துளித் தீ நீயாவாய் 2

நேராக சென்று கதவை திறந்தான் ப்ரவி.

சாவியும் கையுமாக அதிர்ந்து போய் அங்கே நின்று கொண்டிருந்தாள் அந்தப் பெண். பதினேழு பதினெட்டு வயது இருக்குமாயிருக்கும்.

அவள் காலி வீடு என நினைத்து திறக்க முயன்ற வீட்டுக்குள் ஆட்கள் இருந்தால் முழிப்பாள்தானே! அந்த வகை விக்கித்த பார்வை.

தன் எதிரில் முழு போலீஸ் யூனிஃபார்மில் நின்று கொண்டிருந்தவனை பதற பதறப் பார்த்தாள் அவள்.  இதற்குள் அவள் இமைகள் ஈரப்படத் துவங்குவதில் சென்று நின்றது பவித்ராவின் கவனம்.

“யார் நீ?” என பரிசுத்தன் அவனது போலீஸ் தொனியில் கேட்ட அதே நேரம்,

“யார்பா நீ? வீடு மாறி வந்துட்டியோ? உள்ள வாயேன்” என நட்புக் கரம் நீட்டிக் கொண்டிருந்தாள் அவனது மனைவி.

இதுதான் இவனது இயல்பான பவி.

இவர்களது எந்த கேள்வியையும் சற்றுமே சட்டை செய்யாமல், இதற்குள் தாரை தரையாய் ஊற்றத் தொடங்கிய கண்ணீருடன்,

“இ..து இந்த வீடுதான்… வாடகைக்கு எடுத்துருக்கேன்… அட்வான்செல்லாம் கொடுத்துட்டமே?” என தயக்கமும் குழப்பமுமாக விசாரிக்காவே செய்தாள் வந்திருந்தவள்.

“இல்லையே எங்க வீட நாங்க யாருக்கும் வாடகைக்கு கொடுக்றதா சொல்லவே இல்லையே” என பதில் வருகிறது பவியிடமிருந்து.

பவியின் பிரச்சனைக்கு எங்கு பதில் இருக்கிறது என இதுவரைக்குமே தலை வால் புரியாமல் நின்று கொண்டிருந்த பரிசுத்தனுக்கு விடை கிடைத்த இடம் என்று பார்த்தால் இதுதான்.

அடுத்தவர் தலையீடு எனவும் ‘எங்க வீட நாங்க’ என வார்த்தைகள் அவள் வாயில் படு இயல்பாய் வருவதை மனதில் குறித்துக் கொண்டவன் “உன் பேர சொல்லுமா?” என வந்திருந்த பெண்ணிடம் விசாரிக்கத் துவங்கினான்.

“அட்வான்ஸ் கொடுத்தீங்கன்னா ரென்டல் அக்ரிமென்ட் எதுவும் போட்டீங்களா? வீட்டு ஓனர் நேம் என்ன?” அவன் தொடர,

முதல் கேள்விக்கு “என் பேர் வேணி” என பதில் சொல்லிய அந்தப் பெண், அடுத்து எதுவும் சொல்லாமல் ஒருவித பிரமைக்குள் போனது போல் விழித்தவள்,

அடுத்து பவியும் இவனும் ஒவ்வொன்றாய் கேட்டுப் பார்த்தாலும், எதுவும் பதிலே சொல்லாமல் இன்னுமே திருக திருக பார்த்துக் கொண்டிருந்துவிட்டு,

“சாரி உங்கள டிஸ்டர்ப் செய்துட்டேன், மாறி வந்துட்டேன் போல” என விடுவிடென திரும்பிப் போய்விட்டாள்.

“அவ வீடு மாறி வந்தவல்லாம் இல்ல, எதோ ஃபிஷ்ஷியா இருக்கு பவி” அதுவரை இயல்பாய் போய்க் கொண்டிருந்த உரையாடல் வகையிலேயே ப்ரவி இப்போது பவித்ராவிடம் சொல்ல, அவன் பேச்சை நின்று கேட்டுக் கொண்டிருப்பது யாராம்?

பவி ஏற்கனவே கிளம்பி நின்றவள்தானே! கடகவென வெளியே போய்க் கொண்டிருந்தாள்.

பேருந்திலிருந்து தான் இறங்கியிருந்த இடத்தில் நின்று சற்று திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள் பவித்ரா. ப்ரவிக்கும் இவளுக்குமான வீடிருக்கும் நகர்ப்புற பகுதியில் இருந்து ஏறத்தாழ 27 கிமீ தொலைவில் இருக்கிறது இந்த இடம்.

அவள் ஆறாம் வகுப்போ என்னவோ படிக்கும் பொழுது இந்த பக்கம் எதோ குடும்ப விழாவிற்கென அழைத்து வந்திருந்த அவளது தயாப்பா இந்த இடத்தையும் கூட்டி வந்து காட்டி இருக்கிறார்.

கார் போகும் அளவு ஒரு கிளைப்பாதை அதன் இருபக்கமும் அவரைக் காய்கள் விளைந்திருந்த தோட்டங்கள், கண்ணுக்கெட்டிய வரை காட்டுப்புல், சற்று தூரம் உள்ளே போனால் இவர்களது அந்த இடம் இருக்கும் என நியாபகம்.

இப்பொழுது அந்த காய்கறி தோட்டம் இருக்க வேண்டிய இடம் எல்லாம் வீட்டு மனைகள். அதில் ஐந்தாறு வீடுகள் வேறு அங்கும் இங்குமாய் இருக்கின்றன.

புல் காடு என எதுவும் இல்லை. பல இடங்களில் தென்னையோ மாமரமோ தோப்பாக நின்றிருந்தன.

அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஏதோ சிறு கட்டிடம் அல்லது கொட்டகை காட்சி தந்தன. கோழித் தீவன உற்பத்தி, கயிறு திரிக்கும் பணியிடம், செங்கல் சூளை என எதேதோ தொழில்கள் அதில் நடைபெற்றன.

இவள் சரியான இடத்தில்தான் இருக்கிறாளா என சந்தேகமாக இருக்கிறது. இருந்தாலும் யாரிடமும் எதுவும் கேட்டுக் கொள்ள விருப்பம் இல்லை. இவள் இந்தப் பகுதிக்கு புதிது எனத் தெரிந்தால் யார் என்னவெல்லாம் ஏமாற்றுவாரோ?

வெகு பழக்கமான இடத்தில் இருப்பவள் போல் ஒரு இலகு முகபாவத்தை முயன்றபடி அந்த கிளைச் சாலையில் பவித்ரா நடக்கத் துவங்கினாள்.

சர்வ நிச்சயமாய் இது அல்ல இவர்களது இடம் இருக்கும் திரவியபுரம் என எண்ணத் துவங்கிய நேரம் இவள் கண்ணில் படுகிறது அந்தப் பாறைக் குவியல்கள். இதுதான் இவர்களது இடத்தின் நுழைவுப் பகுதி.

அடுத்த பக்கம்