நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 8

அப்பொழுது அபி முதல் செமஸ்டர் விடுமுறை என்று ஷ்ரவந்திக்கும் சஞ்சுவிற்கும் வால் பிடித்துக்கொண்டு திரிந்தாள்!

“அக்கா! அக்கா!” என்று இரண்டு பேரையும் படுத்தி எடுப்பாள்! சஞ்சு தான்.. “இங்கே பாரு எனக்கே ஏகப்பட்ட அக்கா இருக்கு! என்னையும் அவங்களோட லிஸ்ட்ல சேர்க்காத.. வயசான ஃபீலிங் வேற வருது! என்னை சஞ்சுன்னு கூப்பிடுன்னு முதல்நாளே சொல்லிட்டேன்.. அதேபோல அவளையும் ஹர்தின்னு கூப்பிடு!” என்று செல்லமாய் மிரட்டினாள்!

அபியோ, “அதெல்லாம் நீங்க ஏன் சொல்றிங்க? அப்டில்லாம் சொல்லக்கூடாது.. தப்பு.. தப்பு.. தப்பு..” என்று கில்லி பிரகாஷ்ராஜ் போல சொல்ல, ஷ்ரவந்தி சிரித்தாளென்றால், சஞ்சுவோ முறைக்க ஆரம்பித்தாள்!

“இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை! வைச்ச கண்ணு வாங்காம படமா பார்த்து அதுல வர டைலாக் எல்லாம் மனப்பாடம் பண்ணி வைச்சுட்டு எங்களுக்கே கவுண்ட்டர் கொடுக்குறது! நேத்து எத்தனை படம் பார்த்த?” மிரட்டலாய் கேட்டபடியே டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து வெளிவந்தாள் ஹர்திகா!

பெண்கள் நால்வரும் சஞ்சுவின் பிரத்யேக ஸ்டுடியோவில் தனியறையில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர்!

“பகல்ல பார்த்ததை சொல்லட்டுமா? நைட்டு பார்த்ததை சொல்லட்டுமா?”

அபியின் பதில் கேள்விக்கு ஹர்திகா தான் ‘தெரியாம கேட்டுட்டேன்! மன்னிச்சு விட்டுரு தாயே!’ என்று கையெடுத்து கும்பிட வேண்டியிருந்தது!

“சரி விடுங்க.. இனிமே அக்கான்னு கூப்பிடலை! தனியா இருக்குறப்ப பேர் சொல்லி கூப்பிடுறேன்! ஆனா ஆளுங்க இருக்குறப்ப ‘ஆப்லா’ன்னு (AABLAA) தான் கூப்பிடுவேன்!” என்று கட் அண்ட் ரைட்டாக சொன்னாள் அபி!

அதில் ஹர்தியும், ஷ்ரவந்தியும் குழம்பிப்போக, சஞ்சுவோ, “என்னது அப்பளம்ன்னு கூப்பிடுவியா?” என்று அதிர்ந்து போனாள்!

“புரியலைன்னா கேளுங்க! அதைவிட்டுட்டு ஏதாவது நீங்களா சொல்லாதிங்க? நான் சொன்னது ஆப்லா! துருக்கி மொழில அக்காவை ஆப்லான்னு கூப்பிடுவாங்க!” என்று அபி விளக்கினாள்!

“பாருடா!” என்று பாராட்டிய ஷ்ரவந்தியும் ஹர்திகாவும், “அப்படியே கூப்பிடு.. அக்காவைவிட இது ரொம்பவே நல்லாயிருக்கு!” என்று ஒத்துக்கொள்ள, சஞ்சு தான் “அப்பவும் இந்த அக்காமாலா தானா? டார்லிங், டியர்ன்னு எல்லாம் சொன்னா நல்லாயிருக்கும்ல?” என்று சிணுங்கினாள்.

அபியோ, “எங்க அக்காவை பத்தியாடா தப்பா பேசுற?” என்று அதற்குமொரு பட வசனத்தை எடுத்துவிட்டவள், “இந்த டார்லிங் டியர் எல்லாம் ஒரு ஹீரோ போல இருக்க ஆளுகிட்ட பேசினா தான் நல்லாயிருக்கும்!” என்றபடி சஞ்சுவிற்கே கெத்து காட்டினாள்.

“அடேங்கப்பா! ஹீரோ போல ஆளா? வாய்ப்பில்லை ராஜா.. வாய்ப்பே இல்லை!” பந்தாவாய் சஞ்சு சொல்ல, ஷ்ரவந்தி தான், “அடச்சி! நிறுத்து ரெண்டும்.. மாத்தி மாத்தி படவசனமா பேசின்னு! போ வேலையை பாரு!” என்று சிரிப்போடு கண்டித்தாள்!

சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு ஸ்டுடியோவின் இன்னொரு அறைக்கு சென்று அபி ஆடையை வடிவமைக்க சென்றுவிட, ஷ்ரவந்தியும் ஹர்தியும் தங்களது படத்தில் எதுபோல ஆடைவேண்டும் என்று  விளக்க ஆரம்பித்தனர்! ஹர்திகாவின் ஐந்தடி ஏழு அங்குல ஹவர் கிளாஸ் உடம்பிற்கு என்ன உடை அணிந்தாலும் அழகாக இருக்கும் தான்! ஆனால் அவள் நிறத்தில் தான் முக்கிய கவனம் செலுத்துவாள்! அதிக அடர்நிற ஆடைகளை அணிய விரும்பமாட்டாள்! தற்பொழுது நடிக்கும் வேறொரு படத்திற்காக ‘ஹிப் கட் மாடல்’ சல்வாரில் என்னமாதிரி புதுமையான டிசைனில் இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

ஷ்ரவந்தியோ தான் ஒரு படத்தில் ஆங்கிலோ இந்தியப்பெண்ணாக நடிக்கவிருப்பதால், வெள்ளை, கருமை, சாம்பல் போன்ற கண்ணுக்கு உறுத்தாத மங்கிய நிறத்தில் மெல்லிய நூலிழையில் பூக்களிட்ட வடிவமைப்பில், கணுக்கால்வரை இருக்கும் ஸ்கர்ட், காப்ரி போன்ற ஆடைகள் வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தாள்.

சஞ்சுவும் இருவரும் கேட்டுக்கொண்டது போல வரைய ஆரம்பித்தாள். அடுத்த அரைமணி நேரத்தில் ஆளுக்கு இருபது என்று நாற்பது மாடல் ஆடைகளை வரைந்து முடித்திருந்தாள்! பின்பு சஞ்சு ஷ்ரவந்தியுடன் ஹைத்ராபாத் சென்றாள். அங்கே வேறொரு நடிகைக்கு இவர்களுக்கு ஆடை வடிவமைத்து கொடுப்பது போல, அவருக்கும் ஆடை அலங்கார நிபுணராக இருந்தாள்!

செல்லும் போதே, “அபிக்கு ஃபர்ஸ்ட் செமெஸ்டர்ல ஏதோ ப்ராஜக்ட்ன்னு ட்ரெஸ் டிசைன் பண்ணிட்டு இருக்கா.. அவளை ரொம்ப தனியா விடாத! உன்கூடவே கூட்டிட்டு போயிரு! உனக்கு ஹெல்ப்க்கும் ஆனது போல ஆச்சு! அவளுக்கு வேலையும் கத்துக்கிட்ட மாதிரி ஆச்சு! அவளை இறுக்கி பிடிச்சா தான் ரொம்ப படம் பார்க்கிறதை குறைப்பா! இல்லாட்டி டிவியே கதின்னு இருக்கா குழந்தை மாதிரி!” என்று அறிவுறித்துவிட்டு சென்றாள்!

ஹர்திகாவும் அபியை தன்னோடு படப்பிடிப்பிற்கு அழைத்து செல்ல ஆரம்பித்தாள்! மேலும் அதன்பின்வந்த நாட்களில் ஷ்ரவந்தி ஃபாரின் ஷூட்டிங் என்று மலேசியா சென்றுவிட, சஞ்சுவோ அவளது அக்காவிற்கு உடம்பிற்கு முடியவில்லையென்று மும்பை சென்றுவிட்டாள்!

அதனால் அபி ஹர்திகாவின் பொறுப்பில் இருந்தாள்! அந்தசமயம் சர்வாவுடன் வேறு நடித்துக்கொண்டிருந்தாள் ஹர்திகா! அப்படியொரு படப்பிடிப்பு நாளில், விடிகாலையிலேயே சென்றுவிட்டாள் ஹர்திகா! அபியோ வழக்கம் போல முதல்நாள் இரவு படம் பார்த்துவிட்டு தாமதமாக உறங்கியதால் இன்னமும் எழவில்லை! அதனால் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் ‘அபியை கொஞ்ச நேரம் கழித்து எழுப்பிவிட்டு, ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு கபோர்டில் இருக்கும் சில ஆடைகளை கொடுத்துவிடுங்கள்’ என்று பணித்துவிட்டு சென்றுவிட்டாள். அந்த பெண்மணியும் ஹர்திகா சொன்னது போல செய்தாலும், அபியோ தைப்பது, துணி துவைப்பது என்று நேரத்தை பதினொரு மணிவரை ஒப்பேத்தினாள்! ஒருவழியாய் கிளம்பி படப்பிடிப்பு தளத்திற்கு வந்துசேர சரியாய் மதிய வேலை ஆகிவிட்டது!

அவள் சென்ற நேரத்தில், ஹர்திகா ஏதோ முக்கிய டிஸ்கஷன் என்று அலுவலக அறைக்கு சென்றிருக்க, எஞ்சியிருந்தது அங்கே உதவி இயக்குனர்களும், ஜூனியர் ஆர்டிஸ்ட்களும் தான்! அங்கேயிருந்த ஒருவரிடம் ஹர்திகாவை கேட்க, அவரோ அலுவலக அறை நோக்கி அனுப்பிவைத்தார்!

