நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – 1 (2)

தந்தையும் தனயனும் கீழே இறங்க, அவர்களை சுற்றி வளைத்து புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தனர் பத்திரிகை நிருபர்கள்.

மேலும் சிறிது நேரம் நடந்தது விருது வழங்கும் நிகழ்ச்சி!

ராகவேந்தரின் படம் ஏற்கனவே மூன்று விருதுகளை வாங்கியிருக்க, அவருக்கு பிறகும் மேலும் ஐந்து விருதுகளை வாங்கி குவித்தது படம்.

‘சிறந்த படத்திற்கான’ விருதை பெறும் போது படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரையுமே மேடை ஏறினர். மேடையேறிய அனைவருமே அந்த படத்தை பற்றி கூறி சிலாகித்தனர்.

இறுதியாக பேசிய தயாரிப்பாளர், “இந்த கதையை டைரக்டர் என்கிட்டே சொன்னப்ப, எனக்கு சிறந்த ஒரு தேர்வா பட்டவங்க நடிகை ஹர்திகா தான். டூயல் ரோல் பண்ணிருக்காங்க, இந்த படத்தை இயக்கி, ஒரு திறமையான நடிகையை நடிக்க வைத்த இயக்குனருக்கு என்னுடைய நன்றிகளை தெரிவிக்கிறேன். ஏனென்றால் அப்படி ஒரு நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்காங்க நடிகை ஹர்திகா!” என்று தெரிவித்தார்.

பின்னால் ஒளிர்ந்து கொண்டிருந்த திரையில் அவள் நடித்த அந்த படத்தின் காட்சிகள் ஒளிவில்லை படக்காட்சிகளாக ஓடப்பட்டது.

சிறு புன்னகையை வெளிப்படுத்தியவளாய், இரத்த நிறம் கொண்ட ஒற்றை ரோஜா மலரின் நறுமணத்தை சுவாசம் முழுக்க நிரப்புபவளாய், கம்பீரமாக நடந்து வருபவளாய், நேர்கொண்ட பார்வையில் அந்த கண்களிலேயே மிரட்டல் விடுப்பவளாய் என்று அங்கேயிருந்த மொத்த பேரையும் தனது அழகினால் கட்டித்தான் போட்டாள் அந்த பேரழகி!

ஆனால் அவளோ தனது நடிப்பிற்கு கிடைத்த விருதை கூட வாங்க அங்கே வரவில்லை. அவளின் சார்பாக அந்த விருதை அப்படத்தில் நடித்த மற்றொரு பெரிய நடிகை வாங்கி கொண்டார்.

அவருமே, “ஐ ஆம் வெரி க்ளாட் டு வொர்க் வித் ஹெர். ஷி இஸ் அடோரபில் அண்ட் ஆசம். அந்த கதைல வந்த கதாப்பாத்திரமாவே அவங்க வாழ்ந்தாங்கன்னு தான் சொல்லணும்!” என்று தனது வார்த்தைகளினால் அவளை கவுரவித்தார்.

“ஹர்திகா தன்னுடைய மேல்படிப்பு சம்பந்தமாக லண்டனில் இருக்கிறார்! அவருக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என்று தொகுப்பாளன் மனமார வாழ்த்தினான்.

அவள் வராதது அங்கே இருந்தோரிடம் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்த தான் செய்தது. ஆனால் அடுத்தடுத்து வந்த நிமிடங்களில் விழாவின் மற்றைய விஷயங்களோ அனைவரையும் அதனை மறக்க வைத்தது!

ஆனால், அங்கே அமர்ந்திருந்த ஷ்ரவந்தியினால் மட்டும் அப்படி செய்ய முடியவே இல்லை!

அவள் முயற்சி செய்தாலும் அது முடியாது போல தான் இருந்தது!

“ஹர்திகா போஸ்”

அந்த பெயர் கூறப்பட்டதில் இருந்து மனம் ஒரு நிலையிலேயே இல்லை ஷ்ரவந்திக்கு.

எப்பொழுது அவளின் புகைப்படத்தை காண வேண்டியிருந்ததோ, அப்பொழுது இருந்தே முகம் மாறாமல் இருக்க மிகவுமே சிரமப்பட்டாள்.

‘எங்கே இருக்க ஹர்திகா? என்னதான் ஆச்சு உனக்கு?’

மனம் முழுக்க விடையறியா கேள்விகளோடு போராடிக்கொண்டிருந்த ஷ்ரவந்தி எப்பொழுது இங்கேயிருந்து கிளம்புவோம் என்ற நிலைக்கு வந்திருந்தாள்.

ஆனால் அவளால் முடியாதே!

தந்தையுடன் வந்திருக்கிறாள்! அவரோடு இன்னும் கொஞ்ச நேரம் இருக்க வேண்டும்.

‘ப்ச்!’ இயலாமையில் கண்கள் சுழல, அப்பொழுது பார்வையில் வந்து விழுந்தான் சர்வா!

அவனும் ரொம்ப நேரமாக அவளை கவனித்து கொண்டிருந்தான் போல?

அதைக் கண்ணுற்றவளுக்கோ அப்பார்வை ‘தன்மேல் குற்றம் கூறப்போகும்’ பார்வையாய் தான் சர்வநிச்சயமாய் பட்டது!

‘எதுவென்றாலும் சமாளித்துவிடுவேன்… ஆனால் இவனின் பார்வையை சத்தியமாக என்னால் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை’

அவளின் மனதின் குரலுக்கு ஏற்றார் போல சர்வாவின் பார்வையும் முதலில் ஒரு ஆராய்வுடன், அதற்கடுத்து குற்றம் சாட்டுவதாய், இறுதியில் கோபமாய்!!!

