சட்டென நனைந்தது நெஞ்சம் 3

பயணிகளின் கனிவான கவனத்திற்கு திருச்சிராப்பள்ளியிலிருந்து வரும் ராக்போர்ட் விரைவு ரயில் இன்னும் சற்று நேரத்தில் நடைமேடை 4ல் வந்து சேரும்.

மனன்யா சென்னைக்கு வந்து சேர்ந்துட்டேன் மக்களே,

மறுபடியும் சென்னை ஆனா முதல் முறை எழும்பூர் ஸ்டேஷன், கவுன்சிலிங்க்கு முதல் தடவையா சென்னை வந்தப்போ கோயம்பேடுல தானே இறங்கினோம்.

படிச்சா பயோல ஏதாவது படிக்கணும் அதுவும் மருந்து கண்டுபுடிக்கற அளவுக்கு படிக்கணும்ன்னு ஆரம்பிச்சு பி.டெக் பயோடெக் படிக்கிறோம் அதுலயும் சென்னை அண்ணா யூனிவர்சிட்டி லட்சியம் கோயம்பத்தூர் GCT நிச்சயம்னு ரொம்ப உறுதியா இருந்தேன். சென்னை காலேஜ்லனா சமாளிச்சிடுவமா நம்ம தமிழையும் சப்ஜெக்ட்டா மட்டும் படிச்ச இங்கிலீஷையும் வெச்சுன்னு எல்லாம் ஸ்கூல்லையே யோசிச்சு வெச்சு அந்த நேரம் பார்த்து நான் 12வது படிக்கும் போது ஆங்கிலம் தெரியாத தாழ்வு மனப்பான்மையில் கல்லூரி மாணவன் தற்கொலைன்னு ஒரு நியூஸ் வேற அதை வீட்ல இருக்கவங்க கண்ணுக்கு தெரியாம டிஸ்போஸ் பண்ணி, இதுல பி.எஸ்ல கூட பயோடெக் படிக்கலாம்னு இருந்த என்னைய நீ எல்லாம் வாங்கற மார்க்குக்கு என்ஜினீரிங் சேருன்னு சொல்லிட்டு இருந்த ரெண்டு பேர்ல ஒருத்தரு மனன்யா நல்லா படிக்கிற நம்மல இப்படி சொல்றாறேன்னு நினைக்காத எடுத்ததும் எல்லாம் இங்கிலீஷ்ல படிக்க கஷ்டமா தான் இருக்கும் சமாளிச்சு படிச்சிடுனெல்லாம் சொல்லியிருந்தாரு

இப்படியான விஷயங்களோட தான் 12வது லீவு போச்சு, இவளோ யோசிச்சு வெச்சிருந்தனா ஆனா அதுக்கு ஏத்தபோல மார்க் எல்லாம் வரல. பேசாம ஆர்ட்ஸ் படிப்பமான்னு யோசிச்சா முன்னாடியே இந்த அதீத நம்பிக்கையால கவுன்சிலிங் ஃபார்ம் வாங்கிட்டோம், ஆர்ட்ஸ்க்கு பேங்க் லோன் தந்தாதான் தருவாங்கன்னு வேற சிலர் சொல்லிட்டு இருந்த நேரம் தமிழக அரசு முதல் தலைமுறை தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு 50% tution fees கட்டிரும்னு ஒரு அறிவிப்பு. சரி இதெல்லாம் சேர்ந்து என்னைய பி.டெக் பயோடெக்க நோக்கி நகர்த்த இந்த அண்டம் முடிவு பண்ண விஷயங்கள் போலன்னு வீட்ல இருந்து போற போல ஒரு காலேஜ் கவுன்சிலிங்ல எடுத்து படிக்க ஆரம்பிச்சு, அங்க போன ரெண்டாவது வருஷம் எங்க காலேஜ்க்கு எப்பவும் ப்ளேஸ்மண்ட் வர ஒரு ITES கம்பெனிய பிக்ஸ் பண்ணி இதான் நம்ம அடுத்த டார்கெட்ன்னு நகற ஆரம்பிச்சேன்.

