துளி தீ நீயாவாய் 3

பவிக்கு வேணியை கையில் அள்ளும் போதே வேணிக்கு வெளிக்காயம் எதுவுமில்லை என தெளிவாக புரிந்தது. அப்படியானால் இது தற்கொலை முயற்சியா? என சம்பந்தமில்லாமல் தெறிக்கிறது ஒரு எண்ணம்.

காலையில் பார்த்த அவள் முகம் ஒன்றும் சரியாய் இருந்தது போல் இல்லையே!

அதோடு இதென்ன இந்த வேணி 10 அல்லது 11 படித்துக் கொண்டிருப்பாளா? இதில் யாரோடோ வீடெடுத்துக் கொண்டு இங்கு வர இருந்ததாகச் சொன்னாளே? இத்தனை சிறிய பெண்ணை இப்படி அனுப்புவார்களா பெற்றோர்கள்? பக்கத்தில் பள்ளி கல்லூரி போல கூட எதுவுமில்லையே?

இவள் இப்படி எண்ணி முடிக்கும் முன்பாகக் கூட இவள் தொடுகை உணர்வாலோ என்னவோ மெல்ல கண்விழித்துக் கொண்டாள் அந்த வேணி.

அதோட முடிந்தவரை சமாளித்துக் கொண்டு எழுந்து உட்காரவும் முயன்றாள்.

இதற்குள் அங்கு  ப்ரவி வந்திருக்க, வேணியை ஒரு பார்வையால் அவனிடம் ஒப்படைத்துவிட்டு, அடுத்த வீடுதானே இவர்களது, அங்கு சென்று நீரும், ஃப்ரிட்ஜிலிருந்த குளிர்பான பாட்டில் ஒன்றையும் எடுத்துக் கொண்டு வந்தாள் பவி.

சற்று தயக்கமாகப் பார்த்தாலும் அதை வாங்கிப் பருகிய வேணி, அதோடு எல்லாம் முடிந்தது என்பது போல் உடையில் பட்டிருந்த மண்ணை தட்டிவிட்டுக் கொண்டு கிளம்பத் தயாராக,

“ரொம்ப தேங்க்ஸ்” என விடை பெற யத்தனிக்க,

“உன் அம்மாப்பா எங்க இருக்காங்க? இங்க என்ன செய்ற நீ?” என தன் உத்யோக தொனியில் துவங்கினான் ப்ரவி.

அவ்வளவுதான் ஏற்கனவே கூம்பிப் போய் கிடந்த வேணியின் முகம் பேயறைந்தது போல் ஆகிற்று.

“ஏ… ஏன்? எதுக்கு கேட்கிறீங்க? நா… நான் ஒன்னும் தப்பு செய்யலையே? இது வெறும் பசி… பசி மயக்கம். ரெண்டு நாளா சாப்டல அதான். மத்தபடி சூசைட் அட்டென்ம்ட்லாம் நிஜமா செய்யல” நடுக்கம், வீரிய பயம், விபரீத தைரியம், ஒரு வகையான அழுத்தம், கடும் பதற்றம் அனைத்தும் அவள் குரலும் முகமுமாய் மாற சொல்லிய அந்த வேணி,

இப்போது  அருகிலிருந்த பவியின் கரத்தை பாய்ந்து வந்து மணிக் கட்டோடு பற்றிக் கொண்டவள்,

“அக்காக்கா நீங்களாவது சொல்லுங்கக்கா என்ன அரெஸ்ட் செய்ய வேண்டாம்னு, நான் நிஜமாவே எதுவும் தப்பு செய்யலக்கா” எனும் போது உடைந்து அழத் தொடங்கி இருந்தாள்.

ஆனால் அடுத்த நொடிக்கும் முன்பாக மீண்டும் முகம் இறுக “எங்க வீட்டுக்கு மட்டும் நான் இங்க இருக்கேன்னு சொன்னீங்களோ நான் கண்டிப்பா சூசைட் பண்ணிட்டு இப்பவே செத்துடுவேன்” என ப்ரவியைப் பார்த்துச் சொல்லவும் செய்தாள்.

சொல்லிய தொனியில் மிரட்டல் இல்லை என்றாலும் இது மிரட்டல்தானே!

அடுத்த பக்கம்