நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – 1

மிகப்பெரும் மைதானம்! மேற்கூரையின்றி வானின் கரும் போர்வையையே கூரையாக கொண்டிருந்தது!

இருளை உள்ளுக்குள் பரவ விடாமல் ஒளி ஜொலிக்க செய்து கொண்டிருந்தது, சூழ்ந்திருந்த பல வண்ண அலங்கார விளக்குகளின் அணிவகுப்பு!

அந்த ஜொலிப்பிற்கு கூடுதல் வலுசேர்க்கவென்று மைதானம் முழுக்க, மக்களின் கரகோஷமும் ஆர்ப்பரிப்பும் அந்த இடத்தையே பரப்பரப்புடன் வைத்திருந்தது!

இருக்காதா பின்னே?

தமிழ் திரையுலகின் விருது வழங்கும் நிகழ்ச்சி! ஒவ்வொருவருக்கும் பிடித்தமான அவர்களின் ஆதர்ஷ நாயகர்கள், நாயகிகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், மேலும் பல தொழில்நுட்ப கலைஞர்களை மேடையேற்றி பாராட்டும் விழாவாயிற்றே!

பிறகு ஆர்ப்பரிப்பிற்கு ஏது பஞ்சம்?

விழாவை தொகுத்து வழங்க தமிழ் திரையுலகை சேர்ந்த வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நாயகர்கள் இருவர் தங்களின் பேச்சு திறமையில் எல்லோரையும் கட்டிப்போட்டனர்.

ஆடலும் பாடலும் இடையிடையே நடக்க, மக்களின் மனம் கவர் நாயக நாயகியரை மேடையில் ஏறுவதை, தங்களின் கண் முன்னே வலம் வருவதை உச்சக்கட்ட கரகோஷத்துடன் கண்டனர்.

அப்பொழுது அழைக்கப்பட்டான் அவன்!

சர்வஜித்!

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகன் அவன். பழம்பெரும் பிரபல இயக்குனர் ராகவேந்தரின் ஒரே வாரிசு அவன். அன்னை வரலக்ஷ்மி. தந்தையின் முயற்சியில் திரையுலகில் அறிமுகம் ஆனவன் தான்.

ஆனால் பிறகு தனக்குரிய பாங்கில் நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவனாக வலம் வந்து கொண்டிருக்கிறான்.

ஆரம்பத்தில் அனைத்து பெரிய நடிகர்களை போலவே தான் இவனும் பலரின் ஏளன பேச்சுக்களை, பல கேலிகளை கடந்து வரவேண்டி இருந்தது!

‘இவன் மூஞ்சியை பாருடா! இவனெல்லாம் நடிக்க வரலைன்னு யார் அழுதா?’

‘பெரிய டைரக்டரோட பையனா இருக்கிறது பல நேரத்துல ரொம்பவே வசதியான ஒரு விஷயம் தான் போல, நிறைய நடிக்கலாம், அடுத்தவன் காசை காலியாக்கலாம், அப்பன் இருக்கான் எல்லாத்தையும் பார்த்துக்குவான்னு’

‘இவனுக்கெல்லாம் அந்த டைரக்டரோட பையன்னு ரொம்பவே திமிரு! கொஞ்ச நாள் தான் இருப்பான் அப்பறம் காணாம போயிருவான் பாரு’

இத்யாதி! இத்யாதி!

முதலில் இதற்கெல்லாம் மனம் கலங்க தான் செய்வான் சர்வா.

ஆனால், நாள்பட நாள்பட இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் ஜெயம் ஒன்றே தனது குறிக்கோள் என்று தனது மனத்தினை அதற்கேற்றார் போல மாற்றினான்.

பலநேரம் தனது குறுஞ்சிரிப்பையும் மௌனங்களையும் மட்டுமே பதிலாக தந்தான் தன்னை நோக்கி வீசிப்பட்ட வார்த்தை எனும் கூர் அம்புகளை!

சிறந்த படங்களில் நடிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்து நடித்தான். பிறகு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது!

பிறகென்ன ஒரே படம்!

