துளித் தீ நீயாவாய் 2 (3)

சற்று தூரம்தான் வந்திருப்பாள் அதற்குள் ஓடாத குறையாக ஓடி வந்து இவள் முன் நின்றான் அந்த பைக்காரன்.

“அக்கா தப்பு நடந்து போச்சுக்கா, மனசுல எதையும் வச்சுகாதீங்க, கனி அண்ணாச்சி உங்கட்ட பேசணுமாம்” என மொபைலும் கையுமாக வந்து நின்றான் அவன்.

ஒரு கணம் யோசித்தவள் மொபைலை வாங்கி காதுக்குக் கொடுத்தாள்.

“வணக்கம் அண்ணி” என அந்த கனி உரிமையாய் ஆரம்பித்த விதத்திலேயே இவளுக்கு தூக்கிப் போட்டதெனில்,

“மேக்கால உள்ள இடத்துக்காரங்கன்னு நினச்சு  பேசிட்டான் போல நம்ம விசயன், நீங்கன்னு தெரியாது போல, மனசுல எதையும் வச்சுகாதீங்க அண்ணி,

கிணத்து தண்ணி சும்மாவே கெடந்தா ஊத்து வத்திப் போய்டும், அதான் நாங்க தண்ணி எடுத்துட்டு இருந்தோம், இனி உங்க சம்மதம் இல்லாம நம்ம பசங்க உள்ள கால் வைக்க மாட்டாங்கல்ல,

ஊருக்கு வந்துருக்கீங்கன்னு தெரியாது அண்ணி, ஒரு சோலியா மதுர வந்துருக்கேன், இல்லனா இப்பவே ஓடியாந்துருப்பேன், நாளைக்கு வீட்டுக்கு வரேன் அண்ணி, அண்ணாவ ரொம்ப கேட்டதா சொல்லுங்க, விசயன இளநி வெட்டித் தர சொல்லிருக்கேன் கண்டிப்பா சாப்ட்டுட்டு போங்க”

என்ற அவன் உபசரிப்பில் திக்கு முக்காடிப் போனாள் இவள்.

பேசிக் கொண்டு போன அவன் குரலில் உண்மையாகவே உறவின் தொனி.

அந்த நாப்பது வயது பைக்காரனே கனி அண்ணாச்சின்றான், அந்த கனியோ இவள அண்ணின்றான். ப்ரவி அண்ணாவாம். அதற்கேற்றபடி அந்த கனியின் குரலும் இளமையாக இருப்பதாகத்தான் படுகிறது.

அதோடு என்னதான் மேக்கால சோலி என கிராமத்தனமான வார்த்தை ப்ரயோகங்கள் இருந்தாலும் அந்த பைக்கார விஜயனின் பேச்சுத் தொனியை விட இது கட்டு தெறித்தார் போல் இருந்து,

ஒரு புறம் அது அவன் வெறும் கிராமத்துக்குள் கிடப்பவன் அல்ல என்றும் மறு வகையில் அவன் இவளை ஏறத்தாழ நிர்பந்திக்கிறான் என்றும் உணர வைத்தன.

‘இவன் உண்மையிலேயே சொந்தக்காரனா? இல்ல ஊர் வழக்கபடி சும்மா முறை சொல்லி பேசுறானா? ஆனா எது எப்படினாலும் பக்கா ஃப்ராடு’ இப்படியாய் ஒரு முடிவுக்கு வந்தாள் பவி.

பின்ன போலீஸ்காரன் இடத்த தவிர மத்த இடம்லாம் என் இடம்னு சொல்றவன என்னனு சொல்ல?

“எங்க இடத்துல இருந்து தண்ணி எடுக்றத மட்டும் நிறுத்துங்க போதும், வேற ஒன்னும் வேண்டாம்” என இவள் முடித்தாள், வீட்டுக்கெல்லாம் வந்துடாத என்ற செய்தியையும் அது தாங்கி நின்றது.

ப்ரவி தன் புல்லட்டில் பவியின் வயலுக்கு வந்து சேர்ந்த போது அவன் மனைவியைச் சுற்றி அங்கு ஒரு கூட்டம் கூடி இருந்தது.

பவியை தனியாக இங்கெல்லாம் அனுப்ப சற்றும் சம்மதம் இல்லை இவனுக்கு. ஆனால் இவன் சொல்லும் எதைக் கேட்கிறாளாம் அவள்? இன்று இவன் டூட்டியில் சேர்ந்தே ஆக வேண்டும் எனும் போது, அலுவலகம் சென்றுவிட்டு இப்போதுதான் வர முடிந்தது அவனுக்கு.

அதற்குள் என்ன பிரச்சனைக்குள் சென்று மாட்டி இருக்கிறாளோ? என்ற தவிப்போடு அவசரமாக அவள் இருந்த இடத்தை நெருங்கினால்,

அங்கு பவிக்கு அருகில் ஒரு கொழுத்த பன்றி செத்துக் கிடந்தது.

“எதோ விலங்கு அடிச்சு இழுத்து வந்து போட்டுருக்கும், புலியா கூட இருக்கும், எதுக்கும் இங்க இனிம வராதீங்கம்மா”

“ஒரு புலி இங்குட்டு சுத்துதுன்னுதான் சொல்றாங்க”

“வயலுக்கு வந்த முத நாளே இந்த கதையா? அம்மா இதெல்லாம் ரொம்பவும் கெட்ட சகுனம், இந்த இடமே உங்களுக்கு வேண்டாம் பேசாம யாருக்காச்சும் வித்துட்டுப் போய்டுங்க”

“ஆமா அந்த ராணி விலாஸ் பஸ்காரவங்க ஒரு பஸ் வாங்கிட்டு வந்த அன்னைக்கு அது பன்னிய அடிச்சுட்டு, நானே பார்த்தேன், அன்னைக்கு ஆரம்பிச்ச நட்டம்தான், அடுத்து எல்லா பஸ்ஸையும் வித்துட்டு நடுத்தெருவுக்குல்ல வந்துட்டாங்க”

ஆளாளுக்கு அவர்களுக்கு தோன்றியதை சொல்லிக் கொண்டு இருந்தார்கள். எதையும் சொல்லாமல் அந்த பன்றியின் உடலை பார்த்தபடி நின்றிருந்தாள் இவனது மனைவி.

அடுத்த பக்கம்