துளித் தீ நீயாவாய் 2 (2)

“டைனோசர் முட்டைதான் இப்படி பாறையா மாறிட்டாம்” இங்கு முன்பு வந்த போது கருண் இந்த பெரிய பெரிய முட்டை அமைப்பு பாறைகளைப் பார்த்துச் சொன்னது நியாபகம் இருக்கிறது இவளுக்கு.

“ஹான் அதெப்படி முட்டை பாறையாகும்? வெயில்ல கிடந்தா ஆம்லெட்டா வேணா ஆகும்” இவள் தனக்குத் தெரிந்தபடி மறுக்க,

“ஏய் கொத்து பரோட்டா, ஊட்டில பார்த்தமே மரம் பாறையாகிட்டுன்னு, அது போலத்தான் இதுவும்” கருண் இப்போது ஆதாரத்துடன் சொல்ல,

கொத்து பரோட்டோ என அவன் அழைக்கும் போதெல்லாம் எகிறுபவள் இப்போதைக்கு அதை கவனிக்காமல் விட்டு, பொட்டானிகல் கார்டனில் பார்த்த அந்த பாறையாக மாறிய மரம் நியாபகத்தில் இப்போது கருண் சொல்வதுதான் சரியோ என சின்னதே சின்னதாய் நம்பத் துவங்க,

“ரிசர்ச் போய்ட்டு இருக்காம், கூடிய சீக்கிரம் உன் ஃபோட்டோவோட ந்யூஸ் பேப்பர்ல வருமாம், இப்படி  கொத்துப் பரோட்டோவோட இடத்தில் டைனோசர் முட்டை இருக்குன்னு” கருண் கண்ணை உருட்டி இன்னுமாய் கதைவிட,

அவன் தலையில் தட்டியபடி வந்து சேர்ந்தான் ப்ரவி “டேய் சின்னப் பிள்ளைய ஏன்டா இப்படி ஏமாத்ற?” என்றபடி.

“இது வெறும் பாறைதான் பவிமா” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

கருண் தலையில் தன் பங்குக்கு தானும் ஒன்று ஓங்கி வைத்துவிட்டு ப்ரவியின் கையைப் பற்றிய படி அந்த முட்டைப் பாறையில் ஏற முயன்ற இவள் கோலம் மங்கலாக மனதில் தெரிகிறது இவளுக்கு.

விழா வீட்டுக்கு சென்று வந்ததால் போலும் ஆரஞ்சும் அடர் பிங்குமாய் ஒரு பட்டுப்பாவடை உடுத்தி இருந்தாள். சறுக்கும் பாறையில் அது கால் தட்ட, சமாளிக்க முடியாமல் இவள் சட்டென உட்கார்ந்து கொள்ள,

“விழுந்து வாரினியோ உன் தயாப்பா என்னை சட்னியாக்கிடுவாங்க” என்றபடி ப்ரவி இவளை குழந்தையை தூக்குவது போல் தூக்கிதான் கீழிறக்கிவிட்டான்.

அவ்வளவுதான் அது நியாபகம் வரவும் உள்ளுக்குள் இருந்த கொதிப்பு இன்னும் உச்சிக்குப் போக, அழுகை அதுபாட்டுக்கு அடக்க மாட்டாமல் விம்மிக் கொண்டு வருகிறது.

அதே மன நிலையில் அவளது இடத்துக்குள் நுழைந்தாள் பவித்ரா.

நுழைந்தாள் எனச் சொல்ல வாசலா கதவா? காலி இடத்துக்குள் நடந்தாள். இவள் முன்பு பார்த்த காட்டுப் புல் இவள் இடத்தில் மட்டும்தான் வளர்ந்து கிடந்தது இப்போது.

‘ஓ பராமரிப்பு இல்லாத இடத்தில மட்டும் வளருது போல, அப்ப மத்த இடமெல்லாம் முன்ன சும்மா கிடந்தத இப்ப ஆள் எடுத்து வேலை செய்றாங்களா இருக்கும்’

தூக்கிச் சுமந்த சோகத்தை தற்காலிகமாய் விட்டுவிட்டு சூழ்நிலையை படிக்க முயன்றது இவள் மனம்.

அதே நேரம் கண்ணில் கிடைக்கிறது புதர் மண்டி பாழடைந்து கிடக்கும் இவர்களது கிணற்றுப் பகுதி.

அதன் அருகில் உட்கார்ந்து ஓடிக் கொண்டிருக்கும் புது மோட்டரும்தான்.

