

“கைல சர்டிஃபிகேட்ஸ் எதுவும் இருக்க மாதிரி தெரியலையே! எடுத்துட்டு வரலையா?  டென்த் ரிசல்ட் வந்துட்டுதான?” அங்கோ பவி தொடர, அவள் வாயிலிருந்தே தகவல்களை பிடுங்க முயல,

“இல்லக்கா நான் ட்வெல்த்” என வேகமாக ஆரம்பித்த வேணி “படிச்சுகிட்டு இருந்தேன், பரீட்ச எழுதல” என முனங்கினாள்.

அதன் தொடர்ச்சியாக “கண்டிப்பா வேலை தாங்கக்கா, எந்த வேலைனாலும் நல்லா செய்வேன், ஆனா வீட்டுக்கு மட்டும் போக சொல்லிடாதீங்க” என கெஞ்சவும் துவங்கினாள், அதுவும் ப்ரவியை ஒரு பயந்த பார்வை பார்த்துக் கொண்டே.

எங்க இவன் வேண்டாம்னு சொல்லிடுவானோ என்ற வகை முழி.

அதற்கு பவியோ “ப்ச் அவங்களப் பார்த்து நீ ஏன் இவ்ளவு பயப்படுற? அவங்க ரொம்ப ஃப்ரென்ட்லிபா, அதுவும் குழந்தைங்கட்டல்லாம் ரொம்பவுமே கேரிங்கா இருப்பாங்க, உன் சேஃப்டிக்காகத்தான் உன் வீட்டப் பத்தி கேட்டாங்க” என வேணியை சமாதானப்படுத்த முயன்றாள்.

இருந்த அத்தனை நிலையிலும் ஒரு மெல்லிய புன்னகை வந்து சேர்ந்தது ப்ரவியின் இதழ்களுக்கு. என்னமா இவனுக்கு கொடி பிடிக்குது இவன் வீட்டு குத்துவிளக்கு?!

இதற்குள் இவன் புறமாய் திரும்பி இருந்த இவன் மனைவி முகத்தில் இவன் புன்னகை பட்டு வைக்க, அவன் சிரிப்பின் காரணம்தான் அவளுக்கு யோசிக்காமலே புரியுமே,

அதில் எண்ணெய் இன்றியே அவள் முகம் கடுகு வெடிக்க, இவனுக்கு வெகு அருகில் வந்தாள் இவனை தாளிக்க.

“ஒரு சின்னப் பொண்ணு பயந்துடக் கூடாதேன்னு சொல்லி வச்சா, அதுக்குப் போய்..” சிறு குரலில் அந்த வேணிக்கு கேட்காத வண்ணம் சீறினாள்.

“சூப்பர்டா பவிப் பொண்ணு நீ புத்திசாலி” என்றான் சிரித்தபடி இவன். சீண்டத்தான்.

அத்தனை அளவு இலகு மனநிலைதான் இவனுக்கு இப்போது.

அதற்கு இன்னுமாய் உர்ர்ர் அவதாரம் எடுத்தவள்,

சற்று நேரம் வேணி இங்கு இவன் வீட்டில் இருக்கட்டும், அதற்குள் ஷ்டேஷனுக்குச் சொல்லி அவளைப் பற்றி விசாரித்துவிட்டால், பவியை வைத்தே பேசி வேணியை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என இவன் எண்ணி இருந்ததை அறிந்தவள் போல்,

“இன்னைல இருந்து வேணி என் PA” என அதற்கு எதிர்பதமாய் முடித்தாள் இவனது மனைவி. போட்டுத் தாக்கினாள்.

அதிர்ந்து போவான்தானே இவன்?!

அடப் பாவமே அப்ப இவனோட குத்துவிளக்கு வேதாளமாதான் மரம் ஏறிச்சா?

“வாட்?” என்றான் வாய்விட்டு.

பின் வேணியின் காதில் விழுந்துவிடா குரலில் “என்ன பவி? அந்தப் பொண்ணு யாரா வேணாலும் இருக்கும், நான் இப்ப ஹேண்டில் செய்ற கேஸ் சம்பந்தம்மா நம்மள போட்டுத் தள்ள வந்தவளா கூட இருக்கலாம், நீ பாட்டுக்கு விவரம் புரியாம பிடிவாதம் பிடிக்க” என இவன் நிலையை விளக்க,

பவியோ “பார்த்தியா வேணி கேர்ள், ஒரு சூப்பர் சூப்பிரெண்டாஃப் போலீசே சூப்பர்னு சொல்லிட்டாங்க, நீ இப்ப இருந்து எனக்கு PA, இங்க நம்ம வீட்லயே தங்கிக்கலாம்” என அந்த வேணியைப் பார்த்து சிரிக்க சிரிக்க சொல்லிக் கொண்டே சென்று கொண்டிருந்தாள்.

அதோடு வேணியின் கை பற்றி இவர்களது வீட்டுக்குள் கூட்டிக் கொண்டும் போயாச்சு.

பின்னாலயே வீட்டுக்குள் நுழைந்த ப்ரவியின் கண் முன்பாகவே வேணியை அழைத்துப் போய் இவர்கள் வீட்டு சாப்பாட்டு அறையின் ஒரு ஓரத்தில் அடுக்கப்பட்டிருந்த பெரும் பெரும் எவர்சில்வர் குத்து சட்டிகளை காண்பித்தாள் பவித்ரா.

அடுத்த பக்கம்