அவனுக்கு சிறந்த நடிகனுக்கான உயர் விருதை வாங்கி கொடுத்தது. அந்த படம் உலகளவில் வேறு சில நாடுகளின் விருதுகள் வழங்கும் பட்டியலில் இடம் பிடித்து வெற்றிகளை தேடி தந்தது!

தந்தை ராகவேந்தருக்கோ பெருமையாக இருந்தது. ‘தனது மகன் ஜெயித்து விடுவான்’ என்ற நம்பிக்கை இருந்தது.

இதோ அந்த பெருமையுடன் தான் முழங்கை வரை மடக்கிவிடப்பட்ட அடர் ஆலிவ் பச்சை நிற சட்டையும், க்ரீம் நிற கால்சராயும் அணிந்து மேடையில் எளிமையுடன், கம்பீரமாய் நிற்கும் தனது மகனை கண்டார் ராகவேந்தர்.

“அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்!” என்று சர்வா ஆழ்ந்த குரலில் கூறியவுடன் அவனின் ரசிக ரசிகைகள் கத்தி ஆர்ப்பரித்தனர்.

’சர்வா! சர்வா!’ என்று அவர்கள் செய்த அத்தனை ஆர்ப்பரிப்பிற்கும் மனம் நெகிழ்ந்த புன்னகையை தந்தவன், “நன்றி! நன்றி!” என்று அனைவருக்கும் பொதுவாய் தெரிவித்து விழாவை தொகுத்து வழங்கும் தொகுப்பாளரின் முகம் நோக்கினான்!

“சர்வா சார்! எப்படி இவ்ளோ ஹான்சமா இருக்கீங்க?” தொகுப்பாளன் கேள்வியை கேட்க, அதற்குமொரு விரிந்த சிரிப்பைத்தான் முதலில் பதிலாய் தந்தான் சர்வா!

“இதெல்லாம் எங்க அம்மா அப்பாவோட கிஃப்ட்! அப்பா ஹன்ட்சம், அம்மா ரொம்பவே அழகு” என்றான் அடக்கமாக!

“ஸ்டில் பேச்சுலராவே இருக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டிங்களா? எப்போ எங்களுக்கு எல்லாம் கல்யாண சாப்பாடு போட போறீங்க?” தொகுப்பாளன்.

பெண் ரசிகைகளின் மத்தியில் ஒரு ஆக்ரோஷமான ஆர்ப்பரிப்பு.

தொகுப்பாளன் மட்டும் தனியாக சிக்கினால், ‘மகனே! நீ சட்னி தாண்டா’ நிலைமை தான்.

சர்வாவோ தனது நெற்றியின் பக்கவாட்டில் ஆட்காட்டி விரலால் லேசாய் தேய்த்து,, அதற்கும் ஒரு சிரிப்பை தான் கொடுத்தான்.

இப்படி ஒரு கேள்வி வரும் என்று அவன் எதிர்ப்பார்த்தான் தானே?

தொண்டையை செருமிக்கொண்டு, “என் காதலி கொஞ்சம் ஊடல்ல இருக்காங்க பாஸ்! அவங்க கோபம் போனவுடனே கல்யாணம் தான்!” என்று தொகுப்பாளனை நேர்ப்பார்வை பார்த்து பதில் தர, அதில் இன்னமும் ரசிகைகள் மத்தியில் அதிகமாய் கரகோஷம்!

சக நடிகர்கள் இந்த பதிலில் தங்களின் கைகளை உயர்த்தி ஆர்ப்பர்த்தனர் என்றால், ராகவேந்தரோ மகனின் இந்த தைரியமான பதிலைக்கேட்டு பிரம்மிப்பாய் தான் அவனை பார்த்தார்.

அவருக்கு மகனின் காதல் விஷயம் தெரியாத ஒன்று அல்லவா? அதனாலேயே இந்த பிரமிப்பு!

எப்படியிருந்தாலும் மகனின் காதலுக்கு அவர் தடை விதிக்கப்போவது இல்லை! ஆனாலும் ஏன் இதை தன்னிடம் அவன் தெரிவித்ததே இல்லை என்ற ஒரு வியப்பிலேயே இருந்தார் அவர்!