அதாவது இவளது கிணறை யாரோ அனுமதி இன்றி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கிணறை மட்டும்தானா? இப்போதெல்லாம் உரிமையாளருக்குத் தெரியாமல் மற்றவர் பேரில் பத்திரம் மாற்றிக் கொடுத்து இடமே திருட்டுப் போய் விடுகிறதே!

கிணறைப் பார்த்து பதறப் பதற ஓடினாள் பவி.

இவளுக்கென இருக்கும் ஒரே விஷயம் இந்த நிலம் மட்டும்தான். இதிலும் வில்லங்கம் என்றால் என்ன செய்வாள் இவள்?

கிணறோ இவளது ஐந்து ஏக்கர் நிலமோ யாரும் தங்களைப் பயன்படுத்தும் சுவடே இல்லாமல்தான் கிடக்கின்றன, ஆனால் நீர் மட்டும் இங்கிருந்து பக்கத்து தோப்புக்கு போய்க் கொண்டிருந்தது.

குழாயைப் பின்பற்றி இவள் அங்கு போய் நிற்க, அது செங்கல் உற்பத்தி செய்யும் இடம் போலும், ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாய் பலர் குழைத்த களிமண்ணை அதன் அச்சில் இட்டு செங்கல் அறுத்துக் கொண்டிருக்க,

“ஹலோ யாருங்க அது? எங்க தண்ணிய எடுக்கிறது?” என்ற இவளது கேள்விக்கு யாரும் பதில் சொல்லவே இல்லை.

வேற்று கிரக ஜீவராசியைப் பார்ப்பது போல் இவளை நிமிர்ந்து ஓரிரு நொடிகள் அவர்கள் பார்த்துக் கொண்டாலும் வார்த்தை என எதுவும் வரவே இல்லை. வேகம் குறையாமல் வேலை செய்வதில் மட்டுமே கவனமாய் இருந்தார்கள்.

சற்று நேரம் இவள் என்ன செய்வதென தெரியாமல் விழித்தபடி நிற்க, அங்கு வந்து சேர்ந்தான் ஒரு பைக் பேர்வழி.

அவன் ஏற இறங்க இவளைப் பார்த்த துகிலுரியும் பார்வையில் இவளுக்குள் வன்முறை உணர்வு உற்பத்தி.

“அடுத்த வயல் என்னோடது, அங்க இருந்து யார்ட்டயும் கேட்காம தண்ணி எடுக்கீங்க. அதை இதோட நிறுத்திக்கோங்க” சொல்ல வேண்டிய விஷயத்தை அழுத்த குரலில் இவள் சொல்ல,

“என்னது உங்க வயலா? எத்தன பேர் கிளம்பிருக்கீங்க இப்படி? கனி அண்ணாச்சி காதுல விழுந்துதுன்னா எக்குதப்பா ஆகிடப் போகுது, ஒழுங்கா வீடு போய் சேர வழியப் பாரு” என வெகு அலட்சிய தொனியில் சொன்னபடி அறுத்திருந்த செங்கல்கள் புறம் சென்றான் அந்த பைக்காரன்.

அடுத்து இவள் அங்கு இல்லவே இல்லை என்பது போல் முழு கவனமாக செங்கல்களை கணக்கிடத் துவங்கினான்.

பவிக்கு கொதித்துக் கொண்டு வருகிறதுதான், ஆனால் இவன் வெறும் கைத்தடி போலும், இவனிடம் கத்தி ஆகப் போவது என்ன? அந்த யாரோ கனியாமே அவனல்லவா இங்கு மெயின் வில்லன் போல.

“SP பரிசுத்தனோட வீட்ல இருந்து இது அவங்களோட வயல்னு சொல்றாங்கன்னு உன் கனி அண்ணாச்சிட்ட சொல்லி வை, அவருக்காவது மூளை வேலை செய்யும்னு நினைக்கிறேன்” என்றுவிட்டு இவள் திரும்பி நடக்கத் துவங்கிவிட்டாள்.

ப்ரவியின் பெயரையெல்லாம் இழுக்க இவள் நினைத்திருக்கவில்லைதான், ஆனால் இருக்கின்ற சூழ்நிலைக்கு இதைத் தவிர இவளுக்கு வேறு எதுவும் தோன்றவில்லை என்பதால் இதைச் சொல்லிவிட்டு மனதிற்குள் குமைந்து கொண்டே வந்தாள்.

‘இதிலும் ப்ரவி ஹெல்ப் இல்லைனா முடியாதுன்னா இவ எப்படிதான் சர்வைவ் ஆக?’

அடுத்த பக்கம்