அவளும் அறை நோக்கி நகர்ந்தவள், படப்பிடிப்பிற்காக போடப்பட்ட அந்த பிரமாண்ட செட்டை வேடிக்கைபார்த்துக்கொண்டே வந்தாள்!

‘ஏதாவது பாட்டு எடுக்கப்போறாங்களா?’ என்று நினைத்தபடி அலுவலக அறையின் முன்வந்து நின்றாள்!

கதவை தட்ட கையை உயர்த்திய நேரம் உள்ளேயிருந்து, “இந்த கேரக்டர் இப்படி பேசினா தான் நல்லாயிருக்கும்! மாடுலேஷன் மாத்து ஹர்திகா! அப்போதான் நீ டப்பிங் பேசுறப்ப இன்னமும் ஈசியா புரிஞ்சுக்க முடியும்!” என்று அவளுக்கு கூறிக்கொண்டிருந்தான் ஒருவன்!

வெளியில் கேட்டுக்கொண்டிருந்த அபியோ, ‘ஹை தீபக் சார்!’ என்று துள்ளிக்குதிக்க ஆரம்பித்தாள்! மேலும் அவர்கள் என்ன பேசுகிறார்கள்.. இல்லையில்லை.. அவன் என்ன கூறுகிறான் என்று கதவில் நன்றாய் சாய்ந்தபடி காதை வேறு கதவோடு ஒட்டிவைத்துக்கொண்டு கேட்க ஆரம்பித்தாள்! உன்னிப்பாக கேட்க, கண்களை வேறு இறுக மூடிக்கொண்டாள்!

அவனும் படத்தில் பேசவேண்டிய வசனத்தைப்பற்றி ஹர்திகாவுடனும் மற்ற திரைக்கலைஞர்களுடனும் தீவிரமாக விவரித்துக்கொண்டிருந்தான்! அப்பொழுதுதான் அபியே உணர்ந்தாள், ‘இதுவரை கதாநாயகனாக இருந்துவந்த தீபக் இந்த படத்திற்காக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறான்!’ என்ற செய்தியை கொஞ்ச நாட்கள் முன்பு படித்த ஞாபகம் அவளுக்கு!

‘இவர் டைரக்டர்ன்னா.. யாரு ஹீரோவா இருக்கும்?’ என்ற எண்ணம் மனதிற்குள் பேரார்வமாய் எழுந்த நேரம், படாரென்று கதவு திறக்கப்பட, நிலைக்குலைந்து திறந்தவர் மேலேயே விழுந்தாள் அபி!

“யார் இந்த பொண்ணு?” என்று மற்றவர்கள் கேட்டால், “என்ன அபி பண்ணுற கதவுக்கிட்ட நின்னுட்டு?” அவளைக்கண்டு குழப்பமாய் கேட்டாள் ஹர்திகா!

ஆனால் அபியோ, தன்னை தாங்கியிருந்தவரின் சட்டையின் கைப்பகுதியை இறுகப்பற்றிக்கொண்டு, “நானில்லை.. நானில்லை.. நான் எதுவும் ஒட்டுக்கேட்கலை!” என்று கண்களை கூட திறக்காமல் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்று’ அவளே அவளை காட்டிக்கொடுத்தாள்!

“சரி.. சரி.. நீங்கயில்லை தான்! ஆனா என்னை விடலாம்.. உங்க பெரிய நகத்தை வைச்சு ரொம்ப நேரமா பிராண்டிட்டு இருக்கீங்க!” என்று பிடித்திருந்தவன் சொன்னதும், அவனைவிட்டு விலகிய அபி எல்லோரையும் மிகவும் தர்மசங்கடமாக பார்த்தவள், ஹர்திகா கண்ணுக்குள் வந்ததும் அழுவது போல முகத்தை வைத்துக்கொண்டாள்!

ஹர்திகாவோ ‘சாரி கேளு!’ என்று கண்ஜாடை செய்ய, தன்னை தாங்கியவனை நோக்கி மெல்ல திரும்பியவள், அவனிடம் மன்னிப்பு கேட்க அவனின் முகத்தை ஏறிட்டவள், அவன் யாரென்று உணர்ந்ததும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒருங்கே ஒன்று கூடியது அபிக்கு!

“ஹாய்!” என்று அவன் கையசைத்ததிலேயே பேந்த பேந்த முழித்தவள், அவன் “ஹலோ! ஆர் யூ ஒகே?” என்று சிரித்தபடி அவன் அடுத்து கேட்ட கேள்வியில் அப்படியே அவன் மேலேயே மயக்கம் போட்டு விழுந்தாள்!

“ஹேய்! ஹேய்!” என்று பதறிப்போனவனோ ‘என்னயா இந்தப்பொண்ணு இப்படி ஆகிருச்சு?’ என்ற ரீதியில் தீபக்கை பார்க்க, அவனுமே பயந்துபோய், “முதல்ல அந்த சோபால படுக்கவைடா!” என்று அறிவுறித்தினான்!

அடுத்த பக்கம்