மகன் நேசிக்கும் அப்பெண் யாரென்ற ஆர்வம் அவரின் மனதில் எழுந்தது! வெளிக்காட்டாமல் மகனை போன்றே மௌனச்சிரிப்புடன் அமர்ந்திருந்தார்.

தொகுப்பாளன், “ஹப்பாடா! இனி சிங்கிள் பாய்ஸ் எல்லாம் ரொம்ப சந்தோசமா இருப்போம் சார். என்ன? இந்த பதிலால பல பெண்கள் தான் ரொம்ப ஃபீல் செய்யப்போறாங்க!” என்று சந்தோசமும் கிண்டலும் கலந்த தொனியில் கூறிக்கொண்டு,

“இப்பொழுது ‘சிறந்த இயக்குனருக்கான விருதை’ நடிகர் சர்வஜித் வழங்குவார். தி நாமினேஷன்ஸ் ஆர்..” என்று கூறியபடி அந்த எல் ஈ டி திரையை கைக்காட்டினான்,

அதில் பல இயக்குனர்களின் பெயரும் அவர்களின் படைப்பும் ஒளிவில்லைகளாக வந்தது.

சற்று ஓரமாக நின்ற சர்வா, அதையெல்லாம் பார்வையிட்டவன், அது முடிந்ததும் தன்னிடம் கொடுக்கப்பட்ட அந்த அலங்கார உறையை பிரித்து, அதிலிருந்த எழுத்துகளை முகம் மாறா சிரிப்புடன் வாசிக்க ஆரம்பித்தான்.

“ட்வென்டி ஃபர்ஸ்ட் __________ அவார்ட் ஃபார் தி பெஸ்ட் டைரக்டர் கோஸ் டூ..” இடைவெளி விட்டவன்,

“மை ஃபாதர்.. டைரக்டர் ராகவேந்தர்! அப்பா வாங்க…” என்று பெருமையுடன் அறிவிக்க, மகிழ்வுடன் மேடையேறினார் ராகவேந்தர்.

தனக்கு விருது உண்டு என்று ஏற்கனவே ராகவேந்தருக்கு தெரியும் தான். ஆனால் தன் மகன் கையாலேயே அந்த விருதை வாங்க போகிறோம் என்ற சந்தோசத்தில் சிலிர்த்து போனார் அந்த தந்தை.

மேடையேறிய தந்தையின் பாதையில் முன்வந்து, அவரை நெருங்கிய சர்வா, அப்படியே அவரின் கையைப் பற்றி மேடைக்கு நடுவே அழைத்து வந்து, தனது கையினாலே அவருக்கான விருதை வழங்கினான்.

“ஐ ஆம் சோ ஹாப்பி டாடி!” என்று தந்தைக்கும் மேலே சந்தோசத்துடன் கூற, ராகவேந்தரோ விருதினை வாங்கிய கையோடு மகனை ஆரத்தழுவி கொண்டார்!

“சார்! பெஸ்ட் டைரக்டர் அவார்ட் கிடைச்சிருக்கு. அதுவும் உங்க பையன் கையாலேயே, எப்படி ஃபீல் பண்ணுரிங்க?” என்று தொகுப்பாளன் கேட்க,

“எல்லோருக்கும் வணக்கம்! ரொம்பவே சந்தோசமா, பெருமையா இருக்கு. ஒரு நல்ல படத்தை நான் கொடுத்தேன்னு நினைக்கிறப்ப. இந்த படத்துக்காக என்னோட காஸ்ட் அண்ட் க்ரு பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. நிறைய பிரச்சனைகளை பார்த்தோம். எல்லாம் கடந்து ஜெயிச்சு வந்தாச்சு, இந்த படத்துக்காக நான் வாங்கின இந்த அவார்ட் தான் எனக்கான சிறந்த ஊதியம்ன்னு சொல்வேன்! நன்றி!” என்று தன் உரையை முடித்து கொண்டார் ராகவேந்தர்.

தந்தையின் கூற்றில் மனமெங்கும் நிறைவான புன்னகை தோன்ற, விரிந்த சிரிப்புடன் அவரை பெருமையுடன் பார்த்தான் சர்வஜித்.

அடுத்த பக்கம்