இந்த 4 வருசத்துக்குள்ள எனக்கு லேப்லதான் வேலை பாக்கணும்னு எல்லாம் பெரிய தீவிரம் இல்லன்னு, மருந்து சம்மந்தமான, அறிவியல் சம்மந்தமான இடம் தான் சரியா இருக்கும்னோ புரிஞ்சு இருந்தது. அதுபோக 7 வயசுல இருந்து வேலை பாக்கற என் அப்பாக்கு 50 வயசுக்கு மேல வேலைக்கு போறது அவர் விருப்பத்தின் பேர்ல பண்ணனும், கட்டாயத்தின் பேர்ல இருக்கக்கூடாத அளவுக்கு பொருளாதாரரீதியா கட்டமைக்கனும்னு முடிவு பண்ணியிருந்தேன். அதுக்கெல்லாம் இந்த வேலை முதல் படியா முக்கிய படியா இருக்கும்.

என்னோட கிரஷ்ஷான அண்ணா யூனிவர்சிட்டி என்னைய சென்னையை நோக்கி இழுக்கலனாலும் என் லவ்வரான பயோடெக் என்னைய அதே சென்னைல கொண்டு வந்து இறக்கிவிட்ருக்கு. பாப்போம் ஆஃபீஸ் எப்படி போகுதுன்னு.

எனக்கு ரெண்டு நாள் முன்னாடி வரை எக்ஸாம் இருந்தது அதனால போன வாரம் எங்க அப்பா மட்டும் வந்து விசாரிச்சிட்டு போன ஹாஸ்டல்ல பார்த்து சேர்ந்துட்டு எப்படியும் ஹாஸ்டல் எப்படி இருக்கும்ன்னு முன் அனுபவம்லாம் இல்ல வார்டன் வேற நல்லா பேசினாங்க அதனால இங்கயே இருப்போம்னு இருந்தாச்சு.

முதல் நாள் ஆஃபீஸ் எங்க அம்மா அப்பா கூடத்தான் போனேன்,பூ எல்லாம் குடுத்து வரவேற்த்தாங்க.

உள்ள போனால் நான் தான் ரெண்டாவது ஆள், அந்த பொண்ணு விருதுநகர் ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கும் போதே எல்லாரும் வர ஆரம்பிச்சு எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிட்டு இருந்தாங்க. என்னையும் இன்னும் 3 பொண்ணுங்களையும் தவிர நெறய பேருக்கு காலேஜ்ல இருந்தே கம்பெனி இருந்தது. இன்னொரு காலேஜ்ல இருந்து 4 பேர் வந்தாங்க அதுல 3 பேரு ஒண்ணாவே இருப்பாங்க மீதி இருக்க ஒரு பொண்ணு என்கூட வந்து உக்காந்துடுச்சு. ஒரு வேல GCT போய் இருந்தா இப்படி தான் நாமளும் இருந்துஇருப்பமோன்னு தோணிச்சு, கூடவே ஒரு மாநகராட்சில படிச்சிட்டு வந்த எனக்கே இவளோ இடற்பாடுனா இன்னும் கிராமத்துல இருந்து வரவங்கலாம் எவளோ மெனக்கெட்டு மேல வராங்கன்னு தோணுச்சு.

இந்த கூட்டத்தில் 3 பேருக்கு தமிழ் தெரியாது அதனால் சும்மா இருக்க நேரம் கூட இங்கிலீஷ் தான் அதைவிட கண்டெண்ட் சுத்தமா எனக்கு கனெக்ட் ஆகாது அடேய் முடியல, இதுல என்னைய வேற என்ன மனன்யா செஷன் அப்போ மட்டும் தான் வாய தொறக்கறீங்கன்னு வேற ஒரு நாள் கேட்டாங்க,  நிஜமான அமைதியான பொண்ணு ஒருத்தி இருந்தாள் என்னையும் வேற அவளோட சேர்த்துடாங்க.

அடுத்த பக்கம்