“நீதானே காரணம்?”

அதற்கு விடையாய் இப்பொழுது ஷ்ரவந்தியின் விழிகளிலும் அதுவரை இருந்த தவிப்பும் கவலையும் எல்லாம் விலகி, சர்வாவின் பார்வைக்கொரு இணையானதொரு பாவனை

“நீ தான் காரணமாய் இருப்பாய்!”


அதே நேரம்..

உலகின் ஒருபக்கம் இரவில் தத்தளித்து கொண்டிருக்க, மறுபக்கமோ விடியலில் குதூகலித்து கொண்டிருந்தது.

அழகான பனிமலையில் கண்களை கொள்ளை கொள்ளச்செய்யும் வெண்ணிற வெளிச்சம் பிரகாசிக்க, மலையின் பின்னேயிருந்து மேலெழும்பி கொண்டிருந்தான் ஆதவன்.

அவனின் அரவணைப்பில் உருகி கரைந்து கொண்டிருந்த பனிமலைகளை வீட்டின் ஜன்னல் வழியே இமை சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தாள் அவள்.

தனக்கு பின்னிருந்து தன்னையே ஒருத்தி பார்த்து கொண்டிருக்கிறாள் என்ற சிந்தனை இல்லாமல்!

வெளிச்சத்தின் வருகையால் அவளின் இளம் பச்சை நிற விழிகள் அந்த வெண் சிகரத்தோடு மோதி நின்றது!

ஆனால் இயற்கைக்கு மிஞ்சிய சக்தி ஏது?

ஆதவனின் மிதமிஞ்சிய பிரகாசத்தில் கண்கள் கூச, அதனின் வீச்சில் தடுமாற்றம் உண்டானது அவளுக்கு!

அப்படியே கண்கள் சொருகி, முன்னே இருந்த கண்ணாடி ஜன்னலின் நடுவில் இருந்த பிடியில் சாய்ந்துவிட, அவளுக்கு பின்னே அதுவரை அமைதியாய் இருந்தவளோ பதட்டமாய் வந்து தாங்கி கொண்டாள்.

“ஐயோ!” சித்தம் பதறியது!

“எதுக்கு இப்படி வந்து நிற்கிற? வா..” என்று கைத்தாங்கலாய் அழைத்து வந்து படுக்கையில் சாய்வாய் உட்கார வைத்தவள், அவளுக்கு போர்த்தி விட்டு, அருகில் இருந்த துவாலையால் அதற்குள் வியர்த்திருந்த அவளின் முகத்தில் ஒத்தி எடுத்தாள்.

“நீதான சொன்ன, சன்ரைஸ் பார்த்தா நல்லதுன்னு! அதான் பார்த்தேன்!” மெல்லிய குரலில் லேசாய் மூச்சு வாங்கியபடி சொன்னாள்!

குழந்தை ஒன்று குறை சொல்லும் பாவனையில் ஒலித்தது குரல்!

“ஆமா நான் தான் சொன்னேன்! அதுக்காக இப்படியா ஒருமணி நேரமா வெறிச்சு பார்ப்ப?” கண்டிப்புடன் கூறினாள் இவள்!

“அது பார்க்க பார்க்க அழகா இருந்துச்சா, அப்படியே ஆசையும் கூடிப்போச்சு!” சின்ன சிரிப்புடன் சிலாகித்து சொல்லும் போதே கண்கள் ஜன்னலில் தான் பட்டு மீண்டது அவளுக்கு!

அவளின் பார்வையை தொடர்ந்து இவளின் கண்களும் அதை நோக்கி திரும்ப, வானிலோ சூரியன் மேலெழும்பி விட்டிருந்தான்.

அதைக்கண்ட இரு ஜோடி விழிகளும் காட்டிய பாவனைகள் சர்வநிச்சயமாய் வேறுதான்!

அவளுக்கோ இன்னமும் ஆசை விட்ட பாடில்லை! அதில் அவளின் பச்சை நிற விழிகள் மரகதமாய் பளபளத்தது!

இவளுக்கோ ஆசையே எழவில்லை! ஏதோ ‘தேமே’ என பார்த்து வைத்தாள்!

“எனக்கொன்னும் தெரியலை!” என்றபடி பார்வையை மீண்டும் அவளின் மேல் செலுத்தியவள்,

“உனக்கு என்ன அப்படி அது மேல அவ்ளோ ஆசை?” என்று கேள்வி எழுப்பினாள்.

“ஆமா! ஏன் ஆசை?” எவ்வளவு யோசித்தும் தெரியவில்லை என்பது போல தோளை குலுக்கினாள் அவள்.

“சரி, நான் உனக்கு ஏதாவது சாப்பிட எடுத்துட்டு வரேன்! உங்க அம்மா வரதுக்குள்ளே ரெடியாகிடலாம்!” என்றபடி இவள் நகர, அவளோ அதை கவனத்திலே வைக்காமல்,

“அவனுக்கு பிடிக்கும்! அவனுக்கு ரொம்ப பிடிக்கும்! வானத்தை பார்த்துட்டே இருக்க அவனுக்கு ரொம்ப பிடிக்கும்! சன்ரைஸ், சன்செட், ஸ்டார்ஸ் எல்லாம் அவ்வளவு ஆசையா பார்ப்பான்!” என்று மனம் சென்றபோக்கில் கூறியவள் அப்படியே பதைத்து தான் போனாள்.

அடுத்த பக்கம்